முனைவர் எம்.வி ரமணா பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் நியூக்ளியர் ப்யூச்சர்ஸ் லபோரட்டரியில் இயற்பியல் வல்லுனராக பணிபுரிகிறார். அணு சக்தி பற்றி பல்வேறு அறிவியல் கட்டுரைகளை எழுதியவர். அணுசக்தியின் புவியியல் அடிப்படையிலான அரசியல் குறித்தும் அதன் மாறும் தன்மை குறித்தும் தொடர்ந்து பேசிவருபவர். 2012ல் பெங்குயின் வெளியீடாக இவரது முதல் புத்தகமான தி பவர் ஆப் பிராமிஸ் வந்திருக்கிறது. தனது புத்தகத்தை வெளியிடவும் அது குறித்து உரையாடவும் அவர் சென்னை வந்திருந்தார்.

அவருடன் நித்யானந்த் ஜெயராமன் நிகழ்த்திய உரையாடலிலிருந்து சில பகுதிகள்.

நித்தி       : உங்கள் புத்தகத்திற்கு சுவாரஸ்யமான தலைப்பு கொடுத்திருக்கிறீர்கள். தி பவர் ஆப் பிராமிஸ். தமிழகத்தைப் பொறுத்தவரை மின் துறையைப் பொறுத்தவரையில் நிறைவேற்றப்படாத வாக்குறுதி களைப் பற்றி நாங்கள் நன்றாகவே அறிவோம். இந்த தலைப்பின் மூலம் நீங்கள் சொல்ல வரும் விஷயம் என்ன?

எம்.வி.ஆர் : புத்தகத்தை எழுதி முடித்த பிறகுதான் தலைப்பு உருவானது. அப்போது நான் இந்தியாவில் அணு சக்தியின் வரலாற்றை வாசித்துக் கொண்டிருந்தேன். இந்தியாவில் அணுசக்தி துறை ஆரம்பித்ததிலிருந்து கடந்த 70 வருடங்களாக அணு நிறுவனம் அணு சக்தி வருங்காலத்தில் மின்சார தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதி முக்கிய பங்கு வகிக்கப் போவது பற்றி பல வாக்குறுதிகளை கொடுத்து வருகிறது. இந்த வாக்குறுதிகள் எல்லாம் எதிர்காலத்துக்கானவை. அவற்றில் ஒன்றும் நிறைவேற்றப் பட்டதில்லை. ஆனால் வருங்காலத்தில் நிறைய மின்சாரம் உற்பத்தி செய்யப் படும் என்று வாக்குறுதி அளிப்பதன் மூலம் அணு சக்தித் துறைக்கு மற்றும் அது மேற்கொள்ளும் அணு நடவடிக்கைகளுக்கு அரசியல் தலைமையின், நாட்டின் முக்கிய மானவர்களின் ஆதரவு கிடைக்கும். அதுவும் இன்னொரு வாக்குறுதியோடு இயைந்தது.

இங்கு வாக்குறுதிகள் இரண்டு விதங் களிலானவை. ஒன்று, வருங்காலத்தில் நிறைய மின்சாரம். இன்னொன்று அணு ஆயுதங்களின் மூலம் பாது காப்பை நிறுவுவது தொடர்பானது. வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம் பாட்டுக்குத் தேவை என்று அவர்கள் நினைக்கும் அதிக அளவிலான மின்சாரப் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு வழங்கும் அணுஆயுதங்கள் என மேல்தட்டு வர்க்கத்தின் இரண்டு விதமான விழைவுகளை, இரண்டு விதமான வாக்குறுதிகளை வழங்கும் ஒரு தனித்துவமான தொழில்நுட்பமாக அணு சக்தித் துறை இருக்கிறது. அப்படிப் பார்க்கும் போது மிக அதிக அளவிலான உற்பத்தி, மிக அதிக அளவிலான பயன்பாடு, மிக அதிக அளவிலான அழிவை உருவாக்கும் திறனை அணு சக்தி உருவாக்கியிருக்கிறது, அது மிகவும் தனித்துவமானது. இந்த வாக்குறுதிகளின் மூலம்தான் அணு நிறுவனத்திற்கு அதன் அரசியல் அதிகாரம் கிடைக்கிறது.

நித்தி       : இந்த ஒட்டுமொத்த திட்டத்தோடு ஒரு பிணையை ஏற்படுத்திக்கொள்ள அணு நிறுவனம் கடைபிடிக்கும் ஒரு வழி, அதன் மூன்று கட்ட திட்டம். உங்களது புத்தகத்தைப் படிக்கும்போது அது இப்போதும் எப்போதும் தொடங்கப் படாத ஒன்றாகவே இருக்கும் என்று தெரிகிறது. மூன்று கட்டத் திட்டம் பற்றியும் அது ஏன் நிறைவேறாது என்பது பற்றியும் விரிவாக சொல்ல முடியுமா?

எம்.வி.ஆர் : அது தொடங்கப்படாது என்று நான் நினைக்கவில்லை. அது ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது ஆனால் அது பயன் தராது. இந்த மூன்று கட்ட திட்டம் முதன் முதலில் அணு சக்தித் துறையால் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் அதன் நிறுவனர் ஹோமி பாபாவால் முன் வைக்கப் பட்டது. அவர் முதன்முதலில் 1954ல் இது பற்றி பேசுகிறார். மிகச்சிறந்த இயற்பியல் வல்லுனராக அறியப்பட்ட மேக்நாத சஹாவுடன் நடந்த ஒரு நாடாளுமன்ற விவாதத்தின் போது அதை முன்வைத்தார். சஹா அப்போது அமைக்கப்பட்டிருந்த அணு நிறுவனத் தின் மீது விமர்சனங்களையும் கொண்டி ருந்தார். இந்தியாவில் நிறைய இருக்கும் தோரியத்தைப் பயன்படுத்த விரும்பினார் பாபா. அந்த தோரி யத்தைப் பயன்படுத்தி அணு சக்தி உருவாக்குவதுதான் அவரது எண்ணம். அந்த எண்ணத்திற்கும் வாக்குறுதி களுக்கும் தொடர்பு இருக்கிறது.

அடிப்படையான பிரச்னை என்ன வென்று நான் சொல்கிறேன். நிறைய அளவில் அணு சக்தியை உற்பத்தி செய்ய வேண்டுமென்றால், நிறைய யுரேனியம் வேண்டும். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் நிலப்பரப்பைப் பொறுத்தவரையில் யுரேனியம் குறைந்த அளவிலேயே இருந்தது. குறைந்த அளவே இருக்கிறது என்று சொல்லும்போது நான் அதன் தரம் சார்ந்து, அதை தோண்டி எடுப்பதிலுள்ள பொருளாதார லாபங்களைச் சார்ந்து சொல்கிறேன். யுரேனியம் நிறைய இருக்கிறது. உங்கள் வீட்டு பின்னால் கூட இருக்கும். ஆனால் உங்கள் வீட்டின் பின்னாலுள்ள மொத்த இடத்தையும் தோண்டினாலும் கிடைக்கும் யுரேனியும் சில கிராம்களே இருக்கும். அதனால் பயனில்லை. ஓரளவு நல்ல தரமுள்ள யுரேனியம் இந்தியாவில் குறைந்த அளவே இருக்கிறது.

இப்போது அணு சக்தி என்பது மின்சாரத்தின் மிகப்பெரிய ஆதாரம், அதையும் உள்நாட்டில் இருக்கும் மூலப் பொருட்கள் வைத்து உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் யுரேனியத்தை நம்ப முடியாது. இந்தியாவில் நிறைய தோரியம் இருந்தது. அதே நேரம் உலகெங்கும் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் யுரேனியம் குறைவாக இருப்பதாகவும், நிறைய அளவில் கிடைக்கும் தோரியத்தை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்றும் நினைத்தன. அதை செய்ய மூன்று கட்ட திட்டத்தை உருவாக்கின.

இதன் முதல் கட்டமாக, இயற்கையாக கிடைக்கும் யுரேனியத்தை கனநீர் அணு உலைகளின் மையத்தில் வைப்பது. இந்த அணு உலைகளில் டியுட்ரியம் உள்ள தண்ணீருடனான கலப்பில் நியூட்ரான்களின் செயல்பாடு மந்தமாகின்றது. இந்த டியுட்ரியம் மிகத் திறமையாகவே நியூட்ரான்களை மந்த மாக்குகின்றது. இப்போது யுரேனி யத்தின் இன்னொரு உட்கருவுடன் மோதி அணுக்கரு பிளவை உண்டாக்கும். இதுதான் அணு உலைகளின் முதல் கட்டம்.

இரண்டாவதாக, அணுக் கழிவை எடுத்து அதை மறு முறை ஓர் ஆலையில் வைத்து பதப்படுத்துவது. இந்த ரசாயன ஆலையில் புளுடோனியத்தை பிரிப் பதற்கான முயற்சிகள் நடக்கும். இந்த புளுடோனியம் இரண்டாம் கட்டமாக ஈனுலை என்று அழைக்கப்படும் உலைகளில் எரிபொருளாக பயன் படுத்தப்படும். ஈனுலைகளின் மையமாக புளுடோனியம் இருக்கும். புளுடோனி யம்தான் அணுக்கரு பிளவை மேற் கொள்ளும். பிறகு அது யுரேனியத் தாலோ புளுட்டொனியத்தாலோ சூழப்படும். அவை நியூட்ரான்களை உள்வாங்கும். அந்த நியூட்ரான் மறு படியும் புளுடோனியமாகவோ யுரேனியமாகவோ யுரெனியம் 233 யாகவோ மாற்றப்படும். தேவையான அளவு யுரேனியம் 233 உற்பத்தி செய்தால், தோரியம் மற்றும் யுரேனியம் 233யை மையமாக கொண்ட அணு உலைகளைப் பற்றி யோசிக்கலாம். இதுதான் பாபா சொன்ன மூன்று கட்டத் திட்டம்.

இந்தத் திட்டத்தின் பிரச்சனை இரண்டாம் கட்டத்தில் இருக்கிறது. இரண்டாவது கட்டத்தில் ஈனுலைகள் வருகின்றன. மிக அடர்த்தியான, உள்ளமைவில் மிகத் தீவிரமாக பிளவு ஏற்படுத்தக்கூடிய புளுட்டோனியத்தை பயன்படுத்துகிறோம் என்பதால், மிக குறைந்த தொகுதியில் மிக அதிக அளவிலான சூடு உருவாகும். இந்த சூட்டை அணு உலையில் ஒழுங்கமைக்க உலோகங்களைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீரையும் இழக்க முடியாது. இதுதான் உலகெங்கிலும் அணு உலைகளில் உள்ள பெரிய பிரச்சனை.

ஈனுலைகளில் இன்னொரு பிரச்சனை அவற்றில் பேரழிவு உண்டாகும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதுதான். இந்த காரணங்களால் ஈனுலைகள் அதிக விலையிலானவை... இதனால் ஈனுலைகள் பற்றி அதிகம் நினைத்த நாடுகள் கூட அதை கைவிட்டுவிட்டன. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளும் அடக்கம். இப்போதைக்கு இந்தியா, ரஷ்யா அப்புறம் ஓரளவுக்கு சீனாவும் இந்த ஈனுலைகளில் ஆர்வம்காட்டும் நாடுகள். இந்த கட்டத்தை முழுமையாக கடந்துவிட்டாலும் அதன் பிறகு தோரியம் பிரச்னையை சந்திக்கவேண்டி வரும்.

இரண்டாவது கட்டத்தில் யுரேனியத்திற்கு இருந்த அத்தனை பிரச்சனைகளும் தோரியத்துக்கு உண்டு. யுரேனியத்தைப் பொறுத்த வரையில் அது யுரேனியம் 233 உற்பத்தி செய்யப்படுகிறது. அது, யுரேனியம் 232 என்கிற மாசுபொருளோடு வருகிறது. அந்த மாசுபொருளின் கதிரியக்கத் தன்மை மிக அதிகம். அதை எரி பொருளாக மாற்றக்கூட பாதுகாப்போடு செய்ய வேண்டும். அதற்கு அதிக பொருட்செலவும் ஆகும். அதனால் இப்போது இருக்கும் ஈனுலைகளை விட தோரியம் அதிக விலை ஆகும் என்று நான் நினைக்கிறேன்.

நித்தி       : ஆனால் கல்பாக்கத்தில் ஈனுலை வருகிறது.

எம்.வி.ஆர் : ஆம். நான் அதைப் பற்றி பேசுகிறேன்.

நித்தி       : சரி சிறிது நேரத்தில் பேசுவோம். இப்போது இந்தியாவின் அதிகாரம் மிக்கவர்கள், பிரதமர் போன்றவர்கள், 2052க்குள் அணு சக்தியின் மூலம் 2,75,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இது சாத்தியமா என்கிற கேள்வி இல்லாமல் பலரும் இதை பிரசுரிக் கிறார்கள். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? புத்தகத்தில் என்ன சொல்கிறீர்கள்?

எம்.வி.ஆர் : நான் முன்பே சொன்னது போல இது போன்ற வாக்குறுதிகள் இதற்கு முன்பும் பல முறை அளிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு முறையும் நிறைவேற்றப்பட வில்லை. 2052க்குள் 2,75,000 மெகாவாட் என்கிற கருத்து 2000த்தின் ஆரம்பங்களில் உருவானது. சமீப காலங்களில் அது 4,70,000ஆக அதிகரித் திருக்கிறது. அணு உலையில் ஏற்கனவே இருக்க கூடிய பிரச்சனைகள் தவிர்த்து, இந்த குறிப்பிட்ட குறிக்கோளில் ஒரு சிறப்பு பிரச்சனை இருக்கிறது.

இந்த எண்ணிக்கை அதிக அளவிலான ஈனுலைகளின் அடிப்படையிலானது. இந்த ஈனுலைகளில் முன்பே சொன்னது போல பல பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த பிரச்சனைகளை எல்லாம் ஒதுக்கி விட்டாலும், இந்த ஈனுலைகளில் செலவு செய்யுமளவுக்கு பணம் இருக்கிறது என்றே வைத்துக் கொண்டாலும் இந்தக் கணக்கில் ஒரு சிக்கல் இருக்கிறது. இதில் தேவையான புளுடோனியத்தின் கணக்கையும் மனதில் கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே சொன்னது போல ஈனுலை களில் கொஞ்சம் புளுடோனியம் போட்டால் இறுதியில் நிறைய புளுடோனியம் உற்பத்தி ஆகும். ஆனால் அந்த புளுடோனியத்தை எடுக்க பலவிஷயங்களை செய்ய வேண்டும். அணுக் கழிவுகளை வெளியே எடுத்து அவை குளிர்ச்சியாகும்வரை காத்திருந்து பிறகு அதை மறுமுறை பதப்படுத்தி, பிறகு புளுடோனியத்தை எடுத்து அதை எரிபொருள் கம்பிகளாக மாற்ற வேண்டும்.

பிறகு வேறொரு உலை மையத்தை உருவாக்கி அதன் பிறகு உலையைத் தொடங்க வேண்டும்.இதற்கெல்லாம் குறிப்பிட்ட அளவு கால அவகாசம் தேவைப்படும். அணு சக்தித்துறையின் 2052 கணக்கைப் பார்க்கும் போது உரிய கால அவகாசத்தை கொடுக்கவில்லை. இது நாம் நம்பிக்கையோடு இருக்கிறோமா, நம்பிக்கையற்று இருக்கிறோமாஎன்பது பற்றி அல்ல. இது இயற்பியல் பற்றியது.

அணுசக்தி துறையின் கணக்கு முறை யற்றது. அது வளர்ச்சி எந்த பிரச்சனையும் இல்லாமல் மிருதுவாக இருக்கும் என்று நினைக்கிறது. ஆனால் அது பல செய்கைகளை உள்ளடக்கியது. அணு சக்தித்துறையின் இந்த கணக்குப் படி, 5 முதல் ஆறு, பத்து வருடங்களில் புளுட்டோனியம் தேவை என்பதால் நிறைய எதிர்மறையான புளுட்டோ னியம் இருக்கும். ஆனால் தேவையான புளுட்டோனியம் இருக்காது. இந்த புளுட்டோனியம் கணக்கில் கொஞ்சம் கவனத்தோடு இருந்தால் அதை காற்றில் உற்பத்தி செய்ய முடியாது என்று நினைக்காமல் இருந்தால், இந்த கணக்கு எல்லாம் 40 முதல் 60 சதவிகிதம் வரை குறைந்துவிடும். 2,75,000-, 4,75,000 என்கிற எண்ணிக்கையை கோட்பாட்டு ரீதியில்கூட நாம் எட்ட முடியாது.

நித்தி       : இந்த எண்ணிக்கை, திட்டம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்துக்குப் போகும் என்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையில்..

எம்.வி.ஆர் : இது எல்லாமே இரண்டாம் கட்டத்தில் மட்டும்தான். அணு சக்தித்துறையின் திட்டங்களில் கூட தோரியம் 2052க்கு பிறகே வருகிறது. தோரியத்தை பற்றி ஒரு விஷயத்தையும் குறிப்பிட விரும்பு கிறேன். மின்னணுவியல் தொழில் துறையில் ஒரு நகைச்சுவை உண்டு. இந்த துறை பெரும்பாலும் சிலிக்கனை அடிப் படையாக கொண்டது. 80களில் ஜெர்மேனியம் அரைகடத்தியாக இருப்பதுபற்றி பேச்சுகள் உண்டு. ஆனால் ஜெர்மெனியத்தில் பல பிரச்ச னைகள். அதனால் 80களிலும் 90களிலும் ஜெர்மேனியம் பற்றி இப்படி நகைச்சுவையாக சொல்வார்கள். ஜெர் மேனியம் எப்போதும் எதிர்காலத்துக் கான பொருள். அது எப்போதும் அப்படியேதானிருக்கும். தோரியமும் அப்படிதான். அது அவர்கள் விரும்பும் ஒரு மாயப்பொருள். ஆனால் அது எப்போதும் எதிர்காலத்திலேயே இருக்கும்..

நித்தி       : பல்வேறு அணு உலைகளை அமைப் பதிலும் தொடங்குவதிலும் உள்ள பல பிரச்னைகளை தடைகளைப் பற்றி உங்களது புத்தகம் விரிவாக பேசுகிறது. உதாரணமாக, கல்பாக்கத்துக்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, மாப்ஸ் 1 அணு உலையை நாட்டுக்கு அளிக்க சென்ற போது - அதற்கு பிறகு அங்கு ஒரு தீ விபத்தும், ஒரு வெடி விபத்தும் நிகழ்ந்தது பற்றி சொல்லியிருக் கிறீர்கள். இந்த சம்பவங்கள் அப்போது பத்திரிக்கைகளில் வெளியானதா? சம்பவங்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த விபத்துகள் விரைவிலேயே தானாகவே மக்கள் கவனத்திற்கு வருமா?

எம்.வி.ஆர் : பெரும்பாலும் வராது. சில சமயங்களில் வரும். அந்த சமயத்தில் இது பத்திரிகை களில் வந்ததா என்று எனக்கு தெரியவில்லை. அணு சக்தித்துறையின் முன்னாள் செயலர் எம்.ஆர் ஸ்ரீனிவாசனின் வாழ்க்கை வரலாற்றில் அவர் எழுதியதன் வாயிலாக நான் இதை தெரிந்துகொண்டேன். பொது வாக என்ன நடக்குமென்றால் இது போன்ற விஷயங்களில் சம்பவத்துக்குப் பிறகு பெரிதாக ஊடகங்களில் எதுவும் வராது. சமயங்களில் ஊழியர்கள் ஊடகங்களுக்கு தகவல்சொல்வதுண்டு. அப்படிதான் தெரியவரும். சில சமயங்களில் தெரியும், சில சமயங் களில் தெரியாது.

நித்தி       : இப்போது சென்னையில் இருக்கிறீர்கள்.கல்பாக்கத்திலிருந்து 100 கி.மீக்கும் குறைவான தொலைவிலேயே இருக் கிறோம். அந்த பக்கத்தில் புதுச்சேரி இருக்கிறது. பல வருடங்களாக கல்பாக்கம் அணு உலையில் எந்த பிரச்சனையும் இல்லை என்று இந்திய அணு சக்திக் கழகம் தொடர்ந்து சொல்லி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை? கல்பாக்கத்தில் இப்போது என்னவிதமான உலைகள் இருக் கின்றன? சென்னை, புதுச்சேரி வசிக்கும் மக்கள் கவலை கொள்ள எதாவது இருக்கிறதா?

எம்.வி.ஆர் : இதற்கு மூன்று கட்டங்களில் பதில் தர விரும்புகிறேன். முதல் கட்டமாக, அனுபவப்பூர்வமாக நாம் அறிந்த விஷயங்களைப் பற்றி கேட்பது. நீங்கள் சொன்னது போல இங்கு பல சின்ன சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நீர்க்கசிவுகள், பொருட்கள் விழுவது போன்றவை. இவை எல்லாம் அதன் செயல்திறன் குறித்து ஏதாவது சொல்கிறதா என்றால் ஒரு நபருக்கு மூச்சு வாங்குவதாலேயே, மாடிப்படி ஏற முடியாததாலேயே அவருக்கு மாரடைப்பு தாக்கும் என்று சொல்வது போல இதுவும். ஆனால் நிச்சயமாக இவையெல்லாம் நல்ல அறிகுறிகள் அல்ல. அதே&போல அனுபவ ரீதியாக முடிவுக்கு வருவது. இதுவரை எந்த பெரிய விபத்துகளும் பேரழிவும் நிகழ வில்லை, அதனால் அமைப்பு சரியாக இருக்கிறது என்ற முடிவுக்கு வருவது. அதுவும் தவறு. காரணம், விபத்துகளின் எண்ணிக்கை குறைவு குறித்து நம்பிக்கை கொள்வதற்கு இவ்வளவு குறைவான அனுபவ வருடங்கள் போதுமானதாக இருக்காது.

உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் கூடங்குளம் பற்றியோ இது போன்ற அணு உலைகள் பற்றியோ விவாதங்கள் வரும்போது நாங்கள் ஆய்வு செய்துவிட்டோம், மைய பாதிப்பு விபத்தின் சாத்தியம் என்பது மிக குறைவு என்று சொல் வார்கள். ஒரு மில்லியனில் ஒரு பகுதி, அல்லது பத்து மில்லியனில் ஒரு பகுதி என்று சொல்வார்கள். அனுபவம் சார்ந்த விஷயங்களிலிருந்து அது போன்ற கணக்கை பெற வேண்டு மென்றால், பல்லாயிரக்கணக்கான வருடங்கள் அணு உலைகள் விபத்து இல்லாமல் செயல்பட்டிருக்க வேண்டும். அந்த அனுபவம் இல்லாத பட்சத்தில், இது போன்ற எண்களில் எந்த நம்பிக்கையும் கொள்ள முடியாது.

கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் அமைப்புகள் பற்றி இரண்டு விதமான கவலைகள் உண்டு. ஒன்று அங்கு அமைந்து வரும் ஈனுலை பற்றியது. அது முதலுரு வேக ஈனுலை. இந்த உலை திட்டத்தில் அது முதல் உலை. 500 மெகாவாட் திறன் கொண்டது. புளுட்டோனியத்தை எரிபொருளாகக் கொண்டது. மையத்திலிருந்து வெப்பத்தைப் பிரிக்க திரவ சோடியம் பயன்படுத்தப்படும். இதன் வடிவமைப்பில் பல பிரச்சனைகள் உண்டு. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் செர்னோபில் விபத்துக்கு காரணமான ஒரு பொருள் இங்கு உண்டு. இதன் அணுகுமுறையில் ஸ்திரத்தன்மை இருக்காது. தவிர இந்த ஈனுலை அமைக்கப்பட்டிருக்கும் இடம், ஒரு விபத்தை கட்டுப்படுத்து மளவுக்கு வலிமை கொண்டதில்லை. கல்பாக்கம் அணு உலையைப் பொறுத்த வரையில் இது மிகவும் கவலைக்குரியதே.

இரண்டாவதாக கல்பாக்கத்திலேயே இருக்கும் இந்த மறுபதப்படுத்தும் நிலையம். இங்குதான் கழிவு மறுசுழற்சி செய்யப்பட்டு புளுட்டோனியம் எடுக்கப்படுகிறது. இதை செய்யும் போது, இந்த கழிவில் கதிரியக்கம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதை அழிக்க முடியாது. அதை அழிக்க முடியாது. இந்த கதிரியக்கம், மிக அதிக கட்ட கழிவாக தேங்கிவிடும். அது மிகப்பெரிய எஃகு கொள் கலன்களில் சேமித்து வைக்கப்படும். இந்தத் திரவத்தை சீல் செய்து, அல்லது கண்ணாடியுடன் கலப்பதுதான்சரியாக இருக்கும். ஆனால் கல்பாக்கத்தில் என்ன காரணத்தினால் என்று தெரிய வில்லை, இந்த கண்ணாடி கலப்பு ஆலை செயல்பாட்டில் இல்லை.

அணு சக்தித் துறையின் ஆண்டு அறிக்கை களெல்லாம் இந்த ஆலை பற்றி சொல்லும், அது அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, விரைவில் முடிந்துவிடும் என்று அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் முடிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லும் ஓர் அறிக்கையை நான் இன்னும் பார்க்கவில்லை. ரசாயன ஆலை செயல்படாவிட்டாலும், அதிக அளவிலான கழிவுகள் பின் தங்கிவிடும். ஏதோ ஒருகாரணத்துக்காக குளிரூட்டப் படுவது நின்றுவிட்டால், ரசாயன எதிர்வினைகளால் வெடிப்பு ஏற்படும். இது சாத்தியம். இது போன்ற ஒரு வெடிவிபத்து 1957ல் சோவியத் யூனியனின் மாயக் ரசாயன ஆலையில் நடந்திருக்கிறது. அதனால் மிகப்பெரிய பகுதியில் மாசு ஏற்பட்டது.

நித்தி       : ‘அணு மின்சாரம் சிக்கனமானது’ நீங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் இந்தக் கூற்று பற்றி என்ன சொல்கின்றன?

எம்.வி.ஆர்               : அணு மின்சாரம் சிக்கனமானது என்கிற கருத்து இரண்டு விதங்களில் சொல்லப்படுகிறது. அணுசக்தியின் ஆரம்பக் கட்டங்களில் அது மிகவும் விலை குறைவாக இருந்ததாக பேசினார்கள். எந்த அளவுக்கு குறைவானது என்றால் செலவே இல்லை என்றார்கள். அது போன்ற கூற்றுகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. இப்போது எப்படி சொல்கிறார்கள் என்றால் மின்சாரத்துக் கான பிற ஆதாரங்களோடு ஒப்பிட்டு இது விலை குறைவு என்கிறார்கள்.

இந்தியாவில், மின்சாரத்துக்கான முக்கிய ஆதாரமாக நிலக்கரி இருந் திருக்கிறது. நிலக்கரியோடுதான் அணு சக்தி தொடர்ந்து ஒப்பிடப்பட்டு வந்திருக்கிறது. ஆரம்ப வருடங்களில் அவர்கள் அணு சக்தி நேரடியாக நிலக் கரியோடு மோத முடியாது என்பதை உணர்ந்தார்கள். அதனால் நிலக்கரி சுரங்கங்களின் அருகில் போட்டியிட முடியாது, ஆனால் நிலக்கரி சுரங்கங் களிலிருந்து தொலைவில் சென்றால், பிறகு போக்குவரத்து செலவுகளை எல்லாம் சேர்க்க வேண்டும்.

மிக அதிக தொலைவில் என்று பார்க்கும் போது, அணு மின்சாரம் விலை குறைவாக இருக்கும் என்று பொதுவாக கருதப் படுகிறது. அதனால் நாட்டின் சில பகுதிகளிலாவது அணு மின்சாரத்தை பயன்படுத்துவது பொருளாதாரரீதியாக பலன் தருமென்று சொல்வார்கள். காரணம், மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலக்கரியை எடுத்துச் செல்வதற்கான செலவுகள் மிகஅதிகம்.

50களில், 60களில், 500 கீ.மி. அல்லது 600 கிமி என்று கணக்கு சொல்வார்கள். அதை தாண்டி போனால், அணு மின்சாரம் பொருளாதார ரீதியில் வசதியானது. ஆனால் இதெல்லாம் எந்த அணு உலைகளும் கட்டப்படு வதற்கு முன்பான விஷயம்.. முதல் கட்ட அணு உலைகள் அமைக்கப்பட்டு, அதன் கட்டுமான விலைகள் பற்றிய ஒரு புரிதல் ஏற்பட்டவுடன் அது நடக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தோம். அதனால் 1980களில் முதல் அணு உலைகள் அமைக்கப்பட்ட போது தொலைவு 800 கி.மீ. ஆனது. 800 கி.மீ தொலைவில் இருந்தால் அது போட்டிக்கு சரிபடும். 1990களில் விலை குறையும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது, ஆனால் 1990களும் வந்தது. இப்போது தொலைவு 1200 கி.மீ ஆனது. இந்த சமயத்தில்தான் நான் தோராயமாக அணு சக்தியைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன். 2000களின் ஆரம்பத்தில் கைகா அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கும், ராய்ச்சூரில் கட்டப்பட்டிருந்த நிலக்கரி ஆலைக்குமான பொருளாதார ஒப்பீட்டை நான் மேற்கொண்டேன்.

இதுபோன்ற பொருளாதார ஆய்வுகளில் பொதுவாக அவர்கள் அசலான அணு உலைகள் அல்லது அசலான நிலக்கரி ஆலைகளின் செலவுகளைப் பயன்படுத்த மாட்டார்கள். ஒரு மெகா வாட்டுக்கு ஐந்து கோடி, ஒரு மெகா வாட்டுக்கு 3 கோடி, போன்றுதான் தோன்றித்தனமாக ஒரு எண்ணிக்கையை தந்து இதுதான் உங்கள் அணு உலையின் செலவு என்பார்கள். அதனால் அதை அனுபவ ரீதியாக செய்ய வேண்டுமென்று சொல்லி நாம் கைகா மற்றும் ராய்ச் சூரை ஒப்பிட்டோம். ராய்ச்சூர் ஆலைக்கு நிலக்கரி சுமார் 1,400 கி.மீ. தொலைவி லிருந்து வருகிறது. அதாவது 1,200 கி.மீ விட அதிகம். அதன் பிறகும், அணு சக்தியின் செலவுதான் அதிகம் என்பதை அறிந்தோம்.

நாம் அடிக்கடி எதிர்க்கொள்ளும் இன்னொரு கருத்து அணு சக்தி இப்போது வேண்டுமானால் விலை அதிகமாக இருக்கலாம், ஆனால் அணு உலைகள் அமைப்பதன் செலவை நாம் குறைப்போம், அதனால் வருங்காலத்தில் அணு சக்தியின் விலையும் குறையும் என்பதுதான். ஆனால் உலகில் எங்கும் அப்படி இல்லை என்பதை அனுபவ ரீதியாக பார்க்க முடிகிறது. காரணம், பகுதி பகுதியாக அணு உலையில் அதிகமான பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கவேண்டியிருக்கிறது. அதெல் லாம் விலை அதிகம். அதனால் அணு சக்தி விலை குறைவு என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

நித்தி       : கழிவு மேலாண்மை மற்றும் பேரழிவு சம்பவம் நிகழ்ந்தால் ஏற்படக்கூடிய நஷ்டங்களை நீங்கள் இதில் சேர்க்க வில்லை

எம்.வி.ஆர் : ஆம் சேர்க்கவில்லை. ஈனுலைகளில், சாதாரண உலைகளை விட இந்த செலவுகள் அதிகம் இருக்கும்.

நித்தி       : இவ்வளவு ஆபத்தானதாக, செல்வாக்கு இல்லாததாக இருக்கும் அணு சக்தியை ஜனநாயக அரசுகளை கொண்ட குடிமை நாடுகள் ஏன் இவ்வளவு தீவிரமாக ஏற்றுக்கொள்கின்றன?

எம்.வி.ஆர் : அது மிகப்பெரிய கேள்வி. இதற்கு பதிலளிக்க வேண்டுமென்றால், நாடுகள் ஒற்றைப் பொருட்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பல விதமான மக்கள், பலவிதமான குழுக்கள் இதில் அடக்கம். சில செலவு கள், பெரும்பாலான ஆபத்து போன்றவை எந்த சமனும் இல்லாமல் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அணு உலை விபத்து என்பதன் ஆபத்து உள்ளூரையே அதிகம் பாதிக்கும். செர்னோபில் போல கொஞ்சம் கதிரியக்கம் வெளியேறி உலகெங்கும் பரவினாலும், அடிப்படையான ஆபத்து அணு உலையிலிருந்து சில பத்து கி.மீ தொலைவில் தங்கியிருப்ப வர்களுக்கே ஏற்படும். தில்லியிலோ மும்பையிலோ தங்கியிருப்பவர்களுக்கு அது பெரிய விஷயமில்லை.

அது போல பெரும்பாலான விஷயங்கள் வரிப் பணத்திலேயே செயல்படுத்தப்படு கின்றன. அணு சக்தியை சந்தைக்கு கொண்டு வந்த பல நாடுகளில், அரசியல் தலைமையின் தீவிரமான அரசியல் ஆதரவு இருந்தாலும் அது தோற்று போயிருக்கிறது. அமெரிக்கா வில் அப்படிதான் நடந்தது. இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் போது இங்கிலாந்திலும். வரிப்பணம் மற்றும் அரசாங்கப் பணம் என்று வரும்போது அது வளரும் என்று தோன்றுகிறது.

நித்தி       : கூடங்குளம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நாட்டின் முடி வெடுக்கும் திறனில் உங்களுக்கு அதிகாரம் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்ன செய்திருப்பீர்கள்? இப்போது மக்கள் போராடும் நிலையில் என்ன செய்திருப்பீர்கள்?

எம்.வி.ஆர் : என்னை போல ஒருவர் எப்போதுமே அதிகாரத்தில் இருக்க போவதில்லை. ஆனால் முடிந்தவரையில் இந்த கேள்விக்கு பதில் சொல்கிறேன். நான் இப்போது அதிகாரத்தில் இருந்தால், நான் அந்த திட்டத்தை அப்படியே கைவிட்டுவிடுவேன். காரணம், சில விஷயங்களை நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். ஒரு நல்ல, பொறுப்பான அரசாங்கம் இதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக வைக்கப்படும் வாதங்களில் ஒன்று நாம் ஏற்கனவே 17,000 கோடி செலவு செய்துவிட்டோம், அந்த முதலீட்டை வீணடிக்க முடியாது, யாராவது ஆபத்தை எதிர்கொள்ளதான் வேண்டும் என்பது போன்றவைதான். மூன்று விஷயங்கள் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு வேளை இந்த உலை தொடங்கப்பட்டால் இதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அதிக கவலையில் இருக்கும் மக்களிடம் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது. ஏதாவது ஒரு கட்டத்தில், இந்த உலை பற்றி அது செயல்படும் விதம் பற்றி மக்களுக்கு ஏதாவது பயம் ஏற்படும் என்றால், இந்த உலை சரியாக இயங்க வில்லை என்கிற சந்தேகம் ஏற்படு மென்றால் நான் உலையை மூடிவிட்டு, அந்த பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டும் என்று பார்ப்பேன்.

இரண்டாவதாக, கூடங்குளம் படிப் பினையை வைத்துக்கொண்டு நாம் செய்ய வேண்டிய விஷயம், இனி உள்ளூர் மக்களின் அனுமதி இல்லாமல் எங்குமே அணு உலைகள் அமைக்கப் படகூடாது. உதாரணமாக, உள்ளூர் மக்கள் தங்களுக்கு ஆர்வமில்லை என்று தெளிவாக சொல்லிவிட்ட ஜெய்த்தாப்பூரில், அந்த திட்டத்தை அப்படியே கைவிட்டுவிட்டார்கள்.

இறுதியாக, உலையை எதிர்க்கும் மக்கள் கதிரியக்க வீச்சு காரணமாக அல்லது விபத்து ஏற்படும் என்பதால் மட்டும் எதிர்க்கவில்லை, அது தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்ப தாலும் எதிர்க்கிறார்கள். மீன் வரத்து குறைகிறது அல்லது மீன் வாங்குவது குறைந்திருக்கிறது என்று தெரியவந்தால் நாம் குறைந்தபட்சம் நஷ்ட ஈடாவது வழங்க வேண்டும். இதற்காக பரப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஒரு வேளை இந்த மக்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்றால் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க உரிய தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அணு உலையை மூடக் கூடாது, அதை தொடங்க வேண்டும் என்ற நிலை இருந்தால் இந்த சின்ன அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நித்தி       :                      இறுதியாக ஒரு கேள்வி. நியூயார்க்கில் ஷோர்ஹாம் அணு உலை கடைசி கட்டத்தில் கைவிடப்பட்டு, பிறகு இயற்கை வாயுவை எரிபொருளாக கொண்ட உலையாக மாற்றப்பட்டது. ஏன் அப்படி ஆனது? அது ஏன் இந்தியாவில் செயல்படுத்த முடியாத விஷயமாக இருக்கிறது?

எம்.வி.ஆர்               :                      இது செயல்படுத்தக்கூடிய விஷயமே. நான் உண்மையில் அதை பெரிதாக ஆய்வு செய்யவில்லை. அதனால்தான் அது பற்றி பேசாமலிருக்கிறேன். ஆனால் இது ஒரு நல்ல கேள்வி. கட்டு மானத்தின் பல கட்டங்களுக்குப் பிறகு கைவிடப்பட்ட உலைகள் இருக்கின்றன. ஷோர்ஹாமை விட ஜெர்மனியில், நெதர்லாந்தின் எல்லையில் இருந்த கல்கர் உலை இன்னும் நல்ல எடுத்துக் காட்டாக இருக்க முடியும். 5 பில்லியன் டாலர் மதிப்பில் முழு உலையும் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, எரிபொருள் ஏற்றப்படுவதற்கு முன்பு அது கைவிடப் பட்டது. பிறகு அது ஒரு கேளிக்கை தளமாக மாற்றப்பட்டது.

அடிப்படையான கேள்விக்கு வருவோம். உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்கனவே முடிந்துவிட்டது என்று சொன்னால், அதில் சிலவற்றை காப்பாற்றி வேறு விதமான மின்சார உற்பத்திக்கு பயன் படுத்தலாம். இதன் வெற்றித்தன்மை, இதன் செலவுகள் குறித்து நான் ஆராய வில்லை. யாரும் செய்தும் நான் பார்க்கவில்லை. அதனால் அது குறித்தும், அதன் பொருளாதாரம், அதன் செயல்பாடு, மீதமிருப்பவை குறித்தும் என்னால் விளக்கமாக நிபுணத்துவத்தோடு பதிலளிக்க இயலாது.

தமிழில்: கவிதா முரளிதரன்

Pin It