சாதாரண பொதுமக்களின் மீதான அரசு அராஷகத்தின் வரலாற்று அடையாளம்

நேற்றிரவைப் போன்றதொரு இரவை என் வாழ்க்கையில் கண்டதில்லை. வானில் மின்னும் நட்சத்திரங்களைப் பார்த்தவாறே நாங்கள் மணலில் படுத்திருந்தோம். கடல் எங்களுக்கு மிக அருகில்... காற்றோ பலமாக வீசிக் கொண்டிருந்தது. எங்களுக்கு நன்கு பழக்கப்பட்ட அந்த இடத்தில் நாங்கள் மணல் மீதும் பாறைகள் மீதும் கிடந்தோம்.

பல நாட்கள் எங்களுக்கு எல்லாமுமாக இருந்த உண்ணாவிரதப் பந்தலில் இருந்து நாங்கள் தொலைவில் இருந்தோம். நான் அன்றிரவு நன்றாக உறங்கினேன் என்பதே எனக்கு வியப்பாக இருக்கிறது.

அதிகாலைச் சூரியனின் கதிர்கள் பட்டுத்தான் நான் கண்விழித்தபோது, என் தோழிகள் பலர் ஒன்றாக அமர்ந்து உரை யாடிக்கொண்டிருந்ததைக் கண்டேன். அதிகாலையில் தேவாலயத்தில் இருந்து காற்றில் மிதந்துவரும் பாடல்களும், காலை வழிபாடும் இல்லாமல் புலர்ந்திருந்த அந்தப் பொழுதை அவர்கள் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள்.

எங்களில் சிலர் சுனாமி குடியிருப்புக்கு காலைக்கடன்களை முடிப்ப தற்காகச் சென்றிருந்தார்கள்.

எங்கள் காலை உணவை முடித்தபின் எங்களுடைய அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்கிற எண்ணமே எங்களை ஆக்கிரமித்திருந்தது. எங்கள் அனைவரையும் சுற்றிக்கொண்டிருந்த தீமையை நாங்கள் உணர்ந்தோம். என் இதயம் எச்சரிக்கை உணர்வில் துடிக்கத் தொடங்கியது; அச்சத்தால் அல்ல. காவல்துறையைக் கண்டோ அல்லது அவர்கள் கைகளில் இருந்த ஆயுதங் களைக் கண்டோ நாங்கள் பயப்படவில்லை. அந்த நொடிக்குப் பின் நடந்தவை எல்லாமே, நாகரிகம் அடைந்த மனித குல வரலாற்றின் இருண்ட பக்கங்கள். இது குறித்து மீண்டும் மீண்டும் பேசுவதற்கு எனக்கு சலிப்பாகவே இருக்கிறது. சில சமயங்களில் முன்னைப்போல உண்டு, உறங்கி எழுந்தால் நன்றாக இருக்குமே என்கிற எண்ணம் தோன்றியதுண்டு.

ஆனால் இப்போது தீர்க்கமாக முடிவு செய்துள்ளேன்.. அணு உலையை மூடும்வரை போராடியே தீரவேண்டுமென்று. இன்று கூட, வெயிலிலும் கடலிலும் பல மணிநேரங்கள் நின்றபின்னும், என்னால் வீட்டில் நிம்மதியாக அமர முடியவில்லை. நான் மற்ற அனைவருடனும் பந்தலில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் எல்லோரும் நல்ல மனநிலையில் இருக்கிறார்களா, அவர் களுக்கு வேண்டிய வசதிகள் இருக்கின்றவா என்று பார்க்கவிரும்புகிறேன். என் சகோதரிகளைக் காணும்போதெல்லாம் எனக்கு பதட்டம் அதிகமாகி விடுகிறது. அவர்களுடைய வீடு காசா காலனியில் உள்ளது. அவர்களுக்கு இழப்புகள் அதிகம். மீண்டும் வீடுதிரும்ப அவர்கள் அச்சப் படுகிறார்கள். ஒரே ஒரு பாயையும் தலையணை யையும் நாங்கள் பகிர்ந்துகொள்கிறோம்.

பல நாட்களுக்குப் பிறகு இன்றைக்கு என்னு டைய உருவத்தை நான் கண்ணாடியில் பார்த் தேன். எரிந்துபோன தோலுடன் இருக்கும் என்னுடைய முகத்தைப் பார்த்து நான் அதிர்ந்து போனேன். எங்களில் பலருடைய முகங்களையும் அப்போதுதான் நான் உற்றுப் பார்த்தேன். அந்த நாளின் சுவடுகளை நாங்கள் எங்கள் முகங்களின் தாங்கியிருக்கிறோம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

வெயிலினாலோ கடல்நீர் பட்ட தாலோ அல்ல அந்தக் காயங்கள்; நஞ்சுத்தன்மை உடைய புகையைக் கக்கிய கண்ணீர்ப் புகைக் குண்டுகள் எங்களை நோக்கி வீசப்பட்டதன் விளைவு இவை. எவ்வளவு பயங்கரமானதாய் இருந்தது அந்த உணர்வும் அந்த நொடிகளும்! எங்கள் சேலைத்தலைப்பால் நாசியையும் வாயை யும் பொத்திக்கொண்டவாறே நாங்கள் ஓடி னோம்.

கால்கள் புதையும் கடற்கரை மணலில் ஓடுகையில் எவ்வளவுதான் உடலை மூடிக் கொள்ள இயலும்? கண்ணீர்ப் புகையால் ஏறத்தாழ எனக்கு பார்வையை இழந்ததுபோல் ஆனது. என் நாசியும், வாயும் எரியத் தொடங்கின. விழிகளில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இருமலும், தும்மலுமாக எனக்கு மூச்சுத் திணறியது. நாங்கள் புகலிடம் தேடி ஓடினோம். மனிதர்களால் மட்டுமே சக மனிதர்களை துன்பு றுத்தும் இத்தகைய கொடூரமான கண்டுபிடிப்பு களை உருவாக்க முடியும்.

கண்ணின் மணி போல நாங்கள் போற்றிப் பாதுகாத்துவரும் புதுப்பிக்கப்பட்ட எங்கள் தேவாலயத்தின் உட்பகுதிகளை இன்று நாங்கள் கழுவி சுத்தம் செய்வோம். பேரமைதி பொங்கும் எங்கள் கோவில் சிதைக்கப்பட்டது. கழிப்பறை போல சிறுநீர் கழிக்கப்பட்டது. மேரிமாதாவின் சிலை உடைக்கப்பட்டு தரையில் வீசப்பட்டது. கடல்நீரை பானைகளில் சுமந்துவந்து நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்தவர்களின் பாவங் களைக் கழுவுவோம்.

“கர்த்தரே! இவர்கள் செய் வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னித்தருளும்” என்கிற வாக்கியத் தின் முழுமையான பொருளை நாங்கள் உணர் கிறோம். இதன்மூலம் அவர்கள் என்ன சாதிக்க விரும்புகிறார்கள். எங்களுடைய கஷ்டகாலங்களில் எல்லாம் எங்களுக்குக் கைகொடுத்த தேவாலயம் இது. சுனாமியின்போது அகதிகளாக வேறு வழியின்றி இங்குதான் தஞ்சம் புக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால், கடந்த ஓராண்டாக நாங்கள் விரும்பி இந்த தேவால யத்தை எங்கள் புகலிடமாக்கிக் கொண்டோம். எங்களுக்கு உறைவிடத்தைக் கொடுத்த தேவாலயம் இது. காலை இந்த தேவாலயத்தின் காலை நேரப் பிரார்த்தனை களின்போதுதான் எங்களுக்கு அன்றைய நாளின் நிகழ்வுகள் குறித்தும் திட்டங்கள் குறித்தும் பாதிரியார் அறிவிக்கும் போது நாங்கள் அறிந்துகொள்வோம்.

அந்த அறிவிப்புகள்தான் எங்களுக்கு ஓராண்டாக போராடுவதற்கான சக்தியையும் ஊக்கத்தையும் அளித்தன. அவர்கள் எங்களுக்குச் செய்தவற்றை எங்களில் பலர் மன்னிக்கக்கூடும். ஆனால், எங்கள் பெருமதிப்புக்குரிய, வழிபாட்டுக்குரிய எங்கள் அன்னையின் சிலை சிதைந்துகிடந்த அந்த பயங்கரமான காட்சி தந்த அதிர்ச்சியை எங்களால் மறக்க முடியாது. இந்தப் பாவத்துக்கு அவர்கள் எந்த சபையில் பாவமன்னிப்பு கேட்டு தங்களை தூய்மையாக்கிக் கொள்ள முடியும்?

என் 18 வயது மகனின் விழிகளை நோக்குகை யில், முன்னெப்போதும் பார்த்திராத அச்சத்தை யும், பதட்டத்தையும் காண்கிறேன். அவன் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவன். சோம்பேறியோ, முன்கோபியோ அல்ல. படகு கடலுக்குச் செல்லும் போதெல்லாம் சென்று அன்றாடம் மீன்களைக் கொண்டுவந்து சேர்ப்பான்.

எங்கள் ஊரில் காணாமல் போன 4 குழந்தைகள், 3 நாட்களுக்குப் பின், பாளையங்கோட்டை யில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருப்பதாகத் தகவல் வந்தது. அது வரையிலும் அந்தக் குடும்பங்கள் பட்ட பாட்டையும் விட்ட கண்ணீரையும் நாங்கள் அறிவோம். அன்று கடற்கரையில் காவல்துறை கரையை ஆக்கிரமிக்கத்தொடங்கி எங்களைச் சுற்றி வளைத்தபோது, நிறைய ஆண்களும், பையன்களும் கடலுக்குள் தள்ளப்பட்டனர். தேசத்துக்கெதிராக போர் தொடுத்த குற்றச்சாட்டு உட்பட 14 குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன. அவர்களில் பலருக்கு ‘தேசத் துரோகம்’ என்கிற சொல்லில் எத்தனை எழுத்துக்கள் உண்டு என்பது கூட தெரியாது. இவையெல்லாம் சேர்ந்து என் மகனின் விழிகளை துயரமும் அச்சமும் கலந்த கலவையாகச் சுற்றிப் போர்த்தியிருந்தன.என் இளைய சகோதரியைப் பற்றிக் கூறும் துணிவே எனக்கு இல்லை. அவள் கால் ஊன மான பெண்ணாக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் பந்தலுக்கு வந்து போராட்டத்தில் கலந்துகொள்வாள்.

எங்களுடைய பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றுக்கு தன் குழந்தைகளுடன் அவள் வருவது வழக்கம். பந்தலில் அமர்ந்து ஒரு சின்ன அழகான புன்சிரிப்போடு அவள் பீடி சுற்றுவாள். 10ம் தேதி நடந்த குழப்பங்களின்போது, தன் குழந்தைகளைத் தேடிக் கடற்கரைக்குச் சென்றவளை கடலோரக் காவல்படை காவலர் ஒருவர் சொல்லக்கூடாத, தகாத வார்த்தைகளால் அவளுடைய நடத்தை குறித்து திட்டி இருக்கிறார். அன்றிலிருந்து அவள் முகத்தில் அந்த அழகான புன்சிரிப்பைக் காண முடியவில்லை.

மெல்ல மெல்ல மறைந்து முழுவதுமாக காணாமலேயே போய்விட்டது. அந்தக் காவலரின் முகம் அவள் நினைவுக்கு அடிக்கடி வந்து அவள் அவதியுறுகிறாள். அவள் இப்போதும் போராட்டத்தில் எங்களுடன் இருக் கிறாள். ஆனால் உணவு உண்ண மறுக்கிறாள். இளம் பெண்களும், அவர்களது மனங்களும் யார் எவர் என்று தெரியாத காவலர்களால் அச்சத்தால் நிரம்பி யிருக்கின்றன. சொல்லாலும், பார்வையாலும், தொடுகையாலும் வன்முறையில் ஈடுபட அவர்களுக்கு உரிமை கொடுத்தது யார்?

அன்று நாங்கள் கடலுக்கும், காவல் படைக்கும் இடையே மாட்டிக்கொண்டோம். அவர்கள் அன்று கொடூரமாகவும் கடுமையான ஆத்திரங் கொண்டவர்களாகவும் காணப்பட்டார்கள். உண்மையிலேயே தடியடி நடத்தும் அளவுக்கு அவர்களுக்கு அன்றைக்கு ஆத்திர மூட்டியது எது என்பது எனக்குப் புரியவில்லை.

நாங்கள் கடலில் அலைகளுக்கு மத்தியில் கிடக்குமாறு தள்ளப் பட்டோம். எங்கள் சேலையெல்லாம் நனைந்து நகரவே சிரமமாக இருந்தது. கொஞ்ச நேரமாக நான் என் சிறிய மகனைப் பார்க்கவில்லை. எனக்கு அவன் குறித்த கவலை ஏற்பட்டது. அவனுக்கு மிகப் பழக்கமான நிலப்பகுதி இது என்பதால் தன் நண்பர்களுடன் எங்காவது தப்பித்து இருப் பான் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

சுத்தமான, வெண்ணிறமான எங்கள் கடற்கரை அன்று போர்க்களமானது. சிதறிக் கிடந்த காலணிகளும், உடைகளும், பைகளுமாக கடற்கரை அன்றைக்கு வழக்கத்துக்கு மாறாகக் காட்சியளித் தது. எந்தக் கடற்கரையில் இருந்து முதல்நாள் என் மகள் சிப்பிகளையும், நட்சத்திர மீன்களையும் கொண்டுவந்து தந்தாளோ அந்த கடற்கரை அப் போது காணப்படவில்லை. அதன் இடத்தில் ஒரு பெரிய குப்பைக்கூளம் தான் காட்சி யளித்தது. அந்த இடத்தை மீண்டும் தூய்மையாக்க உயர மான எத்தனை கடல் அலைகள் தேவைப்படுமோ தெரியவில்லை.

எத்தனை பேர் நாங்கள் எங்கள் மனங்களில் இருந்து வலிமிகுந்த அந்த என் கவுண்ட்டரின் நினைவுகளை அழிக்கப் பின்னோக்கிச் செல்ல வேண்டி இருக்குமோ? ஒரே ஒரு ஆறுதல்தான் எங்களுக்கு இருந்தது. ’மெதுவாக..மெல்ல மெல்ல..அமைதியாக’என்று ஒரு வயது குழந்தையிடம் பொறுமையுடன் மீண்டும் மீண்டும் சொல்லும் தாய் போல, கடலின் பிள்ளைகளாகிய நாங்கள் எங்கள் வலிமையான முரட்டு மனங்களுடன், வன்முறை யற்ற அறவழியிலான போராட்டம் என்றால் என்ன என்பதையும் அதன் முழு பொருளையும் அன்றைக்கு நாங்கள் விளங்கிக் கொண்டோம்.

எங்கள் பேரன்பிற்குரிய உதயகுமாரின் பெற்றோர் வசிக்கும் வீட்டுக்குக்கு கைது வாரண்ட்டுடன் காவல்துறை சென்று அவர்களுடைய ஒரே மகன் எங்கிருக்கிறார் என்கிற தகவலை அறிய முற்பட்டதாக அறிகிறோம். வயதான பெற்றோரைத் தவிக்க விட்டுவிட்டு எந்த மகன் தான் தொலைவில் இருக்க வேண்டும் என்று விரும்பு வார்? அழகான, ஸ்திரமான குடும்பத்தை விட்டுவிட்டு தனிமையில் வாட எவர்தான் விரும்புவார்? எங்கள் பிள்ளைகள் மனதில் என்னென்ன அச்சங்கள் உள்ளனவோ? அணு உலையை மூடவேண்டும் என்கிற நோக்கில் போராடிய நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகிப் போனோம்.

அமைதியான, பாதுகாப்பான தொரு உலகத்தை நிர்மாணிக்க வேண்டும் என்கிற தீர்மானமான முடிவினால் நாங்களும், எங்கள் குழந்தைகளும், உதயகுமார் - புஷ்பராயன் குடும்பங் களும் பிரிக்கமுடியாதபடி ஒன்றிணைந்திருக் கிறோம். உலகெங்கும் உள்ள நண்பர்களின் ஆதர வுடன், நாங்கள் இதை சாதிப்போம் என்பதை நாங்கள் அறிவோம்.

நாங்கள் வன்முறையிலிருந்து ஒரு கல்லெறி தூரத்தில்தான் இருக்கிறோம். ஆம்! எங்களில் யாரோ ஒருவர் ஒரு கல்லை எறிந்திருந்தால், இந்த என்கவுண்ட்டரின் முடிவு எங்களுக்கும் எங்களைத் தாக்கிய கும்பலுக்குமான முடிவுரை எழுதுவதாகத்தான் இருந்திருக்கும். நாங்கள் அறிவோம். அப்போது நாங்கள்‘ஆத்திரங் கொண்ட கும்பல்’ என்றுதான் அழைக்கப் பட்டிருப்போம். ஆம்! நாங்கள் ஆத்திரங் கொண்டிருந்தோம். ஏமாற்றம் அடைந் திருந்தோம். எங்கள் போராட்டம் தோல்வி யுற்றுவிடுமோ என்கிற பயத்தினால் அல்ல, நாங்கள் நடத்தப்பட்ட விதத்தால்.

நாங்கள் மரணத்துக்கு அஞ்சுபவர்கள் அல்ல. இந்த துணிவான கம்பீரமான போராட்டத்தைக் குறித்து எங்கள் அடுத்த தலை முறையினர் இந்த உலகுக்கு எடுத்துச் சொல்வார்கள் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அமைதிக்கும், சமாதானத்துக்கும், அன்புக்கும், பொறுமைக்கும் வெகு அருகில்தான் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம்; கொடூரத்துக்கும், வன்முறைக்கும் கல்லெறியும் தூரத்தில் அல்ல என்று நாங்கள் நம்புகிறோம். என் கவுண்ட்டரின் வலிமிகுந்த தடயங்களையும், சுவடுகளையும் நாங்கள் ஓரடியில் கடக்க விழைகிறோம்.

- தமிழில்:கவின் மலர்

Pin It