தமிழகத்தில் அழகுக்கலை நிலையங்களுக்குப் போட்டியாக புற்றீசல் வேகத்தில் அக்குப்பங்சர் மையங்கள் தோன்றி வருகின்றன. சிகிச்சை மையங்கள் துவங்கிய கையோடு பயிற்சி மையங்களும் சேர்த்தே துவங்குகின்றனர். சில நூறு நோயாளிகளுக்குக் கூடச் சிகிச்சையளித்த அனுபவமில்லாத நிலையில் வெறும் ஏட்டறிவோடு மற்றவர்களுக்குப் பயிற்சியளிக்கத் தயாராகின்றனர். இவர்களில் பலர் (வேறு சிகிச்சைமுறைகளில்) அரசு பதிவு எதுவும் இல்லாத போதிலும் பெயருக்கு முன்பு ‘டாக்டர்’ பட்டம் தாங்களாகவே போட்டுக் கொள்கின்றனர். இவர்களிடம் பயிற்சி பெறுபவர்களும் இதே போல செயல்படுகின்றனர்.

 சீன மரபு மருத்துவம் என்பது ஆறு கூறுகள் அடங்கியது. அவற்றில் பிரதானமானவை அக்குப்பங்சரும், சுதேசி மூலிகை மருத்துவமும். தாவோயிசம் தான் அக்குப்பங்சரின் அடிப்படை. 15 ஆம் நூற்றாண்டுக்கு பின் காலனியாட்சி மூலம் சீனாவில் ஆங்கில மருத்துவம் அறிமுகமானது. சீன சுதந்திரத்திற்கு கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கினர். வெறும் அதிகார மாற்றத்தை மட்டுமின்றி அரசியல் முதல் மருத்துவம் வரை அனைத்துத் துறைகளிலும் காலனியாதிக்கச் சுவடுகளை அழிப்பதில் இவர்கள் முனைப்பு காட்டினர். விளைவாக 1949ல் சுதந்திரம் பெற்றபின் ஆங்கில மருத்துவத்தையும் சீனப் பாரம்பரிய மருத்துவத்தையும் ஆய்வுப் பூர்வமாக இணைத்து ‘உலகின் முதல் ஒருங்கிணைந்த மருத்துவ’ முயற்சியை நிறைவேற்றினர். 6 லட்சம் வெறுங்கால் மருத்துவர்களை உருவாக்கினர். சீனாவில் நோயாளிகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டு என்ன சிகிச்சை என மருத்துவர்கள் முடிவு செய்கிறார்கள்.

 ஆனால் இந்த சரித்திரப் பின்னணி அறியாத பெரும்பாலான அக்குபங்சர் மருத்துவர்கள் அவரவர் வசதிக்கேற்ப, தர்க்க அறிவுக்கேற்ப அக்குபங்சரின் தத்துவம், சிகிச்சை நடைமுறை குறித்து குழப்பமான தனித்தனி வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்; பயிற்றுவிக்கின்றனர். அக்குப்பங்சர் சிகிச்சை என்ற பெயரில் எந்த வித உடல்ரீதியான சிகிச்சையும் செய்யாமல் பிரார்த்தனை மூலம் சிகிச்சையளிப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்து உயிரோடு விளையாடும் மோசடிகளும் நடக்கின்றன.

 திருவிழாக்களிலும், கோவில் தலங்களிலும் கூட அக்குப்பங்சர் சிகிச்சை முகாம் நடத்தலாம். ஆனால் சிகிச்சை முகாம் எனும் பெயரில் வழிபாடு நடத்துவது ஏற்கத்தக்கதா? இவர்கள் பயின்ற அக்குப்பங்சர் பயிற்சிக்கல்வியின் பயன்தான் என்ன?

 சில அக்குப்பங்சர் மருத்துவர்கள் ஆங்கில மருத்துவம் பற்றி விமர்சிக்க மறந்தாலும் சக அக்குப்பங்சர் மருத்துவர்களை விமர்சிக்க மறப்பதில்லை. இவர்களின் பிரதானமான, அபத்தமான, ஆபத்தான குற்றச்சாட்டு, “ஒரே ஒருவிரலால் ஒரே ஒரு வினாடி மட்டும் சிகிச்சை தரவேண்டும். வேறு எவ்விதத்தில் சிசிச்சையளித்தாலும் அவர் அக்குப்பங்சரிஸ்ட் இல்லை. மூலிகை மருந்து அல்லது வேறு மருந்து பரிந்துரைத்தால், ஆய்வுக்கூடப் பரிசோதனைகளைப் பயன்படுத்தினால், ஏதேனும் கருவிகளை பயன்படுத்தினால் அவர் அக்குப்பங்சரிஸ்ட் இல்லை”. இத்தகைய தீவிர அடிப்படை வாதங்களால் பாதிக்கப்படுவது நோயாளிகளே. எத்தகைய நோய் நிலையிலும் எந்த மருத்துவத்தின் துணையும் நாடக்கூடாது என்பது மனிதநேயமற்ற கொடூரம் அல்லவா?

 ஹோமியோபதியில் நோயாளியின் தனித்துவம் காணமுடியாத சூழலில், நோயின் முற்றிய நிலையில் அறுவைச் சிகிச்சையை பரிந்துரைக்கிறார் டாக்டர் ஹானிமன். சீன மருத்துவத் துறையிலும் அறுவைச் சிகிச்சை இத்தகைய நிலையில் அனுமதிக்கப்படுகிறது. இங்குள்ள சில அக்குபங்சர் நண்பர்கள் அறுவைச் சிகிச்சை நிலை எது என அறிய முடியாமலும், அறிந்தாலும் அனுமதிக்க முடியாமலும் உயிரோடு விளையாடுகின்றனர். முற்றியநிலை நோயாளிகள் கூட அக்குப்பங்சரில் சில புள்ளிகளை மட்டும் கற்று தங்களின் இருதயநோயை, நீரழிவை, சிறுநீரக செயலிழப்பை தாங்களே குணப்படுத்திக் கொள்ளலாம் என்று தவறான பிரச்சாரம் செய்கின்றனர்.

 இன்றைய உலகின் முன் உள்ள பிரதான பிரச்சனை “அக்குப்பங்சரில் எது சரியான முறை?” என்பது அல்ல. இரண்டாம் உலகப் போரின் போது உலக நாடுகளின் முன்பு “நீங்கள் யுத்தத்தின் பக்கமா? சமாதானத்தின் பக்கமா?” என்ற கேள்வி எழுந்தது. அதேபோல இப்போதைய உலகமய நெருக்கடிச் சூழலில் மருத்துவம் குறித்து உலகின் முன் உள்ள கேள்வி “ஆங்கில மருத்துவமா? மாற்று மருத்துவமா?” என்பது தான். மாற்றுமருத்துவத்தின் தந்தை காலஞ்சென்ற டாக்டர் சி.அப்துல்லா சேகு அவர்கள் பல கூட்டங்களில் “நோயுள்ள மனிதனை பக்க விளைவு இல்லாமல் நலப்படுத்த எந்த முறையையும் நாம் கடைப்பிடிக்கலாம். Cure is important; not the system என்று அனுபவச் சாரமாய் குறிப்பிட்டதை அக்குப்பங்சர்துறையினர் நினைவிற் கொள்ள வேண்டும். “ஆயிரம் உண்டிங்கு ஜாதி! எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி?” என்ற குரல் மாற்றுமருத்துவத் துறைக்குள் ஓங்கி ஒலிக்க வேண்டும். மாற்று மருத்துவங்களின் தன்மை அறிந்து, மேன்மை அறிந்து, எல்லை அறிந்து மக்களுக்குச் சேவையாற்ற முன்வர வேண்டும். இதுவே காலத்தின் அழைப்பு.

Pin It