விழிப்புணர்வு இதழில் குடும்பப் பிரச்சனைகளில் கொடுக்கப்படும் பொய் வழக்குகள் பற்றியும், அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் பெண்கள், ஆண்கள் ஆகியோரைப் பற்றியும் அதனால் ஏற்படும் சமூகத் தாக்கம் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.
இக்கட்டுரையை படித்த சிலர் அத்தகைய அனுபவங்கள் தங்களுக்கே நேர்ந்ததாகவும் அதையே நான் எழுதியிருப்பது போல் தோன்றுவதாகவும் கூறினார்கள். ஒருவருக்கு வேறு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மகளிர் காவல் நிலையங்களில் உண்மையான வழக்குகளை விசாரிப்பதே இல்லையா? வெறும் பொய் வழக்கை விசாரிக்கவா ஒரு போலீஸ் ஸ்டேஷன் நடக்கிறது? மகளிர் நீதிமன்றங்களில் பெண்கள் மீதான கொலை, பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கி தீர்ப்புகள் வருகிறதே அந்த வழக்குகளை யார் நடத்துகிறார்கள், இந்த கேள்விகள் பலருக்கும் எழுவது நியாயம். அதற்கு விடை தேட, தமிழ்நாட்டில் மகளிர் காவல் நிலையங்கள் உருவான பின்னணியை முதல் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு பெண்ணை அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணோ, ஆணோ அடித்துவிட்டால் அது கிரிமினல் குற்றம். அதனை ஆண்களைக் கொண்ட பொதுவான காவல் நிலையத்தில் புகார் செய்தால், F.I.R. போட்டு அடியின் தன்மையைப் பொறுத்து கைதோ, விசாரணையோ நடக்கும்.
ஆனால் அதே பெண்ணை அடித்து மண்டையை உடைத்தவர் கணவராகவோ மாமியாராகவோ இருந்தால் பொதுக் காவல் நிலைய ஆய்வாளர் அதனை விசாரிக்கமாட்டார். இந்த அடி குடும்பப் பிரச்சனையாகக் கருதப்பட்டு மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அத்தகைய வழக்குகள் தான் மகளிர் காவல் நிலையத்திற்கு உரியவை.
அதே பெண் அந்த அடியில் இறந்து விட்டிருந்தால் அருகில் இருக்கும் பொதுக் காவல் நிலைய அதிகாரியே விசாரணை மேற்கொள்வார். அதனை மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பமாட்டார். பெரும்பாலும் இத்தகைய கொலை, தற்கொலை, பலாத்காரம் போன்ற வழக்குகள் பொதுக் காவல் நிலையத்தில், ஆண் அதிகாரிகளால் விசாக்கப்பட்டு, வழக்கு தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தரப்படுகின்றன. இந்த வழக்குகள் தான் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி, தண்டனை வழங்கப்படுவதாக செய்தித் தாள்களில் வரும் வழக்குகளாகும்.
இந்த இடத்தில் முக்கியமான கேள்வி ஒன்று எழக்கூடும். அப்படியானால் பெண் மீது நடைபெறும் வன்முறை குறித்த வழக்குகளை விசாரிக்கும் ஆண் அதிகாரிகள் அனைவரும் மிக நேர்மையாக விசாரணை நடத்தி குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தந்து விடுகிறார்களா? என்பதே அந்தக் கேள்வி. இதற்கான பதில் நடைமுறையில் நாம் அறிந்ததுதான். ஆனால் சரிபாதி வழக்குகளில் குற்றத்தை நிரூபிக்க அந்த அதிகாரிகள் மிகுந்த முயற்சி எடுக்கிறார்கள் என்பது உண்மை. பல்வேறு காரண காரியங்களுக்காக குற்றவாளிகளுக்கு சாதகமாக F.I.R. எனப்படும் முதல் தகவல் அறிக்கையில் இருந்து குற்றப்பத்திரிக்கை வரை குளறுபடிகள் நடப்பதும் உண்டு. அதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இப்படிப்பட்ட குறைபாடுகளால் பலப்பல பெண்களின் மரணங்கள் வயிற்று வலியால் தூக்குப் போட்டுக் கொண்டதாகவும், தீ வைத்துக் கொண்டதாகவும் எழுதி முடிக்கப்பட்டன. மேலும் கணவனும் அவர் குடும்பத்தாரும் அடிக்கிறார்கள் என்று காவல் நிலையத்திற்கு முறையிடச் செல்லும் ஒரு பெண். அங்கு விசாரணைக்காகக் காத்திருக்கும் பிக்பாக்கெட் முதல் கள்ளச் சாராயம், கஞ்சா, சந்தேகக் கேஸ் என பல் துறை மனிதர்களுக்கு நடுவில்தான் காத்திருக்க வேண்டும்.
முடிக்கப்படாத கொலை வழக்கு குறித்த மேலதிகாரியின் மெமோ, இரவு முழுவதும் ரோந்து, கள்ளச்சாராய சாவு, வாய் திறக்க மறுக்கும் திருடன், அமைச்சருக்குப் பாதுகாப்பு ஏற்பாடு, இத்தனைக்கும் நடுவில் வீட்டுக்காரர் தினமும் என்னை அடிக்கிறார் என்ற புகாரோடு நிற்கும் பெண்ணுக்கு அந்த அதிகாரி எவ்வளவு நேரம் செலவிடுவார்? அட ஏம்மா இதுக்குப் போய் போலீஸ் ஸ்டேஷன்ல வந்து நிக்கற. அனுசரிச்சுப் போம்மா, ஆம்பளன்னா அப்படிதான். ஒருநேரம் மாதிரியே எல்லா நேரமும் இருப்பானா? ஏதோ கோபம் வந்தா அடிக்கறதும் அப்புறம் சமாதானப்படுத்தறதும் சகஜம்தான், வீட்ல பெரியவங்க கிட்ட சொல்லும்மா என்று நன்மொழிகள் கூறிஅனுப்பி வைக்கப்பட்ட பெண்களே அதிகம். அடுத்த வாரம் அந்தப் பெண் வயிற்று வலி தாங்காமல் பூச்சிமருந்து குடித்ததாக முதல் தகவல் அறிக்கை எழுதும் போது, அவள் தன் முன் வந்து நின்றது அவருக்கு நினைவுக்கு வருமா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. சில நேரங்களில் கணவனை அழைத்து வரச் சொல் அறிவுரை கூறியும் (அடித்தும் கூட) அனுப்பிய அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
ஆனால் சமூகத்தின் மேல் ஜாதி மக்களிடம் (?) தொடங்கிய வரதட்சணை என்ற நோய் அவர்களது ஆதிக்கத்திலேயே இருந்த வானொலி, தொலைக்காட்சி நாடகங்களின் மூலமாக அனைத்து ஜாதியினரிடமும் பரவி, தொற்று நோயாகிவிட்ட சமூகச் சூழல், பெண் கொடுத்தால் போதும் என்ற மாப்பிள்ளை வீட்டாரே திருமணச் செலவுகள் செய்து கல்யாணத்தை பெண் வீட்டாரே நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து, அதன் பிறகும் மருமகள் கொண்டு வந்த சீரைக் குறை சொல்லி இடித்துப் பேசும் பழக்கமும், மாமனார் ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்தால் தான் மனைவியுடன் பேசிச்சிக்க முடியும் என்று முகத்தைத் தூக்கிய கணவர்களும் எண்ணிக்கையில் அதிகமாகத் துவங்கிய சூழல், மருமகளாய்ப் போன பெண்களுக்கு துன்பம், வேதனை, பாதுகாப்பின்மை, பெற்றோர் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலை, அதிகமாகியது.
இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில் கணவன் மனைவியை மட்டும் தனியே அழைத்து, பிரச்சினைகளைப் பேசி, தீர்வு காண்பதற்கு உரிய ஒரு அமைப்பு தேவையாக இருந்தது. சில மகளிர் இயக்கங்கள் பெண்களின் புகாரைப் பெற்று, கணவருக்குக் கடிதம் எழுதி வரவழைத்து சமரசம் செய்து வைத்தார்கள். பிரச்சினை புரிந்து கொள்வதில் இல்லை. பணத்தேவையில் தான் இருக்கிறது. அதை அடைவதற்காகத்தான் இந்தப் பெண் கொடுமைப்படுத்தப்படுகிறாள், என்று புரிந்து விட்டால் பணம், நகை, பொருள் இவற்றைக் குறியாக வைத்து, ஒரு பெண் மீது கொடுமை புரியும் கணவரும், அவர் குடும்பத்தினரும் சட்டப்படியான தண்டனையைப் பெற வேண்டும், என்றால் அதற்காக தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும் அதிகாரமுள்ள அமைப்பு தேவைப்பட்டது.
மேற்கூறிய இரண்டு காரணங்களோடு மூன்றாவதும் மிக முக்கியமானதுமான காரணம், பெண்களின் பிரச்சனைகளை ஆண்களால் மிக நுட்பமாகப் புரிந்து கொள்ள முடியாது. பெண்களே அதிகாரிகளாக இருந்தால் அவர்கள் பெண்கள் மீது அனுதாபத்துடனும் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டும் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையேயாகும். இந்த ஆலோசனைகளுக்கு அப்போது நல்ல வரவேற்பும் பெண்களிடம் இருந்து கிடைத்தது. எனவே முதன் முறையாக பெண்கள் மீது வரதட்சணை காரணங்களுக்காக நிகழ்த்தப்படும் கொடுமைகளை, விசாரித்து, நடவடிக்கை எடுப்பதற்காக வரதட்சணை தடுப்புப் பிரிவு “Anti Dowri” என்ற ஒன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைநகரங்களில் மட்டும் உருவாக்கப்பட்டது. அவற்றுக்கு பெண் ஆய்வாளர்கள் (Inspector) தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டனர். தொடங்கிய சில ஆண்டுகள் வரை இந்த வரதட்சணைத் தடுப்புப் பிரிவு மையங்கள் சிறப்பாகவே செயல்பட்டன. பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு அவர்களுக்குத் தேவையான பரிகாரங்கள் வழங்கப்பட்டன.
எப்பொழுது அதன் செயல்பாட்டில் சிக்கல்கள் முளைத்தன என்று பார்த்தால் நமது சமூக அமைப்பின் அடிப்படைச் சிக்கல்களும் புலப்படும். பாதிக்கப்பட்ட பெண்கள் பலர், வேகமாக வந்து புகார் கொடுத்து, கணவனையும் மாமியாரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விடுவார்கள். அங்கு வந்து பயந்து கைகட்டி நிற்கும் கணவனைப் பார்த்தவுடன், முதல் நாள் இருந்த வேகம் மறுநாள் இருப்பதில்லை. அடுத்து கணவனை தண்டித்து விட்டு எங்கு வாழ்வது? யாருடன் வாழ்வது? அடுத்தது என்ன விவாகரத்தா? அய்யய்யோ விவாகரத்து ஆனால் வாழாவெட்டி ஆகிவிடுவோமா? அண்ணன் மனைவி எப்படி நடத்துவாள்? தங்கைக்கு எப்படி திருமணம் நடக்கும்? வீட்டில் இப்படி வாழாத ஒரு பெண் இருந்தால் தம்பிக்கு யார் பெண் கொடுப்பார்கள்? மேலும் வயிற்றிலோ, கையிலோ ஒரு பிள்ளை இருந்தால் அதன் கதி என்ன? இப்படி வரிசையாய்க் கேள்விகளும், அறிவுரைகளும் ஆட்கொள்ள, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம், அறிவுரை மட்டும் கூறி அனுப்புங்கள் நான் சேர்ந்து வாழ்கிறேன் என்று அந்தப் பெண்ணே கேட்பதால் அதிகாரிகள் வேகமாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை.
அடுத்து, உண்மையிலேயே பணம் பறிக்கும் எண்ணத்துடன் திருமணம் செய்து, கொடுமைகள் புரிந்த கணவனுக்கு ஆதரவாக அரசியல், அதிகார சிபாரிசுகளால் உடனடி நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசலாம் என்று நடவடிக்கையை தள்ளிப் போடுதல், அதற்கிடையில் குற்றவாளி முன் ஜாமீன் பெற்று வருவார். அவரை கைது செய்யவும் முடியாது.
இவற்றைத் தவிர உண்மையிலேயே சிக்கல் வேறு எங்கோ இருக்க, கணவன் மனைவிக்கிடையில் எப்போதும் சண்டை மூட்டி விடும் மாமியார், நாத்தனார், அல்லது தனிக்குடித்தனம் போக வேண்டும் என்ற மனைவியின் ஆசையை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை, இப்படிப்பட்ட பிரச்சனைகளை முறையிடுவதற்கு இடம் இல்லாததால் அதையும் வரதட்சணை தடுப்புப் பிரிவிலேயே புகார் செய்ய வேண்டிய நிலை. அதற்காக மற்ற பிரச்சனைகளையெல்லாம் எழுதிவிட்டு மேலும் என்னை அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள் என்று ஒரு வரி சேர்த்துவிட்டால், வரதட்சணை செல் புகாரை ஏற்றுக்கொள்ளும். கணவன் வீட்டாரை அழைத்துப் பேசி சமரசமும் செய்வார்கள். ஆனால் வரதட்சணை தடுப்புப் பிரிவில் இருந்து அழைப்பு வருவதால் பயந்து போன கணவனின் குடும்பமும் கண்டிப்பாக ஒரு வழக்கறிஞருடன் தான் காவல் நிலையத்திற்கு செல்லும்.
இது குடும்பத் தகராறு, இதை எப்படி நீங்கள் விசாரிக்கலாம்? என்பதுதான் வழக்கறிஞரின் முதல் கேள்வியாக இருக்கும். சமரசம் பேசும் எண்ணத்துடன் அவர்களை அழைத்தாலும், அப்படி விசாரணைக்கு அழைக்கத் தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காக, இவங்க டௌரி கேட்டதாக அந்தப் பெண் புகார் சொல்லி இருக்கு சார் என்று காவல் அதிகாரி கூறிவிடுவார். அந்த கணவனின் குடும்பத்திற்கோ, தாங்கள் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த தொல்லைகள் எல்லாம் மறந்து போய், தாங்கள் கேட்காத வரதட்சணையை கேட்டதாகப் புகார் கொடுத்த மருமகள் மீது ஏற்படும் வஞ்சத்தை மட்டும் மனதின் மூலையில் வைத்துக் கொண்டு நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று விடுவார்கள். அதன் பிறகு என்ன நடக்கும் என்பது தனிக்கதை.
இன்னொரு வகையான சிக்கல் ஒன்று உண்டு. கணவன், மனைவிக்குள்ளும் தகராறு ஏற்பட்டு இரண்டு குடும்பங்களும் மோதிக்கொள்ளும் நிலையில் பெண்ணுக்குக் கொடுத்த நகைகளும், சீதனப் பொருட்களும் மாப்பிள்ளை வீட்டில் இருக்க, அதை விற்றே நான் கேஸ் நடத்துவேன்டி என்று கணவன் சவால்விட, எப்படியாவது என் பொருட்களை மீட்டுக் கொடுங்கள், என் தந்தை ரிட்டயர் ஆகி வாங்கிய மொத்தப் பணமும் அதில் தான் இருக்கிறது என்று மனைவி அழ, சரி நகை, பொருட்களை மீட்டுக் கொடுத்துவிட்டு காவல்துறை நடவடிக்கை வேண்டாம் என்று எழுதிவாங்கிக் கொண்டார்கள். தவறு செய்த கணவன் மீது நடவடிக்கை எடுக்காமல், பொருட்களை வாங்கிக் கொடுத்தால் போதுமா? சைக்கிள் திருடியவனிடம் இருந்து சைக்கிளை மீட்டு விட்டால், அவன் மீது திருட்டு வழக்கு போடமாட்டீர்களா? திருடியவனும், பறிகொடுத்தவனும் சமரசமாகப் போய்விட்டாலும் திருட்டு வழக்கு கிரிமினல் கோர்ட்டில் நடக்கும் அல்லவா? அப்படித்தானே இந்த வழக்கும். நாளை அவர்கள் சேர்ந்து போவார்களா இல்லையா என்ற கவலை காவல்துறைக்கு எதற்கு? உங்கள் கடமையை செய்ய வேண்டியது தானே? என்று பெண் தரப்பு வழக்கறிஞர்களும், மகளிர் இயக்கங்களும் போர்க்குரல் எழுப்பினர்.
வரதட்சணை கொடுமையை தடுப்பதற்காகத் தொடங்கிய காவல்துறைப் பிரிவு இத்தகைய சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டதால், வரதட்சணை, வீட்டில் வன்முறை என்று எந்தப் புகார் வந்தாலும், அதனை முறையாக விசாரித்து, ஆலோசனை கூறவும், அறிவுரை கூறவும், சமரசம் செய்யவும், தேவைப்பட்டால் கைது செய்து, விசாரணை, குற்றப்பத்திரிகை என்று வழக்கை தொடர்ந்து நடத்தி, தண்டனை பெற்றுத் தரவும் முழுமையான வசதிகளைக் கொண்ட ஓர் காவல்துறைப் பிரிவு தேவைப்படுவதை தமிழ்நாடு அரசு உணர்ந்தது. அதற்காக ஒவ்வொரு காவல்நிலைய அதிகார வரம்பிற்குள்ளும் ஒரு காவல்நிலையம் மகளின் குறைகளையும், குற்றச்சாட்டுகளையும் கேட்டு நிவர்த்தி செய்வதற்கும், புகார் கடுமையானதாக இருந்தால் கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உருவாக்கப்பட வேண்டும் என்று திட்டம் தீட்டப்பட்டது. முதல் காவல்நிலையமாக சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையம் திறக்கப்பட்டது. மாவட்டத்திற்கு ஒரு காவல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆய்வாளர் முதல் கடைநிலைப் பணியாளர் வரை அனைவரும் பெண்களாகவே நியமிக்கப்பட்டனர். “பெண்ணின் துயரத்தை பெண்ணே அறிவாள்” என்ற நம்பிக்கையுடன் துவங்கப்பட்டவை இந்த மகளிர் காவல் நிலையங்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் அந்தக் காவல் நிலையங்களின் இன்றைய நடப்பின் அவலம் புரியும்.
நோக்கம் சிறந்ததாகவும், நடைமுறை அதற்கு நேர் எதிரானதாகவும் இருக்கும்போது அதனால் ஏற்படுகிற பாதிப்புகள் யாருக்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டதோ, அவர்களுக்கே எதிராக அமையும் என்பதற்கு நமது அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அருமையான சான்றாகும். சீர்கேடுகள் துவக்கத்தில் இருக்கும் பொழுதே களையப்படாததால் இன்று மகளிர் காவல் நிலையங்களே பெண்களின் பிரச்சனைகளைத் தீர்க்காமல், மேலும் அவர்களுக்கு எதிரான தாக்குதலையும் நடத்துகின்றன.
பொய் வழக்குகள் கொண்டாட்டம் போடும் இக்காவல் நிலையங்களில் உண்மையான பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கிடைக்கும் நீதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள சில வழக்குகளை குறிப்பிடுகிறேன். படித்து விட்டுப் பதறாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
முதல் வழக்கை தமிழ்நாட்டின் தலை நகரத்தில் தான் தொடங்க வேண்டுமா என்ன? தேவையில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் வேடிக்கைகளை அறிந்து கொள்ள நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கோடு தொடங்குவோம்.
என் கணவரும் அவர் பெற்றோரும் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப் படுத்துகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடந்த நிகழ்ச்சிகளை எழுதி அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டு புகார் கொடுத்தார் ஒரு பெண்.
அவர் பெயர் கல்பனா என்று வைத்துக் கொள்வோம். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், புகாரைப் பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சியாக வழங்கப்படும் C.S.R என்ற ரசீதைக் கொடுக்கவே கல்பனாவை ஒரு வாரம் அலைய வைத்தார். பிறகு அவரது கணவரை அழைத்து சமரசம் பேசினார். இதில் கோளாறு என்னவென்றால், அந்தப் பெண் கொடுத்த புகார் மனு சமரசத்திற்கு இடமில்லாதது. கணவனைக் கைது செய்யக் கோருவது எனவே அப்பெண்ணிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி அதில் உண்மை இருப்பதற்கான ஆதாரம் இருந்தால் கணவனை கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லாத அந்தப் புகாரை வைத்துக் கொண்டு ஏன் அந்தப் பெண் அதிகாரி சமரசம் பேசினார் என்பது ஒரு புதிரான கேள்வி தான். எனவே அந்தப் பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனது புகாரை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்திரவிடுமாறு கோரினார். அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மீண்டும் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை (S.P.) அணுகிய கல்பனா, இப்படி ஒரு புகார் கொடுத்தார். அய்யா, நான் இன்ன, தேதியில் நாமக்கல் அனைத்து மகளிர் ஆய்வாளரிடம் இன்ன காரணங்களுக்காக என் கணவர் மீது புகார் கொடுத்தேன். ஆனால் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் என் புகாரை பதிவு செய்யவில்லை. எனவே உயர்நீதி மன்றம் சென்று புகாரை பதிவு செய்ய உத்தரவு பெற்று வந்துள்ளேன். அதனை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டிருந்தார்.
அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட S.P. அதிலேயே F.I.R. போடவும் என்று குறிப்பு எழுதி ஆய்வாளருக்கு அனுப்பினார். எஸ்.பி.யின் குறிப்புடன் தன் புகாரை எடுத்துச் சென்று நீட்டிய கல்பனாவை ஏற இறங்கப் பார்த்தார் பெண் ஆய்வாளர். F.I.R. போடனுமா? என்று கேட்டார். ஆமாம் என்றார் கல்பனா. சரி சாயங்காலம் வா. F.I.R. போட்டு வைக்கிறேன். Copy வாங்கிட்டுப் போ என்றார். ஒருவழியாக தன் புகார் முதல் தகவல் அறிக்கையாகப் போகிறது என்ற பரபரப்புடன் மீண்டும் காவல்நிலையம் சென்று F.I.R. நகலை வாங்கிப் பார்த்த கல்பனாவுக்கு சட்டப்படி F.I.R. எப்படி இருக்க வேண்டும் என்பது தெயாது. அந்த ஊ.ஐ.த. மீது குற்றப்பத்திகையும் தாக்கலாகி, விசாரணை, குறுக்கு விசாரணை எல்லாம் முடிந்து கல்பனாவின் கணவர் விடுதலை செய்யப்பட்டு விட்டார். தீர்ப்பையும் வழக்குக் கட்டையும் எடுத்து வந்து கல்பனா உயர்நீதிமன்ற வழக்கறிஞடம் கொடுத்தார். சரி வழக்கை தொடக்கத்தில் இருந்து படிக்கத் தொடங்கிய வழக்கறிஞருக்கு F.I.R. ஐப் பார்த்து பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது. அவருக்கு மட்டுமா அதிர்ச்சி? நமக்கும்தான். அந்த முதல் தகவல் அறிக்கை எப்படி எழுதப்பட்டிருந்தது என்றால் ஆய்வாளர், அவர்களுக்கு, நான் --- தேதியில் நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்களிடம் என் கணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்திருந்தேன். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவரை நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இதுதான் முதல் தகவல் அறிக்கை. அதாவது கல்பனா தன் கணவன் மீது கொடுத்த புகாரின் மீது F.I.R. போடாமல், ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று S.P. யிடம் கொடுத்த முறையீட்டை F.I.R. ஆக எழுதி பதிவும் செய்திருக்கிறார் பெண் ஆய்வாளர். தானே தன் மீதே F.I.R. எழுதிக்கொள்ளும் அதிகாரத்தை எந்த கிரிமினல் சட்டமும் ஒரு ஆய்வாளருக்கு வழங்கவில்லை. மேலும் எஸ்.பி. எந்தப் புகாரின் மீது F.I.R. போடச் சொன்னார், என்பது ஆய்வாளருக்குத் தெரியாததல்ல. தனது இந்த செயல் ஒழுங்கு நடவடிக்கைக்கும் (Disciplinary) உட்படுத்தப்படலாம் என்றும் ஆய்வாளருக்குத் தெரியும். எல்லாம் தெரிந்த அந்தப் பெண் ஆய்வாளர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்று விடை தெரிந்தும் கூறாதவர்களின் தலை வெடித்து விடும் என்று விக்ரமாதித்தன் புதிரா போட முடியும்?
அடுத்து சென்னையில் ஒரு முக்கியமான இடத்தில் அமைந்த அனைத்து மகளிர் காவல் நிலையம். அந்தக் காவல் நிலையத்திற்கு திருமணம் செய்து கொள்ள வருகிறது ஒரு காதல் ஜோடி. அந்த காதலன் ஒரு ரௌடி. பல வழக்குகளில் தொடர்புடையவன். அந்த காவல் நிலைய அதிகாரிகளுக்குப் பழக்கமானவன் போலும். அந்தப் பெண் நடைபாதையில் காய்கறி விற்கும் ஒரு ஏழைப் பெற்றோரின் மகள். அவன் ரௌடி என்பதாலும், ஏற்கனவே பல திருமணம் செய்தவன் என்று கேள்விப்பட்டும் பெற்றோர் எதிர்த்ததால் அவனுடைய அழைப்பை ஏற்று ஓடி வந்து காவல் நிலையத்திலேயே திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண்ணுக்கு 16 அல்லது 17 வயதுதான் இருக்கும்.
திருமணத்திற்குப் பிறகு அவனோடு குடும்பம் நடத்தியபோது தான் அவனது கொடூர குணம் அவளுக்குத் தெரிந்தது. மேலும் அவனை ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட ஒரு பெண் அவனது கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட செய்தியும் தெரிய வந்தது. தினமும் அடி உதையைத் தாங்க முடியாமல், திருமணம் செய்து வைத்த மகளிர் காவல் நிலையத்திலேயே போய் முறையிட்டாள். அங்கிருந்த பெண் காவலர்கள் சிரித்துப் பேசியபடி, சரி சரி நாளைக்கு அவனைக் கூப்பிட்டு விசாரிக்கிறோம். நீ போய் எங்க நாலு பேருக்கும் டிபன் வாங்கிட்டுவா, என்று சொல்லி அனுப்பினார்கள். தன் காசில் அவர்களுக்கு டிபன் வாங்கிக் கொடுத்தாள், அந்தப் பெண். டிபன், பிரியாணியாகலாம், ஒரு குயர் பேப்பராகலாம், வடையும் டீயுமாக மாறலாம். புகார் மட்டும் பதிவாகவில்லை.
பெற்றோரிடமும் திரும்பிச் செல்ல மனமில்லாமல் தன் தோழியின் வீட்டில் தங்கியிருந்த அந்த ஏழைப் பெண் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்டாள். பெண்ணின் மரணச் செய்தி கேட்டு ஓடிப்போய் அவள் பிணத்தை வாங்கி அடக்கம் செய்த அப்பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அலைந்து தங்கள் மகள் சாவின் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஒருவழியாக அவர்கள் கைக்கு முதல் தகவல் அறிக்கை வந்தது. அதில் என்ன எழுதப்பட்டிருந்தது தெரியுமா? அந்த பெண் கணவரிடம் சண்டை போட்டுக் கொண்டு பெற்றோரிடம் திரும்பி வந்ததாகவும், அவர்கள் அந்தப் பெண்னை சேர்த்துக் கொள்வதற்குத் தயங்கி தெரிந்தவர்கள் வீட்டில் தங்க வைத்ததாகவும், அதனால் மனம் உடைந்த அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆக இந்த முதல் தகவல் அறிக்கையின்படி தற்கொலைக்குத் தூண்டியதாக பெண்ணின் பெற்றோர் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவற்றைவிட, அதிர்ச்சியூட்டக்கூடிய வழக்கு ஒன்றும் சென்னையில் மற்றொரு முக்கிய காவல் நிலையத்திலேயே நடந்தது. அதையும் தெரிந்து கொண்டால் மகளிர் காவல் நிலையங்களின் போக்கைப் புரிந்து கொள்ள முடியும்.
ஒரு டாக்டர் மாப்பிள்ளை, கார் வாங்கித் தரக் கேட்டு மனைவியை அடித்தார். அடித்த அடியில் மனைவியின் வயிற்றில் இருந்த கரு சிதைந்தது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை பார்த்துக் கொள்ள மாலை 7 மணிக்கு டாக்டர் மாப்பிள்ளை சென்றார். தான் டாக்டர் என்றும், நோயாளிக்கு அருகில் அதே கட்டில் படுத்துக் கொள்வேன் என்றும், தரையில் படுக்க முடியாது என்றும் தகராறு செய்தார். அவரது நடத்தையிலும் பேச்சிலும் சந்தேகப்பட்ட மருத்துவர்களும், நர்சுகளும் அவரிடம் பேசிப் பார்த்ததில் அவர் உண்மையான M.B.B.S. பட்டம் பெற்ற டாக்டராக இருக்க முடியாது என்று உறுதியாகக் கூறினார்கள். மருத்துவமனையில் இருந்து வீடு வந்த மனைவி புலனாய்வு செய்ததில் டாக்டர் மாப்பிள்ளை ஒரே ஒரு ஆண்டு மருத்துவக் கல்லூரியில் படித்து போலி ஜாதிச் சான்று கொடுத்ததால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டவர் என்ற உண்மை தெரிய வந்தது.
அந்தப் பெண்ணும் அருகில் இருந்த மகளிர்காவல் நிலையத்திற்குச் சென்று தன் கணவர் ஒரு போலி டாக்டர் என்றும், மருத்துவத் தகுதியில்லாமலே கிளினிக் நடத்துகிறார், என்றும் பொய் சொல்லி தன்னைத் திருமணம் செய்து கொண்டு பெற்றோரைக் கேட்டு கார் வாங்கி வரச்சொல் அடித்துக் கொடுமைப்படுத்துகிறார் என்றும் அதனால் தனக்கு அபார்ஷன் ஆகிவிட்டது என்றும் புகார் கொடுத்து அதற்கான ஆதாரங்களையும் கொடுத்தார். அந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட பெண் ஆய்வாளர் அந்தப் போலி டாக்டரை வரவழைத்து, தனியே பேசினார். அதன் பிறகு புகார் கொடுத்த மனைவியை அழைத்து அவர் இனிமே உன்னை நல்லா வச்சுக்குவார். நீ போய் அவருடன் வாழு என்று அறிவுரை கூறினார். மனைவியோ அதைப் பிடிவாதமாக மறுத்து கணவனைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தினார்.
கணவர் சேர்ந்து வாழ விரும்பியும் மனைவி ஒத்துழைக்க மறுப்பதாகக் கூறி அந்த வழக்கை ஆலோசனைக்கு (Counselling) அனுப்பினார் பெண் ஆய்வாளர். மனம் வெறுத்துப் பேசிய அந்தப் பெண்ணை கடிந்து கொண்டு ஊர்ப் பிரச்சனை உனக்கெதற்கு (போலி டாக்டராக இருப்பது) உன் வாழ்க்கையைப் பார் என்று அறிவுரை வேறு. கடைசியாக ஏழு மாதம் கழித்து அந்தப் பெண் கமிஷனரிடம் முறையீடு செய்த பிறகு அந்தப் போலி டாக்டர் வேறு காவல் நிலைய அதிகாரிகளால் தான் கைதுசெய்யப்பட்டார். அந்த ஏழு மாதத்தில் அந்தப் போலி டாக்டரால் எத்தனை ஏழை மக்கள் பாதிக்கப்பட்டார்களோ என்ற கவலைகூட அந்த மனைவிக்குத்தான் இருந்தது. காவல்துறை பெண் அதிகாரிகளுக்கு இல்லை.
தனது இலக்கை அடைய பொய் சொல்வதிலும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி நல்லவர்களைத் தண்டிப்பதிலும், உதவி தேவைப்படும் பாதிக்கப்பட்டவர்களை மேலும் தானும் சேர்ந்து ஒடுக்குவதிலும் பெண்களும் ஆண்களைப் போலவே நடந்து கொள்கிறார்கள் என்பதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது.
இந்த நிலையை மாற்ற என்ன வழி? விசாரணை அதிகாரத்தை பெண் அதிகாரிகளிடம் இருந்து மாற்றலாமா? ஒவ்வொரு புகாரையும் ஒரு சமூக அக்கறையுள்ள மகளிர் அமைப்பினரை விசாரிக்கச் சொல்லி அதன் உண்மை தன்மை அறிந்து நடவடிக்கை எடுக்கச் சொல்லலாமா? அதேபோல தனக்கும் கணவனுக்கும் உள்ள பிரச்சனைகளை முறையாகப் பேசி தீர்த்துக் கொள்வதற்குப் பதிலாக தங்கள் பிரச்சனைக்குத் தொடர்பில்லாத கணவனது தாய், தந்தை உடன்பிறந்தவர்கள் மீது பொய்ப் புகார் கொடுப்பது, நாளை தன் திருமண உறவையே முறித்துவிடும் என்பதை அந்தப் பெண்கள் புரிந்து கொள்ளும்படியாக ஆலோசனைகள் வழங்க வேண்டுமா? என்றெல்லாம் சிந்திப்பது இதற்கான ஒரு தற்காக தீர்வைக் கொடுக்கும்.
இவையாவும் மேலோட்டமான தீர்வுகளே. உண்மையான சிக்கல் புதைந்து கிடப்பது, நமது சமூகத்தின் சமனற்ற அமைப்பில்தான். பெண்ணின் சிப்பு, உணவு, நடை, படிப்பு என ஒவ்வொன்றையும் எடை போட்டு நிறுத்தி, உத்தரவு போடும் சமூகத்தை எதிர்ப்பதற்கு இதை ஒரு ஆயுதமாகக் கையாளுகிறார்களோ என்று தோன்றுவதும் இயற்கையே. வலியோர் சிலர் எளியோர்தமை வதையே புகுவதா? என்ற புரட்சிக் கவிஞன் பரிதாபத்துக்குரியவர்களாக ஆண்களையும் பார்க்கும் போது முதல் வியப்பே மேலோங்கி நின்றது. பெண்களுக்கு நமது சமூகம் செய்த, செய்து வருகின்ற கொடுமைகளின் எதிர்வினையாகவும், தலைமுறை தலைமுறையாக அடிமனதில் தேங்கி விட்ட கசப்பின் வெளிப்பாடாகவும், தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு சிலரை துன்பப்படுத்தினால் தவறில்லை என்ற மனப்போக்காகவும் மாறி வருவதை நடைமுறையில் உணர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது. 80 வயதைத் தாண்டிய தாத்தா பேத்தியின் மகளது திருமணத்தைப் பார்க்க ஆசைப்படுகிறார். அது வாழ்நாளை நீட்டித்துக் கொள்ளும் ஆசையின் ஒரு வழி. காரணம் வாழ்க்கை ஆண்களுக்கு அவ்வளவு சுவைக்கிறது. ஆனால் 50 வயதைத் தாண்டாத பல பெண்கள் மரணம் என்பதை தலையணைக்குப் பக்கத்தில் வைத்த தண்ணீர் செம்பைப் போல் கருதுகிறார்கள். எந்த நிமிட தாகத்திலும் அதைக் குடித்து விட அவர்கள் தயார். ஏன் இந்த நிலை என்று நினைக்கிறோமா?
மேலும் சில இயற்கையான, நேர்மையான கேள்விகளையும், உணர்வுகளையும் எதிர்கொள்ள மறுக்கிற சமுகத்திடம் தன் கோபத்தை எப்படி ஒரு பெண் வெளிப்படுத்துவாள். என் கணவர் என்னுடன் உறவு கொள்ள மறுக்கிறார். என்று வெளிப்படையாக ஒரு புகார் எழுதிக் கொடுக்க முடியாத போது என் கணவன் தாய் எங்களை தனிமையில் இருக்க விடுவதில்லை என்று புகார் எழுதுகிறாள். பல நேரங்களில் பெண்களின் கோரதாண்டவத்தை ஆண்கள் எதிர்கொள்ள முடியாததற்குக் காரணமும் பெண்களைப் பற்றி சமூகத்தின் சுய விருப்பமாக (Wishful thinking) கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பங்களே ஆகும். பெண்ணின் இயல்பான மனித வெளிப்பாட்டை சந்திக்க பயந்து கொண்டுதான் அவள் நல்லவள், நல்லதை மட்டும் நினைப்பாள், தியாகம் செய்வதை பெருமையாக நினைப்பாள், உடல் இச்சையை வளர்த்துக் கொள்ள மாட்டாள், ஆனால் ஆணுக்குத் தேவைப்படும் போது தன் உடம்பை படையடுவாள்.
அவளுக்குக் கோபம் வரும். ஆனால் கருணையால் அதை வென்று விடுவாள். குழந்தைகளை கணவன் புறக்கணித்தாலும், அவள் குழந்தைகளை விட்டு வேறொருவருடன் செல்ல மாட்டாள். என்றெல்லாம் இனிப்பு பூசிய அறிவுரைகள் பெண்ணின் பிறப்பில் இருந்து அவளை சுற்றிச் சுற்றிப் பின்னப்படுகின்றன. அதனை அறுத்துக்கொண்டு வெளிவரவும், நானும் உன்னைப்போல, அவரைப்போல் அன்பும், வெறுப்பும், ஆசையும், கோபமும் கலந்த மனிதப் பிறவிதான் என்பதை சொல்வதற்கும் தன்னைப் போன்ற மனித இனத்தில் மறுபாதி அதன் தேவைகளுக்காக தன்னை ஆட்டி வைப்பதை எதிர்ப்பதற்கும் வழியில்லாததால், பெண்களின் கோபமும் தாறுமாறாக வெளிப்படுகிறது. அத்தகைய தவறான வெளிப்பாடுகளால் பாதிக்கப்படும் நல்லவர்களுக்காக இரங்கும் நம் மனம் ஒட்டு மொத்தமாக பெண்கள் மீது திணிக்கப்பட்ட நிபந்தனைகளையும், ஒரு வழிப்பாதை ஒழுக்க நியதிகளையும் முறையான ஆய்வுக்கு உட்படுத்துவதே சயான தீர்வை நோக்கி சமூகத்தை இட்டுச் செல்லும்.
மகளிர் காவல் நிலைய குளறுபடிகளுக்கு தற்காகமாக வைக்கப்படும் மாற்று ஆலோசனைகள் நீண்ட நாட்களுக்கான பயனைத் தராது. ஏனெனில் பொய் வழக்குகளுக்கான மூலமும் அதனை கையாளும் பெண் அதிகாரிகளின் மனமும் ஆண்களின் உலகத்தில் வடிவமைக்கப்பட்டவையே. “பிறவி பேதத்தை ஒழிப்பதே மனிதர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு” என்று தந்தை பெரியார் சொன்னதை சரியான பொருளில் ஆய்வு செய்வதற்கான சமூக நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது. உண்மைகளை சிந்திக்கவும், பேசவும், கேட்கவும் நம் மனங்கள் பக்குவப்படட்டும். அதற்கு இதுவே சரியான தருணம்.