வாருங்கள்! வாழ்த்துங்கள்! ஆதரவு தாருங்கள்!

அன்பார்ந்த தமிழக மக்களே!

உலகமயமும், தாராளமயமும், தனியார்மயமும் இன்று அனைத்துத் தேசங்களையும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளன. வேலையின்மையும், வறுமையும் உழைக்கும் மக்களை வாட்டி வதைக்கின்றன. உழைக்கும் மக்கள் தம் சொந்த நிலப்பரப்பில் வாழ வழியற்று நாடோடிகளாய்ச் சிதறடிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியத் துணைக் கண்டத்துத் தேசங்களையும் வல்லாதிக்கங்கள் இந்திய அரசின் பக்கத் துணை யோடு சுரண்டிக் கொழுக்கின்றன. உலகப் பெருமுதலாளிகள் இரைப்பையை நிரப்ப இங்குள்ள இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. சுற்றுப்புறச் சூழல் நாளும் நாசமாக்கப்படுகிறது.

வெளிநாட்டுப் பெருநிறுவனங்கள் படையெடுப்பால் தமிழ் நாட்டுத் தொழில்கள் நசிந்து கொண்டிருக்கின்றன; பெரும்பாலான நூற்பாலைகள் ஆயத்த ஆடை நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள், நகைக்கடைகள் எனப்பல மார்வாடி சேட்டுகள், மலையாளிகள் உள்ளிட்ட வெளிமுதலாளிகளின் கைகளுக்குப் போய்விட்டன; கடுமையான மின்வெட்டால் சிறு நூற்பாலைகள் நிரந்தரமாக இழுத்து மூடப்பட்டுள்ளன. இலக்கக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டு வீதியில் தள்ளப்படுகின்றனர்.

தொழிலாளர்கள் அரத்தம் சிந்திப் பெற்ற எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட பல உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அவர்கள் தினக் கூலிகளாக்கப்பட்டு 12,14 மணி நேரக் கடும் உழைப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றனர்;கடுமையாகச் சுரண்டப்படுகின்றனர். பெண்களும் குழந்தைகளும் நவீனக் கொத்தடிமைகளாக வதைக்கப்படுகின்றனர். சுமங்கலித் திட்டம் என்னும் கொடுந்தொழில்முறை திணிக்கப்பட்டுப் பெண்கள் பாலியல் வன்முறைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

வால்மார்ட் தொடங்கி அனைத்துப் பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய வணிக முதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்டு சிறுவணிகத்தில் இறங்கி வருகின்றன. இதனால் பல இலக்கம் சிறு வணிகர்கள் வாழ்க்கை கேள்விக் குறியாக மாறி வருகிறது.

பசுமைப் புரட்சி என்ற பெயரில் ஏற்கனவே தமிழ்நாட்டு மரபு வேளாண்மை சாகடிக்கப்பட்டு விட்டது. வறட்சியைத் தாங்கும் நம் நாட்டு நெல் வகைகளும், அரிசி, கம்பு, சோளம், வரகு, தினை முதலிய தானிய வகைகளும் காணாமல் போய்விட்டன. ஒட்டு விதைகளும், உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளும் உழவர்களை ஓட்டாண்டிகளாக்கி வருகின்றன. கிணறு, குளம், குட்டை, ஏரி, கால்வாய், கண்மாய்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு நம் மரபு நீர்ப்பாசனமுறை சிதைக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்வளம் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது.

போதாக்குறைக்கு அண்டைத் தேசங்களும் நம் ஆற்றுநீர் உரிமையை முற்றாக மறுக்கின்றன. காவிரியைக் கருநாடகம் தடுக்கிறது; முல்லைப் பெரியாறு நீரைக் கேரளா மறுக்கிறது; பாலாறு நீரை ஆந்திரா மறிக்கிறது. கொஞ்சம்நஞ்சம் நீரைப் பயன்படுத்தவும் மின்சாரம் இருப்பதில்லை. தமிழ்நாடு பாலைவனமாய் மாறிவருகிறது. தமிழக வேளாண்மையின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு உழவர்கள் தற்கொலையை நோக்கித் தள்ளப்படுகின்றனர்.

மீன்பிடித்து வாழும் தமிழக மீனவர்களுக்கும் இன்று வாழ்வில்லை. அவர்களின் வாழ்வாதாரமான கடலும் கடல்சார் நிலமும் வளமும் திட்டமிட்டுச் சூறையாடப்படுகின்றன. தமிழக மீனவர்களின் மீன்பிடிப்பு நீர்ப்பரப்பு சிங்களவர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது. மீறி மீன் பிடிப்போரைச் சிங்களக் கடற்படை நாளும் படுகொலை செய்கிறது; எல்லாவற்றிற்கும் மேலாய் இந்திய அரசின் கடற்கரை மேலாண்மைச் சட்டம் ஒட்டுமொத்தக் கடல், கடல்சார் வளங்களையும் பன்னாட்டு முதலைகளிடம் கையளித்து விட்டது.

தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து வன்தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர்; அதிகார வெறியும், ஆதிக்கமும் இத்தாக்குதல்களைத் தூண்டி விடுகின்றன. தனிச்சுடுகாடு, தனிப்பாதை, தனிக் குடியிருப்பு, தனிக்கிணறு என அவர்களுக்குத் தொடர்ந்து தனிமைச் சிறை. தாழ்த்தப்பட்டோர் சாதி மறுப்புத் திருமணம் செய்தால் ஊரையே கொளுத்துகிறது சாதி வெறித்தனம்.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நாட்டில் எள்ளளவும் பாதுகாப்பில்லை. நுகர்வு வெறியும் வல்லாதிக்கச் சீரழிவும் பெண்கள் மீது வன் கொடுமையைக் கட்டவிழ்த்து வெறியாட்டம் போடுகின்றன. குழந்தைகளும் இவ்வன்கொடுமைக்குப் பலியாகின்றன.

உலகமயமாக்கல் சூறையாடலில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது பழங்குடி மக்களினமே. தமிழ்நாட்டுப் பழங்குடி மக்களின் காடும் நிலமும் வளமும் கண்மூடித்தனமாய்ச் சூறையாடப் படுகின்றன அவர்கள் அடையாளமும் பண்பாடும் அழிக்கப்படுகின்றன.

இசுலாமிய, கிறித்துவச் சிறுபான்மை மக்கள் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. குறிப்பாக இசுலாமிய மக்கள் பயங்கரவாதிகளாகக் கட்டமைக்கப்பட்டு குறி வைத்துத் தாக்கப்படுகின்றனர். இந்துத்துவவாதிகள் தங்கள் அதிகாரத்தையும் மேலாண்மையையும் தக்க வைத்துக் கொள்ள இந்து மதவெறியைத் தூண்டி விடுகின்றனர்; தமிழ்ச் சமூக ஓர்மையைச் சிதைக்கின்றனர்.

தமிழ் நாட்டுக் கல்வியும் வெகுமக்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. இலவயக் கல்வி வழங்க வேண்டிய அரசு தன் பொறுப்பைக் கைகழுவிக் கொண்டது. தனியார்மயமும் ஆங்கிலமயமும் கல்வியை முழுமையாய் வணிகப் பண்டமாக்கி உள்ளன. உழைப்பாளி குழந்தைகள் உயர்கல்வியை எட்ட முடிவதில்லை. கல்வியிலும் ஏற்றத்தாழ்வுகள் பெருகிவிட்டன. வசதி படைத்தோருக்கு ஒரு கல்வி, வசதியற்றோருக்கு ஒரு கல்வி என்றாகிப் போனது. ஆங்கிலவழிக் கல்வி குழந்தைகளின் படைப்பாற்றலை அழித்து வருகிறது. புதுப் படைப்புகளும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் அறுகி வருகின்றன. சுருக்கமாய்த் தமிழ்க் குழந்தைகள் எதிர்காலத்தை இருள் சூழ்ந்து வருகிறது.

மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை. அதையும் பன்னாட்டு முதலைகள் விட்டுவைக்கவில்லை. அது இன்று அவர்களுக்குப் பணம் கொழிக்கும் தொழில்; மக்களோ புதுப்புது நோய்களில் நாளும் மடிகின்றனர்.

நீண்ட நெடிய கலை இலக்கியப் பண்பாட்டுச் செழுமைகளைக் கொண்டது தமிழகம். அதன் பண்பாட்டு வேர்கள் இன்று வெட்டப்படுகின்றன. சீரழிவுப் பண்பாடுகள் உள்ளே திணிக்கப்படுகின்றன. நம வளமார்ந்த தமிழ்மொழி ஆட்சி மொழியாயும் இல்லை; நீதி மொழியாயும் இல்லை; கல்விமொழியாயும் இல்லை; தமிழ்த் தெருக்களிலும் தமிழ் இல்லை.

இவ்வாறு எல்லா வகையிலும் தமிழ்நாடு இன்று கடுமையான சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறது. இவற்றைத் தடுத்து நிறுத்தவோ மாற்றி அமைக்கவோ நமக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்தியச் சிறைக்குள் நாம் அடைபட்டுக் கிடக்கிறோம். கையெட்டும் தொலைவில் தமிழீழத்தில் நம் தொப்புள்கொடி உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொல்லப்பட்ட பொழுது நாம் கதறி அழவும், தீ வைத்து நம்மை நாமே மாய்த்துக் கொள்ளவும், கெஞ்சி அழுது மன்றாடவுமே முடிந்தது; தடுத்து நிறுத்த முடியவில்லை. அங்கே இந்தியமும் சிங்களமும் கூட்டுச் சேர்ந்து ஈழத்தமிழர்களைத் தொடர்ந்து ஒடுக்கி வருகின்றன.

நாம் நமக்கான அதிகாரத்தைப் பெறாமல் மேற்கண்ட எவற்றையும் மாற்றி அமைக்க முடியாது. நமக்கான அதிகாரம் என்பது இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசை அமைக்கும் போதே கைவந்து சேரும். எனவே இந்திய வல்லாதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதே நம் முதல் வேலை.

இவ்வகையில் தமிழ்த் தேசிய விடுதலையை முன்வைத்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் இயங்கி வருகின்றன. அவற்றில் பெரும்பாலான இயக்கங்கள் பல்வேறு அக,புறக் காரணங்களால் பிளவுகளைச் சந்தித்துக் கொண்டுள்ளன..

கூடங்குளம், முல்லைப் பெரியாறு, காவிரி, மூவர் தூக்கு எனப் பல சிக்கல்களுக்கு மக்கள் ஒன்று திரண்டு போராடுகின்றனர். இச்சூழலில் அமைப்புகள் பிளவுகளைச் ச்ந்திப்பது மக்கள் விடுதலைக்குத் துணை செய்யவே செய்யாது; மாறாகத் தீங்கே செய்யும். எனவே அமைப்புகள் தங்களின் அரசியல் நிலைப்பாடுகளைத் தோழமையோடு கலந்துரையாடி ஒன்றுபட்ட கருத்துகளை முன்வைத்து இணைவதும் மாறுபட்ட கருத்துகளைத் தொடர்ந்து விவாதிப்பதுமே இன்றைய தேவை; காலத்தின் கட்டாயம். அனைவரும் ஒன்றுபடுவதன் மூலமே நம் தாய்த்திரு நாட்டின் அடிமை விலங்கை உடைத்தெறிய முடியும்; விடுதலையை வென்றெடுக்க முடியும்.

இதை நன்கு உணர்ந்த தமிழக மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் தமிழக மக்கள் விடுதலைக் களத்தில் ஒன்றாக இணைந்து “தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்”என்னும் புதிய அணியாக வீறார்ந்த ஆற்றலாக உருவெடுக்கத் தீர்மானித்துள்ளன.

இதற்கான பணிகளை முனைப்பாகச் செய்து கொண்டிருக்கும் பொழுதே நமது பாசமிகு தோழர் மோகன்ராசு எதிர்பாராத வகையில் கருங்காலிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது நமது புரட்சிப் பயணத்தில் பெரும் பின்னடைவைக் கொடுத்தாலும் நாம் சோர்ந்துவிட மாட்டோம்;தளர்ந்துவிட மாட்டோம்! முன்னைக் காட்டிலும் பெரும் பாய்ச்சலில் முன்னேறுவோம்!

இந்தியச் சிறை உடைக்க........விடுதலைக் களம் காண.. சமூகநீதித் தமிழ்த்தேசம் படைக்க..இதோ தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம், தோழர் மோகன்ராசுவின் வீரவணக்க நாளான பிப்ரவரி 17இல் தொடக்கம்!

தமிழக மக்களே ஒன்று திரண்டு வாருங்கள்! தோழர் மோகன்ராசுவின் நினைவை நெஞ்சிலேந்தி விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்!

- தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் தமிழக மக்கள் விடுதலை முன்னணி

Pin It