மத்திய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் மரபணு மாற்றுப் பயிர்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் ((Genetic Engineering Approval Committee GEAC)), மரபணு மாற்று உணவுப் பயிர்களுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கி விட்டது. இதன் மூலம் இந்தக் குழு, நரேந்திரமோடி அரசுக்கு ஒரு சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது மோடி அரசு, தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி மரபணு மாற்று உணவுப் பயிர்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கப் போகிறதா? அல்லது அப்படியே ஒரு குட்டிக் கரணம் அடித்து முதலீட்டாளர்களின், அதுவும் குறிப்பாக அந்நிய முதலீட்டாளர்களின், நலன்களை உள்ளடக்கிய தனது ஊரறிந்த நவீன தாராளாவாதக் கொள்கைப் பாதையில் தொடர்ந்து செல்லப் போகிறதா? இதுதான் மோடி அரசின் முன் நிற்கின்ற இன்றைய கேள்வி.

மரபணு மாற்றுப் பயிர்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கல் குழு, ((Genetic Engineering Approval Committee GEAC)) 13 மரபணு மாற்ற உணவுப் பயிர்களுக்கு, மிகவும் விநோதமாக, கட்டுப்படுத்தப்பட்டகளப் பரிசோதனைகளுக்கு அனுமதி வழங்கி இருக்கிறது. இதில், கடுகு, கொண்டைக்கடலை, பருத்தி மற்றும் கத்தரிக்காயும் அடங்கும். மரபணு மாற்று கடுகுப் பயிர் மிகக் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்ததும் அதனால் அது கைவிடப்பட்டதும், நம் நினைவில் அப்படியே நிற்கிறது. இது போன்றுதான், மரபணு கத்தரிக்காய் களப்பரிசோதனைக்கும் முதலில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இந்தியா முழுவதும் நடந்த பொது மக்கள் கேட்பறிதலில், விவசாயிகள் கடும் எதிர்ப்பைக் காட்டினர். இதனால் வேறு வழியின்றி, மத்திய சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தது.

மரபணு மாற்று உணவுப் பயிர் களப்பரிசோதனைகளுக்கு, இன்னும் முழுமை யான ஒழுங்குபடுத்தல் கோட்பாடுகள் உருவாக்கப்பட வில்லை. எனவே களப்பரிசோதனைகளுக்கு அனுமதி வழங்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. உண்மையில், இந்த பிரச்சனையை ஆய்வு செய்ய, உச்சநீதிமன்றம், ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழுவை நியமித்திருக்கிறது. களப்பரிசோதனைகளுக்கான ஒழுங்குபடுத்தல் விதிகள் போதுமானவையாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அந்த நிபுணர் குழு, களப்பரிசோதனை களுக்குத் தற்காலிகத் தடை விதிக்குமாறு பரிந்துரை செய்திருக்கிறது. இந்த நிலையிலும்கூட GEAC அனுமதி வழங்கியிருப்பது என்பது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது.

உணவுப் பொருள் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்குவோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டுதான் மரபணு மாற்று உணவுப் பயிர்கள் கொண்டு வரப்படுகின்றன. இதற்கு, உலகின் மற்றைய நாடுகளைப் போலவே, இந்தியாவிலும் பலத்த எதிர்ப்பு எழுந்தன. இந்த எதிர்ப்பு பல வகைகளில் இருந்தன. ஒரு முகாம், இதில் பயன்படுத்தப்படும் அந்நிய மரபணுவை உள்ளடக்கிய தொழில்நுட்பம், மிகவும் ஆபத்தானது என்று கருதி கடுமையாக எதிர்த்தது. ஏனெனில், ஒரு முறை இதைப் பயன்படுத்திய பின், அந்நிய மரபணுவை மாற்றியமைக்கவோ, திரும்பிப் பெறவோ முடியாது.

இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு முறை மரபணு மாற்று உணவுப் பயிர்களை விளைவித்தபின், அது கேடு விளைவிக்கிறது என்று தெரிந்தாலும்கூட, அந்தச் செயல் முறைமைகளைத் திரும்பப் பெற முடியாது. மரபணு மாற்று உணவுப்பயிர்கள், அதன் ஆதரவாளர்கள் உரக்கக் கூவுவதைப்போல், உண்மையில், உற்பத்தியைப் பெருக்குமா? என்ற கேள்வியையும் இவர்கள் எழுப்புகிறார்கள். மரபணு மாற்று உணவுப் பயிர்கள் ஏற்படுத்தப் போவதாகச் சொல்லப்படும் நன்மைகளை விடவும், அது ஏற்படுத்தவிருக்கும் கேடுகள் மிக அதிகமாக இருக் கும் என்பதையும், இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இரண்டாவது விவாதம், நம் உணவுப் பாதுகாப்பைப் பற்றியது. உலகின் மற்றைய நாடுகளைப் போலவே, இந்தியாவிலும், பன்னாட்டு நிறுவனங்களே, குறிப்பாக மான்சாண்டோ, மரபணு மாற்று உணவுப் பயிர்களில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு தேசம் தன் உணவு உற்பத்தியில், விதைகள் மற்றும் இதர உள்ளீடுகளுக்காக, விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருப்பது, அந்த நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யுமா?

மூன்றாவது விவாதம், மரபணு மாற்று உணவுப் பயிர்களின் இந்தியப் பொருத்தப்பாடு பற்றியது. ஏனெனில், இந்திய விவசாயிகளில் பெரும்பாலோர், சிறு நில உடைமையாளர்கள். அதிக மகசூலுக்கு எந்த விதமான உத்திரவாதமுமில்லாத நிலையில், இந்த சிறு நில உடைமையாளர்களை, மேலதிகமான ஆரம்ப காலச் செலவுகளை ஏற்கச் செய்வது என்பது மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும். மஹாராட் டிராவிலும், ஆந்திராவிலும், கடந்த பத்தாண்டு களில் நடந்த மிக மோசமான தற்கொலைகள் ஒரு நிகழ் சாட்சியமாக நம் கண்முன்னே இதைத்தான் கொண்டு வந்து நிறுத்துகிறது. அதுமட்டுமல்ல, மேலதிகமான உற்பத்திச் செலவை ஈடுகட்டும் வகையில் மகசூல் இல்லாததால் ஏற்பட்ட கடன் சுமைகளால் இந்திய விவசாயிகள் சுற்றி வளைக்கப்பட்டனர்.

அடுத்தபடியான தீர்மானகரமான விவாதம், களப் பரிசோதனைகள், பாதுகாப்பு வரைவு உடன்பாடு களுக்கேற்ப ((Protocol)) செயல்படுவதையும், பக்கத்து நிலங்களை நச்சுப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதற்குமான ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற் பார்வைக்கான விதிகள் போதுமான அளவில் இல்லாததையும் நோக்கி எழுந்தது.

இந்தியாவில் இது குறித்த பதிவுகள் & திருப்திகரமாக இல்லை. உண்மையில், விவசாயத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு, களப்பரிசோதனைகளுக்குத் தடை விதித்தது. இதில் அடிப்படை விதி என்னவென்றால், களப்பரிசோதனை நிலங்களைச் சுற்றி 20 சதவீத நிலங்கள் மரபணு மாற்று உணவுப்பயிர்கள் இல்லாத நிலங்களாக இருக்க வேண்டும். சரியான மேற்பார்வை இல்லாததால், மரபணு மாற்றுப் பருத்திப் பயிர் களப்பரிசோதனை நிலங்களில், இந்த விதி பின்பற்றப்படவே இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிய வந்தது.

களப்பரிசோதனைகளின் ஒட்டுமொத்த செயல்பாடுகளின் மீதும், அதன் பாதுகாப்பு, பொருத்தப்பாடு மற்றும் அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால், அதற்கான பொறுப்பையும் கடப்பாடையும் நிர்ணயிப்பது என இவற்றைப் பொறுத்து தன்னதிகாரம் படைத்த ஓர் அமைப்பின் மூலம் கண்காணிக்கச் செய்வதற்கான & வாய்ப்புகள் ஏதுமற்ற நிலையில் இருப்பது, இதன் மீதான இன்னொரு விமர்சனம்.

எந்த தனியார் கம்பெனிகளின் உற்பத்திப் பொருளை மதிப்பீடு செய்ய வேண்டுமோ, அவர்களிடமிருந்தே தரவுகளைப் பெற்று அவற்றை மதிப்பீடு செய்யக் கூடிய நிலையில்தான் G.E.A.C . இருந்தது. எனவே மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்து நிச்சயமான, நம்பத்தகுந்த சோதனைகள் அவசியமாகிறது. இறுதியாக, மரபணு மாற்றுப் பயிர்கள் மற்றும் அதன் மீதான முத்திரைச்சீட்டு ((LABEL)) குறித்து சாதாரண மக்களிடம் விழிப்புணர்வு குறைவாக இருப்பதனால், தனியார் நிறுவனங்கள் அவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லவே இது அனுமதிக்கும்.

இவற்றிற்கெல்லாம் மேலாக, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.விற்குக் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப்பின். இந்தப் பிரச்சனை ஆர்வமூட்டக்குடிய திருப்பு முனையை ஏற்படுத்தி யிருக்கிறது. பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் மரபணு மாற்று உணவுப் பயிர்களுக்கு, தனது எதிர்ப்பை வெளிப்படையாக அறிவித்திருந்தது. மரபணு மாற்று உணவுப் பயிர்களுக்கான எதிர்ப்புக் குழுவில் சுதேசி ஜக்ரன் மன்ஞ் ((Swadeshi Jagran Manch) மற்றும் பாரதீய கிஷான் சங் (Bharathiya Kisan Sangh) கும் இருந்தன. பா.ஜ.க வைப் போலவே இவையும் ராஷ்டிரீய சுயம் சேவக் சங் ((R.S.S) குடன் இணைக்கப் பட்டிருக்கின்றன. இந்த முரண்பாடுகளை, மோடி அரசு எப்படி சமாளிக்கப்போகிறது?.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, மரபணு மாற்று உணவுப் பயிர்களின் பாதுகாப்புத் தன்மை, அதன் பொருத்தப்பாடு குறித்த கேள்விகள், இந்தியாவில் அதனை அறிமுகம் செய்வதைப் பற்றிய ஒரு மனம் திறந்த விவாதத்தைக் கோருகிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாகத் தெரிகிறது. மேலும் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம், ஒரு சில பகாசூரன் கைகளி லேயே முடங்கிப் போவது இன்னும் கவலையளிக்கக் கூடியதாகும். இந்தக் கவலைகளையெல்லாம் போக்காமல், மரபணு மாற்று உணவுப் பயிர்களை அனுமதிப்பது மிக, மிக ஆபத்தானதாகும். மரபணு மாற்று உணவுப் பயிர்களுக்கான பாதையில் இந்தியா, இடையறாத விழிப்புணர்வுடன் பயணிக்க வேண்டும்.

(எக்கானமிக் & பொலிட்டிக்கல் வீக்லி (E.P.W) தலையங்கம் ஜூலை 26, 2014).

Pin It