எல்லா யுகங்களின் வரலாறு, குறிப்பாக

இந்த யுகத்தின் வரலாறு புகட்டுகின்ற

பாடம் இதுதான்: தங்களைப்பற்றி

சிந்திக்க மறந்தவர்கள் மறக்கப்படுவார்கள்

- லூயிஸ் ஒட்டோ

பொதுத்தன்மையோடு மையநீரோட்டத்தில் பயணித்த பெண்எழுத்து தன் வாழ்க்கையை முன்னிறுத்தி தன் சுயஅனுபவங்களை முதன்மைப் படுத்தி எழுதிக் கொண்டிருக்கும் காலமிது. கவிஞர் கலை இலக்கியாவின் என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன் எனும் தொகுப்பின் தலைப்பு கவிஞரின் துணிவை வெளிப்படுத்துகிறது.

அந்தப்புரம் என்ற சொல்லாடல் மன்னர் காலப் புழக்கம்: மன்னரின் மனைவியருக்கான கோட்டை ஆண்வாடை வீசிவிடாதபடி பெண்கள் புடைழே வாழ்ந்தபகுதி, தன் சுய விருப்பங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு அரசனின் அன்றைய தேர்வில் இடம்பெறுவோமா என்ற நிச்சயமற்ற உணர்வுடன் ஒப்பனை, வாசனைத்தைலங்கள், பட்டாடை என அனைத்து விதத்திலும் அலங்கரித்துக் கொண்டு உலாவரும் புறஅளவிலான செல்வப்பகுதி. சாதாரண மக்களுக்கு அரசன்மீதிருந்த மாயை, பயத்தைப்போல அந்தப்புரம் தொடர்பான மாயையும், ஈர்ப்பும் உண்டு. கடவுள் என்ற சொல் ஆணாதிக்கப்பிடிக்குள் உருவானது. தாய்மையை, இயற்கையை உயர்வாகப் போற்றிய நிலை பின்னர் ஆதிக்கக் சக்திகளால் கடவுளுக்கும் கட்டமைக்கப்பட்ட அதிகாரத்திற்குமாக மடைமாற்றம் அடைந்தது. அந்தப்புரம் என்பது அதிகாரபலம் மிக்கவர்கள் பெண்களை அடைத்து வைத்த தொழுவம். இவ்விரு சொற்கள் உருவாக்கும் மாறுபட்ட உலகத்தை இணைப்பதன்மூலம் இருபாலினரையும் இருபால்சார்ந்த அந்தரங்கத்தின் குறியீடாகவும் பொருள்படுகிறது.

கவிதை மனதுக்கு மூலதனம் அவதானம், அழகியல். தன்னை ஈர்க்கும் புள்ளியிலிருந்தே கவிதை மனசுபடபடத்துப் பறக்கிறது. இத்தொகுப்பில் கற்பனை, உவமை என அழகுடன் மெல்லிய குரலில் கவிதைவிரிகிறது. தீராத அன்பு, நேசம், காதல், நிரவப்பட்ட வெறுப்புகளால் தளும்பிக் கிடத்தல், வார்த்தைகளால் காயப்படல் எனப்பல அனுபவங்களும் பதிவாகியுள்ளன.

தாய்மையைக் கொண்டாடிய ஆதிகாலம் மெல்ல மெல்ல மாறத்துவங்கிய நிலையில் பெண்களது வாழ்க்கை பல்வேறு துயரங்களைச் சந்திக்க ஆரம்பித்தது. சீர்திருத்தவாதியான பெரியார் கருப்பையைக் கழற்றி எறிந்துவிடக் கூறும்படியாக, போற்றப்பட்ட தாய்மையைப் புறந்தள்ளுவதே மேல் என்ற சிந்தனையோட்டமும் உருவானது. இக்கருத்தோட்டத்திலிருந்து மாறுபட்டு தாய்மையைக் கொண்டாடுதல் குழந்தைகளின் மீதான கவனஈர்ப்பு அவசியம் மற்றும் குழந்தைகள் உலகை தாய்தான் அறிய முடியுமென்ற கருத்து வலிமையாக பெண்கவிஞர்களின் கவிதைகளில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பிரசவித்தவள் - பிறந்தவர்க்கிடையில்

அலைவுறும் அவளுக்கு – நாங்கள்

நேற்று நேர்ந்து கொண்ட சாமியெல்லாம்

நேர்த்திக்கடன் செய்யக்கூடும்.

என பிரசவ வேதனையை உயிர்வலியை உணர்ந்த தாய்க்கு சாமியே நேர்த்திக்கடன் செய்யும் என்று தாய்மையை உயர்த்துபவர். தாய்மையை, அது சார்ந்த உணர்வை, குழந்தை பராமரிப்பை பெண்கள்தான் நேர்த்தியாக செய்ய முடியும் என்ற உணர்வுத் தளத்தின் உச்சமாக நேர்த்திக்கடன் என்ற வார்த்தை பொருள்படுகிறது.

“ என் கருவறையிலிருந்து

நீ என்

கருவிழிக்கு மாறினாய்

என குழந்தையைக் குறிப்பிடும் பொழுது கருவறை சுமந்ததை கருவிழி சுமக்கும் முரணழகுடன்,

குழந்தையின் தெறிக்கும் சிரிப்பில்

பிசுக்கும் எச்சிலில்

óத்து நிறைகிறது படைப்புச் சக்தி

என்று படைப்பை சக்தியாக மையப்படுத்தியும்

நான்

சர்வலோகத்தையும்

கருவுற்றிருக்கிறேன்

அதில்

எனதுயிர் என் கைத்தடியாகிறது

என சர்வலோகத்தைப் படைப்பவளாக அதன் காரணமான தாய்மை உணர்வோடு புளகாங்கிதப் படுகிறார்

சமூகத்தின்மீது திணிக்கப்படும் மரபுகளைத் தொடர்ந்து அடைகாக்க நிர்பந்திக்கப்படுபவர்கள் பெண்கள். காலத்திற்கேற்ப உடையை வாழ்க்கை அமைப்பை அமைத்துக் கொள்வது ஆண்களுக்கு எளிது சடங்கு சம்பிரதாயங்களைத் தன்னிலிருந்து இறக்கி வைக்க முடியாமல் அதற்குரிய ஆதியை அறியாமல் அடுத்த தலைமுறைக்கு இட்டுச் செல்பவர்கள்; பெண்கள். குறிப்பாக பெண்குழந்தைக்கு வளரும் காலத்திலேயே அம்மா தனக்குத் தெரிந்த அனைத்தையும் புகட்டி வளர்ப்பாள். கையிலுள்ள சோறை குழந்தைக்கு விளையாட்டுக் காட்டி ஊட்டிவிடும் இலாவகத்துடனேயே தாய் முன்னோர்கூறிய மரபையும் சேர்த்து ஊட்டி விடுகிறாள். கலை இலக்கியா ‘அம்மா’ பற்றிய மற்றொரு கவிதையில்

எப்போது வந்து அவள்

எவ்வளவு தங்கினாலும்

நான் அடைகாத்தவை பொரிவதில்லை

 

அடைகாத்தனைத்தும்

கதறி துடிக்கும் போதெல்லாம்

மீண்டும் அம்மா

கனவில் வருவாள்

என தன்னுள் தேங்கிக்கிடப்பவை வெடித்துத் தெறிக்கக் காத்திருக்கையில் அதனைக் காப்பவளாக அம்மா இருக்கிறாள்.

“என் வீடும் நிலமும் எங்கே” என்ற கேள்வியின் மூலம் பல கேள்விகளை நம்மிடம் ஏற்படுத்துகிறார். விரவிக்கிடக்கும் ஆணாதிக்கக் கூறுகளுள் சிக்கித் தவிக்கும் சமூகத்தில் பெண் வீடு, பெண்மட்டுமே வாழும் வீடு, மலினமாகவே கற்பிக்கப்படுகிறது. பெண்பார்க்கும் பொழுதுகளில் இன்றளவும் பெண்ணைப்போலவே பெண்வீடும் இரண்டாம் தரமாகவே நடத்தப்படுகிறது. பெண்கள் மட்டுமே வாழும் ஆண்துணையற்ற வீடுகள் அண்டை அயலாருக்கு அசைபோடக் கிடைத்தவையாகிறது. பெண்ணுக்குரிய அசையாச் சொத்து என்பதை முற்றிலுமாக மறுத்துவந்த சமூகத்தின் எச்சம் இன்னும் தீர்ந்தபாடில்லை. பெண்ணுக்குரிய வீடும் நிலமும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

அதிர்ஷ்டம், துரதிஷ்டம், ராசி பார்த்தல், சகுனம், முகராசி குறித்து கேள்வி எழுப்பும் கவிஞர்

‘தலைமுறை மாறினாலும்

லஷ்மி என்றும் மூளிஎன்றும்

வைத்துவிட்ட பெயர் மட்டும்

மாறுவதில்லை

என சமூகநிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் பண்பாட்டுத் தளத்தில் மூடநம்பிக்கை அகலாத போக்கை சாடுகிறார்.

ஓவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டிய வாழ்வதற்கான அடிப்படைக் கூறான உரிமை பெண்ணுக்கு பல்வேறு நிலைகளில் மறுக்கபட்டுவருகிறது. குடும்பத்திலுள்ள நபர்களே பெண்களைத் துன்புறுத்தினால், அதைத் தடுக்கும் வகையில் குடும்ப வன்முறை தடை சட்டம் கொண்டு வரப்பட்டபோதும் கண்ணுக்குத் தெரியாத பல துன்பங்களை சந்திப்பதிலிருந்து விடுபட இயலாநிலையே இருக்கிறது.

பால்ய சிநேகிதனை வரவேற்பறைக்கு அழைத்துப் பேசுவதோ, ஒற்றை அறைக்குள் எதிர்பாலினரோடு உரையாற்றுவதோ, இரவில் தனித்து பயணிப்பதோ அவளது ஒழுக்கத்தின் மீதான விமர்சனமாகிறது அவளுக்கு வரும் கடிதங்கள் கூட கண்காணிக்கப்படுகிறது.

நெருஞ்சிகளின் நுனியிலும்

மலைகளின் மார்பிலும்

மெல்ல விரிகின்றன

எனக்கான கடிதங்கள்

அந்தக் கடிதங்களை மட்டும்

எனக்குமுன்பு

யாரும்

வாசித்துச் சோதிக்க முடியாது

என சோதித்துவிட முடியாத கடிதம் என இயற்கையை நெருக்கமாக்கிக் கூறுகிறார்.

பெண்களுக்குரிய வன்முறைகளுக்கான சட்டம்பல இயற்றப்பட்டும் சட்டம் குறித்த விழிப்புணர்வற்ற சமூகமே தொடர்ந்து வருகிறது. பிறர் செலுத்தும் வன்முறையைக் காட்டிலும் பெண் தன்மீதே செலுத்திக் கொள்ளும் வன்முறை அதிகம். நேரமின்மை காரணமாக தனது உணவையும் உறக்கத்தையும் பணயம் வைக்கிறாள்.

பெண்ணிற்கு புத்தி சொல்லும் இரும்பு மரபினிடம் குடும்ப வன்முறைச் சட்டம் புரியவைக்குமோ புருசனின் அனைத்திலும் பெண்ணிற்கு சம அதிகார முண்டென்று எனும் வரிகளில் இருபால் சமத்துவத்தை விழைகிறார். பெண்ணிற்குரிய குடும்பப்பணிகளை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதோடு மரபார்ந்த அதிகாரக் கட்டமைப்பை மாற்றிக்கொள்ள விரும்பாதவர்களாக சமூகம் ஆண்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்து வருகிறது.

மரணத்திலும் கொடியது தூக்கம் என்றும், ஆயுளின் சுருக்கம் பற்றி எதுவுமே தெரியவில்லை என்னைப் பாதிப் பிணமாக்கும் தூக்கத்திற்கு என்றும் பதிவுசெய்யும் கவிஞர்

உறங்கவே கூடாத சிறுவாழ்வில்

உறங்கித் தொலையும்

கண்களுள் விரித்து வைக்கப்பட்டுள்ளது

புத்தகம்

என வாசித்தல் படைத்தல் முதலான செயல்களுக்கும் தூக்கத்தை தொலைக்க வேண்டிய துக்கத்தைப் பதிவு செய்கிறார். இத்தகைய குடும்பச் ழேலை வென்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள பெண்கள் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

பெண்களை நகமும் சதையுமாகப் பிணைத்திருப்பது அவளது பணிச்சுமை. பெண்களின் வாழ்வில் தீராத சலிப்பை, வெறுமையை ஏற்படுத்துகிறது. நிறுவனமயமாக்கப்பட்ட வைக்கும் அதை ஏற்றுக்கொள்ள இயலா மனநிலைக்கும் இடையிலான மனநிலையிலேயே உயிர்த்துடிப்பான கவிதை பிறக்கிறது.

நான் பறிப்பதும் சமைப்பதும் என்னவோ காய்கறிகளாகத்தானிருக்கிறது என்று சமைப்பதில் விஞ்சிய சலிப்பை காட்டும் கலை இலக்கியா

மீண்டும் மீண்டும்

சலிப்பில் உயிர் பிழிகிறது….

காட்டுப் பூச்சிகளும் வேலையற்ற

பெண் விலங்குகளுமே

வாழத் தெரிந்தவை

என குடும்ப நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட பணிச்சுமை பெண்களைச் சிறைக்குள் கட்டிவைப்பதாக இருக்கிறது என்கிறார்

தன் தோழியை சந்திக்கச் சென்ற தருணத்தில் முன்போல் உயிர்ப்புடன் இல்லாமல் அடுக்களை உபகரணமாக மாறிவிட்டதை உணர்கிறார்.

எனக் கென்னவோ – ஒரு

மின்ஆட்டுரல், வாயு அடுப்பு போன்ற

சடப்பொருளிடம் பேசிய உணர்வு

கழிவுகள் தின்ற நதி, பிளாஸ்டிக்பைகளில் படபடக்கும் éமியின் மரணமூச்சு துயர் கொண்ட மரங்கள் என ழேலியல் சார்ந்தும் கவனம் கொண்டிருக்கிறார்

சலசலக்கும் மரங்களே

விடிந்து விடுமானால்

கடிகார சப்தமும்

எனது கவிதை மனமும்

காலாவதியாகி விடும்

என தனக்கான கவிதைமனதை பாதுகாத்துக் கொள்ள ஏற்ற காலமாக இவருக்கு இரவு நேரம் மட்டுமே இருக்கிறது.

கலை இலக்கியா மலைமுகடுகளிலும் வானத்திலும் சூரியனிலுமாக சிறகடிப்பதோடு பெண்சார்ந்த அனைத்து விடயங்களிலும் அலையலையாகக் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருப்பவராகவே காட்சியளிக்கிறார். அவரது கேள்விகளுக்கு ஒத்திசைந்து செல்கிறது கவிதை மொழி. உறவுகளுக்கு உருகுபவையாக, பெண்ணாக பேசுபவையாக, சமூகப் பொறுப்புகளில் ஈடுபாடு கொண்டவையாக அகமனதில் சதா தேடுதல் வேட்டையாடுபவையாக கலை இலக்கியாவின் கவிதைகள் வலம் வருகின்றன.

- ச.விசயலட்சுமி

 

Pin It