முப்பதாண்டுகளுக்கும் மேலாக தனது இசையாலும், நடனத்தாலும் உலககைக்குலுக்கிய கலைப்போராளியான மைக்கேல் ஜாக்சன் காலமானார். 25.6.2009 அன்று அவர் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாரடைப்பால் மரணமடைந்தார். உலகம் முழுவதுமுள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும், நடன இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும் கதறியழுவதை தொலைக்காட்சி ஊடகங்களில் பார்த்து நாமும் மனவேதனைப்பட்டோம்.

உச்சி முதல் உள்ளங்கள் வரை துள்ளித் துள்ளி ஆடும் அவரது பாப் நடனமும், பாப் இசையும் நொண்டிகளைக் கூட நடனமாட வைத்தது. இம்மாபெரும் கலைஞனின் ஒவ்வொரு நடனத்திலும் பாடலிலும் ஏதேனும் ஒரு பொருள் இருக்கும். நிறவெறிக்கெதிராக அவர் பாடி ஆடிய 'கருப்பு - வெள்ளைப் பாடல் (திரில்லர்) மிகவும் புகழ்மிக்கது. சுற்றுச்சூழல் பராமரிப்பு குறித்த அவரது நடனம் உலகின் குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. ஆடும்போதே மரங்கள் வெட்டப்பட்டுச் சாயும், யானைகள் சாகும். பின்பு மரங்களும், யானைகளும் எழுந்து நிற்கும். அவரது பாடல்கள் நம்பிக்கையூட்டுபவையாகவே இருந்தன. அதனால்தான் அந்த ஓசை உலகையே அதிரவைத்தது. அவரது நடனங்களையே நமது திரைப்படக்கலைஞர்கள் ஆடினர்.

மைக்கேல் ஜாக்சனின் இசை ஆல்பம் 75 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது. இன்னும் விற்பனை ஆகிவருகிறது. ஆல்பங்களில் 500 பாடல்கள் புகழ்பெற்றவை என்று கூறப்படுகிறது. அவர் வெறும் இசை, நடனப்புயல் மட்டுமல்ல. தலைசிறந்த நடிகரும் கூட. பாடலும் நடனமும் மனிதனைத் தூங்கவைக்கக்கூடாது, மனிதர்களைத் தட்டி எழுப்ப வேண்டும் என்பது அவரது கொள்கையாகும். அவரது பாடலும் நடனமும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை எழுந்து நின்று குதியாட்டம் போடச் செய்யும், அவரது வருகைக்குப் பின்பு இசையமைப்பிலும், நடன அமைப்பிலும் உலகம் முழுவதும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.

ஜாக்சன் தனது முகத்திலும், உடலிலும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்து தனது கருப்பு நிறத்தை வெள்ளையாக்கினார். குழந்தைகளோடு அவர் இரண்டறக் கலந்து அவர்களோடு தனது பெரும் பகுதி நேரத்தைச் செலவிட்டார். அவர் மீது ஒரு குழந்தையுடன் செக்ஸில் ஈடுபட்டதாகப் பொய்க் குற்றம்சட்டப்பட்டு வழக்கில் பழிசுமத்தி சிக்க வைக்கப்பட்டார். அது நிரூபிக்கப்படவில்லை. எனினும் மன உளைச்சலுக்கு ஆளாகி போதை ஊசிகளுக்குப் பலியானார், கடனாளியானார். ஜூலை 2009ல் லண்டனில் 50 நிகழ்ச்சிகளை நடத்திக் கடன்களிலிருந்து மீளத் திட்டமிட்டார். அதற்குள் மாரடைப்பால் காலமானார். இறக்கும்போது எலும்பும் தோலுமாய் 50 கிலோ எடைதான் இருந்துள்ளார்.

அவரது மரணம் உலகையே உலுக்கிவிட்டது. அவரது பாடல்களும் நடனங்களும் நிரந்தரமாய் உலக மக்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும். ஐம்பது ஆண்டுகளே வாழ்ந்த மிகப்பெரிய மேதை, மகத்தான கலைஞர் அவர்.

மைக்கேல் ஜாக்சனுக்கு நமது புகழஞ்சலி. 

Pin It