பரமக்குடியில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் குடும்பத் தினரையும், சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மாணவன் பழநிக்குமார் குடும்பத் தினரையும் நேரில் கண்டு ஆறுதல் சொல்ல, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் நா.வைகறை, குழ.பால் ராசு, அ.ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரெ.இராசு, மு.தமிழ்மணி, பரமக்குடித் தோழர்கள் இரா.இளங்கோ, தோழர்கள் கோ.இராமசாமி, கா.வே.முருகேசன், வழக்குரைஞர் பசுமலை, பொறியாளர் அறிவுடை நம்பி, வழக்குரைஞர் லிங்கமூர்த்தி, வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மதுரை வீரன், பி.எஸ்.ஐ.கனி (எஸ்.டி .பி.ஐ.), அம்பேத்கர், ஓட்டுநர் ரெ.ரெங்கராசு ஆகியோர் இரு ஊர்திகளில் 18.10.2011 அன்று புறப்பட்டோம்.

ஏடுகளில் படித்ததை விடவும் கொடுமையாகவே காட்டுமிராண்டித் தனமாகவே காவல் துறையின் துப்பாக்கி வெறியாட்டம் நடந்திருப் பதை நேரில் கிடைத்த செய்திகள் மூலம் அறிய முடிந்தது.

த.தே.பொ.க. குழுவினர் முதலில், கீழக்கொடு மலூர் சென்றனர். அவ்வூரைச் சேர்ந்த 22 அகவை உள்ள தீர்ப்புக்கனி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு அவர் மீது நடத்தப்படவில்லை. அம்மாணவர் பரமக்குடி முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்தி ரவியல் பட்டயத்தில்(டி.எம்.இ.) இரண் டாம் ஆண்டு படித்து வந்தார். காவல் துறையினர் கண்மண் தெரியாமல் துப்பாக்கியால் சுட்டும், தடியால் அடித்தும் வேட்டையாடியதில் தடிய டியில் இறந்துள்ளார் தீர்ப்புக்கனி.

ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இம்மாணவரின் தந்தை வேலு, தாயார் செல்வம் ஆகியோருடன், அக்கம் பக்கம் உள்ள மக்கள் ஒன்றாகக் கூடி த.தே.பொ.க. தோழர்கள் சென்றதும் செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் காவல் துறையினர் நடத்தியக் காட்டுதர்பாரை எடுத்துச் சொல்லி அப்பாவி மாணவன் தீர்ப்புக்கனியை அடித்தேக் கொன்று விட்டார்கள் என்று துயரத்தோடு கூறினர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய தோழர் பெ.மணி யரசன், அவர்களுக்கு நீதி கிடைக்க த.தே.பொ.க. முன்னெடுத்த போராட்டங்களை எடுத்துச் சொன்னார்.

தீர்ப்புக்கனி உள்ளிட்டோரை கொலை செய்த காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் குழு அமைக்க வேண்டும், துப்பாக்கிச் சூட்டிலும், தடியடியிலும் பலியான குடும்பங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும், காயம் அடைந்தோருக்குத் தலா ரூ.5 இலட்சம் இழப் பீட்டுத் தொகை வழங்க வேண்டும், உயிரிழந் தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து த.தே.பொ.க. பல இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியதையும், தொடர்ந்து அக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதையும் தோழர் பெ.ம. எடுத்துச் சொன்னார்.

அடுத்து, மண்டல மாணிக்கம் பள்ளப்பச்சேரி நோக்கி ஊர்திகள் விரைந்தன.

மண்டல மாணிக்கம் மிகப்பெரிய கிராமம். அவ்வூரில் அனைவரும் மறவர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றார்கள். பிற வகுப்பினர் யாரும் இல்லையென்று கூறுகிறார்கள். குறுகலான மறவர் தெரு வழியாகத்தான் அடுத்துள்ள பள்ளப் பச்சேரிக்குப் போக வேண்டும்.

பள்ளப்பச்சேரியில் அனைவரும் பள்ளர் (தேவேந்திரர்) வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்த வட்டாரத்தில் ‘பச்சேரி’ என்பது அட்டவணை வகுப்பு மக்கள் குடியிருக்கும் ஊரை பகுதியைக் குறிக்கிறது. மண்டல மாணிக்கம் ஊராட்சியில் பள்ளப்பச்சேரி, கழுவன் பொட்டல், இடைச்சிவூரணி, பெருமாள் தேவன் பட்டி, மூலைக்கரைப்பட்டி, வடுகப் பட்டி, முத்துப்பட்டி, கோடாங் கிப்பட்டி ஆகிய சிற்றூர்கள் இணைக்கப் பட்டுள்ளன. மண் டல மாணிக்கம் மறவர் தெருக் களைக் கடந்து பள்ளப்பச்சேரி போகும் போது தெருக்களின் முடிவுப் பகுதியில் ஒரு சிறு திடலில் கூட்டுறவு சங்கக் கிடங்கு(குடோன்) இருக்கிறது.

பரமக்குடி தோழர் இளங் கோவன் அந்தச் சுவரின் கிடங் கைக்காட்டி, அந்த சுவரில் எழுத்துகள் அழிக்கப்பட்டு, கரையாக உள்ள அடை யாளத்தைக் காட்டி இதில்தான் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி ஏதோ இழிவாக எழுதி யிருந்தது என்றும், பழநிக்குமார் தான் அதை எழுதினான் என்று முடிவு செய்து சாதிவெறியர்கள் பழநிக்குமாரைக் கொலை செய்து விட்டார்கள் என்றும் கூறினார். ஊர்தியை சற்று நிறுத்தி அதை உற்றுப்பார்த்து விட்டு பள்ளப்பச்சேரிக்குப் புறப்பட்டோம்.

பழனிக்குமார் தந்தை தங்க வேல், தாய் புவனேசுவரி ஆகி யோரைச் சந்தித்தோம். அப் பகுதி மக்கள் கூடி விட்டனர். பழனிக் குமார் தாயார் புவனே சுவரி நடந்த நிகழ்வுகளை சொன்னார்.

“எங்க தெரு பையன்கள் மறவர் தெரு ஓரம் உள்ள குடோன் திடலுக்கு விளை யாடப் போக மாட்டார்கள். என் மகன் மிகவும் குள்ள மானவன். அவர்கள் சொல்லு கிற மாதிரி அந்த சுவரில் எழுதுவதென்றால் வளர்ந்த ஆள் கையெடுப்பு உயரத்தில் எழுதியிருந்தால் தான் உண்டு. என் மகனுக்கு அந்த உயரம் எட்டாது.

"சம்பவம், நடந்த அன்று (9.09.2011) இரவு பக்கத்து ஊரான முத்துராமலிங்கபுரத் தில் நாடகம் பார்த்து விட்டு 12.30 மணிக்கு என் மகனும், என் அண்ணன் மகனும் எங்க ஊருக்கு வந்து கொண்டி ருந்தார்கள். வேலிக் கருவை மறைவில் காத்திருந்த கும்பல் ஒன்று இந்த இரண்டு பேரையும் வழிமறித்திருக்கிறார்கள். என் அண்ணன் மகன் ஓடி விட் டான். என் மகனைப் பிடித்து கழுத்தை அறுத்துக் கொன்று விட்டார்கள். என் மகன் அந்த வாசகத்தை எழுதினதாகவே வைத்துக் கொண்டால் கூட, அதற்காக அவனை இரண்டு அடி அடித்து மிரட்டி விரட்டி யிருக்கலாம். படுபாவிகள் அந்த பிஞ்சுமுகத்தைக் கூட பார்க் காமல் கொலை செய்து விட் டார்கள்” என்று கூறி குமுறி அழுதார்.

“இழிவாக எழுதப்பட்டிருந்த வாசகங்களுக்காகவா கொலை செய்துவிட்டார்கள்?” என்று பெ.ம.வும், கி.வெ.வும் கேட் டார்கள். அதற்கு அங்குள்ள வர்கள், “பதினோறாம் தேதி (11.09.2011) நடைபெறவுள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் குரு பூசைக்கு அங்கிருந்து யாரும் போகாமல் தடுக்கவும், திசைமாற்றி அவ்விழாவை குழப்பிவிடவும் திட்டமிட்டு செய்த சதிதான் பழனிக்குமார் கொலை. 8ந்தேதி(08.09.2011) டி.எஸ்.பி. இங்கு வந்து ‘குடோன் சுவரில் தேவரைப் பற்றி இழி வாக உங்கள் தெருக்காரர்கள் எழுதியிருப்பதாக மண்டல மாணிக்கத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சொன்னார்கள். அதை நான் பார்த் தேன். அதை யார் எழுதினது என்று கண்டு பிடிக்க வேண்டும்’ என்றார். மறுநாள் எங்கள் ஊர் குடிநீர் கிணற்றில் விசத்தைக் கலந்து விட்டார்கள். அன்று இரவு பழனிக்குமாரைக் கொலை செய்து விட்டார்கள்” என்றார் கள்.

அடுத்து அந்த மக்கள் உள் ளம் குமுறிச் சொன்ன குறைகள் பல.

“பள்ளப்பச்சேரியிலிருந்து நாங்கள் வெளியே செல்வ தென்றால் குறுகலான மறவர் தெரு வழியாகத் தான் செல்ல வேண்டும். எங்களுக்கு தனிச் சாலை போட்டுத் தர வேண்டும். மண்டல மாணிக்கத்திற்கு குடி நீர் மேல்நிலைத் தொட்டி இருக்கிறது. ஆனால் எங்கள் கிராமத்திற்கு மேல்நிலைத் தொட்டி கிடையாது. பக்கத்தில் குண்டாற்றில் ஊற்று தோண்டி அதிலிருந்துதான் தண்ணீர் எடுத்து வருகிறோம். மண்டல மாணிக்கம் ஊராட்சி தனித் தொகுதியாக அட்டவணை வகுப்பினருக்குக் கென்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் போட்டியிட முடி யாது. போட்டியிட்டால் எங்க ளைத் தாக்குவார்கள். மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பக்கத்தூர் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த ஒருவரை ஊராட்சித் தலைவராக ஆக்கி யுள்ளார்கள். மறவர் சமூகத்தின் சொல்படி நடக்கக் கூடியவராக அவ்வூராட்சித் தலைவர் இருக் கிறார்

"எங்கள் கிராமத்திற்கு மேல் நிலைத் தண்ணீர் தொட்டி மூலம் குடிநீர் வழங்க வேண்டும். பக்கத்திலுள்ள சில கிராமங் களை எங்கள் கிராமத்துடன் இணைத்து பள்ளப்பச்சேரியை மண்டல மாணிக்கத்திலிருந்து பிரித்து தனி ஊராட்சியாக அமைக்க வேண்டும்” என்றார் கள்.

இந்த மூன்று கோரிக்கைகளும் நியாமானவை. இவற்றை நிறைவேற்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழக அரசிடம் வலியுறுத்தும் என்று உறுதிபடக் கூறினார், தோழர் பெ.ம.

பள்ளிச்சிறுவன் பழனிக் குமாரைக் கொலை செய்தவர் கள் என்ற குற்றச்சாட்டில் மண்டல மாணிக்கம் மறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆபுத்திரன் (நியாய விலைக்கடை ஊழியர்), ஆறுஓட்டு ஆறுசாமி, கருப்ப சாமி, பச்சைமால், மணி கண்டன் ஆகிய ஐவர் தளைப் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். முக்கூரன் என்பவர் தலை மறைவாக இருக்கிறார்.

பால்மணம் மாறாப் பாலகன் என்று சொல்லத்தக்க இளந் தளிர் பழனிக்குமார் ஒரு பெரிய சமூகத்திற்கு ஒரு பெரிய பகை வனாகிவிட்டானா? ஒழித்துக் கட்ட வேண்டிய எதிரியா அவன்? அவன் தாயார் சொன் னது போல, அவன் மீது அவர் களுக்கு ஐயப்பாடு இருந் தால் ரெண்டுத் தட்டுத்தட்டி எச்ச ரித்து அனுப்பியிருக்கலாமே!

சாதி உணர்ச்சி - வெறியாக மாறி - தன்சாதியைக் கேள்வி கேட்கும் பிற சாதியைப் பழிவாங்க வேண்டும் என்ற வன்மமாக வளர்ந்து சிலர் இத்தீச்செயலில் இறங்கியுள் ளனர். பழனிக்குமாரைக் கொலை செய்தவர்கள் வன் கொடுமைத் தடுப்புச் சட்டத் தின் கீழ் தண்டிக்கப்பட வேண் டியவர்கள். தமிழக அரசு, பழனிக்குமார் குடும்பத்தில் ஒருவர்க்கு வேலை தருவது மிகவும் தேவை.

பள்ளப்பச்சேரியிலிருந்து கிளம்பி, வீரம்பல் கிராமம் சென்றோம். 54 அகவையுள்ள பன்னீர் நெற்றிப்பொட்டில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்து போனார். அவர் ஊர் வீரம்பல். த.தே.பொ.க. தோழர் பெகின் அவ்வூரைச் சேர்ந்தவர். அவர் பன்னீர் வீட்டிற்கு எங்களை அழைத்துச் சென்றார்.

பன்னீரின் தாயார் புட்பம் அம்மையார் தான் வீட்டில் இருந்தார். பன்னீர் மனைவி சிரோன்மணி, மகன் அம்பு ரோஸ், மகள் ரெபேக்காஸ் ஆகியோர் வெளியூர் சென்றி ருந்தனர்.

காவல்துறையினர் துப் பாக்கிச் சூடு நடத்தும் முன் கடைபிடிக்க வேண்டிய முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் கடைபிடிக்கவில்லை என்பதற்கு பன்னீரின் நெற்றி யில் குறிபார்த்து அவர்கள் சுட்டதொன்றே தக்க சான் றாகும். துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை எழுந்தால், முழங்காலுக்குக் கீழ் சுட வேண்டும் என்ற விதியைக் காவல்துறையினர் கடை பிடிக்க வில்லை.

பிறகு சடையனேரி சென் றோம். இளம்பெண் ஒருவரைக் காட்டி, இவர் கணவர் தான் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக் குமார் என்றனர் அங்கு சூழ்ந்து கொண்ட மக்கள். 24 அகவைக் குள் இருக்கும் பாண்டீசுவரி சோகமே உருவெடுத்து நின்றார். சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக் குமாரின் அகவை 26. நேதாசி என்ற 4 அகவை மகனும், காவியா என்ற இரண்டரை அகவை மகளும் இவர்கள் குழந்தைகள். முத்துக்குமாரின் பெற்றோர் ஞானப்பிரகாசமும், முனியம்மாவும் “எங்கள் மகன் பிணமாய்க் கிடக்கும் செய்தி இரண்டாம் நாள் தான் எங்களுக்குத் தெரிந்தது” என்று சொல்லி குமுறி வரும் அழுகையை அடக்கிக் கொண் டனர்.

வெளியிலிருந்து செல்லும் நமக்கே, இந்த இளம் அகவை யில் கணவனைப் பறிகொடுத்து விட்ட பாண்டீசுவரியின் சோ கத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தப் பெண் ணுக்கும், முத்துக்குமார் பெற் றோர்க்கும் யார் ஆறுதல் சொல்ல முடியும்? தமிழக அரசு பாண்டீசுவரிக்கு ஒரு வேலை கொடுத்தால், கொலைப் பழிக்குக் கழுவாயாக அமையும்.

அடுத்து ஆறுதல் கூறப் போன இடம் இதைவிடக் கொடுமையானது. மஞ்சூரைச் சேர்ந்த செயபால். இருபதே அகவையான இளைஞர். காவல் துறையினர் இவரை துப்பாக்கி யால் சுட்டு இளையான்குடி சாலையில் தூக்கி வீசிவிட்டனர். அவர் மனைவி காயத்திரிக்குப் பதினெட்டு அகவை. காயத்திரி யின் தாயார் ரேவதி பரமக்குடி உழவர் சந்தைக்கு அருகில் பழவணிகம் செய்து வருகிறார். நிறைமாதக் கர்ப்பிணியான காயத்திரி மகப்பேறுக்காக பரமக்குடி தாய்வீட்டிற்கு வந் துள்ளார். மஞ்சூரிலிருந்து மனை வியைப் பார்க்க வந்த செயபால், பரமக்குடியில் காவல் துறை யினரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

"இன்னும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன்" என்று கைபேசியில் மனை விக்குச் சேதி சொன்ன செய பாலைக் காணாமல் மாமியார் ரேவதியும், காயத்திரி அண்ணன் தம்பியும் தேடினார்கள். செய பால் சட்டைப் பையிலிருந்த கைபேசியை எடுத்து, காயத்தி ரியுடன் தொடர்பு கொண்ட காவல்துறையினர், செயபால் துப்பாக்கிச் சூட்டில் இறந்து போன செய்தியைச் சொல்லா மல் மறைத்து விட்டனர். அலையோ, அலையென்று அலைந்து மறுநாள் தான் இராமநாதபுரம் மருத்துவம னையில் செயபால் உடலை அடையாளம் கண்டார் ரேவதி அம்மாள்.

காயத்திரியும் - செயபாலும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். காயத் திரி வெள்ளாளர் வகுப்பு. செயபால் தேவேந்திரர் வகுப்பு. 11.09.2011 அன்று செயபால் சுட்டுக் கொல்லப்பட்டார். 29.09.2011 அன்று காயத்திரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறந்தால் தர்சன் என்ற பெயர் சூட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந் தாராம் செயபால். தந்தை துப்பாக்கிச் சூட்டில் இறந்து விட்டதால் வீரதர்சன் என்று அக்குழந் தைக்குப் பெயர் சூட்டி யுள்ளனர்.

கையில் ஏந்தப் போகும் தன் குழந்தை பற்றிய கனவுகளோடு, கர்ப்பிணி மனைவியைக் காண வந்த கணவனைக் காவல்துறை யினர் சுட்டுக்கொன்று விட்ட னர். இருபது அகவை மட்டுமே ஆன இளம் கணவனை பறி கொடுத்துவிட்டு 20 நாள் கைக் குழந்தையுடன் கைம்பெண் ணாய் எங்கள் கண்முன் நிற்கிறாள், 18 அகவை காயத்திரி! இப்பெண்ணுக்கு யார் என்ன ஆறுதல் சொல்லி விட முடியும்?

துயரம் தொண்டையை அடைக்கச் சில சொற்கள் ஆறு தலாகக் கூறினர், த.தே.பொ.க. தலைவர்கள். “இந்த காயத் திரிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாமாவது, எங்காவது சமூக அக்கறை கொண்டவர்கள் நடத்தும் நிறுவனமொன்றில் வேலை வாங்கித்தர வேண்டும்” என்றார் வீட்டை விட்டு வெளியே வரும் போது, தோழர் பெ.ம.

காயத்திரி வீட்டை விட்டு வெளியே வரும் போது இரவு 9 மணி. துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோன, காயம்பட்டுள்ள ஏனையோர் வீடுகளுக்கு செல்வ தற்குள் இரவாகி விட்டது. பல்லவராயனேந்தல் கணே சன்(54) காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். காக்கனேந்தல் வெள்ளைச்சாமி (54) காவல்துறையினரால் அடித் தேக் கொல்லபட்டார். இவ் விருவர் இல்லங்களுக்கும் செல்ல முடியவில்லை.

விடிந்தால் காலை 10 மணிக்குக் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய பணி இருந்தது.

பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறியதோடு மட்டும் நாம் நிற்கக் கூடாது. துப்பாக்கிச் சூடு தொடர்பாக த.தே.பொ.க. ஏற்கெனவே முன் வைத்துள்ள கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். அத் துடன், பள்ளப்பச்சேரி மக்கள் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தர தமிழக அரசை அணுக வேண்டும். காவல்துறை காவு கொண்டதால் கணவனை இழந்து கைம்பெண்ணாய் நிற்கும் பாண்டீசுவரி, காயத்திரி ஆகியோர்க்கு வேலை கிடைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்ற உறுதியைத் த.தே.பொ.க. தலைவர்கள் தம்முடன் வந்த குழுவினருடன் பகிர்ந்து கொண்டனர்.

Pin It