கர்நாடகக் காங்கிரசு முதல்வர் சித்தராமையா தமிழக ஒகேனக்கல் பகுதியைக் கர்நாடகத்துடன் இணைக்க வேண்டும்; அது கர்நாடகத்திற்குக்குரியது என்கிறார். ஏற்கெனவே, கர்நாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பா.ச.க. எடியூரப்பா (பின்னர் முதலமைச்சரனார்), ஒகேனக்கல் பகுதியைக் கர்நாடகத்துடன் இணைக்க வேண்டும் என்று சொன்னதுடன் ஒகேனக்கலுக்குப் படகில் வந்து, அருவிப் பகுதியில் கன்னடக் கொடி ஏற்றினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான தோழர் நஞ்சப்பன் ஏற்பாட்டில், கண்டனப் பேரணி ஒகேனக்கல்லில் நடந்தது. தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் இயக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

கன்னட இனவெறியர்களை நாம் கண்டிக்கிறோம். அதே வேளை தமிழ்நாட்டுத் தலைவர்களையும் பற்றி நாம் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

சித்தராமையாவும் எடியூரப்பாவும் இந்தியத் தேசியம் பேசும் அனைத்திந்தியக் கட்சியின் கர்நாடகத் தலைவர்கள். அவர்கள் தில்லித் தலைமைக்குக் கட்டுப்பட்டவர்கள். தமிழகத்தில் மட்டுமே கட்சி வைத்துக் கொண்டு தான் தோன்றீசுவரர்களாகக் கருதிக் கொண்டு கேள்விகேட்பாராற்று தலைவர்களாக விளங்கும் செயலலிதாவும் கருணாநிதியும் எப்பொழு தாவது தமிழகம், கர்நாடகத்திடம் இழந்த தமிழ்ப் பகுதிகளான கொள்ளேகாலம், கோலார் தங்க வயல் போன்ற பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கேட்டதுண்டா?

திருப்பதி, சித்தூர், திருக்காளத்தி, பலமநேகரி போன்ற தமிழ்ப்பகுதிகளை ஆந்திராவிலிருந்து விடு வித்துத் தமிழ்நாட்டுடன் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்களா?

கேரளம் அபகரித்துக் கொண்ட தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு, கொச்சின் சித்தூர் பகுதிகளை மீண்டும் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று என்றாவது குரல் கொடுத்திருக்கிறார்களா?

இல்லை, இல்லை; இன இரண்டகத் தலைவர்களுக் குப் புரட்சித் தலைவி, தமிழினத் தலைவர் என்று பட்டம் கொடுத்துக் கும்மாளம் போடும் தமிழ் மக்களே,

நம்மைச் சுற்றியுள்ள கேரள, கர்நாடக, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் உள்ள தலைவர்கள் இனப் பற்றோடு மட்டுமல்ல, இனவெறியோடு இருக்கிறார் கள். தமிழ்நாட்டுத் தலைவர்கள் தமிழினப் பற்றோடு இருக்கிறார்களா? இல்லை; இல்லை!

1950களில் வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் தமிழர்கள் பங்கு கொண்டு திருத்தணி வரை மீட்டனர். அப்போராட்டத்தில் கோவிந்தசாமி, பழனிமாணிக்கம் என்ற இரு தமிழர்கள் கொல்லப்பட்டனர். தெற்கெல்லை மீட்புப் போராட் டத்தில் பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள் பங்கு கொண்டனர். 11.8.1954 கேரளக் காவல்துறையினர் 11 தமிழர்களை சுட்டுக் கொன்றனர். இப்பொழுதுள்ள கன்னியாகுமரி மாவட்டம் மீட்கப்பட்டது.

அந்தப் போராட்டங்களைத் தொடர வேண்டிய பொறுப்பில் உள்ள கருணாநிதியும் செயலலிதாவும் எஞ்சிய பகுதிகளை மீட்க, கோரிக்கையாகக் கூடக் குரல் கொடுப்பதில்லை.

Pin It