எந்த ஒரு திட்டமும் அருகில் உள்ள மக்களின் சம்மதத்துடன் மட்டுமே செயல் படுத்தபட வேண்டும் என்று நீதிபதி சந்துரு, கெயில் இந்தியா நிறுவனம் தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பில் கூறியுள்ளார். மேலும் தீர்ப்பில் அவர் கூறியுள்ளது : “It must also be noted that losing of lands or rights over the land is an emotive issue.After experience gained from Nandigram and Singur villages at West Bengal , no state action should give rise to un pleasant situation .Any industrial operation or industrial projects can come up only with the consent of the local population .No project can ever be executed by any person including the state government through police operations thereby alienating the entire local population” (GAIL India Vs State of Tamilnadu(W.P.No 17216/12)

1984ஆம் ஆண்டில் இயற்கை எரி வாயுக் கட்டுமான மேம்பாட்டிற்காக இந்திய அரசால் நிறுவப்பட்ட நிறுவனம் காஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா. பின்னர் இதன் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு கெயில் (GAIL) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கெயில் இந்தியா நிறுவனம் இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் அது சார்ந்த பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்திலிருந்து பெங்களூரு வரை, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்களின் ஊடே 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியினை மேற்கொள்ள கெயில் இந்திய நிறுவனம் திட்டமிட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த 310 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 20 மீட்டர் அகலத்திற்கும் எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்படுவதற்காக 5,842 பட்டா தாரர்களுக்கு சொந்தமான சுமார் 1,491 ஏக்கர் நிலத்தின் பயன்பாட்டு உரிமையை பெறுவதற்கு கெயில் நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்தத் திட்டத்திற்கு மேற்கூறிய ஏழு மாவட்டங் களைச் சார்ந்த விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். நிலத்திற்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை நிலத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீதம் மட்டுமே இருந்த காரணத்தினாலும், நிலத்தில் உரிய விவசாயம் செய்ய இயலாமல் நிலத்தின் பெரும்பகுதியினை இழக்க நேரிடுவதுடன், எதிர்காலத்தில் நில மேம்பாட்டிற்குத் தேவையான எதையும் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்படும் என்னும் காரணத்தினால் விவசாயிகள் இத்திட்டத்தை எதிர்த்தனர்.

மேலும் விவசாயிகளின் நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கப்படும் பகுதியில் ஆழமாக வேரூன்றும் மரங்கள் வளர்க்கக் கூடாது என கெயில் நிறுவனம் தடை செய்வதால் தென்னை மரம் மற்றும் பழவகை மரங்களை சார்ந்துள்ள இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அஞ்சினர்.

இதனை தொடர்ந்து விவசாய மக்கள் பலவித போராட்டங்களிலும் இந்த திட்டத்திற்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்தே எரிவாயுக் குழாய்களை அமைக்க காவல்துறை பாதுகாப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேற்கூறிய மனுவை தாக்கல் செய்தது கெயில் நிறுவனம்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு கெயில் நிறுவனம் எரிவாயுக் குழாய்களை பதிப்பதற்கு காவல்துறையின் பாதுகாப்பு கேட்பதற்கான முகாந்திரம் இல்லை என்று தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தது கெயில் நிறுவனம். மேல் முறையீட்டு மனுவில் விவசாய சங்கங்களும் தங்களை இணைத்துக் கொண்டு வாதிட்டன. நீதிமன்றத்தில் அவர்களுடைய கோரிக்கை எரிவாயு குழாய்களை மாற்றுப் பாதையாக தேசிய நெடுஞ்சாலை வழியாக கொன்டு செல்லலாம் என்பதே. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கொண்ட அமர்வு நீதிபதி சந்துரு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர். மேலும் எரிவாயு குழாய்களை அமைக்க மாற்றுப் பாதையை தேர்வு செய்ய “பொதுக் கருத்துக் கேட்பு கூட்டம்” நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறியது தலைமை நீதிபதி கொண்ட அமர்வு.

ஆனால் கருத்துக் கேட்பு கூட்டம் ஏற்பாடு செய்யாமல், மாற்றுப் பாதையை கணக்கில் கொள்ளாமல் குழாய் அமைக்கும் பணியை தொடர்ந்து செய்தது கெயில் நிறுவனம். இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடினர் விவசாயிகள். உடனே கருத்து கேட்பு கூட்டத்தை ஏற்பாடு செய்தது தமிழக அரசு.

இந்த கூட்டத்தில் பெருவாரியான விவசாய மக்கள் கலந்துக் கொண்டு மாற்றுப் பாதையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு மாற்றுப் பாதையில் எரிவாயு குழாய்களை கெயில் நிறுவனம் அமைக்க வேண்டும் என்று கூறியது. கெயில் நிறுவனம் மத்திய அரசு கீழாக இயங்கும் அமைப்பு. எனவே மாநில அரசு முழுமையாக இத்திட்டத்தை கட்டுப்படுத்த முடியாது.

பொதுக் கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு முன்பாக கெயில் நிறுவனம் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில், தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டால் அந்தப் பணி முடியும் வரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்றும், தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய்கள் பதிக்கும் பணிக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொதுவாக அனுமதி வழங்காது, என்றும், எதிர்கால விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிப்பு மேற்கொள்ள இயலாது என்றும், ஒவ்வொரு எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கூடுதல் வால்வு நிலையம் அமைக்க வேண்டியிருப்பதால் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பிரச்சனைகள் ஏற்படும் என்றும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குழாய்கள் பதிக்கும்போது பாறைகள் உள்ள இடங்களில் பாறைகளை வெடிக்கச் செய்யும்போது இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஏற்கெனவே வாங்கப்பட்ட பொருட்கள், குழாய்கள் மற்றும் திட்ட வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் ஆர்ஜிதம் செய்யப்பட்ட விவசாய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் நெடுஞ்சாலை ஒரம் வழியாக கெயில் நிறுவனம் குழாய்களை பதித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசின் தொழில்துறை முதன்மைச் செயலாளர் கெயில் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்றுள்ளது கெயில் இந்தியா நிறுவனம். எனவே தமிழக அரசின் அறிவிப்பு இப்பிரச்சனையை ஒரு முடிவுக்கு இன்னும் கொண்டுவரவில்லை என்றே கொள்ள வேண்டும்.

இது ஒரு தனி நிகழ்வல்ல. தஞ்சை மாவட்டம் மன்னார்குடி பகுதியில் மீத்தேன் என்னும் எரிவாயு இருப்பது சில வருடங்கள் முன்பாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கிணறு தோண்டி எடுக்கும் உரிமையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து பெற்றுள்ளது கீரேட் ஈஸ்டன் என்னும் தனியார் நிறுவனம். நூற்றுக்கு மேற்பட்ட கிணறுகளை இந்த நிறுவனம் தோண்ட உள்ளது. இதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நிலத்தடி நீரையும் விவசாய நிலத்தின் தன்மையும் பாழ்படுத்திவிடும் என்பதை கூறத்தேவை இல்லை. இதற்கு எதிராகவும் பல இயக்கங்கள் போராடிக்கொண்டுள்ளன. இப்படி பல்வேறு திட்டங்களுக்கு தொடர்ந்து தமிழக விவசாய நிலங்கள் பலியாகிக்கொண்டு வருகின்றன.

நிலம் என்பது இந்தியாவை பொருத்தவரை அரசுடமையாகும். அரசு நினைத்தால் யாருடைய நிலத்தையும் கையகப்படுத்தி யாருக்கு வேண்டுமானலும் எதற்கு வேண்டுமானலும் கொடுக்கலாம். இதற்காக காலனிய இந்தியாவில் கொண்டுவரப்பட்ட நிலம் தொடர்பான சட்டங்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த சட்டங்கள் யாருடைய நிலத்தையும் அரசு உரிய ஈழப்பீடு கொடுத்து கையகப்படுத்தலாம் என்று கூறுகின்றன.

இந்த சட்டங்களின் கீழ் விவசாய நிலங்கள் தான் தொடர்ந்து கையகப்படுத்தப்படுகின்றன. “வளர்ச்சி” என்னும் பெயரில் இப்படி நிலங்கள் தொடர்ந்து கையகப்படுத்தப்படுகின்றன. கிராமங்கள் மறைந்து நகரமயமாவதற்கு இந்த “வளர்ச்சித்” திட்டங்களும் ஒரு முக்கிய காரணம். வளர்ச்சித் திட்டங்களுக்கு நீர்நிலைகளும் விவசாய நிலங்களும் தான் முதல் பலி. சமூகத் தளத்தில் நகர்மயம் பலவித முன்னேற்றங்களை ஏற்படுத்தி இருந் தாலும், சுற்றுச் சூழலை கட்டிட காடு களாக மாற்றியுள்ளதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். மேலும் நகரமயத்தால் இயற்கைவளங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதையும், சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருவதையும் நாம் ஆராய வேண்டியுள்ளது. நமது வாழ்வுமுறை இயற்கையை விட்டு அந்நிய மாக்கியுள்ளதையும் நாம் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

மற்றொருபுறம் கிராமங்கள் இயற்கைவளத்துடன் தொடர்வதை வலியுறுத்தும் அதே வேளையில் கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கவும் வழி செய்ய வேண்டியுள்ளது. மேற்கு நாடுகளில் இது சாத்தியமாக உள்ளது. அங்கு கிராமங்கள் இயற்கைவளத்துடன் பாதுகாக்கப்படுவதுடன் அடிப்படை வசதிகளான சுகாதாரம், கல்வி, போக்குவரத்து போன்றவை உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகைய தன்மையுடைய கிராமங்கள் தமிழகத்தில் அரிதாகவே உள்ளன.

வேறு எங்கும் இல்லாத பெருங்கேடாக சாதி, பாலினம் ரீதியான சமூக ஏற்றத்தாழ்வு உள்ள அமைப்பாக கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. இயற்கை சமன்பாட்டிற்கு எதிராக உள்ள இத்தகைய சமூக ஏற்றத்தாழ்வுகள் உள்ள கிராமிய கட்டமைப்பு உடைக்கப்பட வேண்டும். நகரங்கள் பசுமையாக்கபட வேண்டும். இது இந்தியா எதிர் கொள்ளும் மிகப் பெரிய சவால்.

Pin It