transhumanism 450இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்களை அனுமதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டதா? இதை அனுமதிக்கலாம் என்று கொள்கை முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதா? இதற்கான சட்டம் இயற்றப்பட்டதா?

இதுவரை வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் மேலே உள்ள எந்தக் கேள்விக்கும் பதில், “இல்லை” என்பதாக மட்டுமே இருக்கும். இதன் அடிப்படையில் இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட உணவுப்பொருட்கள் இதுவரை சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை என்பதே உண்மை.

ஆனால் இந்தியாவில் விளையும் பருத்தியில் சுமார் 97 விழுக்காடு மரபணு மாற்றப்பட்ட பருத்தியே விளை விக்கப்படுவதாக மரபணு மாற்றத்தின் ஆதரவாளர்களே கூறுகின்றனர். இந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் மரபணுக்கூறுகள் பூச்சிகள் மூலமாகவோ, காற்றின் மூலமாகவோ உணவுப்பயிர்களில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதா என்று கேட்டால் பதில் சொல்ல ஆளில்லை.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் மற்றும் பன்னாட்டு வணிக நிறுவனங்கள் விற்பனை செய்யும் உணவுப் பொருட்கள் மரபணு மாற்றப்படாதவைதானா என்ற கேள்விக்கும் விடையில்லை. இதை ஆய்வு செய்வதற்கான ஆய்வுக்கூட வசதிகள் இந்தியாவில் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறிதான்.

இந்த நிலையில்தான் 13 வகை உணவுப்பயிர்களில் மரபணுமாற்றுச்சோதனையை திறந்த வெளியில் செய்வதற்கு மரபணு மாற்றுப் பயிர்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் (GEAC) அனுமதி அளித்துள்ளது. மற்ற உணவுப்பயிர்கள் பயிரிடப்படும் இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் இந்தச் சோதனையை மேற்கொள்ளலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காற்றின் மூலமோ, பூச்சிகள் மற்றும் பறவைகள் மூலமோ இந்த மரபணு மாற்றப்பட்ட தாவரங்களின் மூலக்கூறுகள் வேறு தாவரங்களில் கலக்காது என்று GEAC நம்புகிறது. காற்றும் பூச்சிகளும் பறவைகளும்கூட இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்படும் என்று இந்த அமைப்பு நம்புவதாகத் தோன்றுகிறது.

அருணா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட நான்கு சமூக ஆர்வலர்கள் இணைந்து இந்தியாவில் வேளாண்மைத் துறையில் மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் அறிமுகம் செய்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2005ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மரபணு மாற்றுத்தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும் இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு ஒன்றையும் அமைத்தது. இந்த நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையை கடந்த 2013ம் ஆண்டு அளித்தது. மரபணு மாற்றுப் பயிர்களால் சூழலுக்கும், அப்பயிர்களை உட்கொள்ளும் விலங்கு மற்றும் மனிதர்களுக்கும் ஆபத்து ஏற்படாது என்று உறுதி அளிக்கமுடியாத நிலையில் மரபணு மாற்றுத் தொழில்நுட்ப திறந்த வெளி ஆய்வுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.

இதற்கிடையில் காங்கிரஸ் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி கடந்த 2008ஆம் ஆண்டில் உயிரிப்பாதுகாப்பை உறுதி செய்யாத மரபணு மாற்று உணவுப்பொருட்களை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று கூறி தமது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

மேலும் அந்த அமைச்சரவையில், சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் கடந்த 20092010ம் ஆண்டில் மரபணு மாற்றுக் கத்தரி குறித்து நாடு தழுவிய அளவில் விவாதங்களை நடத்தி மக்கள் கருத்தைக் கேட்டறிந்தார். மேலும் துறை சார்ந்த அறிஞர்களின் கருத்துகளும் பெறப்பட்டன. மக்களிடமும், மக்கள் சார்ந்த அறிவியலாளர்களிடமும் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பிப்ரவரி 9, 2010 அன்று அன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு மாற்றுக்கத்தரியை வணிக ரீதியில் பயிரிடுவதற்குத் தடை விதித்தார்.

மேலும் இந்தத் தடை உத்தர வில், மரபணு மாற்றுக்கத்தரியின் பாதுகாப்பு குறித்து அந்தக் கத்தரியை விற்பனை செய்ய முயலும் நிறுவனங்களே செய்துள்ள சோதனை களை ஏற்பதற்கில்லை என்றும், பாதுகாப்பைச் சுதந்திரமான ஆய்வுகள் உறுதி செய்யும்வரை தடை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே நேரத்தில் வேளாண்மைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும் மரபணு மாற்றுக் கத்தரி விவகாரத்தில் ஆர்வம் காட்டியது. இந்தப் பிரசினை குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. பல தரப்பிலும் கருத்துகள் கேட்கப்பட்டன. இறுதியில் ஆகஸ்ட் 9, 2012 அன்று இக்குழு சுமார் 360 பக்கங்கள் கொண்ட விரிவான இறுதி அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையிலும், மரபணு மாற்றுப்பயிர்கள் மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று உத்தரவாதம் அளிக்கும் நிலை வரும்வரை மரபணு மாற்றுப் பயிர்களை திறந்த வெளியில் பயிரிட்டு களப் பரிசோதனை நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையில் அருணா ரோட்ரிக்ஸ் மற்றும் மூன்று சமூக ஆர்வலர்கள் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை வேளாண்துறையில் அறிமுகம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிஞர் குழு ஒன்றை அமைத்தது. பெரும்பாலும் அரசு சார்பு அறிவியல் அறிஞர்களே இடம் பெற்றிருந்த இந்தக்குழு 2013ஆம் ஆண்டில் தமது இறுதி அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையிலும் மரபணு மாற்றுப்பயிர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அச்சம் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்தப் பாதிப்புகளைத் தடுப்பது குறித்தோ, எதிர்கொள்வது குறித்தோ எந்த ஆலோசனைகளும் நடக்காத நிலையில் மரபணு மாற்றுப்பயிர்களின் களப்பரிசோதனைக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் 13 பயிர்வகைகளைத் திறந்த வெளியில் கள ஆய்வு செய்ய அனுமதி அளித்து மரபணு மாற்றுப் பயிர்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் ((GEAC) உத்தரவிட்டுள்ளது. மரபணுமாற்றுத் தொழில்நுட்பம் சார்ந்த தாவரங்களை களப்பரிசோதனை செய்வதால் பல பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்புள்ளது என்பதைப் பல்வேறு அரசு சார்ந்த அமைப்புகளே ஒப்புக் கொண்டுள்ளன.

மேலும் இத்தகைய களப்பரிசோதனைக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடை இன்னும் அமலில் உள்ளது. இந்த நிலையில் 51 பயிர்வகைகளைத் திறந்தவெளியில் களப்பரிசோதனை செய்வதற்கு மரபணு மாற்றுப் பயிர்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பது, இப்பிரச்சினையில் மத்திய அரசின் கண்ணோட்டத்தைக் காட்டுவதாகவே உள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வேளாண் பெருமக்களும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, மரபணுத் தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குழுவின் அனுமதியை நிறுத்தி வைப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜவடேக்கர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய வேளாண்மையில் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து அறிவுச் சொத்துரிமை சட்டங்களின் மூலம் இந்திய வேளாண்துறையை தமது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்பும் பன்னாட்டு விதை நிறுவனங்கள் அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளன. இந்த முயற்சிக்கு வரும் தடைக்கற்களை அகற்றுவதற்கு எதைச் செய்வதற்கும் இந்த நிறுவனங்கள் தயாராக உள்ளன. யாரையும் விலைக்கு வாங்கவும் இந்த நிறுவனங்கள் தயங்கப்போவதில்லை.

இதைப் புரிந்து கொண்டு நுகர்வோராகிய நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதில்தான் நமது எதிர்கால உணவு இறையாண்மை இருக்கிறது.

Pin It