1948ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசின் இராணுவ பலத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காசு மீரில், இப்போது மீண்டும் துப்பாக்கிச் சத்தம்! இம் முறை பலியானது, இரண்டு அப்பாவி காசுமீரி இளைஞர்கள்.

2014 நவம்பர் 3 அன்று, பட்கம் மாவட்டத்திலுள்ள சட்டர்கேம் கிராமத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள், சோதனைச் சாவடி ஒன்றில், தங்கள் வண்டியை நிறுத்தாமல் சென்றதால் அவர்களை ‘தீவிரவாதி’கள் என நினைத்து சுட்டுக் கொன்றோம் என்றது, இந்திய இராணுவம்.

விசாரணைக்குப் பிறகு, வண்டியில் உள்ள கோளாறு காரணமாகவே பிரேக் போட்ட பிறகும் அந்த மகிழுந்து நிற்காமல் சிறிது தொலைவு சென்று நின்றது எனத் தெரியவந்தது.

ஒருவேளை அவர்கள் ‘தீவிரவாதி’களாகவே இருக் கட்டும். அவர்கள் சென்ற மகிழுந்தை மடக்கிப் பிடித்து, அவர்களை உயிருடன் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதல்லவா இராணுவத்தின் கடமை? ஆனால், காசுமீரில் மட்டும் சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக் கையெல்லாம் எப்பொழுதும் கானல் நீர்தான்!

இதுபோல, கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மச்சீல் பகுதியில் 3 அப்பாவிகளைப் ‘பயங்கரவாதிகள்’ எனச் சொல்லி, இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது. பதவி உயர்வு பெறுவதற்காகவே, அந்த அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற உண்மையும் தெரிய வந்தது. இந்த அப்பட்டமானப் படுகொலையை எதிர்த் துப் போராடிய மக்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நிகழ்த் தப்பட்டது அதில், 16 அகவை சிறுவன் கொல்லப் பட்டான். அதே மாதத்தில், மேலும் 2 அப்பாவிகளைப் பயங்கரவாதிகள் எனச் சுட்டுக் கொன்றனர் இந்திய இராணுவத்தினர். இந்த அநீதியானப் படுகொலைகளை எதிர்த்துப் போராடிய மக்கள் சற்றொப்ப, 120 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதான் காசுமீரில் இந்தியா நடத்தும் காட்டாட்சி!

ஆயுதப் படைகளுக்கு சிறப்பதிகாரம் அளிக்கும் சட்டம் அங்கு நடைமுறையில் இருப்பதுதான், இது போன்ற தொடர் படுகொலைகள் அங்கு நிகழக் காரணம்! அச்சட்டத்தின்படி, யாரையும் விசாரிக்காமல் கூட சுட்டுக் கொல்லலாம் என்ற அதிகாரம் இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தத் திமிரில்தான், யாரை வேண்டுமானாலும் சுடுவோம் என, இப்பொழுது 2 அப்பாவி காசுமீரி இளைஞர் களைச் சுட்டுக் கொன்றுள்ளது இந்திய இராணுவம்.

முதலில், சுட்டுக் கொன்ற இராணுவத்தினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முடியாது என மறுத் தனர் இராணுவ அதிகாரிகள். அதன்பின், கொலை செய் யப்பட்ட காசுமீரி இளைஞர்களுக்கு ஆதரவாக எழுந்த மக்கள் எழுச்சி, இராணுவத்தைப் பின்வாங்கச் செய்தது. அந்த அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சட்டப்பேரவைக்கானத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில் நடைபெற்றுள்ள இந்தப் படுகொலைகள், இங்கு கடும் கண்டனங்களை எழுப்பின. கொல்லப் பட்ட இளைஞர்களின் இறுதி ஊர்வலம் சிறீநகரில் நடந்தது. அதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். கண்ணீருடன் ஊர்வலத்தில் சென்ற உறவினர்கள், தன்னெழுச்சியாக, அங்கே நின்றிருந்த இந்தியப் பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிந்து தாக்கினர். பாதுகாப்புப் படையினர் திருப்பித் தாக்கியதில், பலர் காயமடைந்தனர். காசுமீர் மக்களின் கண்ணீருக்கு இன்றுவரை விடையில்லை.

தவறிழைத்த இராணுவத்தினரை உரிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும். இதுபோன்ற படுகொலைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டுமெனில், ஆயுதப்படைகளுக்கு சிறப்பதிகாரம் (அப்பாவியைக் கொலை செய்தாலும் - அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யமுடியாது.) அதிகாரம் அளிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்திய இராணுவம் காசுமீரிலிருந்து வெளியேற வேண்டும். ஆனால், இதை எளிதில் செய்துவிட முன்வராது இந்திய அரசு! மக்கள் எழுச்சியே அதனை செய்ய வைக்கும்.

Pin It