வாங்காரி மாத்தாயின் நோபல் உரை

உங்கள் முன்பும் உலகத்தின் முன்பும் இந்த அங்கீகாரத்தால் பணிவு பெற்றவளாக, 2004ன் அமைதிக்கான நோபல் விருது பெற்றவர் என்கிற கௌரவத்தால் மேன்மை பெற்றவளாக நிற்கிறேன்.

நோபல் விருது பெறும் முதல் ஆப்பிரிக்க பெண்மணி என்கிற அடிப்படையில் கென்ய மக்களின், ஆப்ரிக்க மக்களின் சார்பிலும் உலகத்தின் சார்பிலும் இந்த விருதை ஏற்றுக் கொள்கிறேன். பெண்களும் பெண் குழந்தைகளும் இப்போது அதிகம் என் கவனத்தில் இருக்கிறார்கள். தங்கள் குரல்களை உயர்த்தவும் தலைமைத்துவத்தில் மேலும் அதிக இடத்தை கோரவும் இது அவர்களை ஊக்கப்படுத்தும் என்று நம்புகிறேன். இளைஞர் களும் முதியவர்களுமான எமது ஆண்களுக்கும் இந்த அங்கீகாரம் பெருமையைத் தரும். ஒரு தாயாக, இந்த விருது இளைஞர்களுக்கு தரக்கூடிய உந்துதலை நான் போற்றுகிறேன். தங்களது கனவுகளைத் துரத்துவதற்கு இளைஞர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விருது எனக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், இது உலகெங்கும் உள்ள எண்ணிலடங்காத தனிநபர்களின், அமைப்புகளின் உழைப்பிற்கான அங்கீகாரம். அமைதியாக, பல சமயங்களில் அங்கீகாரங்கள் எதுவுமின்றி அவர்கள் சுற்றுச்சூழலை காக்கவும், ஜனநாயகத்தை மேம்படுத்தவும், மனித உரிமைகளை வென்றெடுக் கவும் ஆண்-பெண் சமத்துவத்தை நிலை நாட்டவும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் சமாதானத்தின் விதைகளைத் தூவுகிறார்கள். அவர்களும் இன்று பெருமைப்படுவார்கள் என்பதை நான் அறிவேன். இந்த விருது தங்களுக்கான அங்கீகாரம் என்று கருதும் எல்லோருக்கும் நான் கூற விரும்புவது, உங்கள் பணியை மேம்படுத்தவும் இந்த உலகம் நம் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த அங்கீகாரம் எனது குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு, என்னோடு இணைந்து பணிபுரிப வர்களுக்கு மற்றும் உலகெங்கும் உள்ள ஆதர வாளர்களுக்கும் உரித்தானது. கடுமையான சூழலில் நிறைவேற்றப்பட்ட எங்களது பணி தழைக்கவும், எமது பார்வை செழுமையடையவும் அவர்கள் நிறைய உதவியிருக்கிறார்கள். ஜனநாயகத்தை வென்றெடுக்க முடியும் என்றும் அவர்களது சூழல் நல்ல முறையில் பாதுகாக்கப்படும் என்றும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த கென்ய மக்களுக்கும் நான் நன்றியுடையவளாக இருக்கிறேன். இந்த ஆதரவின் காரணமாகவே இன்று இந்த கௌரவத்தை ஏற்றுக்கொள்ள நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்.

முன்பே நோபல் பரிசு வென்ற அதிபர்கள் நெல்சன் மண்டேலா மற்றும் F.W.டி கிளர்க், மதபோதகர் டெஸ்மண்ட் டுட்டு, ஆல்பர்ட் லுதுலி, அன்வர் எல் சதத், ஐநா அவையின் பொதுச் செயலாளர் கோபி அன்னான் உள்ளிட்ட ஆப்ரிக்கர்களின் வரிசையில் நானும் இடம் பெறுவது மிகுந்த பெருமைக்குரியது.

எல்லா இடங்களிலும் உள்ள ஆப்ரிக்கர்கள் இந்தச் செய்தியால் மகிழ்ச்சி அடைவார்கள் என்று எனக்கு தெரியும். எனது சக ஆப்ரிக்க சகோதர, சகோதரிகளே! மக்கள் மீதான நமது கடமை யுணர்வை இன்னும் தீவிரப்படுத்தவும், சச்சரவு களையும் வறுமையையும் குறைக்கவும், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவும் நாம் இதை பயன்படுத்திக் கொள்வோம். ஜனநாயக ஆட்சிமுறையை தழுவுவோம், மனித உரிமைகள் காப்போம். நமது சுற்றுச்சூழலை காப்போம். இந்த பணிக்கு நாம் தயாராகவே இருக்கிறோம். நமது பெரும்பாலான பிரச்னைகளுக்கான தீர்வு நம்மிடமிருந்துதான் வர வேண்டும் என்று நான் எப்போதுமே நம்புகிறேன்.இந்த வருடத்தின் நோபல் விருதின் மூலம், நார்வே நாட்டு நோபல் பரிசுக்குழு, சுற்றுச் சூழலையும் மற்றும் அதற்கும் ஜனநாயகம், அமைதி ஆகியவற்றுக்கும் இருக்கும் தொடர் பையும் இந்த உலகத்தின் முன்பு வைத்திருக்கிறது. இந்த முற்போக்கு பார்வைக்காக நான் மிகவும் நன்றியுடையவளாக இருக்கிறேன்.

தொடர்ச்சியான வளர்ச்சி, ஜனநாயகம் மற்றும் அமைதி ஆகியவை பிரிக்க முடியாதவை என்று அங்கீகரிப் பது, இன்றைய சூழலுக்கேற்ற முக்கிய மான ஒரு கருத்தாக்கம். இந்த இணைப்புகளை உருவாக்கு வதும் சாத்தியப்படுத்துவதுமே கடந்த 30 ஆண்டு களில் எங்களது பணியாக இருந் திருக்கிறது.

கென்யாவின் கிராமப்புற பகுதிகளில் எனது சிறுவயது இயற்கை சார்ந்த அனுபவங்களே எனக்கு ஓரளவுக்கு உத்வேகத்தை அளித்திருக் கின்றன. கென்யாவில், அமெரிக்காவில், ஜெர்மனி யில் எனக்கு கிடைத்த கல்வி அந்த அனுபவங்களை செழுமைப்படுத்தியிருக்கின்றன. காடுகள் அழிக்கப்பட்டு, காடு இருந்த இடங்களில் பல்லுயிரியத்தை அழிக்கும், தண்ணீர் வளத்தை சீரழிக்கும், வணிகரீதியிலான தோட்டங்கள் உருவாவதை நான் வளரும் போது பார்க்க முடிந்தது.

சீமாட்டிகளே, கனவான்களே,

1977ல் நான் பசுமை வெளி இயக்கத்தை ( Green Belt Movement) தொடங்கியபோது, கிராமப்புறப் பெண்களின் தேவைகளாக இருந்த விறகுகள், சுத்தமான குடிநீர், சரிவிகித உணவு, உறைவிடம், வருமானம் ஆகியவற்றின் பற்றாக்குறைகளை சமாளிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

ஆப்ரிக்கா எங்கிலும் பெண்களே குடும் பத்துக்கு முக்கியமான பொறுப்பாளர்களாக இருந்தார்கள். நிலத்தை உழுவது, குடும்பத்துக்கு உணவு உற்பத்தி செய்வது என்று முக்கியமான பங்கு வகித்தார்கள். அதன் விளைவாக, குடும்பம் தழைக்க உதவும் இயற்கை ஆதாரங்கள் அழிந்து போகுமளவுக்கு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் போது பெண்கள்தான் அதை முதலில் உணர்கிறார்கள்.

எங்களுடன் இணைந்து பணிபுரிந்த பெண்கள், முன்பு போல அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என்றனர். இதற்கு காரணம், அவர்களது சுற்றுச்சூழல் தொடந்து மோசமாக பாதிக்கப்படுவதுடன் உணவுப்பயிர்களுக்கு மாற்றாக வணிகரீதியிலான விவசாயத்தின் அறிமுகமும்தான். சிறு விவசாயிகளின் விளைபொருட்களின் வணிகத்தையும், ஏற்றுமதியையும் சர்வதேச வணிக நிறுவனங்களே தீர்மானிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு நியாயமான தேவையான வருமானம் நிச்சயமில்லை. நமது சுற்றுச்சூழல் அழியும்போது, அது சுரண்டப்படும்போது அது சரிவரகையாளப் படாத போது நமது வாழ்க்கைத்தரத்தை, நமது வருங்கால சந்ததியினரின் வாழ்க்கைத் தரத்தை சேதப்படுத்துகிறோம்.

பெண்களால் அடையாளப்படுத்தப்பட்ட சில அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இயற்கையான தேர்வாக மரம் வளர்ப்பு இருந்தது. தவிர மரம் வளர்ப்பு எளிமையான, நிறைவேற்றக் கூடிய விரைவில் பலனளிக்கக்கூடிய ஒரு செயல்பாடாக இருந்தது. இதனால் அர்ப்பணிப்பும் ஆர்வமும் குறையாமல் இருந்தது.

குழந்தைகளுக்கான கல்வித் தேவைகளை, குடும்பத் தேவைகளை சந்திக்க உதவும் வருமானம், விறகு, உணவு, உறைவிடம் எல்லாம் தந்த சுமார் 30 மில்லியன் மரங்களை நாங்கள் எல்லோரும் சேர்ந்து நட்டோம். இந்தச் செயல்பாடு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு நீர்தேக்கு பரப்பையும் நிலத்தையும் மேம்படுத்த உதவும். தங்களது ஈடுபாட்டின் மூலம் பெண்கள் தங்களது வாழ்க்கையில் குறிப்பாக சமூக மற்றும் பொருளாதார தளங்களில் ஒரு சக்தியைப் பெற் றார்கள். குடும்பத்தில் முக்கியத்துவம் கிடைத்தது. இந்த பணி தொடர்கிறது.

ஆரம்பத்தில் இது கடினமான பணியாக இருந்தது. காரணம் அவர்கள் ஏழைகள் என்பதால் அவர்களிடம் முதலீடு மட்டுமல்ல; சவால்களை எதிர்கொள்ளக்கூடிய அறிவும் திறமையும் கூட இல்லை என்று வரலாற்று ரீதியா கவே நமது மக்கள் நம்ப வைக்கப்பட்டிருக் கிறார்கள். அவர்களது பிரச்னைகளுக்கான தீர்வுகள் வெளியிலிருந்துதான் வர வேண்டும் என்று அவர்கள் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தவிர, சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருந்தால்தான், அது சரியாக பராமரிக்கப் பட்டால்தான் அவர்களுடைய தேவைகள் முழுமையாக நிறைவேறும் என்பதை பெண்கள் உணரவில்லை. சுற்றுச்சூழல் முறையாக பராமரிக்கப்படாவிட்டால், பற்றாக்குறையாக இருக்கும் வளங்களை பங்கிட்டுக்கொள்வதில் உருவாகும் பிரச்னைகள் வறுமையிலும், சில சமயங்களில் போராட்டத்திலும் முடியும் என்பதை அவர்கள் அறியவில்லை.

சர்வதேச பொருளாதார நடைமுறைகளில் உள்ள நியாயமற்ற தன்மைகளையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

சமூகங்கள் இந்த இணைப்புகளைப் புரிந்து கொள்ள நாங்கள் ஒரு குடிமக்கள் கல்வி திட்டத்தை வடிவமைத் தோம். இந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் தங்களது பிரச் னைகளை அடை யாளப்படுத் தவும் அதற்கான காரணி களைக் கண்டறியவும் தீர்வுகளை வகுக்கவும் வழிவகை செய்யப் பட்டது. பிறகு அவர் களுடைய சொந்த நடவடிக்கை களுக்கும் சூழலிலும் சமூகத்திலும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கும் தொடர்புகளை உருவாக்குகிறார்கள்.

ஊழல், பெண்களுக்கும் குழந்தை களுக்கும் எதிரான வன்முறை, குடும்ப அமைப்பின் சிதைவுகள், கலாச்சாரங்களிலும் சமூகங்களிலும் சச்சரவுகள் என்று நமது உலகத்தை நோக்கி பல பிரச்னைகள் இருக் கின்றன என்பதை அவர்கள் அறிந்து கொள் கிறார்கள். மக்களிடம் குறிப்பாக இளைஞர் களிடம் ரசாயனங்களின், போதை மருந்துகளின் தவறான பயன்பாடு பற்றி அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். நிரந்தரத் தீர்வு இல்லாத மோசமான நோய்கள் இருக்கின்றன. எய்ட்ஸ், மலேரியா மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்புடைய நோய்கள் குறிப்பாக கவலைப்பட வேண்டியவை.

சூழலைப் பொறுத்தவரையில் சுற்றுச் சூழலுக்கும் சமூகங்களுக்கும் கேடு விளைவிக் கக்கூடிய பல மனிதச் செயல்பாடுகள் அவர்களுக்கு தெரிய வருகின்றன. கொடுமையான வறுமைக்குக் காரணமான காட்டை அழித்தல், தட்பவெட்ப நிலையின்மை, மண்-நீர் மாசு உள்ளிட்ட பல செயல்பாடுகளைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் அவர்களே தீர்வுகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்கிறார்கள். தங்களுடைய உள்ளார்ந்த ஆற்றலை உணர்ந்து செயலின்மையை கடந்து நடவடிக்கை எடுக் கிறார்கள். தாங்கள் தழைக்க உதவும் சூழலுக்கு அவர்களே முதன்மையான பாதுகாப்பாளர்களும் பயனாளர்களும் என்பதை அவர்கள் உணரத்தொடங்குகிறார்கள்.

அரசாங்கங்களை பொறுப்பாளர்களாக கேள்விக்குட்படுத்தும் அதே வேளையில், தங்களுடைய உறவு நிலைகளில் தங்களது தலைமைகளிடமிருந்து எதிர்பார்க்கும் நீதி, நேர்மை நம்பிக்கை போன்ற பண்புகளை அவர்களும் கடைபிடிக்க வேண்டும் என்பதை ஒட்டுமொத்த சமூகங்களும் புரிந்துகொள்கின்றன.

ஆரம்பத்தில் பசுமைவெளி இயக்கத்தின் மரம் வளர்ப்பு செயல்பாடுகள் ஜனநாயகம், அமைதி போன்ற பிரச்னைகளை கையிலெடுக்கா விட்டாலும், ஜனநாயக வெளி இல்லாமல் சுற்றுச் சூழலின் பொறுப்பான நிர்வாகம் சாத்தியமில்லை என்பது தெளிவானது. இதனாலேயே கென்யாவில் மரம் என்பது ஜனநாயக போராட்டத்தின் குறியீடு ஆனது. பரவலாக இருந்த அதிகார துஷ்பிர யோகம், ஊழல், சுற்றுச்சூழல் நிர்வாக முறை கேடுகள் போன்றவற்றை எதிர்க்க குடிமக்கள் திரண்டார்கள். ‘மனசாட்சியின் கைதிகளை’ விடுதலை செய்ய கோரியும் ஜனநாயகத்துக்கு மாறக் கோரியும் நைரோபியின் உஹ§ரு பூங்காவிலும் தேசத்தின் பல இடங்களிலும் சமாதான மரங்கள் நடப்பட்டன.

ஆயிரக்கணக்கான சாதாரண குடிமக்கள் திரள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் மாற்றத்தை சாத்தியப்படுத்தவும் பசுமைவெளி இயக்கம் சாத்தியப்படுத்தியது. பயம், நிராதரவான உணர்வு எல்லாவற்றையும் கடந்து அவர் களுடைய ஜனநாயக உரிமைகளை தற்காத்துக் கொள்ள மக்கள் கற்றுக்கொண்டார்கள்.

கென்யாவில் நடந்த இனப்பிரச்னைகளின் போது பசுமை வெளி இயக்கம் சர்ச்சைக் குள்ளாகியிருக்கும் இரண்டு சமூகங்களுக் கிடையில் சமாதான மரங்களை பயன்படுத்தி அமைதியை நிலைநாட்டிய நேரத்தில் மரம் அமைதிக்கான, தீர்வுக்கான ஒரு குறியீடாகவும் இருந்தது. கென்ய நாட்டு அரசியல் சாசனம் மீண்டும் வரையப்பட்டபோது, அமைதியின் கலாச்சாரத்தை முன்னெடுக்க இது போன்ற பல மரங்கள் நாடெங்கிலும் நடப்பட்டன. மரத்தை அமைதியின் குறியீடாக பயன்படுத்துவது என்பது பரவலான ஓர் ஆப்ரிக்க மரபு. உதாரணமாக, கிகியுவைச் சேர்ந்த முதியவர்கள் கையில் திகி மரத்தாலான கைத்தடியை வைத்திருப்பார்கள். சர்ச்சையில் ஈடுபடும் இரண்டு குழுக்களிடையே அதை வைத்தால் அவர்கள் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு சமாதானமாகப் போக வேண்டும். ஆப்ரிக்கா வில் பல சமூகங்களில் இது போன்ற மரபுகள் உண்டு.

சூழலை பாது காப்பதற்கும் சமாதானத்தின் மரபை வளர்ப் பதற்கும் பங்களித்த கலாச்சார தொன்மத்தில் இது போன்ற வழக்கங்கள் இருந்தன. இந்தக் கலாச்சாரங்கள் அழிந்து புதிய மதிப்பீடுகள் அறிமுகமாகும்போது, உள்ளூர் பல்லுயிரியம் மதிக்கப்படுவதோ, பாதுகாக்கப் படுவதோ இல்லை. இதன் காரணமாக அவை அழிந்து மறைந்து போகின்றன. இதற்காகவே, பசுமைவெளி இயக்கம், கலாச்சார பல்லுயிரியம் என்கிற கருத்தாக்கத்தை, குறிப்பாக உள்நாட்டு விதைகள் மற்றும் மருத்துவத் தாவரங்களை மனதில் கொண்டு ஆய்வு செய்கிறது.

சூழலியல் கேடுகளின் காரணிகளை நாங்கள் ஒன்றொன்றாகப் புரிந்துகொண்டபோது, நல்ல நிர்வாகத்தின் தேவையை உணர்ந்தோம். சொல்லப்போனால் ஒரு நாட்டிலுள்ள சுற்றுச்சூழலின் நிலை, அந்த நாட்டின் நிர்வாகத்தை பிரதிபலிக்கும். நல்ல நிர்வாகம் இல்லாமல், அமைதி இருக்க முடியாது. மோசமான நிர்வாகங்கள் உள்ள நாடுகளில் பல போராட் டங்கள் இருக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்க சரியான சட்டங்கள் இருக்காது.

பசுமைவெளி இயக்கம், பிற சமூக இயக்கங்கள் மற்றும் கென்ய பொதுமக்களின் வீரமும், பொறுமையும் அமைதியான முறையில் ஜனநாயகத்துக்கு வழி வகை செய்து, உறுதியான குடிமை சமூகத்துக்கு அடிக்கல் நாட்டியது.

தோழர்களே, சீமாட்டிகளே,கனவான்களே நாங்கள் இந்தப் பணியை தொடங்கி 30 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. சூழலை,சமூகங்களை மாசுபடுத்தும் செயல்பாடுகள் தொடர்கின்றன. மனிதகுலம் தனது வாழ் வாதாரத்தை மிரட்டுவதை நிறுத்த, நமது சிந்தனையில் மாற்றம் கோரும் சவாலை நாம் இப்போது எதிர்நோக்கியிருக்கிறோம். இந்த உலகத்தின் காயங்களை ஆற்ற, அதன் மூலம் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்டிருக்கும் காயங்களை ஆற்ற, ஒட்டு மொத்த பிரபஞ் சத்தையும் அதன் வேறுபாடுகள் அழகியல், அதிசயத்துடன் அணைத்துக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். நமது பரிணாம வளர்ச்சியை பகிர்ந்துகொண்ட வாழ்வின் பெரிய குடும்பத்தோடு நாம் மீண்டும் நமது தகைமையுணர்வை மீட்டுக்கொள்வதற்கான தேவையை உணரும் போது இது நிகழும்.

வரலாற்றின் போக்கில், மனிதம் புதிய விழிப்புணர்வு நிலையின் இன்னொரு தளத்துக்கு செல்ல வேண்டிய, மேம்பட்ட அறத்தை நோக்கி நகர வேண்டிய நேரம் ஒன்று வரும். நமது பயங்களைத் துறந்து ஒருவருக்கொருவர் நம்பிக்கையை அளிக்க வேண்டிய நேரம்.

அந்த நேரம் இதுதான்.

அமைதியின் புரிதலை இன்னும் விரிவாக்க வேண்டும் என்று உலகிற்கு சவால் விடுத் திருக்கிறது நார்வே நாட்டின் நோபல் பரிசுக் குழு. சரிசமமான வளர்ச்சி இல்லாமல் அமைதி இருக்க முடியாது. ஜனநாயகமான ஒரு தளத்தில் சுற்றுச்சூழலின் சரியான நிர்வாகம் இல்லாமல் வளர்ச்சி இருக்க முடியாது. இந்த மாற்றம் ஒரு கருத்தாக்கம். அதன் நேரம் வந்துவிட்டது.

தங்களது குடிமக்களின் கற்பனைத் திறனும் ஆற்றலும் செழுமைப்படுத்த உதவும் நியாயமான, நேர்மையான சமூகங்களை உருவாக்குமாறு ஜனநாயக தளங்களை விரிவாக்குமாறு நான் எல்லா தலைவர்களையும், குறிப்பாக ஆப்பிரிக்க தலைவர்களை கேட்டுக்கொள்கிறேன். கல்வி, ஆற்றல்கள், அனுபவங்கள், அதிகாரத்தைகூட பெறுவதற்கும் அனுபவிப்பதற்கும் கொடுத்து வைத்திருக்கும் நம்மிலிருப்பவர்கள்தான் அடுத்த தலைமுறை தலைமைக்கான முன்னுதாரனமாகத் திகழ வேண்டும். இந்த நேரத்தில், என்னுடன் நோபல் பரிசு வென்றிருக்கும் ஆங் சான் சூ கியின் சுதந்திரத்திற்கும் நான் கோரிக்கை விடுக்கிறேன். அவர் பர்மிய மக்களுக்கான - உலக மக்களுக்கான ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான தனது பணியை தொடர வேண்டும்.

குடிமைச் சமூகங்களின் அரசியல், பொருளா தார, சமூக வாழ்க்கையில் கலாச்சாரத்துக்கு ஒரு முக்கிய இடமுண்டு. ஆப்ரிக்காவின் வளர்ச்சியில் தவறிப் போன இணைப்பாகக் பண்பாடு இருக்கக் கூடும். பண்பாடு என்பது இயக்க ரீதி யிலானது, காலத்தோடு தன்னை மாற்றிக் கொள்வது. பெண்களின் பிறப்புறுப்பை அறுப் பது போன்ற பழைய பின் னோக்கிய மரபுகளை தூக்கியெறிந்து நல்ல, உபயோகமான விஷயங்களை அணைத்துக் கொள்வது.

ஆப்ரிக்கர்கள் குறிப்பாக தங்களது பண்பாட்டின் சிறந்த கூறுகளை மறுபடியும் கண்டறிய வேண்டும். அவற்றை ஏற்றுக்கொள் வதன் மூலம் அவர்கள் ஒரு தகைமையுணர்வை, அடையாளத்தை, தன்னம்பிக்கையை தங்களுக்கே அளித்துக் கொள்வார்கள்.

சீமாட்டிகளே, கனவான்களே, குடிமைச் சமூகத்துக்கும், அடிப்படை இயக் கங்களுக்கும் உந்துதலைத் தந்து அவர்களை மாற்றத்துக்கான ஊக்க சக்தியாகச் செயலாற்ற செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது. சமூகத்தில் கட்டுப்பாடுகளையும் சமநிலை களையும் பராமரிக்கும் பொறுப்புள்ள குடிமக்கள் திரளை கட்டமைப்பதில் சமூக அமைப்புகளுக்கு உள்ள பங்கை அரசாங்கங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் கோருகிறேன்.

எந்த நிலையிலும் லாப நோக்கங்களை விட பொருளாதார நியாயம், சூழலியல் நேர்மை, நெறி ஆகியவற்றை அமல்படுத்துவது மிக முக்கியம் என்பதைத் தொழில் மற்றும் சர்வதேச அமைப்பு கள் உணர வேண்டும். இப்போது நிலவிக் கொண்டிருக்கும் சர்வதேச ஏற்றத்தாழ்வுகளுக்கும் நுகர்வு பண்பாடுகளுக்கும் நாம் விலையாக நமது சுற்றுச்சூழலையும், சமாதானமான ஒத்திசைந்த வாழ்வையும் பலி கொடுத்துக் கொண்டி ருக்கிறோம். தேர்வு நம்முடையதே.

தங்களுடைய நீண்டகால கனவுகளை நிறை வேற்றும் செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன். நல்ல எதிர்காலத்தை வடிவமைக்க தேவையான கற்பனை வளமும் ஆற்றலும் அவர்களிடம் இருக் கிறது. இளைஞர் களுக்கு நான் சொல்வ தெல்லாம், நீங்கள் உங்கள் சமூகங்களுக்கும் இந்த உலகத்துக்குமான பரிசு. நீங்கள்தான் எங்களது நம்பிக்கையும் எதிர்காலமும்.

பசுமைவெளி இயக்கம் முன்னிறுத்தும் வளர்ச்சிக்கான முழுமையான அணுகுமுறை ஆப்ரிக்காவிலும் பிற பகுதிகளிலும் பின்பற்றலாம். இந்தச் செயல்பாடுகளின் தொடர்ச்சிக்காகவும் விரிவாக்கத்துக்காகவுமே நான் வாங்காரி மாத்தாய் நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறேன். நிறைய சாதித்திருக்கிறோம், ஆனாலும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.

மேதகைமைகளே, சீமாட்டிகளே, கனவான்களே எங்களது வீட்டின் அருகில் இருந்த ஓடை யிலிருந்து அம்மாவுக்காக தண்ணீர் பிடித்துக் கொண்டு வரும் சிறுவயது அனுபவத்தை நினைவு கூர்ந்து இந்த உரையை முடிக்க நினைக்கிறேன். அப்போதெல்லாம் நேரடியாக நான் ஓடை யிலிருந்து தண்ணீர் குடித்திருக்கிறேன். அரோரூட் இலைகளுக்கிடையில் விளையாடிய வாறு, மணிகள் என்று நினைத்து தவளை களைகளின் முட்டைகளை எடுக்க முயற்சி செய்வேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் எனது சிறு விரல்களை அதன் மீது வைக்கும் போது அது உடைந்து விடும். பிறகு ஆயிரக்கணக்கில் தவளைக் குஞ்சு களைப் பார்ப்பேன். கறுப்பு நிறத்தில், உற்சாகத் தோடு செம்மண் மீதிருந்த தெளிவான தண்ணீரின் ஊடாக அவை கடந்து செல்லும். எனது பெற்றோர்களிடமிருந்து நான் பெற்ற உலகம் இதுதான்.

இன்று சுமார் 50 வருடங்கள் கழித்து, ஓடை கள் காய்ந்துவிட்டன. தண்ணீர் பிடிக்க பெண்கள் வெகுதூரம் நடக்க வேண்டியிருக்கிறது. அப்படி பிடிக்கும் தண்ணீரும் எப்போதும் சுத்தமாக இருப்பதில்லை. குழந்தை களுக்கும் தாங்கள் எதைத் தொலைத்தொம் என்று தெரியவில்லை. தவளைக் குஞ்சுகளின் வீடுகளை மீட்டுரு வாக்கி நமது குழந்தைகளுக்கு எழிலும் அதிசய மும் நிறைந்த உலகத்தை மீட்டுத் தருவதுதான் நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவால். மிக்க நன்றி.

மொழியாக்கம்: கவிதா முரளிதரன்

Pin It

ஆலை மாசு காரணமாக அழிவின் விழிம்பில் காயல்பட்டினம் சுற்றுவட்டாரம்!

DCW தொழிற்சாலை 1925ஆம் ஆண்டில், தற்போதைய குஜராத் மாநிலத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்திலுள்ள தாரங்கதாரா நகரில் சோடா ஆஷ் என்ற பொருளை தயாரிப்பதற்காக துவக்கப் பட்டது. பின்னர் 1939ஆம் ஆண்டில், இந்நிறுவனம் சாஹ¨ ஜெய்ன் குடும்பத்தால் வாங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சுமார் 43% பங்குகளை (நவம்பர் 2012 நிலவரப்படி சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பு) இக்குடும்பத்தினர் வசமே உள்ளது.

1958ஆம் ஆண்டு, காஸ்டிக் சோடா என்ற பொருளை தயாரிப்பதற்காக இந்நிறுவனம் காயல்பட்டினத்தில் தொழிற்சாலையை நிறுவியது. அதற்காக, அப்போதைய மெட்ராஸ் அரசாங்கம் காயல்பட்டினத்திலிருந்து 1064 ஏக்கர், புன்னைக்காயலிலிருந்து 175 ஏக்கர், சேர்ந்தமங்கலத்திலிருந்து 142 ஏக்கர் நிலங்களை வழங்கியது. பின்னர், 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் காயல்பட்டினத்திலிருந்து 144 ஏக்கர், புன்னைக் காயலிலிருந்து 448 ஏக்கர், சேர்ந்தமங்கலத் திலிருந்து 200 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இக்குத்தகை 1993இல் நிறைவுற்றது.

DCW நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு வருமானம் 1275 கோடி ரூபாய். இதில் 195 கோடி ரூபாய் அதன் குஜராத் பிரிவிலிருந்து வருகிறது. எஞ்சிய 1080 கோடி ரூபாய் காயல்பட்டினத்திலுள்ள பிரிவின் மூலம் வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 2000 பேர் பணியாற்றுகின்றனர். இதில் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் மட்டுமே உள்ளனர். காயல்பட்டினம் நகராட்சிக்கு இந்நிறுவனம், சொத்து வரி வகைக்கு ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வரையும், தொழில் வரி வகைக்கு ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் ரூபாயும் செலுத்துகிறது. காயல்பட்டினம் நகராட்சியின் அனைத்து வகை வருமானமான ஆண்டுக்கு சுமார் 4 கோடி ரூபாயில், DCW தொழிற்சாலை மூலம் வரும் வருமானம் சுமார் 6 சதவீதம் மட்டுமே.

2500 ஏக்கர் நிலம் தன் வசமுள்ளதாகக் கூறும் DCW நிறுவனம், காயல்பட்டினம் பகுதியில் மட்டும் சுமார் 1200 ஏக்கர் நிலம் வைத்துள்ளது. இதற்கான காலிமனை வரி (குறைந்தபட்சமாக) சதுர அடிக்கு 10 பைசா என அந்நிறுவனம் கட்டியிருந்தாலும், காயல்பட்டினம் நகராட்சிக்கு இவ்வகையில் மட்டுமே ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால், DCW நிறுவனம் காலிமனை வரி கட்டுவதாகத் தெரியவில்லை.

தயாரிக்கப்படும் பொருட்களும் அவற்றின் விளைவுகளும்

காஸ்டிக் சோடா: காயல்பட்டினத்தில் DCW நிறுவனம் தயாரிக்கத் துவங்கிய முதல் பொருள் காஸ்டிக் சோடா. (அதன் தற்போதைய உற்பத்தி அளவு 1 லட்சம் டன். வருவாய் ரூ.210 கோடி.) இதற்கான மூலப்பொருள் உப்பு. (கொள்முதல் 14 கோடி ரூபாய்.) காஸ்டிக் சோடா தயாரிப்பில் உபரியாக உருவாகுவது க்ளோரின் வாயு. இந்த வாயுவை DCW நிறுவனம் பல ஆண்டுகளாக காற்றிலேயே கலக்க விட்டிருந்தது. இதனால் காயல்பட்டினத்தில் பலமுறை புகை மண்டலம் உருவானது உண்டு. இதற்காக அரசு DCW நிறுவனத்தை தண்டித்ததும் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கியதுமில்லை. தற்போது DCW நிறுவனம் க்ளோரின் வாயுவை பிற பொருட்களை தயாரிக்க பயன்படுத்துவதாகக் கூறுகிறது.

இந்நிறுவனத்தில் காஸ்டிக் சோடாவை தயாரிக்க 2007ஆம் ஆண்டு வரை (சுமார் 50 ஆண்டுகளாக) மிகவும் ஆபத்தான மெர்க்குரி பாதரசத்தை அது பயன்படுத்தி வந்தது. DCW கழிவு கடலில் கலந்து, அக்கழிவின் வாயிலாக வெளியான மெர்குரி இறந்த மீன்களின் வயிற்றில் இருந்ததற்கான ஆதார ஆய்வறிக்கைகள் பல உள்ளன. இந்நிறுவனம் மெர்குரியைப் பயன்படுத்துவதை நிறுத்தி 4 ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறுகிறது. ஆனால், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கழிவுநீர் ஆய்விலும் மெர்குரி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாலி வினைல் க்ளோரைட் (PVC): DCW நிறுவனத்தின் முக்கிய உற்பத்திப் பொருட்களுள் ஒன்று PVC. (அதன் தற்போதைய உற்பத்தி அளவு 90,000 டன். வருவாய் 524 கோடி ரூபாய்). PVC தயாரிப்பதற்கான மூலப்பொருள் VCM. (கொள்முதல், 394 கோடி ரூபாய்.) கத்தர் நாட்டிலிருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப்படும் இம்மூலப் பொருள், மக்கள் நெருக்கமாக வாழும் முத்தையாபுரம், ஸ்பிக் நகர், முக்காணி, பழைய காயல், ஆத்தூர் உள்ளிட்ட ஊர்கள் வழியாக லாரிகள் மூலம் DCW தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

புற்றுநோயை உருவாக்கக்கூடிய தன்மையைக் கொண்ட இந்த VCM கொண்டு செல்லப்படும்போது விபத்து நேர்ந்தால், பல மைல்கள் தொலைவுக்கு தீய விளைவுகளை உண்டாக்கக் கூடியது. எனவே, PVC தயாரிக்கும் பல நிறுவனங்கள், அதற்கான மூலப்பொருளான VCMஐ தரை வழியாக பைப் மூலமே கொண்டு செல்கின்றன. ஆனால் DCW நிறுவனமோ இதற்கு டேங்கர் லாரிகளைப் பயன்படுத்துகிறது. இந்த லாரிகள் விபத்துக்குள்ளான நிகழ்வுகள் 2011, 2012இல் நடந்துள்ளது. நல்ல வேளையாக தொழிற்சாலையில் VCM வேதிப்பொருளை இறக்கிவிட்டு லாரிகள் திரும்பியபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஒருவேளை லாரிகளில் VCM இருந்திருந்தால்.... நினைக்கவே பயங்கரமாக உள்ளது.

ட்ரை க்ளோரோ எத்திலின்ஜிக்ஷீவீ Tri Chloro Ethylene:

DCW நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு பொருள் ட்ரை க்ளோரோ எத்திலின். (அதன் தற்போதைய உற்பத்தி அளவு 7200 டன். வருவாய் 47 கோடி ரூபாய்.) இதற்கான மூலப்பொருள் கால்சியம் கார்பைட். (கொள்முதல் 22 கோடி ரூபாய்.) ட்ரை க்ளோரோ எத்திலின் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சின்தடிக் ருட்டைல் Synthetic Rutile: இது DCW நிறுவனத்தின் மற்றொரு உற்பத்திப் பொருள். (அதன் தற்போதைய உற்பத்தி அளவு 48,000 டன். வருவாய் 240 கோடி ரூபாய்.) இதனை தயாரிக்க, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இல்மனைட் மணலை DCW நிறுவனம் (75 கோடி ரூபாய்க்கு) கொள்முதல் செய்கிறது. இப்பொருள் கதிர்வீச்சுத் தன்மை கொண்டது. மேலும் இப்பொருள் தயாரிக்கப்படும்போது உருவாகும் கழிவு காரணத்திற்காக DCW நிறுவனம், 1997ஆம் ஆண்டில் 5 மாதங்கள் மூடப்பட்டது. மேலும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்திலும் இதே காரணத்திற்காக இந்த உற்பத்திப் பிரிவு மூடப்பட வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரையும் செய்யப்பட்டும், நடவடிக்கை எதுவுமில்லை.

நிலக்கரி மூலம் மின் உற்பத்தி:

DCW நிறுவனம் தனது தேவைக்கென மின்சாரம் உற்பத்தி செய்ய 2006ஆம் ஆண்டு அனுமதி பெற்றது. 58 மெகாவாட் அளவில் உற்பத்தி செய்ய குறைந்தளவு மாசு கொண்ட வெளிநாட்டு நிலக்கரி பயன்படுத்தப்படும் என அது துவக்கத்தில் தெரிவித்திருந்தது. பின்னர், வெளிநாட்டில் நிலக்கரி வாங்குவதற்கு அதிக செலவாவதால் (அதிக மாசு கொண்ட) உள்நாட்டு நிலக்கரியைப் பயன்படுத்தத் துவங்கியது. (கொள்முதல் 158 கோடி ரூபாய்.) உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை சந்தையில் விற்கவும் துவங்கியது இந்நிறுவனம்.

நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்போது உருவாகும் Fly ash என்ற பொருளை தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு வழங்கிவிடுவதாகவும் DCW நிறுவனம் உறுதியளித்திருந்தது. ஆனால், இந்நிறுவனத்தின் Fly ash கழிவுகள், நீரோடையில் கொட்டப்பட்டுள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் தெரிவித்துள்ளது.

DCW நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம்

தான் தயாரிக்கும் பொருட்களின் அளவை அதிகரிக்கவும், புதிதாக ஒரு பொருளைத் தயாரிக்கவும் அனுமதி கோரி 2010ஆம் ஆண்டு இந்நிறுவனம் விண்ணப்பித்தது. 500 கோடி ரூபாய் முதலீட்டில் செய்யப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் 90 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம், ஆண்டொன்றுக்கு ஜிக்ஷீவீTri Chloro Ethylene உற்பத்தி 7200 டன்னிலிருந்து 15,480 டன் எனவும், PVC உற்பத்தி 90,000 டன்னிலிருந்து 1,50,000 டன் எனவும் அதிகரிக்கும். புதிதாக சிPVC என்ற பொருள் 14,400 டன் அளவில் உற்பத்தி செய்யப்படும். நிலக்கரி மூலம் மின் உற்பத்தி 58 மெகாவாட்டிலிருந்து 108 மெகாவாட் என அதிகரிக்கும்.

DCW நிறுவனத்தால் இதுவரை சுற்றுப்புறச் சூழலும், பொதுமக்களும் பெருமளவில் பாதிப்பிற்குள்ளானதைக் கருத்திற்கொண்டு, நவம்பர் 29, 2011 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற DCW நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட காயலர்கள் உள்ளிட்ட பலர் இதற்கு அரசு அனுமதியளிக்கக் கூடாது என தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மேலும், இத்திட்டம் குறித்து இவ்வாண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி சென்னையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தனது எதிர்ப்பை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்தார். இருப்பினும், மத்திய மாநில அரசமைப்புகள் ஒப்புதல் தெரிவித்த வண்ணம் உள்ளன.

காயல்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற மக்கள் இத்தொழிற்சாலையை எதிர்ப்பது ஏன்?

DCW நிறுவனம் பல ஆண்டுகளாக சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தி வருகிறது. காற்றிலும், கடலிலும், நிலத்திலும் இத்தொழிற்சாலை வெளியேற்றும் கழிவுகள் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இத்தொழிற்சாலையின் கழிவுகள் மொத்தமாக சேர்த்து வைக்கப்பட்டு, பெரும்பாலும் மழைக்காலங்களின்போது திறந்து விடப்படுகிறது. அவ்வாறு திறந்துவிடப்படும் கழிவு நீர் காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், திருச்செந்தூர், ஆலந்தலை, மணப்பாடு உள்ளிட்ட ஊர்களின் கடற்பரப்பில் கலந்து நீல நிறத்தில் காட்சியளிக்க வேண்டிய கடல் முற்றிலும் செந்நிறமாக மாறிவிடுகிறது.

காயல்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருச்செந்தூர், இந்துக்களின் புனிதத்தலமாகும். நாடெங்கிலிருந்தும் வழிபாட்டிற்காக அங்குள்ள முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலையட்டிய கடலில் புனித நீராடுவது வழமை. கடந்த ஆண்டு அவ்வாறு பக்தர்கள் கடலில் நீராடியபோது, DCW தொழிற்சாலையின் கழிவு நீர் கலந்திருந்த காரணத்தால், அதில் குளித்தோரின் உடல்களில் அரிப்பு ஏற்பட்டு அவர்கள் துன்பமுற்றதாக அன்றைய நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

DCW தொழிற்சாலையின் மூலம் சுற்றுச்சூழல் பெரிதும் மாசடைவதால் ஏராளமான மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். (அவர்களில் பலர் இறந்தும் உள்ளனர்.) இதுகுறித்த எந்த ஆய்வும் முறைப்படி செய்யப்படவில்லை. இது இவ்வாறிருக்க, DCW நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம் புதிதாக வெளிவந்துள்ளது. இந்நிறுவனத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படாமல் புதிய திட்டங்களுக்கு அனுமதியை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கக்கூடாது.

DCW நிறுவனத்தின் இப்புதிய திட்டத்தால் ஆபத்துகள் பல மடங்கு அதிகரிக்கும். பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய VCM வேதிப் பொருளைக் கொண்டு செல்லும் லாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அவற்றின் விபத்துக்கள் வாய்ப்பும் அதிகரிக்கும். நிலக்கரி மூலம் மாசு அதிகரிக்கும்.

DCW நிறுவனமும் தாமிரபரணி தண்ணீரையே நம்பியிருப்பதால், ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு அதிகமுள்ள காயல்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் மேலும் தட்டுப்பாடு ஏற்படும். இயற்கை வளங்கள் மேலும் பாதிக்கப்படும். புற்றுநோய் உள்ளிட்ட நோய்களில் ஆட்படுவோரின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரிக்கும்.

இக்காரணங்களுக்காக, DCW நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் நிறுத்தவும், நடப்பு உற்பத்தி பொதுமக்கள், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் கட்டுப்படுத்தவும் கோரி, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பில், கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதியன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் வட்டார நல கூட்டமைப்புகள், நகர்மன்ற அங்கத்தினர், அரசியல் சர்வ கட்சியினர், வணிகர் சங்கத்தினர், அமைப்பு சாரா வணிகர்கள், வாகன ஓட்டுநர் சங்கத்தினர், அமைப்பு சாரா வாகன ஓட்டுநர்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் இணைந்து முழுக் கடையடைப்பும், அன்று மாலை 04.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணியளவில் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் நடத்தி முடித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் 10ஆம் தேதி திங்கட்கிழமையன்று, சென்னை வாழ் காயலர்கள் சுமார் 300 பேர், சென்னை கிண்டியிலுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலக வளாகத்தில் திரண்டனர்.

துவக்கமாக, DCW தொழிற்சாலை தொடர்பான பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சுமார் 200 காயலர்கள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கட்டணம் செலுத்தி கடிதமாக அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, அங்குள்ள கேளரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், DCW தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதன் மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்தியும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, அதன் செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், மார்க்க அறிஞர் மவ்லவீ ஹாமித் பக்ரீ மன்பஈ உள்ளிட்டோர் பேசினர்.

அதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் உறுப்பினர் டாக்டர் பாலாஜி, DCW தொழிற்சாலையின் விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைத்து, அதன் மூலம் பெறப்படும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். பின்னர், காயலர்களை செய்தியாளர்கள் சந்தித்து கருத்துக்களைக் கேட்டு பதிவு செய்துகொண்டனர்.

DCW தொழிற்சாலை, அரசின் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மதித்து செயல்பட்டாலே போதும் என்றும், மக்கள் நலனையும், சுற்றுச்சூழலையும் பாதிக்காமல் அது செயல்படுவதையே தாங்கள் விரும்புவதாகவும் காயல்பட்டினம் மக்கள் உறுதியுடன் தெரிவிக்கின்றனர்.

இவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இனியும் மக்கள் நலனை மதிக்காமல் தொழிற்சாலை இயங்க அரசு அதைக் கண்டும் காணாதிருக்குமானால், அடுத்தகட்ட போராட்டத்தை இன்னும் வலிமையுடன் நடத்த ஆயத்தமாக உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

**

காயல்பட்டிணம் மக்களின் குரல்

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் காயல்பட்டினம் வருகை:

சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் முன்வைக்கப்பட்ட முறையீட்டைத் தொடர்ந்து, அதன் தலைமை உதவி பொறியாளர் மோகன் நாயுடு, சுற்றுச்சூழல் தலைமை இணைப் பொறியாளர் சார்லஸ், அதன் ஆய்வக துணை இயக்குநா மாரிமுத்து, சுற்றுச்சூழல் தலைமை இணைப் பொறியாளர் கிருஷ்ணராம், தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் கோகுல் தாஸ், தூத்துக்குடி மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை விஞ்ஞான துணை அலுவலர் சுரேஷ் குமார் ஆகியோரடங்கிய குழுவினர், 22.12.2012 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில், ஆய்வக பரிசோதனைக்கான அனைத்து ஏற்பாடுகளுடனும் காயல்பட்டினம் வருகை தந்தனர்.

ஊரின் ஒட்டுமொத்த எதிர்ப்பு:

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் சுமார் 50 ஆண்டு காலமாக இயங்கி வரும் DCW தொழிற்சாலையால் நகரில் சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாசடைந்துள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட கொடிய உயிர்க்கொல்லி நோய்களுக்கு இந்த ஆலையின் கழிவுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் நகர பொதுமக்கள் அனைவரிடமும் உள்ளது.

இல்மனைட் ஆலையை மூடி நம்பிக்கையளிக்க வேண்டுகோள்:

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்டப் பிரிவு பரிந்துரைத்த படி, DCW ஆலையின் இல்மனைட் பிரிவு மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று வரை அது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. எனவே, துவக்கமாக DCW தொழிற்சாலையின் இல்மனைட் பிரிவை உடனடியாக மூட உத்தரவிடுவதன் மூலம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது நகர பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

சுதந்திரமான வல்லுநர் குழுவினர் ஆய்வுக்கு கோரிக்கை:

நீங்கள் செய்யும் ஆய்வுடன் நிறுத்திக் கொள்ளாமல், ஏற்கனவே எமது காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தங்களிடம் முன்வைக்கப்பட்டபடி, DCW தொழிற்சாலையால் இதுவரை நகரில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு குறித்தும், பொதுமக்களின் உடல்நலன் குறித்தும் சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். அதுபோல, DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்தால் ஏற்படவிருக்கும் விளைவுகள் குறித்தும் சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கையளிக்க உத்தரவிட வேண்டும். இந்த அனைத்து ஆய்வறிக்கைகளும் பெறப்படும் வரை அத்தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதியளிக்கவே கூடாது.

சுற்றுச்சூழல் மாசுகளால் உடல் நலன் பாதிப்பு:

சுற்றுவட்டாரத்திலுள்ள பலருக்கு இதனால் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து பலரால் புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது. ஆனால், எங்கள் மக்களோ புற்றுநோய் உள்ளிட்ட கொடிய உயிர்க் கொல்லி நோயால் பீடிக்கப்பட்டும், எங்கள் குழந்தைகள் ப்ரைமரி காம்ப்ளக்ஸ் பாதிப்பிற்குள்ளாகியும் அனுதினமும் வேதனைகளை அனுபவித்து வருகிறோம்.

குழந்தைகள் நல மருத்துவருடன் சந்திப்பு:

குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் இஸ்மாயில் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

‘‘சுற்றுச்சூழல் மாசு காரணமாக நகரில் ஒரு பாவமும் அறியாத பச்சிளங்குழந்தைகள் எல்லாம் படாத பாடுபட்டு வருகின்றனர். பிறந்து 15 நாட்களே ஆன பச்சைக் குழந்தைகளுக்கெல்லாம் இளைப்பும், சுவாசக் கோளாறும் ஏற்படுவதை அனுதினமும் கொதிப்புடன் கவனித்து வருகிறேன்”.

கடையக்குடி மீனவர்களின் முறையீடு:

காயல்பட்டினம் கடையக்குடி கடற்கரையில் அதிகாரிகளைச் சந்தித்த மீனவர்கள், தொழிற்சாலையின் கழிவு நீர் கடலில் கலப்பதால் தினந்தோறும் இன்னல்களை அனுபவித்து வருவதாகத் தெரிவித்தனர்.

உடலில் தாங்க முடியாத அளவுக்கு அரிப்பு ஏற்படு வதாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத்தக்க அரிய வகை மீன்களெல்லாம் ஆலையின் அமிலக் கழிவுகள் காரணமாக அடிக்கடி கடலில் செத்து மிதப்பதாகவும், சாதாரண நேரங்களில் நன்றாக ஓடும் தமது படகுகளின் இன்ஜின் கருவிகள், ஆலையின் அமிலக் கழிவு நீர் கலக்கப்பட்ட கடற்பரப்பை அடைந் ததும் வித்தியாசமான சப்தத்துடன் இயங்குவதாகவும், அதைக் கொண்டே கழிவு நீரின் பாதிப்பை தங்களால் உணர்ந்துகொள்ள முடியும் என்றும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

Pin It

“தண்ணீரில்லாமல் மனிதன் வாழ இயலாது, அதேவேளையில் விலையில்லாமலும் மக்கள் அனுபவித்து வருகின்றனர். எனவே தண்ணீரை வணிகப்படுத்துவதன் மூலம் அதிக லாபத்தைச் சம்பாதிக்க முடியும்”. இதுவே தண்ணீர் முதலாளிகளின் எண்ணம். ‘சோறும் நீரும் விற்பனைக்கல்ல’. இது தமிழர்களின் அடிப்படைத் தத்துவம். தண்ணீரை ஒரு கணம் பெட்ரோலாகவோ, எண்ணெய்யாகவோ கற்பனைப் பண்ணிப் பாருங்கள். அப்படி ஒரு நிலை வந்தால் நாடு என்னாகும். நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. ஆனால் இந்நிலை வந்து கொண்டிருக்கிறது அல்லது வந்துவிட்டது எனலாம். தண்ணீரைப் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படும் என்று பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நாம் யூகித்திருக்க முடியாது. விற்பனை என்பது சாதாரண மனித உறவுகளைப் பாதிக்கக் கூடியதாக மாறுகிறது. ஒருவர் விலை கொடுத்து வாங்கிய தண்ணீர் பாட்டிலை, இன்னொருவர் சட்டென்று எடுத்துக் குடித்துவிட முடியாது. குடித்தால் வாங்கியவர் முகத்தைச் சுழிக்கக்கூடும். விற்பனை என்பது தனிமனித உறவுகளை மட்டுமல்ல, இரு நாடுகளுக்கான உறவுகளை, ஏன் இந்தப் பூவுலகே போராட்டக் களமாக மாற வாய்ப்பிருக்கிறது. தண்ணீர் யுத்தம், தன்னுடைய நாளை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறது.

உலகின் மொத்த தண்ணீர் அளவில் 97 சதவிகிதம் கடல் நீராகும். மீதி 2.5 சதவிகிதம் பனிக்கட்டியாக உள்ளது. 0.5 சதவிகிதம் மட்டுமே நன்னீராக நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவில் தனி ஒருவனுக்கு 2500 Cu.m. அளவு ஒரு வருடத்திற்குத் தேவைப்படுகிறது. இது வெகுவிரைவில் 1000 சிu.னீ. அளவாக மாறிவிடும். 2025இல் இந்தியா உட்பட 56 நாடுகள் கடுமையான தண்ணீர் நெருக்கடியைச் சந்திக்க இருக்கிறது. இந்தியாவின் தண்ணீர்ச்சந்தை 2000 மில்லியன் டாலராக இருக்கும்பட்சத்தில் மூன்று பன்னாட்டு நிறுவனங்கள் இதனைக் கையிலெடுக்க உள்ளது (Vivendi Environment, France, SuezLyonnaise Des Eaux, France, RWE of Germany). இந்நிறுவனங்கள் மெதுவாக இந்தியாவின் தண்ணீரைத் தனியார் மயமாக்கி கபளீகரம் செய்துவருகின்றன. தடுத்து நிறுத்தாவிட்டால், தண்ணீர் மனித ரத்தத்தைவிட விலைமதிப்பு மிக்கதாக மாறிவிடும்.

பூவுலகின் நண்பர்கள் ஜனவரி 26இல் நடத்த இருக்கும் முந்நீர் விழவில் பங்குபெற அழைக்கிறோம்.

மக்கள் நீர்க்கொள்கை ஒன்றை உருவாக்குவோம்.

Pin It

பத்து லட்சம் கோடியை இந்தியாவின் சில்லரை வர்த்தகம் 2016இல் எட்டும் என்பது சர்வதேச ஆராய்ச்சி நிறுவன்ங்களின் மதிப்பீடு. இது வருடம் தோறும் 5 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. மேலும் இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 10 சதவீதத்தினையும் இந்தியாவின் வேலைவாய்ப்பில் 8 சதவீதத்தினை சில்லரை வர்த்தகம் ஈட்டுகிறது. 2000 முதலே இந்தியாவின் சில்லரை வர்த்தகத்தினை சர்வதேச நிறுவன்ங்களுக்கு பெரும் லாபம் அளிக்கும் துறையாக சித்தரித்த ஏ.டி.கீர்னி கன்சல்டிங் நிறுவனம் இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தினை உலக அளவி லான இந்தியாவின் இரண்டாவது கவர்ச்சிகரமான முதலீட்டு தொழிலாக முன்மொழிந்தது.

இதற்கு பல்வேறு காரணிகளாக இந்தியாவின் தொழில் கொள்கையில் மாற்றங்களை முன்னெடுப்பதும் அதற்காக பன்னாட்டு நிறுவன்ங்கள் அதில் ஈடுபடுவது மான செயல்களை இது ஊக்குவித்தது. மேலும் மேற் குலகின் சந்தைகள் கிட்டத்தட்ட போட்டிகளின் உச்சத்தினை அடைந்ததும், நிறைவுற்ற அதிக வளர்ச்சி விகிதத்தினை பேணாத சந்தைகளாக மாறியதும் கார ணம். இந்தியாவின் சில்லரைமொத்த விற்பனை சந்தைகள் முழுமைக்காகவும், பெரும் தொகையிலான வாடிக் கையாளர்களை கொண்ட்தாகவும் அமைகிறது. மேலும் இந்தியாவின் ஊக வணிகம் திறக்கப்பட்டு அது சந்தையை முதலீடுகள் விளையாடும் லாபத்தின் களமாகவும் மாற்றப்பட்டுள்ளதை மேற்குலகம் அறிந்தே இருந்தது. (<http://www.iloveindia.com/economyofindia/retailindustry.html>) 

தற்போது சில்லரை வர்த்தகத்தின் இந்தியாவின் நிலை என்ன என்பது பார்த்தால் அது இந்தியாவின் மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் 14% சதவீதத் தினையும், வேலைவாய்ப்பில் கிட்ட்தட்ட 7% பங்களிப் பினை கொண்டிருக்கிறது. இது இந்தியாவின் தொழில் வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பு உருவாக்குவதிலும் பெரும் தூணாகவே இருக்கிறது. இந்தியாவின் பொரு ளாதாரத்தினை பாதிக்கும் ஒரு தொழில்துறை நிச்சயம் மேற்குலகிற்கு லாபத்தினை அளிக்கும் சந்தையாகவே அமையும்.

சில்லரை வர்த்தகத்தின் முக்கியமான பிரிவுகளை நாம் புரிந்து கொள்வது அவசியம்.. சில்லரை வர்த்தகம் என்பது வெறும் பெட்டிக்கடை, மளிகைக்கடை அல்லது சூப்பர்மார்க்கெட் வகையறாக்கள் சேர்ந்தது மட்டுமல்ல. மொத்தவிலைக்கடையும் இந்த வகையில் உள்ளடங்கும். அதாவது மொத்த விலைக்கடையை சில்லரை வர்த்தகப் பெட்டிக்கடையாக நடத்த முடியும் என்பதை வால்மார்ட் பல ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்து இருக்கிறது.

மொத்தவிலைக் கடையைத்தான் சென்னையில் வால்மார்ட் திறக்கிறது. தமிழக அரசு அனுமதிக்க வில்லையே என்றபோது நாங்கள் சில்லரை கடையை திறக்கத்தான் அனுமதி வேண்டும் இதற்கு இல்லை என்கிறார்கள்.

சில்லரை வர்த்தகத்தின் பின்பகுதியை பெரும் சங்கிலி தொடராக சமூகத்தின் பல தொழில்களை, தொழிலாளர்களை இணைக்கிறது. ஆங்கிலத்தில் சப்ளை செயின் என்கிறார்கள். இந்த சங்கிலித் தொடரை முழுமையாக கைப்பற்றி வைக்கும் பொழுதே விலையை நிர்ணயிக்கும் சக்தியும், சந்தையை கைப்பற்றி முழுமையாக ஆக்கிரமிக்கும் ஆற்றலும் ஒரு நிறுவனத்திற்கு வருகிறது. சில்லரை வர்த்தகத்தின் நன்மையும் தீமையும் இந்த இட்த்திலேயே இருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தத் தொடரை முழுமையாக ஆக்கிரமிக்கின்றன. மின்ன்னுப் பொருளில் உலகின் மலிவான பகுதியில் இருந்து உற்பத்தி செய்து இறக்குமதி செய்வதும், மளிகை, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் பெரிய விவசாய நிலங்களை விவசா யத்திற்கு உட்படுத்தி உற்பத்தி செய்வதும், அல்லது வெளி நாடுகளில் இருந்து மொத்த கொள்முதல் (உற்பத்தி செய்து இறக்குமதி செய்தல்) மூலம் சந்தைக்கு கொண்டு வருகிறார்கள். ஆடைகள், ஆயத்த ஆடைகள், மருந்துப் பொருட்களை சர்வதேச சந்தையில், உள்ளூர்ச் சந்தையில் பெரும் எண்ணிக்கையில் வாங்கும் போது கிடைக்கும் பேரத்தின் மூலம் விலை குறைவாக கொள் முதல் செய்கிறார்கள். மேலும் கொள்முதல் என்பது நேரடியாக விற்பனையோடு தொடர்புபடுத்தி குறித்த நேரத்திற்கு வாங்குதல் என்பதாக நுணுக்கமாக திட்டமிடலையும் அவர்களால் மென்பொருள் துணையோடு செய்து முடிக்க முடிகிறது. (ஜஸ்ட் இன் டைம், ஈ.ஆர்.பி சாஃப்டுவேர்கள்) . இதன் மூலம் விற்பனையை முன்கூட்டியே ஊகித்து உற்பத்தியும் செய்ய முடிகிறது. இதன்மூலம் மூலதன சேமிப்பினையும், பயனறிந்து செலவிடுவதையும் செய்கிறார்கள். இவ்வாறு ராட்ச்சத்தனமாக கொள்முதல் மூலமாக இவர்களால் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய இயலுகிறது. இந்த குறைந்த விலையானது இவர்களுக்கு பெருமளவில் சந்தையை உருவாக்கி வாடிக்கையாளர்களை வரவழைப்பதால் பெரும் எண்ணிக்கையில் வியாபாரம் செய்ய இயலுகிறது.

 சில்லரை வர்த்தகத்தின் அன்னிய முதலீடானது நேரடியாக சில்லரை கடை வைத்திருப்பவர்களை மட்டுமல்லாது சமூகத்தின் பிற அடுக்குகளையும் பாதிக்கிறது. இந்த பாதிப்பு இரண்டு வகைகளில் சமூகத்தில் ஏற்படுத்துகிறது, ஒன்று நுகர்வோர்கள் பாதிப்பு, அடுத்து உற்பத்தியாளர் சார்ந்த தொழிலாளர்களுக்கான வாழ்வாதாரப் பாதிப்பு.

குறைந்த விலைக்கு விற்கும் சக்தியை இவர்களை கொண்டிருப்பது என்பது இவர்களது கொள்முதல் உத்தியையும், அதிக விற்பனை தந்திரத்தினையும் இணைத்துப் பார்ப்பதன் மூலம் அறிய முடியும். இதுவே இரண்டு பக்கங்களிலும் சேதத்தினை ஏற்படுத்த வழிவகை செய்கிறது. இந்த பெரும் வியாபாரம் இவர் களுக்கு கொள்முதல் சந்தையில் அடித்து பேரம்பேசு வதற்கும், கடன் வைத்து கொள்முதல் செய்வதற்கும் வழிவகை செய்கிறது. இந்த கடன்வைத்தல் வழிமுறை இவர்களுக்கு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் முனைவோரை ஒரு சக்கரவியூகத்தில் மாட்டுகிறது. அதாவது அவர்கள் தொடர்ச்சியாக உற்பத்தியில் இருக்கவேண்டும், விலையை அவர்களாக நிர்ணயிக்க இயலாது, உற்பத்தியின் அளவினை ஏற்ற இறக்கத்தில் இவர்கள் சொல்லும் முறையில் செய்யவேண்டும். அவ்வாறு செய்வதற்கு தேவையான மென்பொருட்கள், தொழிற் நுட்பங்களை கைகொள்ளுதல் வேண்டும், தொழிலாளர்களை இதற்கு ஏற்ப திட்டமிடுதல் என பலவகையில் நெருக்கடிக்குள்ளாக்கப் படுவார்கள். இதனுடன் தரம் என்கிற கத்தியும் அவர்களது கழுத்தின் மீது வைக்கப்படும். உள்ளூர் உற்பத்தியாளர்கள் இதை செய்தால் மட்டுமே இவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய இயலும். இதை செய்ய மறுத்தாலோ, அல்லது இயலாமல் போனாலோ அவர்கள் தொழிலை விட்டே வெளியேறவேண்டிய சூழலை எதிர்கொள் வார்கள் (வேறு கொள்முதல் செய்யும் நிறுவன்ங்கள் இல்லாமல் போவதே இதன் காரணம்). இது மட்டுமல்லாமல் நீண்ட கடன் காலங்கள் (கிரெடிட் பீரியட்) இவர்களை வெளியேறச்செய்ய இயலாது. இது போல உள்ளூர், சிறு, குறு உற்பத்தியாளார்கள் இந்த வலைப்பின்னலில் மாட்டுகிறார்கள். இது போன்ற நிறுவனங்களை பல மின்னனு துறையில் நாம் பார்க்கலாம்.

விவசாயத்தினை பொருத்தவரை இவர்களால் பெரும் நிலத்தினை குத்தகைக்கோ, விலைக்கோ வாங்க இயலுவதால் விவசாய செலவுகளையும் குறைப்பது சாத்தியப்படுத்துகிறார்கள். இதை தொழிற் நுட்பம் முதல் ஏனைய அறிவியல் உதவியுடன் செய்வதும், வேலையாட்களை குறைப்பதும் சாத்தியப்படுகிறது. தண்ணீரை தனியார்மயப்படுத்தல் இன்னும் சில நாட் களில் நடந்த பிறகு விவசாயம் என்பது சாமானியருக்கு எப்படி சாத்தியப்படும். மின்சாரமும் சில காலத்தில் இலவசமாக அளிக்கப்படுவது நிறுத்தப்படும் போது எப்படி சிறு விவசாயிகளால் செலவுகளை எதிர்கொள்ள முடியும் என்பதை யோசித்தல் இதனுள் இருக்கும் சூட்சுமம் புரியும். இதனூடாக நாம் இங்கு கொண்டு வரப்படும் விதைச்சட்டம் உட்பட பல்வேறு மசோதாக் களை இணைத்து பார்க்கவேண்டும். இதன் பாதிப்பு களை இதனூடாகவே உணரமுடியும். தொகுத்துப் பார்க்கும் போது மட்டுமே இந்த சில்லரை வர்த்தகம் சாமானிய மனிதனிடம் ஏற்படுத்தும் இழப்பினை உணர இயலும்.

தொழிலாளர்களை பொருத்தவரை இவர்களது திட்டமிடல் என்பது குறைந்த ஊதியத்தில் எங்கு பணி செய்யமுடிகிறதோ அங்கே பொருட்களை உற்பத்தி செய்வது. இவ்வாறு குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் இடங்களில் இவர்கள் தொழிலாளர் நலனை கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. சர்வதேச தொழி லாளர் உரிமைகள், நலன்கள் நடைமுறைப்படுத்தப்படாத நாடுகளில், இடங்களில் இவர்களது உற்பத்தியானது நிகழ்கிறது. இதற்கு இல்லீகல் இம்மிகரண்ட்ஸ் எனப் படும் பொருளாதார வாழ்வு தேடி வளர்ந்த நாடுகளுக்கு வரும் ஏழை நாடுகளின் சட்டவிரோதமாக குடியேறி யவர்கள் பயன்படுத்தப்படுவது வாடிக்கையானதும் கூட. சமீபத்தில் கூட பங்களாதேசத்தில் இந்த வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க மறுத்த்தையும் நாம் பார்த்தோம். 2006 இலிருந்து இது நாள் வரை கிட்ட்தட்ட 500 தொழிலாளர்கள் தீ விபத்துகளினால் பங்களாதேசத்தில் இறந்து போய் உள்ளார்கள்.

கடந்த வருடம் நடைபெற்ற (தஸ்ரின் ஆயத்த ஆடை நிறுவனத்தில்) தீ விபத்தில் கிட்டத்தட்ட 112 தொழிலாளர்கள் இறந்தார்கள். இதுவரை இதற்கு வால்மார்ட், டிஸ்னி உட்பட எந்த நிறுவனமும் , இந்த தொழிற்சாலையை பயன்படுத்திய போதிலும் நட்ட ஈட்டை வழங்கவில்லை. (<http://www.nytimes.com/slideshow/2012/11/25/world/asia/26bangladesh_ss2.html>) <http://www.huffingtonpost.com/2012/12/05/walmartbangladeshfactoryfire_n_2244891.html>. இதை எந்த வளரும் நாடுகளில் உள்ள ஊழல் மலிந்த அரசுகள் கேள்விகேட்பது இல்லை. இதற்கு அடுத்தபடியாக சங்கிலித்தொடராக பாதிக்கப்படுப்வர்கள், தமிழகச் சூழலில் சந்தை, மண்டி வகை தொழில்கள் சிதையும். இவைகள் நேரடியாகவும், உடனடியாகவும் சிதைவுக்கு உள்ளாகும். இதை சிதைத்தால் தான் ஒட்டுமொத்த உற்பத்திச் சங்கிலியை கைப்பற்றுவதும், உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்களை மாற்றுவதும் சாத்தியப்படும். இதன் மூலம் இருவரையும் பிரித்து உள்ளே வால்மார்ட் நுழையும். இதன் மூலம் சில்லரை கொள்முதல் செய்பவர்கள், சிறு உற்பத்தியாளர்கள் விவசாயிகள் பிணைப்பு உடைக்கப்பட்டு இருவருக்கும் இடையே வால்மார்ட் நுழையும். பிறகு இருவரது தொழிலையும் ஆக்கிரமிக்கும். இந்த யுக்தியைத் தான் தமிழகத்திற்கு வால்மார்ட் பயன்படுத்தப்போகிறது.

இதன் பிறகு சில்லரை கடைகளான பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், சிறுவணிக வளாக கடைகள் , உற்பத்தியாளர்கள், விவசாயிகள், நெசவாளிகள், மண்டி, சந்தை, இடைத்தரகர்கள், கமிசன் ஏஜெண்டுகள், சிறு வணிகக் கடைகள், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பேக்கரிகள், மருந்துக் கடைகள், முதலானவை வரை இதனால் பாதிக்கப்படும். கடைகள் விலை குறைவை சமாளிக்க இயலாமல் தடுமாறும், மூடப்படும், அல்லது லாபமற்று இயங்கும் நிலைக்கு தள்ளப்படும்.

இது மட்டுமல்லாமல் இந்தியாவில் மூன்று மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட நில சீர்திருத்த மறுவாழ்வு மசோதா போன்றவை இவ்வாறு பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் சிறுதொழில் புரிவோர்கள் பின்னால் போராட்ட களத்தில் நிற்க கூடாது என்பதற்காகவே உருவாக்கப்பட்ட்து எனலாம்.

மேலும் சமீபகாலங்களில் மிக அதிகமாக வால்மார்ட் போன்ற நிறுவனங்களில் சம்பளபாக்கிகள், குறைவான சம்பளம் போன்ற கோரிக்கைகளுக்காக போராட்டங்கள் வலுத்து வருவதைக் காண முடியும். (<http://www.davidicke.com/headlines/75847americansholdprotestsagainstwalmartpolicieswithemployees>) ஆகவே வேலைவாய்ப்பு உருவாகும் என்பதும் கண் துடைப்பு. 100 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் தமிழக சில்லறை வர்த்தகக் கடையினை விட நான்கில் ஒரு பங்கு ஆட்களே இந்த நிறுவனங்களுக்குத் தேவைப்படுவார்கள். இதேபோலத் தான் இவர்கள் வாங்கும் உற்பத்தியாளர்களும் ஆட்குறைப்பு செய்யவேண்டிய நெருக்கடி பல நாடுகளில் ஏற்பட்டு உள்ளது. 

அரசியல் நுணுக்க அறிவு மக்களிடையே ஏற்படுத்தப்படாமல் போனால் மக்களின் ஆதரவு இந்த பெரு நிறுவன்ங்களுக்கு அதிகமாக இருப்பது நடக்கவே செய்யும். இது இந்த சங்கிலித் தொடரை முழுமையாக பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றிவிடும்..

இந்த நிறுவனங்களை எதிர்த்துப் போராடும் வலிமையை நமது சிறுவணிகங்கள் பெற்று இருக்குமா என்பது கேள்விக்குறியே.. வால்மார்ட், செயின்பெரி, டெஸ்கோ போன்ற நிறுவன்ங்கள் பெட்ரோல்பங்க் மட்டுமல்ல, போஸ்ட் ஆபீஸே நட்த்துகிறது. இவர் களின் முதலீடுகள் பல பத்து ஆயிரம் கோடிகளை தாண்டுகிறது. இவர்களது கடைகள் கிட்ட்தட்ட 200 கார்களை பார்க்கிங் செய்யுமளவு பெரியதாக பல ஏக்கர்களை உள்ளடக்கியதாக நகரத்தில் இருப்பது மட்டுமல்ல, 1000 சதுர அடி கொண்ட கடைவகை களையும் இவர்கள் நிறுவ ஆரம்பித்தனர். இதன் விளைவாக அனைத்து சிறுகடைகளும் மூடப்பட்டன. இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சாயத்துகளின் எதிர்ப்புகள் பலனிக்கவில்லை, மாறாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க சொல்லிவிட்டு கடைகளை இவர்கள் திறந்தார்கள். இன்றும் இவர்களுக்கு அப்பகுதி வணி கர்களிடம் எதிர்ப்பு இருக்கிறது. ஆனாலும் கடைகள் தொடர்ந்து திறக்கப்படுகின்றன. இவர்களை தடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகவே இருக்கிறது. உள்ளே வரவிடாமல் தடுப்பது மட்டுமே சாத்தியப்படும் நிகழ்வு.

Pin It

(விதர்பாவைத் தொடர்ந்து நடுவணரசு, மாநில அரசுகளின் துரோகங்களினால் தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை தொடர்கிறது. ஊடகங்களும் அரசும் இத்தற்கொலைகளை மறைக்கின்றன. தற்கொலைகளைத் தூண்டும் தண்ணீர் எல்லோருக்கும் உரியதாய் மாறவேண்டும்.)

அது தன் நாட்களை
ஒருபோதும் சோம்பலில் கழித்ததில்லை
ஒரு நாளைக்கூட பொழுதுபோக்கு போன்ற
புலன் துய்த்தல்களில் செலவிட்டதில்லை
பொருள் புகழ் அதிகாரங்களை நோக்கிய
வேட்கை உந்தல்களை அது அறியாது
எப்போதாவது தன் துணையுடன்
அன்றி எப்போதும் தன் தன்மையையே
அது பாதுகாத்தபடி அலைந்த்து
அதன் உயிர்ப்பும் சிறகடிப்பும்
இயற்கையின் மர்மங்கனைத்தையும் உணர்ந்த வியப்பும்
அதை விளக்க இயலாத படபடப்புமேயாம்

ஒரு நாள் என் தோட்டத்தின் ஈரத்தரையில்
உதிர்ந்த ஒரு மலர்போல் அது கிடந்தது
நல்லடக்கம் செய்யும் சுற்றமோ
மறைவுக்குக் கண்கலங்கும் உறவுகளோ
சமூகமோ தேசமோ இன்றி
அது அனாதையாய் மரித்திருந்தது
நெஞ்சுருகும் பார்வையின் முத்தம்
ஒரு கவிதை
இவைதானோ அதன் மொத்த வாழ்க்கையின்
மர்மமான இலட்சியம்?
இன்று அது நிறைவேறியதையோ
எளிய உயிர்கள் நூறுகள் கூடி
ஊர்வலமாய் அதை எடுத்துச் செல்ல முயல்வதையோ
கண்களில்லாத கால்கள்
அதை மிதித்தபடி செல்வதையோ
ஒரு பெருக்குமாறு அதை குப்பைகளோடு குப்பையாய்
ஒரு மூலைக்கு ஒதுக்கிவிடுவதையோ
எதைப்பற்றிய கவலையுமில்லாமல்
எல்லாவற்றையும் அதுவே ஒதுக்கிவிட்டதாய்
ஈரமான என் தோட்ட நிலத்தில்
மரித்துக் கிடந்தது அது

- தேவதேவன்

Pin It