“ஒரு மருத்துவர் மனித உயிரை ஒருபொருளாக மட்டுமே கருதி, தன்னை ஒரு தொழில்நுட்ப நிபுணராகக் கருதும்போது மருத்துவ விஞ்ஞானத்தின் உண்மையான பொருள் காணாமல் போய்விடுகிறது”.

 “மருத்துவத்துறையின் மைய லட்சியமாகப் பெருந்தன்மை இருக்க வேண்டும்”.

 “மருத்துவ முன்னேற்றங்கள் நம்மை விந்தைக்குள்ளாக்கும் அதே நேரத்தில் மேலைநாட்டு நிபுணர்கள் கூட கிழக்கத்திய ஞானத்தின் அடிப்படையில் ஒரு முழுமையான பார்வையோடு சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். பெருவாரியான மருத்துவப் பிரச்சினைகளை அணுக வேண்டியி ருப்பதால் வருங்கால மருத்துவம், மரபுவழி மருத்துவத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அவர்கள் மென்மேலும் உணரத் தலைப்பட்டு விட்டார்கள்”.

 “இந்தியாவின் ‘பிராணா’ மற்றும் சீனாவின் ‘சீ’ (chi) ஆகிய தத்துவங்கள் நுட்பமான சக்திகளைக் குறிக்கும் மரபுவழிச் சொற்றொடர்களாகும். இவைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை நோயை உற்பத்தி செய்கின்றன. கிழக்கத்திய ஞானம் தனிநபரை இடம், காலம் இவற்றுக்கு உட் பட்ட ஓர் உயிரற்ற பொருளாகவோ, சடமாகவோ கருதுவதில்லை. சக்தியில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்களாகவே மனிதனைக் கருதுகிறது. பிரபலச் சிந்தனையாளர்கள், நோயாளியை ஒருமுழுமையான தனி மனிதனாகக் கருதவேண்டிய அவசியத்தை உணரத் தொடங்கியுள் ளனர்”.

 நமது மாண்புமிகு முதல்வர். ஜெயலலிதா அவர்கள் 27-12-1993 அன்று சென்னையில் நடைபெற்ற இந்திய, அறுவைச்சிகிச்சை மருத்துவர்கள் மாநாட்டில் ஆற்றிய உரையின்போது சுட்டிகாட்டிய கருத்துக்களே இவை.

 இந்திய மருத்துவங்கள் மற்றும் உலகளாவிய மாற்றுமருத்துவங்கள் மீது இத்தகைய ஆழமான புரிதலும் நேசமும் கொண்டுள்ள முதல்வர் அவர்கள் சித்தமருத்துவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் காலியிடங்களை நிரப்பியும், புதிய பணியிடங்களை உருவாக்கியும் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

 ஆனால் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி புறக்கணிக்கப்பட்டது ஏன்? சிறுநீரக நோய்கள், புற்றுநோய், கர்ப்பப்பை நோய்கள் உட்பட 52 நோய்களுக்கு அலோபதியில் தீர்வு இல்லை; ஆனால் மாற்றுமருத்துவங்களில் சிறந்த தீர்வு உண்டு. இந்நோய்களுக்கு இன்றைய காப்பீட்டுத் திட்டத்தால் என்ன பயன்? நோய்களை உள்ளமுக்கி ஆபரேசன் நோக்கி இட்டுச்செல்லவே இது உதவும். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து காப்பீட்டுத் திட்டத்தை மீட்டு அரசு நிறுவனத்திடம் ஒப்படைத்த முதல்வர் இந்திய மருத்துவங்களுக்கும் காப்பீட்டுத் திட்டம் பயன்படச் செய்யாதது ஏன்?

 பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியிலும், நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியிலும் உள்கட்டமைப்பை மேம்படுத்திட உரிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்திட ஏராளமான ஏழை, நடுத்தர குடும்பத்து மாணவர்கள் இந்திய முறை மருத்துவர்களாய் மலர செய்திட பாராமுகம் ஏன்? இவ்வளவு தாமதம் ஏன்?

 அரசு சித்தா, ஆயுர்வேதா கல்லூரிகளில் முதலாமாண்டுக்கு மாணவர் சேர்க்கை முடிந்து ஆறேழு மாதங்கள் ஓடியும் வகுப்புகள் துவங்க முடியாதபடி மத்திய கவுன்சிலின் உத்தரவு அமைந்துள்ள நிலையில் அந்த மாணவர்கள் தொடர்ந்து துயரத்தோடு போராடி வரும் நிலையில் முதல்வர் அவர்கள் உறுதியான முடிவு மேற்கொண்டு உடனடியாக இக்கல்லூரிகளின் முதலாமாண்டு வகுப்புகள் திறக்க நடவடிக்கை எடுத்து அன்று (1993-ல்) முழங்கிய கருத்துக்களை இன்று நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே பொதுஜன எதிர்பார்ப்பு.

Pin It