கடந்த மாதம் 18ஆம் தேதி மரபணுமாற்றப் பயிர்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் GEAC, உணவுப் பயிர்கள் உள்ளிட்ட 13 மரபணு மாற்றுப் பயிர்களை, பாதுகாப்பானதுதானா என்பதை உறுதி செய்திடாத முன்பே, வயல்வெளிகளில் சோதிக்க அனுமதி அளித்துள்ளது. மரபணு மாற்றுப் பயிர்கள் உடல்நலத்தையும், சுற்றுச்சூழலையும், இந்திய வேளாண்மையையும் பல வகைகளில் பாதிக்கும் என்பதால் விவசாயிகளான நாங்கள் இந்த வயல் வெளிச் சோதனைகளை எதிர்க்கிறோம்.

chennai press 600

1. தொலை நோக்குடன் மரபணு மாற்றுப் பயிர்களுக்கும், மரபணு மாற்றுப்பண்டங்களுக்கும் தமிழகத்தில் தடை விதித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

2. மரபணு மாற்றுப் பயிர்களை வயல்வெளிகளில் சோதிக்க அனுமதிக்கக் கூடாதென ஒற்றைக் குரலில் மத்திய அரசைவலியுறுத்திய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

3. வயல் வெளிச் சோதனைகள் என்பது திறந்த வெளியில் செய்யப்படும் சோதனைகள் என்பதால் மனிதர்களின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத சக்திகளான காற்று, தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள் போன்றவற்றின்மூலம் மரபணு மாற்றுப் பயிர்களின் மகரந்தத்தூள்கள் பிற உணவுப் பயிர்கள், செடிகளில் கலப்படம் ஆவதைத் தடுக்க இயலாது.

4. இத்தகு மரபணுக் கலப்படங்கள் திறந்தவெளி வயல் வெளி சோதனைகளின்போது உலகின் பல பகுதிகளிலும் நடந்துள்ளது. அமெரிக்காவில் மரபணு மாற்று நெல் மற்றும் கோதுமை சோதனைகள் நடந்து முடிந்து பல ஆண்டுகள் கழித்து மரபணுக் கலப்படம் நடந்துள்ளதைக் கண்டறிந்ததும் அதனால் அந்தப் பகுதி விவசாயிகள் பெருத்த அளவில் நட்டப்பட்டதும் உலகு அறிந்தசெய்தி.

5.இந்தியாவில் வயல் வெளிச் சோதனைகளுக்காக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள பயிர்களும் இனி வரவுள்ளவையும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், பிற உயிரினங்களுக்கும் இயற்கைச் சூழலுக்கும் பாதிப்பில்லாதவை என்பது உறுதி செய்யப்படாதவை.

6. உச்ச நீதிமன்றம் தன்முன் உள்ள மரபணுமாற்றுப் பயிர்கள் குறித்த வழக்கில் தனக்கு ஆலோசனை அளிக்க அமைத்த தொழில்நுட்ப வல்லுநர் குழு அளித்த அறிக்கையில் இந்தியாவில் மரபணு மாற்றுப்பயிர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்குரிய ஆய்வுக்கூடங்கள் இல்லை. அத்தகு ஆய்வுகளைச் செய்திடும் அறிவியல் வல்லுநர்களும் இல்லை. அத்தகு ஆய்வகங்களும் வல்லுநர்களும் உருவாக்கிய சோதனைகளை நடத்தி பாதுகாப்பானதுதான் என்பதை அறிந்த பின்னரே இத்தகு வயல் வெளிச் சோதனைகளை அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

7. கடந்த நாடாளுமன்றத்தின் வேளாண்மைக்கான நிலைக்குழுவானது ஒருமித்த குரலில் இந்தியாவிற்கு மரபணு மாற்றுப் பயிர்கள் தேவையில்லை என்றும் வயல்வெளிச் சோதனைகளைத் தடைசெய்ய வேண்டும் என்றும் இந்திய அரசிற்குத் தெரிவித்துள்ளது.

8. மரபணு மாற்றுப் பயிர்களில் திணிக்கப்பட்டுள்ள மரபணுக்கள் அந்தந்த நிறுவனங்களின் சொத்து என்று காப்புரிமை பெறப்பட்டவை. அத்தகு மரபணுக்கள் விவசாயிகளின் பயிர்களுடன் மரபணுக் கலப்படம் நடந்துவிட்டால் இந்திய விவசாயிகளின் விதைத் சுதந்திரமும், உரிமையும் அந்த விதை வணிக நிறுவனங்களிடம் சிக்கிவிடும்.

தார்வாட் விவசாயப்பல்கலைக் கழகம் உருவாக்கிய பி.டி. பிகநேரி பருத்திப் பயிரில் மான் சான்டோவின் மரபணு எப்படியோ கலப்படம் ஆனது. இப்படித் தனக்குச் சொந்தமான மரபணு பி.டி. பிகநேரில் இருப்பதை எதிர்த்து வழக்கும் தொடுத்தது. அந்தத்திட்டம் இறுதியில் நிறுத்தப் பட்டது.

9. ஏற்கெனவே இந்தியாவின் பருத்தி விவசாயத்தில் உள்ள பருத்தி விதையில் 96 விழுக்காடு மான்சான்டோவின் காப்புரிமை விதைகளாகவே உள்ளது. விவசாயத்தின் ஆணிவேராக இருக்கும் விதைகள் ஓரிரு விதை நிறுவனங்களிடம் சிக்கிக் கொள்வது இந்திய விவசாயத்திற்கு ஆபத்தானதாகும். மேலும் இப்படி இந்தியப் பருத்தி முழுதும் மான்சான்டோவின் பருத்தியாக மாறியதால், சுதேசியத்தின் அடையாளமாக உருவாக்கப்பட்ட இந்திய தேசியக் கொடிகூட இன்று மான்சான்டோவின் பருத்திக் கொடியாக மாறிவிட்டது.

10. பா.ஜ. கட்சி 2014 நாடாளுமன்றத்தேர்தல் அறிக்கையில், ‘மனிதர்களுக்கும், கால்நடை களுக்கும், இயற்கைச் சூழலுக்கும் எவ்விதப் பாதிப்பும் இருக்காது என்பதை முழுமையான அறிவியல் ஆய்வுகள் மூலம் அறிந்த பின்னரே மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று உறுதி யளித்திருந்தது. தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி கொடுத் தார். அவர் தனது வாக்குறுதியை செயல்படுத்திக் காட்டியுள்ளார். பா.ஜ.க. செய்யுமா?

11. ஆனால் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் மாண்புமிகு. பிரகாஷ் ஜவடேகர் அவர்களின் ஆழ்கிணற்று மௌனம், மரபணு மாற்றுப் பயிர்கள் வயல் வெளிச் சோதனைகள் பிரச்சனை குறித்து முந்தைய சுற்றுச் சூழல்அமைச்சர்களான திரு. ஜெய்ராம் ரமேஷ் மற்றும் திருமிகு. ஜெயந்தி நடராஜன், அறிவியல்பூர்வமாக அனுமதி அளிக்க மறுத்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட கதி அவரது வாயைப் பூட்டிவிட்டதோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

12. இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த பல்வேறு வயல்வெளிச் சோதனைகளின்போது அந்தச் சோதனைகளை நடத்திய விதமும் அதில் ஏற்பட்ட பல விதி மீறல்களையும் சுட்டிக் காட்டிய பின்னரும் மரபணு மாற்று அனுமதிக் குழு எவ்வித நடவடிக்கையும் தவறு செய்யதவர்களின் மீது எடுக்கவில்லை.

இதுபோன்ற பல காரணங்களால், அறிவியல் உண்மைகள் தெரிவிக்கும் அதிர்ச்சியான உண்மைகளால் இந்தியாவில் மரபணு மாற்றுப்பயிர்களுக்கு வயல்வெளிச் சோதனைகள் நடத்தவும், மரபணு மாற்றுப்பண்டங்களை இறக்குமதி செய்யவும் அனுமதி அளிக்கக் கூடாதென மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு.

தமிழக இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு,

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு,

தாளாண்மை உழவர் அமைப்பு,

ஐக்கிய விவசாயிகள் சங்கம்,

இந்திய விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பு தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும்  உழவர் உழைப்பாளர் கட்சி,

தமிழக விவசாய சங்கங்கள்,

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு,

மற்றும் பல அமைப்புகள்.

Pin It