காசுமீரில் கடந்த 23 ஆண்டுகளாக நடந்துவரும் மனித உரிமை மீறல்களில் உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் படைவீரர்களும் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களில் 500 பேரைப் பெயர் குறிப்பிட்டுச் சட்ட நிபுணர்களும் மனித உரிமைச் செயல் வீரர்களும் அடங்கிய குழு ஒன்று முதல் முறையாக அறிவித்துள்ளது.

இந்திய நிர்வாகத்தில் உள்ள காசுமீரில் மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான பன்னாட்டு மக்கள் தீர்ப்பாயம், காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கம் ஆகியவை இணைந்து அது பற்றிய அறிக்கை ஒன்றை 2012 டிசம்பரில் வெளியிட்டுள்ளனர்.

214 வழக்குகளில், 235 படைவீரர்கள், 123 துணை இராணுவப் படையினர், 111 சம்மு காசுமீர் காவல்துறையினர், 31 அரசு ஆதரவுத் தீவிரவாதிகள் ஆகியோர் இதில் தொடர்புடையவர்கள் என்று பெயர் குறிப்பிட்டுக் குற்றம் சாட்ட்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு மேஜர் ஜெனரல்கள், மூன்று பிரிகேடியர்கள், ஒன்பது கர்னல்கள், மூன்று லெப்டினன்ட் கர்னல்கள், 78 மேஜர்கள், 25 கேபடன்கள், இவர்களுடன் துணை இராணுவப்படையின் 37 முதுநிலை அதிகாரிகளும் அடங்குவர்.

“உண்மைக்கும் நீதிக்குமான எங்களுடைய தேடல் இந்த அறிக்கையின் மூலம் ஒரு அடி முன்னேறியுள்ளது,” என்று மனித உரிமைச் செயல்வீரரான கவுதம் நவலாகா கூறியுள்ளார். மேலும் இவர்கள் மீதான வழக்குகள பன்னாட்டு நீதி அமைப்பின் மூலம் விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

காசுமீரில் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பல ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வரும் கவுதம் நவலாகாவை காசுமீருக்குள் நுழையவே காசுமீர் அரசு தடைவிதித்திருந்தது.

காசுமீர் பற்றி “மோதல் பகுதியில் உண்மையும் பொய்யும்” என்ற அவரது கட்டுரை 2011 ஆண்டு காசுமீரிலிருந்து வெளிவரும் கன்வேயர் இதழில் வெளிவந்துள்ளது; காசுமீரின் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட விடுதலைப் போராட்டம் பற்றிய பல அறிய தகவலகளை உள்ளடக்கியுள்ளது. இக்கட்டுரை மூன்று பகுதிகளாக வெளி வரும்.

யுத்தத்தில் உணமையும் பலியாகி விடுகிறது என்று கூறப்படுகிறது. இதுவரை காசுமீர் மக்கள யுத்தத்திற்கு மிகப் பெரிய அளவில் பலியாகி வருகிறார்கள். காசுமீரில் உண்மையைப் பேசுவது எனபது கவாசா நசுருதீன் கதை ஒன்றை எனக்கு நினைவு படுத்துகிறது. தனது குடிமக்கள பொய்யர்களாக இருக்கிறார்கள் என்று அரசர் புகார் கூறிக் கொண்டிருந்தார். அவர்களை உண்மை பேச வைக்கப் போவதாகவும் அவர் கூறினார். அடுத்த நாள் மாநகர வாயிற்கதவுகள் திறக்கப்பட்டபோது, அதன் முன்பு தூக்குமேடை நிறுவப்பட்டது. ‘‘மாநகருக்குள் நுழையும் யாராக இருந்தாலும் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்படும்; அதற்கு அவர்கள் உண்மையான பதிலைக் கூறவேண்டும் அவர்கள் போய் சொல்கிறார்கள் என்று தெரிய வந்தால் தூக்கில் தொங்க விடப்படுவார்கள்’’என்று அறிவிக்கப்பட்டது. நசுருதீன்தான் முதலாவதாக நகருக்குள் நுழைந்தார். அவர் தடுத்து நிறுத்தப்பட்ட போது, தம்மைத் தூக்கில் தொங்கவிடப் போவதாகக் கூறினார். அரசருக்குக் கோபம வந்தது. நசுருதீனை நம்பமுடியாது என்று கூறினார்.‘நான் பொய் சொல்லியிருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள்,’ என்றார் நசுருதீன். அதைக் கேட்டு அரசர் குழப்பம் அடைந்தார்

சம்மு காசுமீர் உள்ளாட்சித் தேர்தல்களில் பெருமளவு வாக்குப்பதிவு, மக்களின் மன நிலையில் மாற்றத்தைக் காட்டுகிறது என்று இந்தியாவில் காசுமீர் பற்றி எழுதுவோர் கூறிக் கொள்கின்றனர்.“உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும் காசுமீரில், குறிப்பாக இளைஞர்களிடம் கடந்த ஆண்டு வீணாகி விட்டது” என்ற ஓர் எண்ணம இருக்கிறது என்று மெயில் டுடே (18.5.201) கூறிக் கொண்டது. ஜம்மு காசுமீரில் ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும் போதும் வாக்குப்பதிவு மிகுதியாக இருந்தால் விடுதலைக்கான இயக்கம் எவ்விதம் பலவீனமடைந்து வருகிறது என்பதை அது காட்டுவதாக இருந்ததாக மிகவும் பேசப்படுகிறது. 2008 சட்டமன்றத் தேர்தல்களில் 60% வாக்குப்பதிவுக்குப் பிறகு விடுதலை பற்றிய கருத்தின் பிடி தளர்ந்து விட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும் முதலில் 2009இலும் பின்னர் 2010 தொடக்கத்திலும் மக்களின் வெளிப்பாடுகள் அவர்களுடைய வாய்களை அடைத்தன.

உள்ளாட்சித் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் தங்களுடைய அன்றாடச் சிக்கல்கள் சிலவற்றையாவது தீர்ப்பார்கள் என்ற எண்ணத்தில் மக்கள வாக்களிக்க வருகிறார்கள் என்று நம்மை நினைக்கச் செய்வது எது? எடுத்துக்காட்டாக, தாச்சிப்போராவில் ‘வீடுகட்டுவதற்கு மரம் வேண்டும்’ என்பது மக்களின் முக்கியமான பிரச்சனையாக இருந்தது. வேட்பாளர்களில் ஒருவர் வனத் துறையிடமிருந்து அனுமதி பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்தார். பந்திப்போராவில் சாலை வசதியும் கழிவுநீர் செல்லும் வசதியும் மக்களின் முக்கியக் கோரிக்கையாக இருந்தன. இதற்கும் விடுதலைக்கும் என்ன தொடர்பு? விடுதலைக்குப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் மக்கள் ஏன் தங்கள் வாழ்வாதாரத்திற்கான உடனடித் தேவைகள் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது?

எனவே ஒரு சூழலை ஒருவர் எப்படிப் பார்க்கிறார் அல்லது வேண்டுமென்றே எப்படி பார்க்கிறார் என்பது மக்களின் விருப்பங்களை ஒருவர் எவ்விதம் அளவிடுகிறார், அல்லது எவ்விதம் திசைதிருப்பும் வகையில் அதற்குப் பொருள் கூறுகிறார் என்பதோடு தொடர்புடையதாக இருக்கிறது. நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், ஜம்மு காசுமீர் ஒரு “கலவரப்பகுதி”யாக இருப்பதால், அங்கு இந்திய இராணுவம் மக்களின் “விருப்பத்தையும் மனப்போக்கையும் மாற்றியமைக்க” முயற்சி செய்துகொண்டிருப்பதால், ஒவ்வொன்றும் தோற்றத்தில் தெரிவதற்கு மாறாக இருக்கிறது.

இந்தியாவில் உள்ளதைப் போல அல்லாமல், சம்மு காசுமீரில் ஊராட்சிச் சட்டம் இந்த ஊராட்சிகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை மாநில அரசிடம் விட்டுவிடுகிறது. ஊராட்சிகளுக்கான நிதி அவற்றுக்கு நேரடியாகச் செல்வதில்லை, மாநில அரசின் ஆணை அதில் இருக்கிறது. ஏனென்றால் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அல்லது ஊராட்சி மட்டத்தில் நிதி வழங்கலின் மீது நேரடியாகச் செல்வாக்கைப் பயன்படுத்துகிறார்கள். துல்லியமாக இந்தக் காரணத்திற்காகத்தான் சம்மு காசுமீர் ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரூ.600 கோடி வரையிலான நிதியைப் பெறமுடியவில்லை. ஏனென்றால் இத்திட்டத்தின் கீழான நிதி நேரடியாக ஊராட்சிகளிடம் செல்கிறது.

உணமையில் தேர்தல்களில் பங்கேற்பது, ‘இந்தியாவுடன் ஒன்றிணைவதை’ மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதற்கான அளவுகோலாக இருந்தால், பின்னர் அங்கு ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட படைவீரர்கள் எதற்கு? ஆசிரியர்கள், ஆறாவது ஊதிய ஆணையத்தின்படி ஊதியம் வேண்டும் என்று வீதிக்கு வந்து போராடுவதைக் கூடத் தடுக்கும் அளவுக்கு அங்கு 144 தடை ஆணை செயல்படுத்தப்படுகிறது. அதனால் அங்கு வாழ்க்கை எப்போதும் எல்லோருக்கும் துயரம் மிகுந்ததாகவே இருக்கிறது.

இன்னொரு எடுத்துக்காட்டைக் காண்போம். அமர்நாத் பயணம் சூன் 29இல் தொடங்கும் என்றும் அதற்கு முன்னதாக ஒருவரையும் அனுமதிக்க முடியாது என்றும் 2011 ஜூன் 7 அன்று காசுமீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்தார். ஏனென்றால், அதற்கு முன்னதாக, இந்துத்துவப் பயங்கரவாதக் குழுக்களான விசுவ இந்து பரிசத்தும் பஜ்ரங்தள்ளும் அமர்நாத் பயணத்தை முன்னதாகத் துவக்கப் போவதாகவும் பஜ்ரங்தள் அடியாள்களைப் பாதுகாப்புக்கு வைத்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தன. சூன் 13 அன்று அமர்நாத் ஆலயக் குழு, வி.எச்.பி வெறியர்களுடன் கலந்து பேசி, அமர்நாத் ஆலயக் குழுவிலிருந்து இருவரும் இந்து வெறியர்களின் அமைப்பான பாபா அமர்நாத் யாத்திரைக் குழுவிலிருந்து இருவரும் அமர்நாத் அடையாளப் பயணத்தைத் துவக்கப் போவதாக அறிவித்தன; காசுமீர் மாநில அரசை அவை கண்டுகொள்ளவில்லை.

மூன்று கேள்விகள் எழுகின்றன: உமரின் தந்தையான பரூக் அப்துல்லா 2000இல் அமர்நாத் ஆலயக் குழுவை நிறுவினார். முற்றிலும் இந்து அமைப்பான அதனிடம் அமர்நாத் பயணம் தொடர்பான அனைத்துப் பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட்டன. ஆஜ்மீர் ஷரீப் உட்பட எந்த ஒரு முசுலிம் ஆலயத்திற்கும் இது போன்ற அமைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே எந்தத் தகுதியின் அடிப்படையில் அந்த ஆலயத்தையும் அதற்கான பயண ஏற்பாடுகளையும் இந்து அமைப்பு ஒன்றிடம் அவருடைய கட்சி நடத்தும் அரசாங்கம் ஒப்படைத்து விட்டதாக சூன் 7 ஆம் நாள் முதல்வர் பேசினார்? படுகொலைக்கும் கொள்ளைக்கும் பெயர் பெற்ற இந்துத்துவாக் கும்பல், ஒவ்வோர் ஆண்டும் யாத்திரையின் போது கெடுமதியுடன் பரப்புரை மேற்கொள்வதும் இந்தியாவில் முசுலீம்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்த விரும்புவதும் காசுமீரில் நன்கு அறியப்பட்டதாகும். அப்படியிருந்தும் அவர்கள் எப்படி இவ்விதம் இரக்கத்துடன் நடத்தப்படுகின்றனர்? மேலும் அவரது காவல் துறை இந்தக் கும்பலை ஏன் சாந்தமாக நடத்தவேண்டும்? உண்மையான அச் சுறுத்தலை ஏற்படுத்தும் அவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்?

விடயம் என்னவென்றால் பொய்கள் தங்களைப் பற்பல வழிகளில் வெளிப்படுத்திக் கொள்கின்ற்ன. உண்மையை அறிந்துணர்வது மாறுபடுகிறது, ஆளுவோரின் உண்மையும் ஆளப்படுவோரின் உண்மையும் மாறுபடுகின்றன, உண்மை அடங்கியிருப்பதில் படிநிலை இருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் அனைத்து உண்மைகளும் சமமானவை அல்ல; சில பிறவற்றை விட முக்கியமானவை. எடுத்துக்காட்டாக, போராளிகளின் பல குற்றங்கள், எச்.என்.வாஞ்சூ, டாகடர் அப்துல் ஆசாத் குரு, மிர்வாயிஸ் மோல்வி பரூக், அப்துல் கனி லோன், மற்றும் பிறர் கொலை செய்யப்பட்டது உடபட, முற்றிலும் உண்மையானவையாக இருக்கிற அதேவேளையில், காசுமீரின் பல பண்டிதர்களும் முசுலீம்களும் கூட போராளிகளுக்குப் பலியாகியுள்ளார்கள். இந்தக் கொலைகள் நடந்த போது ஒருவரும் கண்டனக் குரல் எழுப்பவில்லை என்பதும் கூட உண்மை தான். துப்பாக்கி ஏந்தியவர்களிடம் உள்ள அச்சத்தால் கூட அப்படியிருந்திருக்கலாம், இந்திய முகாமைகள் அதற்குப் பின்னால் இருந்திருக்கலாம் என்ற அய்யமும் இல்லாமல் இல்லை. காரணம் எதுவாக இருந்தாலும், அது போன்ற செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியவையாகவும், இயக்கத்தின் பெயரைக் கெடுக்கக் கூடியவையாகவும் அவமரியாதையை ஈட்டக் கூடியவையாகவுமே அவை இருக்கும். இருந்தபோதிலும், கடந்த இருபது ஆண்டுகளின் முதன்மையான உணமைகளில் இதை முதன்மையான செய்தியாகக் கருதுவது கேலிக்கூத்தான ஒன்றாகவே இருக்கும்.

காசுமீர் முசுலீம்களுக்கு நிகழ்ந்த பேரழிவின் நேரடியான அளவும் முதன்மையாக இந்திய அரசின் படையால் 70,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதும், பல பத்தாயிரக்கணக்கானவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதும், 8000&10000 பேர் காணாமல் போகச் செய்யப்பட்டதும், படுகொலைகளும், வன்புணர்ச்சிகளும், மிகப் பெரிய குற்றங்களாகும்; நசுக்கப்பட்ட உணமைகளும் ஆகும்.

எவ்வாறாயினும், இதுவும் கூட பகுதியளவு உண்மைதான். ஏனென்றால், அதற்கு ஏற்ற விகிதத்தில் பதிலளிப்பைத் தீர்மானிப்பதும் அதைக் கொண்டு வரக்கூடியதுமான மிகப்பெரிய உண்மை சம்மு காசுமீரை இராணுவம் ஆக்கிரமித்திருப்பதாகும். பகைமை கொண்ட இராணுவ இருப்புத்தான் காசுமீரின் நிர்ப்பந்திக்கப்பட்ட ஒருங்கிணைவை உத்தரவாதப்படுத்துவதாகவும் மக்களைச் சரணடைய நிர்ப்பந்திப்பதாகவும் இருக்கிறது, நடந்ததை ஏற்றுக்கொண்டு இந்தியாவுடன் சேர்ந்துகொள்வதே சிக்கல்கள் அனைத்திற்குமான மூலக் காரணம் ஆகும். இந்திய அரசு சம்மு காசுமீர் மக்களின் தன்னாட்சி உரிமையை மதித்திருந்தால் அங்கு ஆயுதம் தாங்கிய எதிர்ப்பும் இருந்திருக்காது, சமுதாயம் முழுவதையும் நொறுங்கிப் போய் முடங்கச் செய்திருக்கும், முன்னெப்போதும் இல்லாத இரத்தச் சிதறலும் இருந்திருக்காது.

இது தமது கடப்பாட்டுக்கு உண்மையுடன் இருக்கும் துணிவு கொண்டோரின் முயற்சிகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பதல்ல, மாறாக நல்ல விடயங்களை சலித்து எடுப்பதாகும்.

இதை நான் விளக்குவேன்: 2011 சனவரி 31அன்று லக்சர்&இ&தொய்பா வைச் சேர்ந்த போராளிகளால் சொபோரின் பீர் மொகல்லாவில் இரண்டு இளம் பெண்கள் கொடிய முறையில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது அது ஒரு கோழைத்தனமான செயல் என்றும் அது இயக்கம் முழுவதன் மீதும் களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் கூறப்பட்டது,. நிராயுதபாணியான, ஆதரவற்ற, ஒருவரைக் காவலில் வைத்துக் கொல்வது (அந்த இரு சகோதரிகளும் அவர்களுடைய வீட்டிலிருந்து கடத்திச் செல்லபட்டனர்) மன்னிக்கமுடியாத ஒரு குற்றமாகும். அந்தச் செயல் அதிகாரிகளால் “பிரிவினைவாதிகளைக்” கண்டிப்பதற்குரிய வாய்ப்பாகப் பற்றிக் கொள்ளப்பட்டது. உண்மையில் அந்தக் கண்டனம் தாமதமாகவே வந்தது, உடனடியாக வரவில்லை. இருப்பினும் ஒரு நிகழ்ச்சி நடந்து இருபத்துநான்கு மணி நேரத்திற்குள் அரசுசாரா அமைப்புகளிடமிருந்து பதிலளிப்பு வரவேண்டும் என்று கூறும் எந்தச் சட்ட வரையறையும் இல்லை. எவ்வளவு வேகமாக பதிலளிப்பு வருகிறது என்பதைவிட பதிலளிப்பு வருவதுதான் மிகவும் முக்கியமானதாகும்.

உண்மையில் போராளிகளின் இந்தச் செயல் மீதான கண்டனம் விடுதலைக்கான இயக்கத்தின் அரசியல் முதிர்ச்சியில் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறிப்பதாக இருக்கிறது, ஏனென்றால் கடந்தகாலத்தில் போலல்லாது, அத்தகைய நடவடிக்கை இயக்கம் ஒன்றின் புகழைக் கெடுக்கிறது என்ற புரிதலைச் சுற்றி ஒரு பலமான ஒருங்கிணைவு வந்துள்ளது. அது மக்களின் தியாகத்தால் பேணப்பட்டு உயிரோட்டத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது.

இராணுவரீதியான ஒடுக்குமுறையைச் சந்திக்கும் எந்த ஒரு சமுதாயமும் ஒரு திக்குமுக்காட்டத்தில் சிக்கிக் கொள்ளும். விடுதலைப் போராளிகளின் இரகசிய நடவடிகைகளுக்கு எப்படிப் பதிலளிப்பது? மக்கள் அந்தக் குற்றங்களால் அதிர்ச்சியடைந்திருக்கும் போது கூட, வெளிப்படையாகக் கண்டிப்பது, மிகவும் சோதனையான சூழல்களில் இலட்சியத்திற்காகப் போராடிக் கொண்டிருப்பவர்களை உளரீதியாகப் பலவீனப்படுத்தும் என்ற உணர்வு இருந்தது. ஏனென்றால் அடக்குமுறை யுத்தத்தை ஓரளவுக்காவது எதிர்த்து நிற்பவர்கள் அவர்கள் மட்டுமே. ஒரு பதட்டமான காலகட்டத்தில் வாழும் மக்களுக்கு அது எளிதான தேர்வு அல்ல. ஏனென்றால் இராணுவ அடக்குமுறையானது ஒத்திசைவற்ற பகுதிகளில் கூட எந்த வெளியையும் விட்டுவைப்பதில்லை. உண்மையில் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. சுதந்திரமாகக் கருத்துத் தெரிவிப்பதும் சங்கம் சேர்வதும் எதிர்ப்புத் தெரிவிப்பதும் “இந்திய எதிர்ப்பாக” கருதப்பட்டு நசுக்கப்படுகிறது. இது மக்களை ஒரு துன்பமான நிலையில் வைக்கிறது, அதில் அவர்கள் தங்களுடைய எண்ணங்களைத் தங்களுக்குள்ளேயே புதைத்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தகைய சூழலில் உண்மையைப் பேசுவது என்பது தொல்லையை வரவழைப்பதாக ஆகிவிடும்.

மேலும் பெரும்பாலான நேர்வுகளில் போராளிகள் செய்ததாகக் கூறப்படும் படுகொலைகள் அல்லது குற்றங்கள் ஆயுதப்படைகளின் அல்லது அவற்றின் உளவாளிகளின் செயலாக இருந்தது தெரிய வந்துள்ளதால் எச்சரிக்கை தேவையாக இருந்தது. படைகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உரையாடல் ஒரு ஆக்கிரமிப்புப் படையின் படைத்தலைவர் அல்லது வீரருக்கும் கைப்பற்றப்பட்ட நாட்டின் குடிமக்களுக்கும் இடையிலான உரையாடலைப் போல இருக்கிறது; இருந்தது. ஆனால் கடந்த மூண்டு ஆண்டுகள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக மக்கள் ஓரளவுக்குக் கூட்டாகப் போக்கை மாற்றிகொண்டுள்ளனர். அதன்மூலம் துப்பாக்கியை விடுத்து, இயக்கத்தை ஓர் உயர்ந்த அரசியல் திட்டத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.. உலகின் ஜனநாயக எண்ணங்கொண்ட மக்களிடமிருந்து மிகுந்த பாராட்டைப் பெற்ற ஓர் இயக்கத்திற்கு அது ஊறுவிளைவிக்கும் என்பதால் இந்தச் செயலை உறுதியான சொற்களில் ஒவ்வொருவரும் கண்டித்த செய்தியில் இதைக் காணமுடியும். இது ஒன்றும் சாதாரண சாதனை அல்ல.

தொடரும்...

கவுதம் நவ்லாகா தமிழில்: வெண்மணி அரிநரன்

Pin It