மகள் பெரிய மனுஷியாகி விட்டாள்

குவிகின்ற அறிவுரைகள் கேட்கும்

சின்னப் பெண்ணாக்கி விட்டார்கள்

என்னை-

 

மகனும் மகளும்

எல்லா விஷயங்களையும்

அவனிடம்தான்

முதலில் சொல்வாள்

இந்த விஷயத்தை மட்டும்

என்னிடம் தான் சொன்னாள்

தன்னிடம் முதலில் சொல்லவில்லையென்று

சண்டையிடும் மகனையும்

திடீர் கூச்சத்தில் நெளியும் மகளையும்

என்னவென்று சமாதானப்படுத்துவது?

 

நானும் நீயும்

உடுத்தி இருந்தது

செவ்வாடையாய் நிறம்

மாறிய நாளொன்றில்

லுங்கிக்குள் மறைத்தபடி

தயங்கித் தயங்கி நீ கொடுத்த

`எக்ஸ்ட்ரா லார்ஜ்' நாப்கின்

என் விழி ஈரமும் துடைத்ததென்பதை,

எப்படிச் சொல்வேன்?

 

நண்பர்களும் நம்பரும்

நண்பர்கள்

அனைவரின்

அலைபேசியிலும்,

என் பெயர்

என் பெயராக இல்லை...

ஜி.தேவி