தமிழ்ப் பேரரசன் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரியகோயில், சோழர் காலக் கட்டடக்கலையின் உச்சமாகத் திகழும் தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், தஞ்சை கோடியம்மன் கோயில் உள்ளிட்ட 88 கோயில்களுக்கும் பாபாஜி பான்ஸ்லே என்பவர் பரம்பரை அறங்காவலராக இருக்கிறார். இவரைத் தஞ்சையின் மூத்த இளவரசர் என்றும் தமிழக அரசு அழைக்கிறது.

2006-இல் தொடங்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு, மேற்கண்ட இரண்டு நிலைகளிலிருந்தும் பாபாஜி பான்ஸ்லேயை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது.  

போராட்டக்குழு சார்பில் “‘மூத்த இளவரசர்’ என்று பான்ஸ்லேயை அழைக்க ஆதாரம் எது” என்று தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்டதற்கு, “அவ்வாறு சான்று எதுவுமில்லை. இனிமேல் அப்படி அழைப்பது தவிர்க்கப்படும்” என்று மாவட்ட விடையிறுத்தார்.

13ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசு வீழ்ச்சி அடைந்த பிறகு, பல்வேறு அயலார்கள் தமிழ்நாட்டின் மீது படையெடுத்துப் பகுதி பகுதியாகத் தமிழகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்.  

அவ்வாறு தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த விஜயராகவ நாயக்கருக்கும் திருச்சியை ஆண்டு கொண்டிருந்த சொக்கநாத நாயக்கருக்கும் இடையே போர் மூண்டபோது, விஜயராகவ நாயக்கருக்கு உதவ கூலிப்படைத் தளபதியாக வந்த மராத்திய ஏகோஜி திருச்சி நாயக்கரை விரட்டி அடித்த பின், விஜயராகவ நாயக்கரைக் கொன்று தஞ்சை ஆட்சியைக் கைப்பற்றினார்.

இவ்வாறு நயவஞ்சகத்தாலும் துரோகத்தாலும் தஞ்சையில் உருவானது தான் மராத்திய ஆட்சி. அந்த மராத்திய அரசையும் 1799-இல் சரபோஜி என்ற மன்னர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விற்று விட்டார். பின்னர் தஞ்சை அரசு, அரண்மனை அனைத்தையும் கிழக்கிந்தியக் கம்பெனி எடுத்துக் கொண்டது.

ஆனால் இன்றும் தமிழக அரசு மராத்திய பாபாஜி பான்ஸ்லேயை மூத்த இளவரசர் என்று அங்கீகரிப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும், சனநாயகத்திற்கும் தமிழர்களின் இனமானத்திற்கும் எதிரான செயல்.  

ஒருவரின் முன்னோர்கள் ஒரு கோயிலைக் கட்டி, அதற்குத் தங்கள் சொத்தை எழுதி வைத்து, அன்றாட வழிபாட்டுச் செலவையும் கோயில் ஊழியர் சம்பளத்தையும் சொந்தச் செலவில் செய்தால் தான் அவர் அந்தக் கோயிலுக்குப் பரம்பரை அறங்காவலராக இருக்க முடியும். இதுவே இந்து அறநிலைய ஆட்சித்துறையின் சட்டம்.

மேற்கண்ட நிபந்தனையில் எதையும் நிறைவேற்றாத பாபாஜி பான்ஸ்லே தமிழ்ப் பேரரசர்கள் கட்டிய கோயில்களுக்குப் பரம்பரை அறங்காவலராக இருப்பது அந்தச் சட்டத்திற்கு எதிரான செயலாகும்.

“சரசுவதி பண்டாரம்” என்ற பெயரில் முதலில் நூலகம் தொடங்கியவர்கள் சோழ மன்னர்களே. பின்னர் அதை வளர்த்தவர்கள் நாயக்க மன்னர்கள். அதன்பிறகு சரபோஜி அதை வளர்த்தார். ஆனால் அந்த நூலகத்தை முழுக்க முழுக்க சரபோஜி மட்டுமே உருவாக்கினார் என்று சொல்லிக் கொண்டு பான்ஸ்லே குடும்பத்தைச் சேர்ந்தவரை அதன் ஆட்சிக்குழுவில் வாழ்நாள் உறுப்பினராக அமர்த்தியுள்ளது தமிழக அரசு.

அந்நூலகம் வெள்ளையராட்சியில் 1918ஆம் ஆண்டு அரசுடைமையாக்கப்பட்டுப் பொது நூலகமாக மாற்றப்பட்டது. சங்கங்கள் பதிவுச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள சரசுவதி மகால் நூலகத்திற்குப் பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆட்சிக்குழுத் தலைவர். ஆனால் 18 ஆண்டுகளாக ஆட்சிக்குழுவின் இயக்குநர் பதவி பணியமர்த்தம் இல்லாமல் காலியாகவே உள்ளது. இரு தமிழ்ப்பண்டிதர்கள் பதவி ஐந்தாண்டுகளாகக் காலியாக இருக்கின்றது. தெலுங்கு, மராத்திப் பண்டிதர்கள் பதவிகளும் 15 ஆண்டுகளாகக் காலியாக இருக்கின்றன.

பின்வரும் கோரிக்கைகளை வைத்து 24.10.09 சனிக்கிழமை தஞ்சையில் பேரணி தொடங்கியது.

1. பரம்பரை அறங்காவலர் பொறுப்பிலிருந்து பாபாஜி பான்ஸ்லேயை நீக்குக.  

2. பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான அரண்மனையில் வாடகைக்குக் குடியிருக்கும் பான்ஸ்லே, அரண்மனையை வணிக மையமாக்கிவிட்டதால் அரண்மனையிலிருந்து அவரை உடனடியாக  வெளியேற்றுக.

3. சரசுவதி மகால் நூலகத்திற்கு இயக்குனர் அமர்த்தவேண்டும். தமிழ், தெலுங்கு, மராத்தி மொழிகளுக்குப் பண்டிதர்கள் அமர்த்த வேண்டும். அந்நூலகத்தின் பெயரில் உள்ள சரபோஜி என்ற பெயரை நீக்க வேண்டும். பான்ஸ்லே உறவினரை, நூலக ஆட்சிக்குழுவில் வாழ்நாள் உறுப்பினராகச் சேர்த்திருப்பதை நீக்க வேண்டும்.

பேரணிக்குத் தஞ்சைப் பெரியகோயில் உரிமை மீட்புக் குழுத் தலைவர் திரு.அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன், செயலாளர் திரு வெண்.வீர.முருகு.வீரசிங்கம், துணைத் தலைவர் க.பத்மா, பொருளாளர் தோழர் பழ.இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.தே.பொ.க. மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு மற்றும் சுற்றுச்சூழல் கோவை பாலமுருகன், இயக்குநர் பாலமுரளிவர்மன், போராட்டச் செயற்குழு உறுப்பினர்கள் திரு வய்.மு.கும்பலிங்கன், சாமி. கரிகாலன், இருதயராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பேரணி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து புறப்பட்டு கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி வழியாக சிவகங்கைப் பூங்காப் பகுதியை அடைந்தது. 

“வந்தவனெல்லாம் ஆண்டைகளா?

மண்ணின் மக்கள் அடிமைகளா?
கங்கை கொண்டான் கடாரம் வென்றான்
எங்கள் சோழன் என்று சொல்லி
நெஞ்சை நிமிர்த்தும் தமிழர்களே
தஞ்சை மண்ணின் இளவரசன்
மராத்திய பான்ஸ்லே என்கின்றார்
பேர் அரசன் இராசராசன்
பெரியகோயிலை நமக்குத் தந்தான்
கட்டடக்கலையின் உச்சம் அது
சோழர்பெருமையின் மிச்சம் அது
பான்ஸ்லேயை நீக்கு பான்ஸ்லேயை நீக்கு
பரம்பரை அறங்காவலரிலிருந்து
பான்ஸ்லேயை நீக்கு”

என்பன போன்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. பேரணியில் பெருந்திரளாக ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். சாலையின் இருமருங்கிலும் கூடி நின்று ஊர்வலத்தைப் பார்த்த தமிழ் மக்கள் உற்சாகத்துடன் ஆதரவளித்தனர். ஆர்ப்பாட்ட முடிவில் தலைவர்கள் உரையாற்றினர்.

Pin It