இன்று நாடு முழுக்க மரம் வளர்ப்பது “Fashion” ஆக மாறியுள்ளது. ‘வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்’, ‘மரம் வளர்த்தால் நாடு செழிக்கும்’ என்ற முழக்கம் விண்ணை முட்டுகிறது. மடாதிபதிகளில் துவங்கி, நகைச்சுவை நடிகர், அரசியல்வாதி, பெரும் தொழில் நிறுவனங்களிலிருந்து கடைக் கோடி மனிதன் வரை, ‘மரம் வளர்த்தல்’ என்பது ஓர் அழகுச் சொல்லாகவும், பெருமைக்குரியதாகவும், மதிப்பிற்குரியதாகவும் மாறி அனைவராலும் முன்னிறுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கில் துவங்கி, லட்சக்கணக்கில் மரம் நடப்படுவதாக ஊடகங்கள், செய்தித்தாள்களில் விளம்பரம் வெளிவருவதை சமீபகாலங்களில் அடிக்கடி காணமுடிகிறது.

ஊடகச் செய்திகளுடன் ஒப்பிடும் போது, தமிழகம் பச்சைப்பட்டு விரித்தாற்போல் பசுமையாகக் காட்சியளிக்கிறதா? என்ற கேள்வி சட்டென எழுகிறது. ஆனால், உண்மை இதற்கு நேர் எதிராகவே உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளைக் கடந்த நிலையில், காடுகளின் பரப்பளவு வெகுவாகக் குறைந்துள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. விளைநிலங்கள், மக்கள் குடியேற்றம், வளர்ச்சித் திட்டங்கள், மின் திட்டங்கள், அணைக்கட்டுகள், தொழில் நிறுவனங்கள் தொடங்க என பலப்பல காரணங்களால் காடுகளின் பரப்பளவு வெகுவாகக் குறைந்து வருகிறது.

சமீப ஆண்டுகளில் விளைநிலங்கள், கிராமங்களுக்கு தொடர்ந்து வரும் யானைகள், சமீபத்தில் ஊட்டியில் மூன்று பேரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டி, சுட்டுக் கொல்லப்பட்ட ஆண்புலி, ஊருக்குள் நுழையும் சிறுத்தைகள் என பலப்பல நிகழ்வுகளே, காடுகளின் பரப்பளவு குறைந்து போனதற்கு நம்முன் உள்ள மௌன சாட்சிகளாகும். காடுகளின் பரப்பளவு குறைவதற்கும், மரம் நடுவதற்கும் ஏதேனும் ஒற்றுமை உள்ளதா? என்றால், நிறையவே உள்ளது எனலாம்.

முதலாளித்துவ உற்பத்தி முறை மனிதனின் உழைப்பை மட்டுமின்றி, இயற்கை வளங்களையும் சுரண்டும் தன்மை கொண்டது. ஏகாதிபத்தியம் உலகைக் சூழ்ந்த வேளையில், முதலாளித்துவத்தின் இயற்கை வளங்களின் சுரண்டல் குறித்தான காரல் மார்க்ஸின் கூற்று இங்கு நோக்கத்தக்கது:

‘முதலாளித்துவ உற்பத்தி முறை மனிதனுக்கும், இயற்கைக்குமான ஒத்திசைவைச் சிதைக்கிறது. மனிதன் மண்ணிலிருந்து பெறுவனவற்றை மண்ணுக்கே, திரும்பத் தரும் மரபைத் தடுக்கிறது. இதன் மூலம் காலங்காலமாக நிகழ்ந்து வந்த இயல்பான இயற்கைச் சுழற்சியைத் தடுக்கிறது. முதலாளித்துவ வேளாண்மை விவசாயியைச் சுரண்டியது மட்டுமின்றி மண்ணையும் களவாடுகிறது.

மண்ணை மீள முடியாத பேரழிவிற்கு உள்ளாக்கி உள்ளது. முதலாளித்துவ வேளாண்மை சமூகத்தின் அடித்தளமான மண்ணையும், மக்களையும், படிப்படியாகச் சிதைக்கும் நுட்பங்களையே உருவாக்கிக் கொண்டுள்ளது. முதலாளித்துவம் மனிதனின் உடல் நலம் குறித்தோ, வாழ்நாள் குறித்தோ, சமூக நிர்ப்பந்தம் உருவாகாதவரை எவ்வித அக்கறையும் கொள்வதில்லை’ என முதலாளித்துவத்தின் தொழில் உற்பத்தி முறையின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறார்.

இந்தியாவில் 60களில் முன்னெடுக்கப்பட்ட பசுமைப் புரட்சிக்குப் பிந்திய சில பத்தாண்டுகளில், அதன் உண்மை முகத்தை விவசாயிகள் புரிந்து கொண்டனர். வாழ்வும், மண்ணும் மீள முடியாத பேரழிவிற்குச் சென்ற பின், பலர் தற்கொலை செய்துகொண்டனர். மூன்றாம் உலக நாடுகளிலுள்ள இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், மலைகள் ஆகியவற்றைக் கவர்வதற்காகப் பல்வேறு ‘வளர்ச்சித் திட்டங்களை’ அந்தந்த நாட்டு அரசின் ஒத்துழைப்புடன் பன்னாட்டு, உள்நாட்டுப் பெருநிறுவனங்கள் முன்னெடுக்கின்றன. ‘வளர்ச்சி’ என்ற மாயையில் வீழ்ந்த மூன்றாம் உலக நாடுகளின் உழைக்கும் மக்களும் தங்களது வாழ்வாதாரமான இயற்கை வளங்களைத் தொடர்ந்து இழந்து வருகின்றனர்.

இதனுடைய உச்சத்தைத் தான் தமிழகம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் பெருவாரியான அடித்தட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆப்பிரிக்கா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளும் இந்நிலையிலிருந்து தப்பவில்லை.

இதன் மறுமுகமாகவே, மரம் வளர்த்தலைக் காண வேண்டியுள்ளது. ஒருபுறம் இயற்கை வளமான காட்டை அழிப்பது, மறுபுறம் பிரபலங்களின் உதவியுடன் மரம் வளர்த்தலின் நன்மையை மக்களுக்குப் போலியாக உணர்த்துவது என்ற இரட்டை நிலையை அரசுகள் பின்பற்றுகின்றன. அதன் பிரதிபலிப்புதான் இன்று நாடு முழுவதும் ‘மரம் நடுவதை’ முன்னெடுப்பது, விழாக்களாகக் கொண்டாடுவது என “Fashion”ஆக உருமாறிவரும் பின்புலத்திலுள்ள பேருண்மையைப் புரிந்துகொள்வோம்.

இன்று மரம் நடுவதை முன்னிறுத்தும் நூறு பேரில் ஒருவராவது, காடுகளின் அழிவிற்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்களா? என்பதைப் பார்க்கும்போது, இதிலுள்ள உள்நோக்கம் புரியவரும்.

இயற்கை வளங்களான காடுகள், நீர்நிலைகள், மலைகள் யாவும் தனியார் மயமாக்கப்படும்போதும், பேரழிவிற்குள்ளாகும்போதும், போராட முன்வராமல், ‘மரம் நடுவது’ என்ற குரல் யாருக்கானது? என்பதை உழைக்கும் மக்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இந்நிலையில், மரம் வளர்த்தலை தன்னலமற்ற சூழலில் முன்னெடுத்தவர்கள், சமூக மாற்றத்திற்காகப் பயன்படுத்தியவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் குறித்தும், இயற்கை வேளாண்மை, காடு வளர்ப்பில் சாதனை படைத்த நாடு குறித்துத் தெரிந்து கொள்வதும் தேவையாகிறது.

பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில், ஆட்டிடையர் ஒருவர் ஆடுகளை மேய்க்கும் போது, தன் கையிலிருக்கும் நீண்ட தடியால் குழியை ஏற்படுத்தி, அதில் ஒரு மர விதையைப் போட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டு, மொட்டையாகக் காட்சியளித்த மலைகளைப் பசுமை போர்த்தியக் காடுகளாக மாற்றிக் காட்டினார். இதனைத் தனது வாழ்நாள் முழுக்கத் தனியரு மனிதராகச் செயல்படுத்திக் காட்டினார்.

பொள்ளாச்சியில் வாழ்ந்த ஆங்கில அதிகாரியான ஹ்யூகோ வுட் தமிழகத்தின் ‘மரம் வளர்த்தவர்’ என்ற பெருமைக்குரியவர். ஹ்யூகோ வுட் தான் செல்லும் இடங்களில் எல்லாம் நீண்ட தடியால் தரையில் துளையிட்டு மர விதைகளை நட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரின் சீரிய பணியால் இன்றளவும் மேற்குத் தொடர்ச்சிக் காடுகள் ஓரளவிற்குக் காப்பாற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.

கென்ய பெண்மணியும், நோபல் பரிசு பெற்றவருமான வங்காரி மாத்தையின் மரம் நடுவை, உலகளவில் பேசப்பட்ட ஒன்றாகும். சமாதானத்திற்கான குறியீடாகவும், உழைக்கும் மக்களின் மேம்பாட்டிற்கான வழியாகவும் மரத்தை முன்வைத்து, தனது வாழ்நாளில் கோடிக்கணக்கான மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளார்.

சென்னைக்கருகிலுள்ள எண்ணூரில் வசிக்கும் நேபாள முதியவர் பகதூர் இராணாவின் தன்னலமற்ற செயல்பாடும் குறிப்பிடத்தக்கது. தனது இளமைக் காலம் முதல் யாருடைய உதவியுமின்றி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்துள்ளார். கோவையைச் சேர்ந்த யோகநாதன் போன்றவர்களின் செயல்பாடுகளும், ‘மரம் வளர்த்த’லுக்கு முன்மாதிரியாகவே உள்ளது.

தனிநபர்களாக ‘மரம் நடுவதில்’ சாதனை படைத்தவர்கள் மட்டுமின்றி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான, குட்டி சோசலிச நாடான கியூபாவின் இயற்கை வேளாண்மை, காடு வளர்ப்பும் முக்கியத்துவம் பெற்றது. 1959இல் சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ என்ற இருபெரும் தலைவர்களின் மாபெரும் புரட்சியால், அடிமைத்தளையில் இருந்து கியூபா விடுதலை அடைந்தது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால், சோவியத் ருசியாவின் உதவியுடன் நாடு முன்னேற்றப் பாதையில் நடை போடத் தொடங்கியது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின், இரசாயன உரங்கள், டிராக்டர் போன்ற செயற்கை விவசாயத்திற்கு விடை கொடுத்த கியூபா, இயற்கை வேளாண்மையின் பக்கம் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தது. இங்கு தான், கியூபாவின் மக்கள் நலனுக்கான ‘பசுமைப் புரட்சி’யான, ‘இயற்கை வேளாண்மைப் புரட்சி’யை பிடல் காஸ்ட்ரோ முன்னெடுத்து, வெற்றி பெற்றுக் காட்டினார்.

நகர்ப்புற விவசாயத்தை முன்னெடுத்து, காய்கறி மற்றும் உணவுப் பயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. மண் வளத்தைக் காக்க, ‘மண்புழு உரத்தை’ மீண்டும் மண்ணுக்குக் கொடுக்க ஆரம்பித்தது. 1987இல் 20,000 மெட்ரிக் டன்னாக இருந்த மண்புழு உர உற்பத்தி, 1992இல் 95,000 மெட்ரிக் டன்னாக மாறியதிலிருந்து கியூபாவின் இயற்கை வேளாண்மையின் தீவிரம் வெளிப்படுகிறது. (ஒரு டன் மண்புழு உரம், 4 டன் சாண உரத்திற்கு ஈடானது) 90 நாட்களில் குப்பையையும், சாணத்தையும் செறிவூட்டும் பணியை மண்புழுக்கள் செய்கின்றன என்ற பேருண்மை, மக்களுக்கு அவர்களது மொழியில் எளிமையாகப் புரிய வைக்கப்பட்டது.

பூச்சிகளைக் கொல்ல இரசாயன உரங்களை உபயோகிக்காமல், பூச்சிக்கட்டுப்பாடு இயற்கை நிலைக்கு மக்களை பிடல் காஸ்ட்ரோ திருப்பினார். பயிர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு பாரம்பரிய முறையுடன், அறிவியல் நுட்பத்தை பயன்படுத்திக் கட்டுப்படுத்தினார்கள் கியூப நாட்டு மக்களுக்கான விஞ்ஞானிகள். களைக்கட்டுப்பாட்டிலும் பாரம்பரிய முறை ஊக்குவிக்கப்பட்டது. மனித ஆற்றல் சரியான நிலையில் முழுமையாக இயற்கை வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டது.

1989ஆம் ஆண்டிற்குப் பிறகான கால கட்டத்தில், ஓரின காடு வளர்ப்பால் ஏற்படும் மண் வள இழப்பு, மண் அரிப்பு போன்ற சூழல் சீர்கேடுகளை உணர்ந்த கியூபாவின் பிடல் அரசாங்கம் உடனடியாக அம்முறையை நிறுத்தி, இயல்பான தாவரங்களை வளர்த்து பல புதிய காடுகளை உருவாக்கியது.

கியூபாவின் விடுதலைப் போராட்டத்தை முதன் முதலாக முன்னெடுத்த ஹோசே மார்த்தி, ‘மரமற்ற பகுதி, வளமற்ற பகுதி. மரமில்லா நகரம், நோயுற்றுப் போகும், வளமற்ற நாடு பாலைவனம். அங்கு நச்சுக் கனிகளே வளரும்’ என எச்சரித்திருந்தார். இதனை சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகே கியூபா உணர்ந்திருந்தது. அதனடிப்படையில் இயற்கையான காடு வளர்ப்பிற்கும், இயற்கை வேளாண்மை பக்கமும் மக்களை பிடல் காஸ்டரோ பயிற்றுவித்தார்.

1959ஆம் ஆண்டு கியூப புரட்சியின்போது 14 விழுக்காடாக இருந்த காடுகளின் பரப்பளவு, பிடலின் முயற்சியின் பயனாக 20 விழுக்காடாக மாறியது. காடுகளின் தேவையை உணர்ந்த பிடல், தனது முன்மாதிரியான ‘மனாட்டி திட்டம்’ மூலம் புதிதாக 7 லட்சம் எக்டேர் பரப்பளவுள்ள காடுகளை மக்கள் ஒத்துழைப்புடன் உருவாக்கி உலக வரலாற்றில் ‘பசுமை சாதனை’ புரிந்தார். காடுகளின் சூழல் மதிப்பு/களையும், பயன்களையும் மக்களுக்குப் பயிற்றுவித்து, அவற்றைக் காப்பதில் அவர்களை முழுமையாக ஈடுபடுத்தினார்.

தன்னலமற்று மரம் வளர்த்தவர்களும், மக்களுக்கான வாழ்வாதாரத்திற்காகவும், சமூக மாற்றத்திற்கான குறியீடாகவும், உழைக்கும் மக்களின் அடிப்படை ஆதாரமாகவும் மட்டுமின்றி கியூபாவின் இயற்கை வேளாண்மையும், காடு வளர்ப்பும் நமக்கு முன் வரலாறாக உள்ளன. இன்று நம்மிடம் உள்ள கேள்வி, இயற்கையாக உள்ள காடுகளின் பரப்பளவு குறைந்து கொண்டு போகும்போது, மரம் வளர்த்தலைப் பேசுவது தீர்வாக அமையுமா? இயற்கையாக உள்ள காடுகளின் பரப்பளவு உயர்த்தப்படுதல் அவசியம். ஓரினப் பயிர் வகைகள், அயல் தாவரங்கள் வளர்ப்பதைத் தவிர்த்து, இயல்பான தாவர வகைகளை வளர்ப்பதை ஊக்குவித்தல் இன்றைய தேவையாக உள்ளது.

காடுகளின் பரப்பளவை அதிகரித்தால் மட்டுமே, இன்று நிலவும் பல சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும். யானைகள், புலிகள், சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்தது, பயிர்கள் நாசம் என்று காட்டுயிர்களின் மேல் குற்றச்சாட்டை வாசிக்கத் தேவையில்லை.

மழைக்காடுகள், நீர்நிலைகள், ஈரநிலங்கள் (சதுப்பு நிலங்கள்) செழிப்பது, காட்டுயிர்களின் சிக்கலற்ற வாழ்வுடன் பிணைந்துள்ளதுடன், சூழலின் சமத்தன்மை காக்கப்படும். மேலும், உணவுச் சங்கிலியின் பிணைப்பும் பேணப்படும்.

மரங்கள் நடுவதை ஊக்கப்படுத்தும் அதே வேளையில், இயற்கையாக உள்ள காடுகளைக் காக்க அணி திரள்வோம். காடுகளைக் காப்பாற்றினால் மட்டுமே, காடுகள் மனித சமூகத்தைக் காக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.

மரம் நடும் விழாக்களையும், போலி பிம்பங்களையும் புறந்தள்ளுவோம். உண்மைக்கு ஆதரவாக ஒன்று திரள்வோம்.

தரவு நூல்கள்

0.1 காட்டுயிர் இதழ் எண்:31, குளிர் 2006.

Pin It