1938ல் அன்றைய சென்னை மாகாணம் என்றழைக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட பகுதியில் முதல்வராக இருந்த இராசாசி தலைமையிலான காங்கிரசால் இந்தி திணிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதன் முதலில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கப்பட்டது. அன்றைய காலகட்டம்என்பது வெள்ளையரின் ஆட்சியதிகாரம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்ற காலக்கட்டமாகும்.

இங்கிலாந்து ஆட்சியாளர்கள் தங்களின் மேற்பார்வையில் தேர்தல் நடத்திக் கொள்ள வழங்கிய அனுமதியின் பேரில் ஆட்சிக்கு வந்த காங்கிரசின் அன்றைய முதல்வர் இராசாசியால் முதன் முதலாக கட்டாய இந்தி திணிக்கப்பட்டது. இதை எதிர்த்து முதல்வர் இராசாசியின் வீட்டின் முன் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து 1938ம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் நாவலர் சோமசுந்தர பாரதியார், புரட்சிப் பாவலர் பாரதிதாசன், அண்ணாதுரை ஆகியோரால் காஞ்சிபுரத்தில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதேவேளை சென்னை மாகாணத்தை ஆண்டுக் கொண்டிருந்த காங்கிரசு கட்சி பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக கொண்டு வந்தது. கட்டாய இந்தியை பல்வேறு தலைவர்கள் எதிர்த்து "இந்தி எதிர்ப்பு மாநாடு' ஆங்காங்கே பரவலாக நடத்தினர்.

தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலை அடிகளாரும், சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தினார். தொடர்ந்து சென்னை கடற்கரையில் 1938ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியை எதிர்த்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் முதன் முதலாக "தமிழ்நாடு தமிழருக்கே' என்கிற முழக்கத்தை வைத்தார். அதுவரை திராவிடம், திராவிட நாடு என்று பேசி வந்த பெரியாரை பாவாணர் கூறுவது போல் "பால் திரிந்து தயிரானபின் எப்படிப் பாலாகாதோ?' அதுபோல திராவிடம் என்பது சிதைந்து தமிழான பின்னர் மீண்டும் திராவிடம் என்பது கிடையாது' என்பதை அன்றைக்கு நிலவிய அரசியல் சூழல் வலுக்கட்டாயமாகக் கொண்டு வந்ததென்றால் அது மிகையல்ல. 1939ம் ஆண்டு காங்கிரசு கொண்டு வந்த இந்தித் திணிப்பை எதிர்த்து ஒரு மாநாடு நடைபெற்றது. மற்ற மாநாடுகளிலிருந்து இம்மாநாடு வேறுபட்ட மாநாடாக இருந்தது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், நாராயணி, தாமரைக்கனி, ம.. தர்மாம் பாள், பட்டம்மாள், சீதா அம்மாள், அழகியார் என எண்ணற்ற பெண்கள் கலந்து கொண்ட எழுச்சியான போராட்டமாக இது அமைந்தது. இதற்காக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் போன்றோர்க்கு 6 வாரங்கள் சிறை தண்டனை கிட்டியது.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. இளைஞர்கள் பலர் தங்கள் தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காக்க வேண்டி எத்தகைய அடக்குமுறைகளையும், எதிர் கொள்ள அணியமாகி விட்டனர்.

நடராசன், 1938 இந்தி எதிர்ப்புக் களத்திலே சாவை பரிசாகப் பெற்ற முதல் போராளி. 1938ம் ஆண்டு திசம்பர் 5ம் நாள் சிறைப்படுத்தப்பட்ட நடராசன் சிறையைக் கண்டு அஞ்சவில்லை. தம் கொள்கையில் உறுதியாக இருந்தார். சிறையில் கடுமையான பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதனால் 1939ம் ஆண்டு சனவரி 15ம் நாள் சிறையிலேயே இறந்தார்.

நடராசனின் இறப்புக் குறித்து சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பியபோது ஈந்த ஈகியரை இழிவு செய்வது போல் அதை அலட்சியம் செய்தார் அன்றைக்கு முதல்வராக இருந்த இராசாசி. நடராசனின் தந்தை, இலட்சுமணன் சனவரி 29 அன்று "சண்டே அப்சர்வர்' எனும் ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணலில் நெஞ்சுரம் மிக்க இளைஞன் நடராசன் முன் விடுதலை வேண்டி மன்னிப்பு கோரவில்லை என்பதை தெளிவுபடுத்தி பார்ப்பன இராசாசியின் அவதூறுக்கு தக்க பதிலடி கொடுத்தார்.

நடராசனைத் தொடர்ந்து தாளமுத்து என்கிற மற்றொரு போராளி 1939ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் நாள் சிறைப்படுத்தப்பட்டார். இவரும் எவ்வித சமரசமுமின்றி உறுதியோடு இருந்து மார்ச்சு மாதம் 11ம் நாள் மறைந்து 1938 மொழிப் போரின் அழியாச்சான்றானார். இவ்விருவரின் ஈகம் தமிழகமெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எதிர்ப்பு வலுக்கவே இராசாசியின் தலைமையில் இருந்த காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மேலும் இரண்டாம் உலகப் போரும் தொடங்கி விட்டதால் இராசாசியின் அரசு 1939ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பதவி விலகியது.

இதையடுத்து சென்னை மாகாண அரசு ஆங்கிலேய கவர்னரின் ஆட்சியின் கீழ் வந்தது. 1940ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆங்கிலேய ஆளுநர் எர்சுகின் கட்டாய இந்தியை நீக்கி விரும்புகிறவர் மட்டும் படித்தால் போதும் என்று ஆணைப் பிறப்பித்தார். இதன் பின்னர் அவ்வப்போது இந்தியை கொண்டு வருவதும் பின் வாங்குவதுமாக இருந்து வந்தது. 1947 ஆகத்து 15 வெள்ளையரின் அதிகாரம் முழுவதுமாக காங்கிரசிடம் கையளிக்கப்பட்ட பின் ஆட்சியதி காரத்தை முழுமையாகப் பெற்ற நேரு தலைமை யிலான காங்கிரசு தான் இதுநாள்வரை மறைத்து வைத்திருந்த நஞ்சை மீண்டும் கக்கத் தொடங்கியது.

இந்தியை தமிழக மக்களின் மேல் வலுக்கட்டாய மாகத் திணித்தது. இதைக் கண்டித்து 1948ம் ஆண்டு சூலை மாதம் மறைமலையடிகள் தலைமையில் பெரியார் ஒரு பெரிய இந்தி எதிர்ப்பு கூட்டத்தைக் கூட்டினார். இதில் திரு.வி.க., அண்ணாதுரை, சிவஞானம் போன்றோர் கலந்து கொண்டனர். மீண்டும் 1952ம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் உள்ள நடுவணரசு அலுவலகங்கள் பெயர் பலகைகளில் எல்லாம் இந்தி எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.

பெரியார் மக்களைத் திரட்டி இந்தி எழுத்துக்களை தார் பூசி அழித்தார். இந்தி மட்டும் இந்தியாவின் அலுவல் மொழி என்று ஓர் ஆணை நடுவண் அரசால் பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணை அலுவல் மொழிச் சட்டம் 1963 என்பதை அடிப்படையாக வைத்துக் கொண்டு வரப்பட்டது. மீண்டும் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது அண்ணாதுரை தலைமையிலான திமுக நடுவணரசிடம் நேருவின் உறுதிமொழியை நடைமுறைப்படுத்த கோரிக்கை வைத்ததேயன்றி, தமிழகத்தில் இந்திக்கு என்றைக்கும் இடமில்லை என்பதை வலியுறுத்த திராணியற்றவர்களாக இருந்தனர். நேருவின் உறுதிமொழி என்பதே மோசடியான ஒன்றாகும்.

நேருவின் உறுதிமொழி என்பது என்ன? இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் அலுவல் மொழியாக நீடிக்கும் என்பதே அது. ஆக எப்போது வேண்டுமானாலும் மக்கள் விரும்புவதாகக் கூறி இந்தியைத் திணிப்பதற்காக நேருவின் காங்கிரசால் நயவஞ்சகமாக முன்மொழியப்பட்ட திட்டம் என்பதைத் தவிர வேறல்ல. நேருவின் அரசியல் நேர்மை உலகறிந்த ஒன்றாகும்.

காசுமீர மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்துவதாக உறுதியளித்து மாறாக வாக்கெடுப்பு நடத்தாமல் அம்மக்களின் தலைவரான சேக் அப்துல்லாவை வெளியில் வராதபடி சிறையிலடைத்தவர்தான் நேரு. 1965 சனவரி 26ல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் வெடித்தது.

தமிழ் மாணவர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கம் என்கிற மாணவர்கள் இயக்கம் தமிழகம் முழுவதுமுள்ள இந்தி எதிர்ப்பாளர்களையெல்லாம் ஒருங்கிணைத்தது. அண்ணாதுரை சனவரி 26 இந்திய குடியரசு நாளை "துக்க நாளாக' அறிவித்தார். கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை காட்டவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பக்தவத்சலம், மாணவர்களையும் போராட்டக் காரர்களையும் கடுமையாக எச்சரித்தார். அரசின் எதிர்ப்பைக் கண்டு திமுக சனவரி 25ஐ துக்க நாள் என அறிவித்தது.

1968 சனவரி 25, காலை மதுரையில் மாணவர்கள் பெருமளவில் திலகர் திடலை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அவர்களுடைய நோக்கம் ஊர்வலமாக சென்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 17வது பிரிவை கொளுத்த வேண்டும் என்பதாகும். ஊர்வலத்தினூடே இந்திக்கு பெரிய பாடை கட்டி அதைக் கொளுத்தியபடி இந்தி ஒழிக, இந்தி வேண்டாம், ஆங்கிலம் வேண்டும் என்று முழங்கியபடி ஊர்வலம் சென்றது.

அப்போது காங்கிரசுகாரர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. தமிழகத்தில் இதுவுரை நடைபெற்ற போராட்டங்களிலே மிகப் பெரிய போராட்டம் 1965 மொழிப் போராட்டமே ஆகும். நம் தாய்மொழியாம் அருந்தமிழ் மொழியைக் காக்க எண்ணற்ற இளைஞர்கள் தங்கள் உயிரைத் தீயிக்கு இரையாக்கினர். உலகில் அதுவரை எங்குமே நடந்திராத ஒன்று மொழிக்காக நூற்றுக்கணக்கானோர் உயிரை தாமாக முன் வந்து தற்கொடையாக கொடுத்து தம் தாய்மொழியைக் காப்பாற்ற போராடியதுதான்.

அய்யம்பாளையம் வீரப்பன், கீழப்பழவூர் சின்னச்சாமி, கீரனூர் முத்து, கோடம்பாக்கம் சிவலிங்கம், மாயவரம் சாரங்கபாணி, சத்தியமங்கலம் முத்து, விருகம்பாக்கம் அரங்கநாதன் போன்றோர் தங்கள் உடலில் கன்னெய் ஊற்றி தீவைத்துக் கொண்டு தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! என்று முழக்கமிட்டபடியே இறந்தனர்.

அவ்வாறு இறந்துபோன அத்துணை பேரும் தங்களை ஈன்றெடுத்த பெற்றோரைப் பற்றிக் கவலைப்படவில்லை. தங்கள் மனைவிமார்கள் மற்றும் மழலைச் செல்வங்கள் பற்றி கிஞ்சிற்றும் எண் ணாமல் மொழியைக் காக்க வேண்டும் அதன் மூலம் தம் இனத்தைக் காக்க வேண்டும் என்கிற உறுதியோடு சாவை எதிர் கொண்டனர். இந்த வீர மறவர்களைப் பற்றி பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதுகையில் "கன்னெய் முழுகி கனல் குளித்தானையோ' என்ற வரிகள் அவர்களின் ஈகத்தை பறைசாற்றுவதாக அமைந்தது.

இவர்களைப் போலவே அண்ணாமலைப் பல்லைக் கழக மாணவர்கள் வரலாறு காணாத போராட்டத்தை நடத்தினர். அண்ணாமலை பல்கலைக் கழகமும், சென்னைப் பல்கலைக்கழகமும் காலவரையின்றி மூடப்பட்டன. போராட்டம் தீவிரமடைந்தது. பள்ளி கல்லூரிகள் ஏதும் இயங்கவில்லை.

மொழிப் போராட்டத்தை தீர்மானிக்கும் ஆற்றல் மாணவர்களின் கைக்கு மாறியது. தன்னெழுச்சியாக ஆங்காங்கே தமிழகமெங்கும் மாணவர்களும் பொதுமக்களும் திரண்டெழுந்து போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். தமிழகம் இந்தியாவிலிருந்து துண்டித்ததுபோல் வரலாறு காணாத கிளர்ச்சியும் வன்முறையும் வெடித்தது. இராணுவம் வரவழைக்கப்பட்டது.

கலவரத்தை அடக்க போராடிய மாணவர்கள் மீது பக்தவத்சலத்தின் காங்கிரசு அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதிலே பலர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாயினர். அதிலே முதல் பலி அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் மாணவர் ராசேந்திரன் ஆவார். மற்றொரு மாணவர் நெடுமாறன் படுகாயமுற்றார்.

இப்படிப்பட்ட மொழிப் போர் ஈகியர்களைத்தாம் முதலமைச்சர் பக்தவத்சலம் வறுமையில் இறந்து போனார் கள் என்றும் வயிற்று வலியின் காரணமாக இறந்தார் என்றும் காதல் தோல்வியாலும் கடன் தொல்லையாலும் இறந்தார் என்றும் நாகூசாமல் சட்டப் பேரவையில் இழிவுபடுத்தினார்.

வேண்டும் என்றே இறந்த வர்களின் எண்ணிக்கையை குறைவாகக் காட்டினார். வீரஞ்செறிந்த மொழிப் போராட்டத்திற்கு தன்னலமற்ற தலைமை கிட்டியிருந்தால், அது சரியான பாதையில் சென்று தமிழக விடுதலைப் போராட்டமாக மாறியிருக்கும். 1965 மொழிப் போராட்டத்தைப் பொறுத்தளவில் அதன் துவக்கப்புள்ளி மொழியைக் காக்கும் ஒரு போராட்டமாகத் தொடங்கப்பட்டாலும், அதன் வளர்ச்சிப் போக்கில் அம்மொழியைச் சார்ந்த தேசிய இனம் விடுதலை என்பதாகவே அமையும். தமிழ் மொழி காக்கத் தொடங்கப்பட்ட போராட்டத்தை வெறும் காங்கிரசு எதிர்ப்பாக மட்டும் மாற்றி 1967 பொதுத் தேர்தலில் தங்கள் வாக்குப் பெட்டிகளை நிரப்பி ஆட்சிக்குவந்தது தி.மு.க. அரசு.

ஆட்சிக் கட்டிலில் ஏறி அமர்ந்த திமுக அதற்குக் காரணமான ஈகியர்களை மறந்தே போனது. அன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு சொன்ன அறிவுரை "மாணவர்கள் அரசியலில் பங்கேற்கக் கூடாது' என்பதே. ஆனால் கருணாநிதியும் அவரது எடுபிடிகளும், 1965 மொழிப் போரில் கருணாநிதி கைதுசெய்யப்பட்டு பாளையம் கோட்டை சிறையில் சில காலம் இருந்ததை பாம்புகளுக்கும், தேள்களுக்கும் நடுவில் கருணாநிதி துன்பப்பட்டது போன்று இன்றுவரை மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

உண்மையில் அன்று மொழிப் போரை காட்டிக் கொடுத்தவர்களில் முதன்மையானவர் கருணாநிதி தான். அன்றைக்கு பாளையம்கோட்டை சிறையில் கருணாநிதி தனிமைச் சிறையில் இருந்ததைப் போல ஒரு மாயை இன்றுவரை நிலவுகிறது. சிறையில் கருணாநிதியுடன் மாணவர்களின் படி நிகராணிகளாக பெ.சீனிவாசன், காளிமுத்து, இராசாமுகமது, சேடப்பட்டி முத்தையா, துரைமுருகன் என பலர் இருந்தனர். இவர்களில் கருணாநிதிதான் முதன் முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை வழக்குரைஞர் வழியாக விண்ணப்பித்தார்.

நாராயண சாமி முதலியார் எனும் வழக்குரைஞரை வைத்து, இவர் பின்னாட்களில் ம.கோ.ராவின் அமைச்சரவையில் சில காலம் சட்ட அமைச்சராக இருந்தவர். அந்த மனுவில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கும் கருணாநிதிக்கும் தொடர்பில்லை; அவ்வாறு தொடர்பில்லாமல் கைது செய்தவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை தனது தரப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் மறைத்து "ஓடிவந்த இந்திப் பெண்ணே கேளீர்; தேடி வந்த கோழை உள்ள நாடு இதுவல்லவே' என்று வெற்று ஆரவாரம் பேசி மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் ஊறுவிளை விப்பதில் காங்கிரசுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்லர் இங்கே இருக்கும் தமிழினத் தலைவர்களும் திராவிடத் தலைவர்களும். இவர்கள் ஆட்சியில்தான் தமிழுக்காக உண்மையாக உழைத்த தமிழறிஞர்கள் துன்புறுத்தப்பட்டனர். பலர் வறுமையில் வாடி இறந்தனர்.

தமிழ் மொழி தமிழினம் காக்கப் போராடியவர்கள் கடுமையான வழக்குகளில் சிறையிலடைக்கப் பட்டனர். தமிழ் வழிக் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. உயர் கல்வியில் தமிழ் மொழிக்கு இடம் இல்லை. 1997ம் ஆண்டு தமிழ் வழியில் பொறியியல் படிப்பு படிப்பதற்காக பலர் விண்ணப்பம் செய்திருந்த போதிலும் இவர்களின் அலட்சியப் போக்கினால் அகிலஇந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகத்திடம் அனுமதி கிடைக்காமல் கிடப்பில் போட்டனர்.

மாறாக தனியார் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல் பெருகி விட்டன. சென்னையில் ஓடுகின்ற தனியார் பொறியியல் கல்லூரி பேருந்துகளைப் பார்த்தாலே புரியும் அவற்றின் வளர்ச்சி. கல்விக் கொள்ளைக்கு வழிவகுத்தவர்கள் திமுக ஆட்சியாளர்கள் என்பது அனைவருக் கும் தெரியும். இன்று வரை நீதிமன்றங்களிலே தமிழ் இல்லை.

தமிழில் வழக்காட உரிமை கோரிய வழக்குரைஞர்களை சிறைப்படுத்துவதும், தமிழீழ மக்களுக்காக குரல் கொடுத்த வழக்குரைஞர்கள் மீதுநீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே ஆயிரக்கணக்கில் காவல் துறை குண்டர்களை ஏவி விட்டு தாக்குவது, தமிழக மீனவர்களை சிங்க கடற்படை நாள்தோறும் சுட்டுக் கொல்வதைப் பற்றி கிஞ்சிற்றும் கவலை யில்லாமல் நடுவணரசுக்கு மடல் எழுதுவதாக் கூறி தமிழக மீனவர்கள் மற்றும் அவர்தம் குடும்பங்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துவது இவையெல்லாம் தமிழ் மொழியையும் தமிழினத்தையும் உய்விக்க வந்ததாகக் கூறிக் கொள்ளும் திமுகவின் துரோகங்கள்.

நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மொழி என்பது தனித்த ஒன்றல்ல. அது ஒரு தேசிய இனத்தின் அடையாளம். அவர்களின் உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்தது. அந்த மொழியின் விடுதலை என்பது அந்த தேசிய இனம் விடுதலை அடைவதற்கான முக்கிய கூறு ஆகும். அதனால்தான் 1965 மொழிப்போர் உச்சக்கட்டத்தை எட்டும்போது துவக்கத்திலே அதற்கு தலைமை கொடுப்பதாக கூறி வந்த தமிழினத் தலைவர்களும் திராவிடத் தலைவர்களும் ஓடி ஒளிந்துக் கொண்டனர்.

ஆனால் இதை சரியாகக் கணித்த இந்திய உளவுத் துறை தமிழக விடுதலையை நோக்கி போராட்டம் செல்வதை நடுவணரசு உணர்த்தியதன் வெளிப்பாடே அன்றைக்கு இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி தமிழகத்தின் மீது இந்தியை திணிக்க மாட்டோம், அலுவல் மொழியாக ஆங்கிலம் நீடிக்கும் என்று கூறினார்.

மீண்டும் ஒரு மொழிப் போர் வந்துவிடுமோ என்று இந்திய அரசைக் காட்டிலும் அதன் அடிவருடிகளாக இருக்கும் தமிழக ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள். இந்திய அரசும் இந்தியும் தமிழுக்கும் தமிழினத்திற்கும் செய்த கேட்டைக் காட்டிலும் தமிழக ஆட்சியாளர்கள் செய்த இரண்டகங்கள் அதிகம்.

இவற்றை நாம் கருத்தில் கொண்டால்தான் நாம் நம்முடைய அடிமைத் தளையில் இருந்து விடுபட முடியும் என்பதை உணர வேண்டும்.