அமெரிக்காவில் பெய்த நெருக்கடி மழைக்கு முன்னெச்சரிக்கைக்கு குடை பிடிக்காத நாடுகள் எக்கச்சக்கமாக நனைந்து காய்ச்சலோடு புலம்பிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து தப்பித்த நாடுகள் என்று சீனாவையும், இந்தியாவையும் தொடர்ந்து வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இரு நாடுகளிலுமே நிதித்துறை அரசின் கைவசம் இருந்ததுதான் தப்பிப் பிழைத்ததற்குக் காரணம். சீனாவைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதேபோல் இந்தியாவில் நிதித்துறை அரசின் கைவசமே நீடிப்பதற்கு இடதுசாரிகள்தான் காரணம் என்பதற்கு மன்மோகன்சிங், சிதம்பரம், அலுவாலியா ஆகியோரின் புலம்பல்களே காட்டுகின்றன.

இதேபோன்று காய்ச்சல் வராமல் தப்பித்த மற்றொரு நாடு வியட்நாம். சர்வதேசப் பொருளாதார நெருக்கடி என்றவுடன் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முடுக்கிவிடும் திட்டத்தை கம்யூனிச அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் கொண்டு வந்ததுபோல் முதலாளிகள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிப்பதற்காக இந்தத்திட்டம் கொண்டு வரப்படவில்லை. சாதாரண மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் வகையில் புதிய வேலைவாய்ப்பின்மையை இந்தத்திட்டம் உருவாக்கியது.

அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளில் அரசின் நிதியுதவியை வாங்கிக் கொண்டு தொழிலாளர்களின் சீட்டைக் கிழித்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வியட்நாமிலோ, ஆட்குறைப்பு செய்யாத மற்றும் கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு வெறும் இரண்டு சதவிகித வட்டிக்கு கடன்தர வியட்நாம் அரசு முன்வந்தது. வியட்நாமின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்கு 70 சதவிகிதமாகும். அது பாதித்ததென்னவோ உண்மைதான். ஆனால் அந்நாட்டில் இதுவரை ஒரு நிறுவனம்கூட மூடப்படவில்லை. யாரும் வேலையிழக்கவில்லை.

முதல்படியில் செனகல்காரர்கள்

ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்கு ஓரத்தில் இருப்பது செனகல். பிரான்சின் குடியேற்ற நாடாக இருந்த செனகல் 1960 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. குட்டி நாடுதான் என்றாலும் 2005 ஆம் ஆண்டுக்கணக்கின்படி அதன் மக்கள் தொகை 1 கோடியே 16 லட்சத்து 58 ஆயிரமாகும்.

பல நெருக்கடிகளை இந்த நாடு சந்தித்தாலும் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதை அரசியல் சட்டத்திலேயே உறுதிப்படுத்தியது. இதற்காக 2001 ஆம் ஆண்டில் ஒரு சட்டமொன்றையும் அந்நாடு இயற்றியது. 16 வயது வரை அனைவருக்கும் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. அதோடு அனைவருக்கும் கல்வி இலவசமாகவும் வழங்கப்படுகிறது. தங்கள் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 சதவிகிதத்தை கல்விக்காக செனகல் ஒதுக்குகிறது.

இந்தியாவிலோ, தேசிய குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தில் உறுதிமொழிகளை வாரி வழங்கி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. சொல்லப்போனால் 20002001 ஆம் ஆண்டில் 3.23 சதவிகிதமாக இருந்த மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, அண்மைக் காலங்களில் 2.88 சதவிகிதத்திற்கும் கீழ் சென்றுவிட்டது.

செனகலில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தில்தான் வாழ்கிறார்கள். படத்தில் இருக்கும் லாமைன் என்ற ஏழு வயதுச் சிறுவன் கொஞ்சம் அதிர்ஷ்டம் செய்தவன். தனது தந்தைக்கு எட்டாவது பையன். கட்டாயம் மற்றும் இலவசக் கல்வி பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டது. பள்ளி முடிந்து வந்தபிறகு வீட்டில் வேலையைச் செய்தால் போதும் என்பது அவர் தனது மகனுக்கு அளித்திருக்கும் சலுகையாகும். முதல்படியில் லாமைன் மட்டுமல்ல, செனகல் நாடே காலெடுத்து வைத்துள்ளது.

ஊதியத்திருட்டு

கையெழுத்து வாங்கிக்கொண்டு முழுச்சம்பளத்தையும் கொடுக்காமல் ஏமாற்றுவதற்கு எதிராகப் பொங்கி எழுந்திருக்கிறார்கள் தொழிலாளர்கள். வளரும் அல்லது வளர்ச்சியடையாத நாடுகளில் நடந்த சம்பவமல்ல இது. முதலாளித்துவத்தின் குருபீடம் என்று அழைக்கப்படும் அமெரிக்காவில்தான் இவ்வாறு ஊதியத்தை திருட்டு கொடுத்தவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

குறைந்தபட்ச ஊதியத்தைத் தராமல் தொழிலாளர்களை இழுத்தடிக்கிறார்கள் என்பது லா° ஏஞ்சல்°, சிகாகோ மற்றும் நியூயார்க் நகர் ஆகிய இடங்களில் 4 ஆயிரத்து 387 தொழிலாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அம்பலமானது. சராசரியாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மெம்பி° என்ற நகரில் குறைந்த கூலிக்காகப் பணியாற்றும் 141 பேரிடம் விசாரித்தபோது, அதில் மூன்றிலொரு பகுதியினர் முறையான கூலி தரப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளனர். இத்தகைய மோசடிகள் பற்றிக் கேள்விப்பட்டுக் கொதித்துப் போயுள்ள சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கத்தினர், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் ஊதியத்திருட்டை நிறுத்துக என்ற கோரிக்கை தினத்தை அனுஷ்டித்துள்ளனர்.

அமெரிக்காவின் 40 நகரங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது. இத்தகைய மோசடிகளை விசாரிக்க அதிகாரிகள் இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் 1 லட்சத்து 73 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஒரு அதிகாரி இருக்கிறார். இதிலிருந்தே அமெரிக்க அரசின் லட்சணத்தைத் தெரிந்து கொள்ளலாமே...?

- கணேஷ்

 

Pin It