தொடர்பு கொண்ட அனைவரும்
தொடர்புக்கு வெளியே
இருக்கும்போது
தொடர்பு கொள்வது எவ்வாறு?

ஒரு குரல் கிடைத்தால்கூடப் போதும்,
அந்த நேரத்துத் தாகமும், தனிமையும்
தணியுமெனத் தகிக்கும்போது,
தொலைந்துபோதல் நிகழ்வதுதான்
மாகொடுமை.

அதைவிட
நம்மை யாரோ தொலைத்துவிட்டார்கள்
என்பதும்
அந்தக் கணத்து உண்மைதான்.
எல்லோராலும், எல்லா சமயங்களிலும்
எல்லோருடனும்
இருக்க முடியாதென்பதும்
நிதர்சனந்தான்.

அடைபட்ட அறையின் நடுவே
காற்றுப் புகாமல் சாத்தப்பட்ட
வாயிற்கதவுகளையும், ஜன்னல்களையும்
தட்டித் தட்டிக் கைகள் ஓய,
தேடப்பட்டவரின் குரலும், அணுக்கமும்
தூரதூரமாய் விலகும்.

தொடர்பில்லாமல் இருப்பது
அபத்தம் என்றும்,
தொடர்புடன் இருப்பது
அவசியம் என்றும்,
ஸ்வாதீனம் சுடுகின்றபோது,
தொடர்புகளைத் தோ்ந்தெடுக்கும்
நேரமும், காலமும்
நம்வசம் இருந்தாலும்,
நம்மைத் தேர்வு செய்யும்
தேவையும், விழைவும்
தொடர்புகளுக்கில்லாமல்
போய்விடலாம்.

Pin It