மோகன்ராசு...நேற்றுவரை நம்மோடு உண்டு உறங்கி உரையாடி நம்மையெல்லாம் இயங்கச் செய்து இயங்கி வந்தவர்; இயக்க நெருக்கடிகள் தொடங்கி, தம் சொந்த நெருக்கடிகள், தோழர்தம் நெருக்கடிகள் அனைத்தையும் புன்முறுவலோடு எதிர்கொண்டு முன் நகர்ந்தவர்; இயக்கத் தோழர்கள் மட்டுமல்லாது மாற்று அமைப்புத் தோழர்களையும் தம் மாசற்ற அன்பால் அணைத்துச் சென்றவர்; தலைமைப் பண்பிற்குத் தனிப் பெரும் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தவர்; எதற்கும் அஞ்சாத, அச்சம் என்ற ஒன்றையே அறியாதவர்; எந்த நிலையிலும் சொந்த நலனை முன்னிறுத்தாமல் பொதுநலனையே முதன்மைப்படுத்திச் செயல்பட்டவர்; எதிரிக்குக் கூடத் தீங்கு நினைக்காத, அவனும் திருந்த வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்ட பண்பாளர்; அந்த வகையில் அரசியலுக்கு அப்பால் அவர் மனிதருள் மாமனிதர். அந்தப் பண்பே அவருக்கு எதிரியாகி அவரை வீழ்த்திவிட, இன்று நம்மிடையே இல்லாமல் மறைந்து போனார்.

அந்தக் கம்பீரமான வீரத்திரு உருவத்தையும், புன்னகையே மாறாத அந்த அழகிய முகத்தையும் இனி நாம் காண முடியாது; ‘தோழரே’ என்று அன்பு தோய்ந்து விளிக்கும் அந்தப் பாசக்குரலை இனி நாம் கேட்க முடியாது. நினைத்தாலே நெஞ்சு விம்மி விம்மி வெடித்துச் சிதறி விடும் போலிருக்கிறது; ஆறாத் துயரம் நெஞ்சைப் பிழிகிறது.

எளிய உழைப்பாளர் குடும்பம் ஒன்றில் பிறந்த மோகன்ராசு, பள்ளிக்கூட வாசனையைச் சிறிதளவே நுகர்ந்து, தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, பல்லாயிரக்கணக்கான பாட்டாளிகளுக்கு வழி காட்டும் தோழனாகவும் தலைவனாகவும் உயர்ந்து நின்றார். தமிழ்த் தேசியக் களத்திலும் சாதி ஒழிப்புப் போரிலும் முன்னணியில் நின்றார். தமிழகம் தழுவிய செயற்பாட்டாளராகவும் தலைவராகவும் அவர் வளர்ந்து வந்த நிலையிலேயே வஞ்சகமாக வீழ்த்தப் பட்டுள்ளார்.

அதிகார ஆற்றல்கள் எப்பொழுதுமே விழிப்போடும் எச்சரிக்கையோடுமே உள்ளன; தம்மை வீழ்த்த வல்ல ஆற்றல்கள் எவை என்பதைக் கூர்ந்து கவனித்தவாறே உள்ளன; அவற்றை எளிதில் அடையாளம் கண்டு கொள்கின்றன. அப்படி அடையாளம் கண்டு சாய்க்கப்பட்டவர்தாம் நம் தோழர் மோகன்ராசு.

எந்த வகையான ஊசலாட்டங்களுக்கும் இடங்கொடுக்காமல் ஒருபுறம் அரசியல் இயக்கத்தையும் மறுபுறம் தொழிலாளர் இயக்கத்தையும் வலுவாக அடித்தளமிட்டு அமைத்து வளர்த்து வந்தார். இடையிலே தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்திற்குத் தலைமை தாங்கியவராலேயே இடையூறு வந்த பொழுது அதனைத் திறமையாக எதிர்கொண்டு முறியடித்து இயக்கத்தை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தினார். தோழமை இயக்கமான தமிழக மக்கள் விடுதலை முன்னணியோடு அரசியல் வல்லாண்மையுடன் கலந்துரையாடி புதிய இயக்கத்திற்குக் கால்கோளிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். இச்சூழலில்தான் சூழ்ச்சிக்கு இரையாகிப் போனார் நம் தோழர்.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஈரோட்டு மண் எப்பொழுதுமே சூறாவளி சூல் கொள்ளும் மண்ணாகவே இருந்து வந்துள்ளது. அங்குத் தோன்றிய பெரியார் என்னும் பெருஞ்சூறாவளி தமிழ்நாட்டு வரலாற்றையே புரட்டிப் போட்டதை நாம் அறிவோம். இப்பொழுது அங்கே சமூகநீதித் தமிழ்த்தேசிய அரசியல் என்னும் இன்னொரு சூறாவளி மோகன்ராசு என்கிற இளைஞர் உருவத்தில் சூல் கொள்ளத் தொடங்கியிருந்தது. இதைச் சரியாகவே அறிந்து கொண்ட அதிகார வானிலையாளர்கள் அஞ்சி நடுங்கி கோழைத்தனமாக மோகன்ராசுவின் மூச்சை நிறுத்தியுள்ளனர்.

மேலே சொல்லப்பட்டவை எதுவும் வெற்றுணர்ச்சியில் மிகையாக விளம்பியவை அல்ல. கடந்த பத்து இருபது ஆண்டுகளாக மேற்கு மண்டல அரசியலை, குறிப்பாக ஈரோடும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து வருவோருக்கு இது தெளிவாகப் புரியும். வீரஞ்செறிந்த ஓன்கார் தொழிற்சங்கப் போராட்டம் இதுவரை சங்கமாக ஓரணியில் திரளாத விளிம்புநிலைத் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது; தமிழகத் தொழிலாளர் முன்னணியின் கீழ் இயங்கிய சங்கங்களில் அவர்கள் விரைந்து அணிதிரளத் தொடங்கினர். தொழிலாளர்களைப் பொருளாதாரக் கோரிக்கைகளின் கீழ் மட்டும் ஒன்று திரட்டாமல் அவர்களை அரசியல்படுத்தவும் தொடங்கியது மோகன்ராசு தலைமையிலான சமூகநீதித் தமிழ்த்தேசிய அரசியல் தலைமை. மாவீரர்நாள் நிகழ்வுகள் தொடங்கி கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம், சாதி அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் என அனைத்து அரசியல் நிகழ்வுகளிலும் ஆண் பெண் வேறுபாடின்றி குடும்பம் குடும்பமாகத் தொழிலாளர்கள் கலந்து கொள்கின்றனர். தொழிற்சங்கங்கள் சமூகநீதித் தமிழ்த்தேசியப் புரட்சிக்கான விதை நிலங்களாக மாறி வந்தன.

அரசியல் தளத்தில் மோகன்ராசுவின் தலைமையிலான ஈரோடு மாவட்டத் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் மாற்றங்களுக்காகப் போராடும் அனைத்து அமைப்புகளுடனும் கூட்டாக இணைந்து போராட்டங்களை முன்னெடுத்தது. தமிழ்நாட்டிலேயே கூட்டியங்களுக்கான ஆகச்சிறந்த முன்னெடுத்துக் காட்டாய் ஈரோடு விளங்கியதென்றால் அதன் முழுப்பெருமையும் தோழர் மோகன்ராசுவையே சேரும். தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தில் சிக்கல் தோன்றிய பொழுது அமைப்புக் கலகலத்து விடும் என்று கனவுப்பால் குடித்தவர்கள் வாயில் மண் போட்டார் தோழர். இயக்கம் அவர் தலைமையில் முன்னிலும் கட்டுக்கோப்பாக ஒன்றுபட்டதுடன் அடுத்த பாய்ச்சலையும் கண்டது. தமிழக மக்கள் விடுதலை முன்னணியோடு இணைந்து தமிழ்த்தேசியக் குடியரசு இயக்கம் என்ற புதுப்பிறப்பிற்கு முழுச்சூத்திரதாரியும் அவரே! இந்தப் பின்புலத்தில்தான் தோழரின் படுகொலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பல எதிர்காலக் கணக்குகளுடன்தான் படுபயங்கரமான இப்படுகொலையைத் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளது ஆளும் அதிகார வர்க்கம். ஒன்று, இக்கொலையின் மூலம் அவர் பின்னால் ஒன்று திரண்டிருப்பவர்களை அச்சமூட்டிச் சிதறடிப்பது; இரண்டு, இக்கொலைக்குப் பின்னால் ‘ரியல் எஸ்டேட்’ தகராறு, பணத் தகராறு, முன்பகை போன்ற காரணங்கள் இருப்பதாகப் பொய்க் கதைகளைக் கட்டமைத்து மோகன்ராசுவின் பெயருக்குக் களங்கம் உண்டாக்கி அதன் மூலம் சமூகநீதித் தமிழ்த்தேசிய அரசியலைக் கொச்சைப்படுத்துவது; மூன்றாவதாக, ஈரோடு கருங்கல்பாளையத்தில் நீண்ட நெடுங்காலம் நிலவி வந்த “ரவுடி” அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துத் தோழர் ஏற்படுத்தியுள்ள மதிப்புமிகு பண்பாட்டு மாற்றத்தைச் சிதைத்து, மீண்டும் அங்கே “ரவுடி” அரசியலைத் திணித்து மக்களைப் புரட்சிநிறை அரசியல் அணிகளுடன் நெருங்க விடாமல் தடுப்பது.

ஆளும் வர்க்கத்தின் கயமைச் சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்டு நாம் இனி ஒவ்வோர் அடியையும் மிக மிகக் கவனமாக முன் வைக்க வேண்டும். தோழர் மோகன்ராசுவின் இழப்பு என்பது எளிதில் ஈடுசெய்து விடக்கூடிய இழப்பல்ல. இயக்கம் அடுத்த அடியை எடுத்து வைக்கின்ற நேரத்தில் யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் திடுமென நிகழ்ந்து விட்ட தோழர் படுகொலை நம்மை இடியெனத் தாக்கியுள்ளது; மலையெனத் துயரம் நம்மை அழுத்துகிறது. ஆனால் இத்துயரிலிருந்து நாம் விடுபட்டாக வேண்டும். நிலத்தில் உறுதியாகக் காலூன்றி நிமிர்ந்து நின்றாக வேண்டும்! தோழர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து நாம் பணிகளை முன்னெடுக்க வேண்டும்! பகைவர் திட்டங்கள் யாவும் தவிடு பொடியாக வேண்டும்!

தமிழ்நாடு தழுவிய வீறார்ந்த தமிழ்த் தேசிய இயக்கத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதே தோழரின் பெருங்கனவு; வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளுள் மூழ்கடிக்கப்பட்டுவிட்ட உழைக்கும் மக்களின் வர்க்கப் போர்க்குணத்தை வெளிக்கொணர்ந்து விடுதலைக்கான விதை நாற்றங்காலாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதும் அவர் கனவு. அக்கனவுகளை நனவாக்க அவர் முன்னே நீண்ட பல அரசியல் திட்டங்கள் விரிந்து கிடந்தன. உயிர்த் தோழனின் மடியில் உயிர் பிரியும் அக்கணத்திலும் அவர் உதடுகள் இந்த “அரசியல் பணிகளை”யே முணுமுணுத்தன. “நிறைய அரசியல் பணிகள் உள்ளன, என்னை எப்படியேனும் காப்பாற்றி விடடா,” என்றவாறேதான் அவர் மூச்சுப் பிரிந்துள்ளது.

தோழரின் பேச்சாயும் மூச்சாயும் இருந்த அரசியல் பணிகளை எந்தத் தொய்வுமின்றி முன்னைக் காட்டிலும் ஊக்கத்துடனும் வலிவுடனும் தொடர்வதுதான் நாம் அவருக்காற்றும் உண்மையான நன்றிக்கடன்; பொருள் பொதிந்த வீரவணக்கம்.

தோழர் நம்மை விட்டு எங்கும் சென்றுவிடவில்லை. நம் ஊனோடும் உயிரோடும் கலந்து போய் உள்ளார். அவருக்கு மரணமேது?

தோழரின் முன் முயற்சியால் உருவாகியுள்ள தமிழ்த்தேசியக் குடியரசு இயக்கத்தைக் கட்டிக் காப்போம்! அமைப்பை வலுவாக்குவோம்! அதன் கீழ் அணி திரள்வோம்! பகை வெல்வோம்!

தோழர் மோகன்ராசுவிற்குச் செவ்வணக்கம்! மோகன்ராசு புகழ் ஓங்குக! தமிழ்த் தேசியக் குடியரசு இயக்கம் வாழ்க!

Pin It