மன்னர்கள், பேரரசர்கள் எளிய மக்களின் வாழ்க்கையை எலிகளைப் போலப் பார்த்தார்கள். மன்னர்கள் நினைத்த நேரத்தில் மக்களை போருக்கு நிர்பந்தித்தனர். ஆயுதங்களைப் பிரயோகிப்பதில் மக்களை எலிகளாய் நடத்தினர். வரிகளால் மக்களைக் கொடுமைப்படுத்தினர். பக்தியும் அரசியலும் ஆண்டாண்டு காலமாக மக்களை சோதனை எலிகளாய் வைத்திருந்தன. நவீன காலத்தில் காலனியாதிக்கத்தில் மக்கள் இயல்பாக அடிமைப் பரிசோதனை எலிகளாயினர். ஆங்கில ஏகாதிபத்தியம் மொழியிலிருந்து தங்களது பண்பாட்டு படையெடுப்பு வரை மக்களை எலிகளை விட மிகவும் கீழான உயிரினங்களாகப் பார்த்தனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகெங்கும் கையோங்கியவுடன் மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்காவின் பரிசோதனைக் கூடங்களாக மாறின. மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் பரிசோதனை எலிகளாயினர். குறிப்பாக அணு உலைகள், அணுகுண்டுகள் ஆகியவற்றை மக்களின் மீதே பரிசோதித்துப் பார்த்தனர். பாப்புவா நியூகினியா மிகச் சிறந்த உதாரணம். ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவீச்சினை போரின் ஒருபகுதியாகப் பார்ப்பதைவிட, அணுகுண்டுச் சோதனையாகவே ஜப்பான் மக்களை எலிகளாகவே அமெரிக்கா பார்த்தது என்பதே யதார்த்தம். சுதந்திரத்திற்கு பின் இந்திய மக்கள் நிரந்தரச் சோதனை எலிகளாகவே மாறிவிட்டனர் என்பது நமது மக்களாட்சி அரசின் கொள்கை முடிவுகளிலிருந்து தெரிகிறது. ‘பசுமைப் புரட்சி’ என்ற பெயரில் மக்களைச் சோதனைப் பொருளாக்கி, நமது உணவையும் உடலையும் நஞ்சாக்கி மகிழ்ந்துள்ளது நமது அரசு.

ஒவ்வோர் ஊரிலும் பல்வேறு ‘வளர்ச்சி’த் திட்டங்கள் மக்களை அழித்துக் கொன்றாலும் ‘பசுமைப் புரட்சி’, ‘மரபணு மாற்றுப் பயிர்’த் திட்டங்கள் நீக்கமற எல்லோரையும் எல்லாவற்றையும் பரிசோதனைப் பொருளாக்கியுள்ளது என்பதே உண்மை. காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது, ‘சுதேசி’ ‘தற்சார்ப்பு’ என்றெல்லாம் பா.ஜ.க. பீற்றியது.

தேர்தல் அறிக்கையிலே மக்கள் விரோத மரபணு மாற்றுப் பயிரை அனுமதிக்க மாட்டோம் என்று முழங்கியது. ஆட்சிக்கு வந்தவுடன் மரபணு மாற்றுப் பயிர் பரிசோதனைக்கு அனுமதி என்று வழக்கம்போல் ‘சுதேசி’க்கு எதிராகக் களமிறங்கிவிட்டது. மான்சான்டோவிற்கு இந்தியாவை விற்பதில் முன்னணியில் நிற்கிறார்கள் நமது பா.ஜ.க தேசபக்தர்கள். நாற்பது வயதே நிரம்பிய சில்பா திவேகர் நிருபா என்ற பெண் உயரதிகாரியை மான்சாண்டோவின் இந்தியப் பணிகளுக்கு அதன் நிர்வாகம் நியமித்துள்ளது.

அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார்; ‘எங்களுடைய இந்தியப் பணி எதுவும் தடைபடவில்லை.’ பல்வேறு சோதனைகள் பல்வேறு நிலைகளில் நடக்கின்றன. தற்காலிகமாக பருத்தியில் நிறுத்திவைக்கப்பட்டது அது மீண்டும் இப்போது தொடங்கிவிட்டது. ‘நாங்கள் மேற்கொள்ளும் வயல்வெளிச் சோதனைகள் குறிப்பிட்ட இடங்களிலோ அல்லது வேளாண்மை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளேயோ நடந்தே தீரும்.’ என்கிறார். மக்களை மான்சான்டோவின் பரிசோதனை எலிகளாக்குவதே எல்லா அரசியல் கட்சிகளைப்போல பா.ஜ.கவின் லட்சியமும். ஆம் நாம் எல்லோரும் எலிகளாவோம்.

Pin It