genetically modified fruit 350மரபணு மாற்றுப்பயிர்கள் என்பது நம் பூவுலகு இத்தனை மில்லியன் ஆண்டு கண்டிராத ஒரு புது உயிரினம். இரு மரபணுக்கள் வெட்டி ஒட்டப்பட்டால் எத்தகைய விளைவு தோன்றும் என்பதை யாராலும் அனுமானிக்க முடியாது என்பதுதான், இத்துறையில் உலகறிந்த பல வல்லுநர்களின் கூற்று. உலகெங்கும் பல நாடுகளில் இன்றளவும் இந்த அச்சமூட்டும் பயிர் வேண்டாம் என்ற தடை உள்ளது.

ஆனால் அவசியமே இல்லா மல், இத்தொழில் நுட்பத்தை எப்படியாவது இந்தியாவில் திணிக்க கடந்த 15 ஆண்டுகளாக முயற்சிகள் இடைவிடாது நடந்துகொண்டே இருக்கின்றன.

பா.ஜ.கட்சி 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், ‘மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கைச் சூழலுக்கும் எவ்வித பாதிப்பும் இருக்காது என்பதை முழுமையான அறிவியல் ஆய்வுகள் மூலம் அறிந்த பின்னரே மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்,’ எனச் சொன்னவர்கள், தடாலடியாக 13 உணவுப்பயிர்களில் கிட்டத்தட்ட 70 கள ஆய்வுகளுக்கு அனுமதியினை அரசின் மரபணு மாற்றப்பயிர்களுக்கான ஒழுங்கு முறை ஆணையம் ((GENETIC ENGINEERING APPROVAL COMMITTEE)) மூலம் வழங்கியுள்ளனர்.

“சூழல் பாதுகாப்பெல்லாம் வளர்ச்சி குறித்த விஷயத்தில் பார்த்துக்கொண்டிருக்க முடியாது” எனப் பிரதமர் அவர்கள் பேசியதன் நடைமுறை வடிவமாக இந்த அவசர அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

மரபணுப் பயிர்களை அனுமதிப்பது குறித்து உலக சுகாதார நிறுவனம், மிகத்தெளிவான வழிகாட்டுதல்களைக் கொடுத்துள்ளது. “ஒவ்வாமை ((allergenicity)), புது மரபணு, நமது உடலின் பாக்டீரியாக்களின் மரபணுவோடு மாறுவது (gene transfer), சுற்றுச்சூழலில் உள்ள நாட்டு ரகங்கள் மரபணு மாற்றிய பயிர்களோடு கலந்து, பாரம்பரிய ரகங்களும் விதைகளும் அழிந்து போவது (out crossing)” ஆகியன நிகழக் கூடும் என எச்சரிக்கும் அவர்கள், தனிப்பட்ட பாரபட்சமற்ற உயர்ரக ஆய்வுகளை நடத்த வேண்டும் என்கின்றனர். பிடி கத்தரி விஷயத்தில் நடந்தது நாடறியும். அப்படியான பாரபட்சமற்ற மூன்றாவது அமைப்பின் (third party analysis) உயர்ரக ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை.

நாட்டுக்கத்தரியும் மரபணு மாற்றப்பட்ட கத்தரியும் பல்வேறு நிலை களில் நுண்கூறுகளில் பெருவாரியாக மாறியிருப்பது, ஆய்வில் தெரிய வந்த பின்னரும், இரண்டும் ஒன்றுதான் என அடாவடியாக அனுமதி அளிக்க முன்வந்தனர். இந்தியாவெங்கும் விஞ்ஞானி புஷ்ப பார்கவா முதலான பல்வேறு அறிஞர்கள், வேளாண் அமைப்பினர், சமூகப் பொறுப்புள்ள அரசு சாரா நிறுவனங்கள், கொந்தளித்துக் கோரிய பின்னர் தற்காலி கமாக பி.டி. கத்தரிக்கு அன்று தடை விதிக்கப்பட்டது.

அதன் பின்னர் மரபணு மாற்றிய பயிர்கள் குறித்த உச்ச நீதிமன்ற சிறப்புத் தொழில்நுட்ப வல்லுனர் குழு (TEC) வெளியிட்ட அறிக்கையும் “காலவரை யின்றி, மரபணு மாற்றிய பயிர்களின் கள ஆய்வை நிறுத்தி வையுங்கள். இது, இந்தியரின் உடல் நலத்துக்கும், இந்திய விவசாயத்தின் நலத்திற்கும், உலக உயிர்ப் பன்முகத்தன்மைக்குமான மிகப் பெரிய அச்சுறுத்தல். இதுவரை நடந்த ஆய்வு முடிவுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஆய்வில் வெளிப் படைத்தன்மை குறித்தும், பாரபட்சமில்லா முடிவுகள் குறித்தும் ஐயமாக உள்ளது.

உலகத்தரத்திலான ஆய்வுகள் கொண்ட பாரபட்சமில்லா நிபுணர் குழு மூலம் மறு ஆய்வு செய்யும்வரை கள ஆய்வுகள் எந்தப் பயிரிலும் செய்யக் கூடாது” எனக் கூறியது. மரபணு பயிர் வரலாற்றில் இது நான்காவது வல்லுநர்குழுவின் அறிக்கை. ஏற்கனவே, மூன்று உயர்மட்டக் குழுக்கள் இந்தியாவில் மரபணு உணவுப் பயிர்கள் நுழைவை நிராகரித்துள்ளன. முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. ஜெயராம் ரமேஷ் தலைமையிலான, தேசிய அளவிலான குழு (பெப்ரவரி 2010), சப்பாரி கமிட்டி (ஆகஸ்டு 2012), பாராளுமன்ற வேளாண் நிலைக் குழு (ஜூன்ஜூலை 2013), ஆகிய மூன்றும் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் மரபணு பயிர்கள் வேண்டாம் என பரிந்துரைத்துள்ளன.

மரபணுப் பயிர்களை இந்தியாவில் கொண்டு வருவதில் கடந்த அரசுபோன்றே தற்போதைய மத்திய விவசாயத்துறை அமைச்சகமும், அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகமும் பிடிவாதம் காட்டத் துவங்கியுள்ளது உச்சநீதி மன்றம் அமைத்த வல்லுநர் குழு அறிக்கையைப் புறந்தள்ளி “இந்திய விவசாயத்தின் வளர்ச்சிக்கு இப்பயிர்கள் மிகவும் அவசியம்; உற்பத்தியைப் பெருக்க, பசிப்பிணி போக்க இதன் உதவி இன்றி முடியாது,” என பொய்யுரை பேசுகின்றனர். கண்மூடித்தனமாக இப்பயிர்களைப் போற்றும் இவர்கள், ‘உண்மை அறிவியலை’ புறந்தள்ளுகின்றனர்.

இதுவரை 450க்கும் மேற்பட்ட உலகத்தர ஆய்வுகள் மரபணு பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க ஒருபோதும் உதவாது; உடல்நலத்துக்குப் பெரும் அச்சத்தைத் தரக் கூடும் எனப் பலமாக எச்சரிக்கின்றது. இந்த ஆய்வு முடிவுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக மதியாமல், நாட்டின் இறையாண்மையைப் பற்றித் துளியும் யோசிக்காமல், அரசு இதற்குப்பின்னால் உள்ள வணிகம் பற்றியே கருத்தில் கொண்டு காய் நகர்த்துகின்றது.

கள ஆய்வுதானே? இது அறிவியல் ஆய்வின் ஒருபடிதானே? வணிக அனுமதியா தந்துவிட்டோம்? இதற்கேன் கூச்சல் போடுகின்றீர்கள்? என்று இதைப் படைக்கும் பூவுலகின் பிரம்மாக்களில் சிலர் கோபமாகக் கேட்கின்றனர். அவர்கள் மறந்து போன செய்தி என்ன தெரியுமா? 2009இல் மத்திய பருத்தி ஆராய்ச்சிக் கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன உதவியுடன், மான்சான்டோவின் பிடி பருத்திக்குப் பதிலாக நாங்களே இந்தியாவில் உருவாக்கிய பி.என் பருத்தி ((BIKENERI NERMA Bt COTTON ), என ஒரு ரகத்தை உருவாக்கியது.

தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் சப்பாரி தலைமையிலான உயர்மட்டக் குழு சமீபத்தில் அதனை ஆய்ந்ததில், அந்த இந்திய பிக்கனேரி நெர்மா பருத்தியிலும் மான்சான்டோ மரபணு இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் மிகக் கொடுமையான விஷயம் என்னவென்றால், இந்த மரபணு கலப்பும் கூட தற்செயலாக நடந்த விபத்து அல்ல. திட்டமிட்டே செய்யப்பட்டது என ஊகிக்கிறது சப்பாரி குழு.

“எங்களிடம் தப்பு இல்லை; முதலில் விதை தந்த தார்வாத் பல்கலைக்கழகத்திலேயே நடந்திருக்கலாம்; வேறு எங்கோ கலந்திருக்கலாம்” என் ஊகிக்கின்றார்கள் இதனைப்படைத்த மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள். மிகக் கட்டுப்பாட்டுடன் நடத்தியதாகச் சொல்லப்பட்ட பல்கலைக்கழக ஆய்வு வளாகத்திலேயே இந்த மரபணுக் கலப்பு சாத்தியமென்றால், கள ஆய்வுக்கென சொல்லி நம்ம ஊர் நிலத்தில் இது பயிரிடும்போது ஏற்படும் நிலைமையைக் கொஞ்சம் யோசியுங்கள்.

என்ன நடக்கிறது? மரபணு தற்செயலாகக் கலந்துவிடும் ஆபத்தைக் குறித்து ஒரு பக்கம் சூழலியலாளர்கள் வருந்திக்கொண்டிருக்கையில் இப்படித் திட்டமிட்ட கலப்பு நடக்கும் சாத்தியமும் உண்டென்றால், கள ஆய்விற்காக அனுமதிக்கப்பட்ட அத்தனை பயிரின் நிலைமையையும் நினைத்துப் பார்க்கவே பயங்கரமாய் உள்ளது.

ஒரு பத்து ஆண்டுகளுக்குள் இந்தியாவின் ஒட்டு மொத்த வணிகப்பயிர், உணவுப் பயிர், மூலிகைப் பயிர் மரபணுக்கள் இவையெல்லாம் தனியார் கம்பெனிச் சொத்தாகும் சாத்தியம் மிக மிக அதிகம்.

இந்தியாவின் எதிர்கால மருத்துவ சவால் மதுமேக நோய், இரத்தக் கொதிப்பு நோய், அதி இரத்த அழுத்தம், புற்றுநோய்க் கூட்டம் முதலான தொற்றாத வாழ்வியல் நோய்க் கூட்டம் என பலமாக மருத்துவ உலகம் எச்சரிக்கின்றது. இதனை ஒரேயடியாய்த் தீர்க்க இன்றளவில் மருந்தில்லை. கட்டுப்படுத்த உணவும் வாழ்வியலும் ரொம்ப முக்கியம். இது போன்ற மரபணு மாற்றிய உணவுகள் எந்த மாதிரி விளைவு களை நம் உடலுக்குள்ளும், மரபணுக்குள்ளும் நிகழ்த் தும் என்ற தெளிவான ஆய்வுகள் இன்றுவரை இல்லை.

கத்தரிக்காய், கம்பு, அரிசி என உணவுப்பயிர்களில் மட்டுமல்லாமல், நம் பாரம்பரிய மூலிகைகளிலும் அதன் “ஆக்டிவ் மாலிக்யூலை” அதிகரிக்கிறேன் பேர்வழி என அசுவகந்தா, பிரமி, ஜீவந்தி, ‘சிக்கன் குனியா’ புகழ் நிலவேம்பு, சிக்கரி என ஐந்து மூலிகைகளிலும் இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழக உதவியுடன் பல பல்கலைக்கழகங்கள் மரபணு மாற்றத்தை மும்மரமாக நடத்தி வருகின்றன.

அவர்கள் இந்திய மருத்துவ மூலிகைகளை அதன் செயலாற்றும் தத்துவம் புரியாமல், வெறும் வேதிப்பொருள் உற்பத்தி செய்யும் இயற்கைத் தொழிற்சாலைகளாக மட்டுமே பார்க்கின்றனர். இப்படியாக தனக்கு வேண்டியபடி மூலிகையின் சத்தை மாற்றத் துவங்கினால், நமது பாரம்பரிய அறிவு ஒரே நாளில் சிதைந்து சின்னாபின்னமாகி, ஒட்டுமொத்த இந்திய மருத்துவமும் சிதைந்துவிடும் பேராபத்து இதில் உள்ளது. ‘எம் பாட்டன் சொத்து’ என இந்திய மூலிகையை எவரும் சொல்ல முடியாத சூழலுக்குத் தள்ளப்படுவோம்.

மொத்தத்தில் உடல் நலத்துக்கும் சூழலுக்கும் வேளாண்மைக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பானதா? என்பது உறுதி செய்திடாமல் வயல்வெளிகளில் சோதிக்க அனுமதி அளித்துள்ளது. அரசின் இந்த முடிவு, முட்டாள்தனத்தின் உச்சமும் எதேச்சதிகாரத்தின் வெளிப்பாடும் தவிர வேறேது மில்லை.

நிறைய விஷயங்கள் நம்மைவிட்டு, சூழலில் நாம் செய்யும் அட்டூழியம் தாங்காமல் காணாமல் போய் விட்டன. அமெரிக்காவின் புகழ்பெற்ற ராபின் பறவை பூச்சிக்கொல்லிகளால் உலகை விட்டு கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது. கதைகளில் நாம் படித்து மகிழ்ந்த டோடோ பறவை இப்போது இல்லை. சைபீரியாவில் இருந்து இங்கு வந்து, காதல் ஜோடியாக ஆடி மகிழும் சாரஸ் நாரைகள் ஜாகையை மாற்றிவிட்டதோ காணாமல் போய்விட்டதோ என்னவோ இப்போது இங்கு இல்லை.

நம் நாட்டில் முதலில் தேசியப் பறவையாக அறிவிக்க இருந்த கானமயில் இந்தியாவில் இப்போது அருகிவிட்டது. அமெரிக்க தேசியப் பறவையான மொட்டைத்தலை கழுகு மிகவும் குறைந்துவிட்டது. ஆடு மாடுகளுக்கு வலி நிவாரணியாக டைகுளோஃபினாக் சோடியம் கொடுத்ததில், அதன் தசைகளை, கழிவுகளைச் சாப்பிட்டு வந்த பாறுக் கழுகுகள் இப்போது காண்பது அரிது. மரபணு மாற்றப்பட்ட சோளம் உமிழ்ந்த நச்சு, மொனார்க் பட்டாம்பூச்சிகளைக் கொன்று குவித்தது. இப்போது மரபணு மாற்றப்பட்ட கத்தரியும் கம்பும் சோளமும் கொஞ்ச நாளில் நம்மையும் காணாமல் செய்யுமோ என்னவோ?

Pin It