அ.இ.அதி.மு.க. ஆட்சியாளர்களானாலும், தி.மு.க. ஆட்சியாளர்களானாலும் தமிழக ஆட்சியாளர்கள் தமிழைத் தீராத தொல்லையாகவும் சள்ளையாகவுமே கருதுகிறார்கள்.

தமிழைக் கவனிக்காமல் விட்டுவிட்டதாகத் தங்கள் மீது பழிவந்திடக் கூடாது என்பதற்காக அவ்வபோது தமிழ்த் திருவிழாக்களையும், அவற்றையொட்டித் தமிழ் வாணவேடிக்கைக்களையும் நடத்துவார்கள்; ஆனால், பள்ளிக் கல்வி வரை கூடத் தமிழ் பயிற்று மொழி ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வார்கள்.

இவ்வாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் 320 மேல் நிலைப் பள்ளிகளில் புதிதாக ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்வழி வகுப்புகள் புறக்கணிக்கப்பட்டு இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுவதற்கான முதல் படி இது. இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் தமிழ்வழிப் பள்ளிகள் எங்கே இருக்கின்றன என்று தேட வேண்டிய நிலை வரும்.

கழகங்களின் ஆட்சியில்தான் காளான்களைப் போல் மெட்ரிக்குலேசன் பள்ளிகளைக் கல்வி வணிகர்கள் திறந்து கொள்ள அனுமதி தந்தார்கள்.

தமிழ்வழிக் கல்விக்காகத் தமிழ்ச் சான்றோர் பேரவை ஏற்பாட்டில் 102 தமிழறிஞர்கள் 1998-இல் சாகும் வரை சென்னையில் உண்ணாப்போராட்டம் நடத்தினார்கள்.

அப்பொழுது ஐந்தாம் வகுப்பு வரைக் கட்டாயம் தமிழ் அல்லது தாய்மொழி பாட மொழியாகவும் பயிற்றுமொழியாகவும் இருக்கும் என்று தி.மு.க. ஆட்சி அரசாணை வெளியிட்டது. சட்டமாக இயற்றாமல், தந்திரமாக அரசாணையாக வெளியிட்டது.

அந்த அரசாணையை அப்போது எதிர்த்த ஒரே அரசியல்கட்சித் தலைவர் செயலலிதா மட்டுமே. பதின்மப் பள்ளி (மெட்ரிகுலேசன்) முதலாளிகள் அந்த அரசாணையை எதிர்த்து வழக்குப் போட்டு தடை ஆணை பெற்றனர். அது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை நடத்த தி.மு.க. ஆட்சியும் முயலவில்லை, அ.தி.மு.க. ஆட்சியும் முயலவில்லை.

மொழிப் போராட்டம் நடத்தி முந்நூறுபேர்களுக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்ட, பத்து பேர்வரை தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்த தமிழ்நாட்டில் தமிழ் மொழியானது பள்ளி படிப்புவரை கூட கட்டாய மொழிப்பாடமாக இல்லை.

இது ஒருபுறமிருக்க, உயராய்வுக்காக அமைக்கப்பட்ட மூன்று தமிழ் நிறுவனங்கள் முடமாகிக் கிடப்பதை நினைத்தால் குருதிக் கண்ணீர் வரும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies):

 1968 சனவரியில் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடந்தது. அன்றைய முதல்வர் அண்ணா அம்மாநாட்டை நடத்தினார். அதில் எடுத்த முடிவின் படி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்டது. இதன் முதன்மையான நோக்கங்கள்: 1. உலகம் முழுவதும் நடக்கும் தமிழாய்வுகளை ஒருங் கிணைப்பது 2. பிறநாட்டினர்க்குத் தமிழ் கற்பித்தல். 3. வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் உருவாக்குதல்.

இந்நிறுவனத்தின் முயற்சியில் பதினாறு நாடுகளில் தமிழ் இருக்கைகள் உருவாக்கப்பட்டன.

சென்னை, மதுரை, அண்ணாமலைப் பல்கலைக் கழங்களில் திருக்குறள் துறைகள் நிறுவப்பட்டன.

இன்று அந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நிலை என்ன? உலகெங்கும் நடக்கும் தமிழாய்வு களை ஒருங்கிணைக்கிறதா? இல்லை. பிறநாட்டினர்க்குத் தமிழ் கற்பிக்கிறதா? இல்லை. வெளிநாடுகளில் நிறுவப்பட்ட தமிழ் இருக்கைகளைப் பராமரிக்கிறதா? இல்லை. மூன்று பல்கலைக் கழகங்களில் நிறுவப்பட்ட திருக்குறள் துறைகள் இருக்கின்றனவா? இல்லை. ஏன்? தமிழக அரசு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தைக் கவனிப்பதில்லை. அதன் நோக்கங்களை நிறைவேற்ற அக்கறை காட்டவில்லை.

தொடங்கப்பட்ட அந்நிறுவனத்தை மூடக் கூடாது என்பதற்காக ஏனோ தானோ என்று தான் பணி நடந்து கொண்டுள்ளது.

இப்பொழுதும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள், முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் இருக்கிறார்கள். ஆய்வு நூல்கள் அவ்வபோது வெளியிடப்படுகின்றன. ஆனால் என்னென்ன நோக்கங்களை நிறைவேற்ற அது உருவக்கப்பட்டதோ அந்நோக்கங்கள் நிறைவேற்றப் படவில்லை. அந்நிறுவனத்தின் மீது தமிழக அரசு அக்கறை காட்டவில்லை.

அப்போது சென்னைப் பல்கலைக் கழத்தின் துணைவேந்தராக இருந்தவர் முனைவர் ஆதிசேசய்யா. அவர் அதற்கு முன் யுனெஸ்கோவில் பணியாற்றினார். அந்தத் தொடர்பை வைத்து, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு யுனெஸ்கோ நிதி உதவி செய்ய வைத்தார். பிற்காலத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் “தரமாகச் செயல்படவில்லை” என்று கூறி யுனெஸ்கோ தனது நிதி உதவியை நிறுத்திக் கொண்டது.

தமிழ்ப் பல்கலைக் கழகம்: 1981 ஆம் ஆண்டு மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் நட்த்தினார். அதில் எடுத்த முடிவின் படி 1981 செப்டம்பரில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கினார். மிகப்பெரியத் திட்டங்களோடு மிகச் சிறந்த நோக்கங்களோடு அது நிறுவப்பட்டது. அதன் முதல் துணைவேந்தர் நல்லறிஞர் வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் தக்க அறிஞர்களோடு கலந்தாய்வு செய்து, மிகச் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு 25துறைகளை உருவாக்கினார்.

தமிழ்ப் பல்கலைக் கழகம் தனித்துவமான உயராய்வு மையம் என்று சட்டமியற்றப்பட்டது. சற்றொப்ப 1000 ஏக்கர் நிலம் அதற்கு ஒப்படைக்கப்பட்டது. மருத்துவம், பொறியியல், சட்டம் ஆகியவற்றிற்கான தமிழ்வழிக் கல்லூரிகளைத் தமிழ்ப் பல்கலை கழகம் நிறுவ வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. மருத்துவம், பொறியியல் இரண்டிற்கும் முதல் ஈராண்டு படிப்புக்கான பாட நூல்கள் அணியம் செய்யப்பட்டன. அவை என்னாயிற்று? செல்லரித்துக் கொண்டுள்ளது.

கடலியல் ஆய்வுக்காக, தமிழ்ப் பல்கலைக் கழகம் இராமேசுவரம் மண்டபத்தில் வைத்திருந்த ஆய்வு மையம் மூடப்பட்டுவிட்டது. பழங்குடி மக்கள் குறித்த ஆய்வுக்காகக் கொடைக்கானலில் நிறுவப்பட்டிருந்த ஆய்வு மையம் மூடப்பட்டு விட்டது. மெய்யியல் ஆய்வுக்காக காஞ்சிபுரத்தில் திறக்கப்பட்ட ஆய்வு மையம் மூடப்பட்டுவிட்டது. சித்த மருத்துவத்துறை மூடப்பட்டுவிட்டது. 25 துறைகளில் பணியாற்றிய புகழ்பெற்ற பேராசிரியர்கள் ஓய்வு பெற்ற பின் தகுந்த பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை.

மாதந்தோறும் சம்பளம் போட மடியேந்தும் வேலையே துணைவேந்தரின் பெரும்பணி ஆகிவிட்டது.

தமிழ்ப் பல்கலைக் கழகம் மற்ற பல்கலைக் கழகங்களைப் போல் தமிழக அரசின் உயர் கல்வித் துறையில் இல்லை. தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குநரின் கீழ் உள்ளது. ஆண்டுக்கு 3.81 கோடி ரூபாய் அளவில் அதற்கு அரசிடமிருந்து நிதி கிடைக்கிறது. இதர வருவாய்களையும் சேர்த்தால் மொத்தம் 4 ½ கோடி ரூபாய் கிடைக்கும். ஆண்டுக்குத் தேவையே சற்றொப்ப 15 கோடி ரூபாய்!

பணம் திரட்டுவதற்காக தொலை நிலைக் கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. முதுகலைப் படிப்பு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனித்துவம் மிக்க உயராய்வுப் பல்கலைக் கழகம் சாதாரணக் கல்லூரியாக மாற்றப்பட்டது.

செயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் தமிழ்ப் பல்கலைக் கழக நிலம் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. இப்பொழுதும் 61.42 ஏக்கர் நிலத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை கட்ட ஒப்படைத்து விட்டார். அதுவும் முதன்மை நுழைவாயில் பகுதியில் முதன்மைக் கட்டடங்களை அடுத்த பகுதியில்! இவை கட்டி முடிக்கப்பட்டால் தமிழ்ப் பல்கலைக் கழகம் என்ற அடையாளம் மறைந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்ற அடையாளமே நிலைக்கும். உயர் ஆய்வுக்கான பல்கலைக் கழகத்தில் எப்போதும் ஊர்திகளும் மக்கள் கூட்டமும் நிறைந்திருக்கும். ஆராய்ச்சிக்கான அமைதிச் சூழ்நிலைக் கெடும்.

பல்கலைக் கழக நோக்கங்களில் சொல்லப்பட்டுள்ள திட்டங்களைச் செயல்படுத்தினால் இப்போதுள்ள நிலமே போதாது. எதிர்கால விரிவாக்கத்திற்கு என்ன செய்ய முடியும்? எதிர்கால விரிவாக்கம் பற்றி ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை; அவர்களின் கவலை எல்லாம் தமிழ்ப் பல்கலைக் கழகம் எப்போது இயற்கை மரணம் அடையும் என்பதுதான்!

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்:

தமிழைச் செம்மொழியாக ஏற்று, அதற்கு சிறப்பு நிதி அளித்து உலகெங்கும் தமிழாய்வு நடக்க நடுவண் அரசு வழிவகுக்க வேண்டும் என்பது தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் நெடுங்காலக் கோரிக்கை. நடுவண் ஆட்சியில் கூட்டணி சேர்ந்துள்ளதால் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தித் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி 2004 ஆம் ஆண்டு தமிழ் செம்மொழி என்று நடுவண் அரசு ஏற்கச் செய்தார் மைசூரில் உள்ள நடுவண் மொழிகள் மையத்தில் “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்" (Central Institute of Classical Tamil- CICT) செயல்பட்டு வந்தது. 2008 லிருந்து இது சென்னையில் செயல்பட்டுவருகிறது.

உரிய இயக்குநர் போடப்படாமலும் உள் குழப்பங்களாலும் செம்மொழி நிறுவனம் செப்பமான செயலின்றித் தடுமாறுகிறது. இதன் நிர்வாகம் இயக்குநர் தலைமையில் இயங்க வேண்டும். ஆனால் எப்போதும் இதற்கென்று முழுநேர தனி இயக்குநர் அமர்த்துவதில்லை. நடுவண் மனித வள மேம்பாட்டுத் துறையின் வேறு நிறுவனங்களில் முழு நேரப் பணியாற்றும் அதிகாரிகளின் கூடுதல் பொறுப்பாகவே செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பு கொடுக்கப்படுகிறது.

முதலில் பரூக்கி, அடுத்து மோகன், இப்போது ஞானமூர்த்தி! மூவருக்கும் கூடுதல் பொறுப்பாகவே இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டது. இவர்கள் ஐ.ஐ.டி யின் பேராசிரியர்களாக இருந்தவர்கள். பொறியியல் துறை சார்ந்தவர்கள். தமிழாய்வில் தோய்ந்த தகுதியானவரை இயக்குநராக அமர்த்துவதில்லை. இங்கு என்ன நடக்கிறது. என்பது பற்றித் தமிழக முதலமைச்சர் கவலைப்பட்டுக் கொள்வதில்லை. அதிலும் செயல லிதாவிற்குத் தமிழ் என்றாலே ஏற்கெனவே கசப்பு.

தமிழக முதல்வர் என்ற முறையில் செயலலிதாதான் செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் தலைவராக உள்ளார். ஆட்சிக்குழு கூட்டத்திற்கு வர மறுக்கிறார் செயலலிதா. செம்மொழி ஆய்வு நிறுவன அதிகாரிகள் முதலைமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.

வேறு வழியில்லாத நிலையில் நடுவண் மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் புரந்தேஸ் வரி தலைமையில் இருமுறை ஆட்சிக்குழுக் கூட்டம் நடந்துள்ளது. இப்பொழுது இயக்குநராகக் கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஞானமூர்த்தி, தமிழாய்வு பற்றியோ தமிழ்வளர்ச்சி பற்றியோ கிஞ்சித்தும் அக் கறைப்படாத அதிகாரி! செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் சார்பில் வெளிமாநிலக் கருத்தரங்கங்களுக்கு இந்நிறுவனத்தின் சார்பில் உரையாற்றப் போகும் ஆய்வாளர்களுக்கு பயணப்படிக் கூட தரமுடியாது என்கிறார் ஞானமூர்த்தி.

செம்மொழி ஆய்வு மையம் 10 முகாமையான திட்டங்களையும் 12 துறைகளையும் கொண்டது. இவற்றில் எதுவும் முறையாகச் செயல்படவில்லை. எனவே இந்திய அரசு கொடுத்த நிதியைக் கூட முழுமையாகச் செலவு செய்ய முடியாமல் திருப்பி அனுப்பியுள்ளார்கள். 2011-2012 ஆம் ஆண்டிற்கு இந்திய அரசு கொடுத்தது ரூபாய் 12 கோடி. இதில் மூன்று கோடி ரூபாயைத் திருப்பித் தந்துவிட்டார்கள்.

நடுவண் அரசு கொடுக்கும் நிதியை வைத்து, பூம்புகார் அகழாய்வு, குமரிக்கண்ட ஆய்வு, கொற்கை ஆய்வு, ஆதிச்சநல்லூர் மேலாய்வு போன்ற எத்தனையோ பணிகளைச் செய்ய வேண்டிய செம்மொழி ஆய்வு நிறுவனம் பணத்தைத் திருப்பி அனுப்புகிறது.

தமிழக அரசு மேற்கண்ட முன்று தமிழ் ஆய்வு நிறுவனங்களும் சீரழிவதைப் பற்றிக் கவலைபடவில்லை.

இந்நிலையில் தமிழறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும் கண்டுகொள்ளாமல் இருக்கலாமா? உணர்வற்று இருக்கக் கூடாது; ஒதுங்கி இருக்கக் கூடாது.

தக்க தமிழறிஞர்களைக் கொண்ட ஒரு கண்காணிப்புக் குழுவை அமைத்து முதற்கட்டமாக இந்த மூன்று நிறுவனங்களின் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். குறைகளையும், செய்ய வேண்டியவற்றையும் அரசுக்கும் மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

குறைகளைக் கண்டறிந்தால் போதாது, குறைகளைக்களைய நாம் முனைய வேண்டும்.

மூன்று நிறுவனங்களும் தோற்றுவிக்கப்பட்ட நோக்கங்களைச் செயல்படுத்தும்படி, தமிழ் மக்கள் வீதிக்கு வந்துப் போராட வேண்டும்.

1938, 1965 ஆகிய ஆண்டுகளில் நடந்த தமிழ்மொழிக் காப்புப் போரில் உயிரீந்த ஈகியரின் பெயரால் இந்த உறுதிகள் ஏற்போம்!

Pin It