இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குவதற்கு முந்திய நாள் அருந்ததியர் குடியிருப்புப் பகுதி ஒன்றுக்குச் சென்று வந்தேன். சமூக, பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு பணிக்காகச் சென்ற என்னுடன் கல்லூரி மாணவர் ஒருவரும் வந்திருந்தார். இக்குடியிருப்பு பகுதியில் உள்ள எந்த வீட்டிற்கு வெளியேயும் நிழலில் உட்காருவதற்குக்கூட எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை. மரத்தடி நிழலில் நாங்கள் அமருவதற்காக எங்கள் இரு-வருக்கும் இரண்டு நாற்காலிகளைக் கூட அங்கிருந்த மக்களால் கொடுக்க இயலவில்லை. நாங்கள் நிழலில் அமர்வதற்கான ஒரே வாய்ப்பு என்பது அவர்களுடைய ஒற்றை அறை கொண்ட வீட்டிற்குச் சென்று தரையில் அமர்ந்து கொள்வது அல்லது பழைய நாடாக் கட்டிலில் அமர்ந்து கொள்வது என்பது மட்டுமே. நாங்கள் நிழலில் அமர வேண்டும் என்பதற்கான காரணம் நாங்கள் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் அவர்களுடைய தன் விவரங்கள், குடும்பச்சூழல், பொருளாதாரச் சூழல் குறித்த முப்பத்திரண்டு கேள்விகளைக் கேட்டு, அவர்கள் கூறும் விடைகளைச் சிறு மடிக்கணினியில் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். இக்குடியிருப்பில் ஒரே வரிசையில் இருந்த நான்கு வீடுகளில் ஒரு வீட்டில் மட்டும் நாங்கள் அமர்வதற்குத் தேடிய வெளித் திண்ணையும் நிழலும் கிடைத்தன. 

குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் வேலைக்குச் சென்றுவிட்டதால் பெண்கள் மூன்று பேர்களிடம் இக்கணக்கெடுப்புக்கான கேள்விகளைக் கேட்டு அவர்கள் கூறிய விடைகளைப் பதிவு செய்தோம். நாங்கள் அமர்ந்திருந்த வீட்டு வாசலில் கிடந்த ஆட்டுக்கல் ஒன்றில், எழுபதுவயது மதிக்கத்தக்க கணவனை இழந்த கமலம் என்ற மூதாட்டி ஒருவர் அரிசியைப் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தார். “பாட்டி வெயிலில் நின்று கொண்டு அரிசி ஆட்டுகிறீர்கள். இட்லி சுடுவதற்கா ஆட்டுகிறீர்கள்?” என்றேன். “இட்லி சுடுவதற்கு அரிசி ஆட்டவில்லை. இந்த இட்லி அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு நாலு ஆட்டு ஆட்டி எடுத்து சமைத்தால் தான் கெட்ட வாசம் போகும். சாப்பிட முடியும்” என்று அந்த மூதாட்டி விடை சொன்னார். “பாட்டி உங்களிடமும் கணக்கெடுக்க வேண்டும்” என்று கூறி கணக்கெடுப்பதற்கான கேள்விகளைக் கேட்டு விடைகளைப் பதிவு செய்தோம்.

அதன் பிறகு அந்த மூதாட்டி எங்களிடம் “இத்தனை எல்லாம் வந்து கேக்கிறீங்களே, எனக்கு இலவசப் பணம் கேட்டு நாலு முறை எழுதிக் கொடுத்தும் இன்னும் கிடைக்கவில்லை. அதுக்கு ஏதாவது செய்யுங்க. வசதி இருக்கறவங்க கூட நெறையப் பேரு வாங்கிக்கிட்டு இருக்கிறாங்க. எனக்கு மட்டும் இலவசப் பணம் வரமாட்டீங்குது” என்று ஆதங்கத்தோடு சொன்னார். எங்களிடம் கூறியதால் பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அந்த மூதாட்டியின் மனதிற்குள் ஏற்பட்டிருக்குமோ என்று நான் நினைத்தேன். இருந்தாலும் இதுகுறித்து உண்மைகளை அந்த மூதாட்டியிடம் கூறிவிட வேண்டும் என்று நான் கருதியதால், “பாட்டி உங்க ஊருல இருக்கிற கவுன்சிலரிடம் சொல்லுங்க” என்றேன். “கவுன்சிலரின் அம்மாவுக்கு உடனே பணம் கெடைச்சிருச்சு. எனக்குத்தானே கெடைக்கலை” என்று அந்த மூதாட்டி பதில் சொன்னார். “இங்க பாருங்க பாட்டி. இந்த அரசாங்கம், மந்திரி, தலைவரு, கவுன்சிலரு எல்லாம் உங்களைப் போல இருக்கறவங்களுக்கு நல்லது செய்ய இருக்காங்கன்னு நெனைக்காதீங்க. எல்லாருமே அவங்கவுங்க பொளைச்சா போதுமுன்னு இருக்காங்க. அதனால் பணம் கெடச்சா கெடைக்கட்டும். இல்லாட்டி இந்த இலவச அரிசியை வாங்கி எப்படியோ சாப்பிட்டுக் காலத்த கடத்துங்க; என்ன இன்னும் கொஞ்சகாலந்தானே” என்று எதார்த்தமாக அந்த மூதாட்டியிடம் கூறினேன். 

“நீங்க சொல்றதுதா நூத்துக்கு நூறு உண்மை” என்று அந்த மூதாட்டியும் ஏதார்த்தத்தைப் புரிந்து கொண்டு பதில் சொன்னார். அந்த வீட்டுத் திண்ணையிலிருந்து நான் எழுந்து நடந்த போது, பாவ்லோஃபிரைரேவின் “ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்கான கல்வி முறை” என்ற நூலில் படித்த செய்திகளும், அவருடைய இந்திய வருகையின் உரையாடல் பதிவான “எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும்” என்ற நூலில் படித்த செய்திகளும் எனக்குள் முட்டி மோதிக்கொண்டிருந்தன.

உலகில் வாழும் மொத்த மக்கள்தொகையில் அரைப் பாதி ஒடுக்கப்பட்ட மக்கள். இவர்களின் எதார்த்தமான வாழ்க்கைச் சூழலின் எடுத்துக்காட்டாக அநத அருந்ததிய மூதாட்டியின் வாழ்நிலையைப் பார்க்க முடிந்தது. வாழ்நிலையைக் கலந்துரையாடி விவாதித்து, நல்வாழ்வு வாழ்வதற்கான கேள்வி கேட்கக் கற்றுக் கொடுப்பதே ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்கான கல்வியாக அமைய முடியும். இந்த ஃபிரைரேவின் கல்விக் கோட்பாட்டை நம்மைப் போன்றவர்கள் அல்லவா முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஏழை மக்கள் தங்கள் எதார்த்தத்தை உணர்ந்துகொள்ள வைப்பது என்பதே அவர்களுக்கான கற்றல் செயல்பாடாக இருக்க வேண்டும். மாறாக விசுவாசமும், கீழ்ப்படிதலும் உள்ள அடிமைகளாக அவர்களை மாற்றுவதற்கு வழிவகுப்பதாக கல்வி அமைந்துவிடக்கூடாது. ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்கான இந்த கல்விக் கோட்பாட்டைச் சமூக மாற்றத்திற்காகப் பணியாற்றும் அரசியல் செல்பாட்டாளர்களாகிய நாம் புரிந்துகொள்ளாமல் எந்த மாற்றமும் ஏற்படாது. இதை இந்த அனுபவம் எனக்கு உணர்த்தியது. 

உலகத்தில் மகாபித்தலாட்டமான “சொல் எது?” என்ற கேள்விக்கு, ‘அதுவா, அதுதான் “ஜனநாயகம்” என்கின்ற சொல். கடவுள் சிலை இருக்கும் இடத்திற்கு பார்ப்பான்தான் செல்ல வேண்டும். சடங்குகள் செய்ய வேண்டும் என்று இருப்பது “ஜனநாயகமா?” என்று ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக விடையளித்துள்ள தந்தை பெரியார் கருத்துக்கும் பாவ்லோஃபிரைரே கருத்துக்கும் உள்ள கொள்கையியல் ஒப்புமையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சாதியால், மதத்தால், உழைப்பால், நம்பிக்கையால், வாழிடத்தால், வாழ்நிலையால் பல்வேறு வகையினராகப் பிளவு பட்டுள்ள மக்களைக் கொண்ட ஒரு சமூகத்தை மேம்படுத்துவதும், சமப்படுத்துவதும் மட்டுமே உண்மையான ஜனநாயகச் செயல்பாடாக இருக்க முடியும். இக்கோட்பாட்டை தந்தை பெரியார் போன்ற சமூக விடுதலைப் புரட்சியாளர்கள் புரிந்துகொண்டு செயலாற்றியதால்தான் இன்றைக்கு நாம் ஒரு சிறு அளவிற்காவது ஜனநாயகத்தை நம் மண்ணில் அனுபவிக்க முடிந்துள்ளது. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் அண்ணல் அம்பேத்கர் பங்களிப்பு இருந்ததால்தான் இந்திய மண்ணில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சட்ட அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுச் சலுகையைக் கூட உறுதி செய்ய முடிந்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைப் பேராளியாக விளங்கிய அம்பேத்கர் கோட்பாடு “கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்” என்பதாகும். ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காகப் பணியாற்றக்கூடியவர்கள் பின்பற்ற வேண்டிய கல்விக் கோட்பாடாக இதைப் புரிந்துகொண்டு வளர்த்தெடுத்துச் செயல்படுத்தும்போதுதான் நம் மண்ணிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் முழு விடுதலையைச் சாத்தியமாக்க முடியும்.

பெரியார், அம்பேத்கர் ஆகியோர் பிறந்த நாளையும், நினைவு நாளையும் கொண்டாடி மகிழ்ச்சி அடைகின்றவர்களாக மட்டுமே நாம் மாறிவிட்டோ-மென்றால் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்கு நாமே துரோகம் இழைத்தவர்களாக வரலாற்றில் பதிவாக்கப்படுவோம். “எந்த விலையும் கொடுக்கத் தயாராக இல்லாமல் வரலாற்றை நாம் கடந்து செல்ல முடியாது” என்பார் பாவ்லோ ஃபிரைரே. ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காக உண்மையான கல்வியை உருவாக்கத்தான் பதினான்கு ஆண்டுகாலம் சிறைவைப்பு, நாடு கடத்தப்படுதல் போன்ற கடுமையான விலைகளைக் கொடுக்க வேண்டியதாயிற்று என்று தம்மைப் பற்றி அவரே குறிப்பிடுகிறார். சமூகநலச் செயல்பாட்டாளர்கள் அனைவரும் அவர் கூற்றை, கொள்கையியல் கோட்பாட்டு அறிவுரையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே வலிமையான அரசு எந்திரத்தை வைத்துக்கொண்டு ஏதுமற்ற மக்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக நாம் என்ன விலை கொடுத்தேனும் போராடத் தயாராக இருக்க வேண்டும்.

கல்வியியல் கோட்பாடுகளை ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக் கோட்பாடாக அம்மக்களின் நலனில், உண்மையான அக்கறை செலுத்துபவர்களால்தான் உருவாக்க முடியும். ஒடுக்கும் வர்க்கத்தின் கல்வியின் அரசியல் இயல்புகளைப் புரிந்து கொள்ளாமல் கல்வியின் நோக்கங்களைப் பேசுவது, ஒடுக்கப்படும் மக்களின் நலன்களைப் பேசுவதும் “மகா பித்தலாட்டம்” என்று தான் குறிப்பிட வேண்டும். “வன்முறையற்ற சமுதாயத்தையும், வன்முறைச் சிந்தனை இல்லாத குடிமக்களையும் வளர்த்தெடுக்க சகிப்புத்தன்மையை வளர்க்கக்கூடியதாக கல்வி அமைய வேண்டும்” என்பதையே இந்திய ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தி தமது கல்விக் கோட்பாடாக வலியுறுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்களை ஆளும் வர்க்க அரசு எந்திரத்திற்கு அடிமைப்பட்டு கிடக்கச் செய்வதே இந்தச் சகிப்புத் தன்மை கோட்பாட்டுக் கல்வி யாகும். ‘கல்வி நிலையங்களுக்குள் யார் வர முடியவில்லையோ அவர்களிடம் நாமே சென்று கல்வியைக் கற்பிக்க வேண்டும்’ என்று வங்கக் கவிஞர் தாகூர் குறிப்பிட்டார். ஆனால் அவர் நடத்திய சாந்திநிகேதன் கல்வி நிலையத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலையை வென்றெடுக்கும் கல்வித் திட்டம் எதுவும் இருக்கவில்லை.

எந்த ஒரு கல்விக் கோட்பாடும் எவருடைய சிந்தனையிலும் அவர் சார்ந்துள்ள அரசியல் கோட்பாட்டிலிருந்து முற்றும் முழுவதுமாக விலகித் தோன்றிவிட முடியாது. ஏற்றத்தாழ்வு உள்ள ஒரு சமூக அமைப்பை நியாயமானது என்று போற்றிப் பாதுகாக்கும் முதலாளிய ஆளும் வகுப்பினர், அந்தச் சமூக அமைப்பைச் சமத்துவமாக்குவதை நோக்கமாகக் கொண்ட கல்வி அமைப்பை, கல்வி முறையை உருவாக்குவார்கள் என்பது எக்காலத்திலும் நடத்த முடியாத ஒன்றாகும். அதைப்போலவே ஏற்றத்தாழ்வு நியாயமற்றது. ஒழிக்கப்பட வேண்டியது என்று கருதுபவர்கள், ஆளும் வர்க்கத்தின் கல்வி நடுநிலையான ஒன்றுதான் எனக் குருட்டு நம்பிக்கை கொண்டிருப்பதும் தவறானதாகும். ஏற்றத்தாழ்வை ஒழிப்பதையும், சமத்துவத்தை உருவாக்குவதையும் நோக்கமாகவும், கோட்பாடாகவும் கொண்டவர்கள் ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் கல்வியையும், கல்வி அமைப்பையும் விமர்சனக் கண்கொண்டு பார்க்க வேண்டும்; சமத்துவத்தின் தேவையை ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கற்றுக் கொடுக்கும் கல்வியையும், அவர்கள் விடுதலைக்காக கல்விக் கோட்பாட்டையும் உருவாக்க வேண்டும். எனவே கல்வி என்பதும், கற்பித்தல் என்பதும் ஏற்றத்தாழ்வு உள்ள ஒரு சமூக அமைப்பையும், பெரும்பான்மையாக உள்ள மக்களை அடிமைப்படுத்திச் சுரண்டும் சமூக அமைப்பையும் தக்கவைப்பதற்கு ஏற்பவே ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த யதார்த்தத்தை சமூக நலச் செயல்பாட்டாளர்களும் கல்வியாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி முதலாளிகளால் மறைமுகமாகத் தலைமை தாங்கி நடத்தப்படும் இன்றைய பெரும்பாலான நாடுகளின் அரசுகள் எதுவும் அனைத்து மக்களுக்கும் கல்வியறிவூட்ட வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் கல்வியை உருவாக்கவில்லை. மாறாக, முதலாளிகளாக உள்ள ஆளும் வர்க்கத்தினரின் அரசியல், பொருளியல் நலன்களுக்காகப் பணியாற்றும் கூலி அடிமைகளை வளர்த்தெடுக்கவே திட்டமிட்டுக் கல்வி அமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இந்த யதார்த்ததையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும. எனவே கற்பித்தல் ஒரு அரசியல் நடவடிக்கை (ஜிமீணீநீலீவீஸீரீ வீs ணீ றிஷீறீவீtவீநீணீறீ கிநீtவீஸ்வீtஹ்) என்ற பவ்லோஃபிரைரேயின் கூற்று, சமூக மாற்றத்திற்காகப் போராட விரும்பும். ஒடுக்கப்பட்ட மக்களிடம் விடுதலைக்கான கலகத்தன்மையை உருவாக்கத் துடிக்கும் அனைவருக்குமான தாரக மந்திரமாகும். தங்களுடைய இலாப வெறிக்காக அலையும் சிறு எண்ணிக்கையிலான முதலாளியக் கூட்டம், பெரும்பான்மை மக்கள் மீது காலம் காலமாக செலுத்திவரும் சுரண்டல், வறுமைக்கு உட்படுத்தல், அடிமைப்படுத்தல் போன்ற வன்முறைகளைத் தகர்த்தெறிய பெரும்பான்மையாக உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அம்மக்கள் விடுதலைக்காகச் சிறு வன்முறையைக் கைக்கொள்ளவும், உருவாக்கவும், தயக்கம் காட்டுபவர்களாக இருக்கக்கூடாது.

‘அரசு என்பது ஒரு வன்முறைக்குக்கருவி; யார் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்களோ, அவர்கள் நலனைக் காப்பதற்கும் அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கும் அரசு எந்திரம் தேவைப்படுகிறது. எனவே ஒடுக்கும் வர்க்கத்தின் கையிலிருக்கும் ஒடுக்குதலுக்கான வன்முறைக் கருவியை ஒடுக்குதலுக்குள்ளான மக்களின் கைகளுக்கு மாற்றுவது என்பதே “புரட்சி” எனும் சமூக மாற்றச் செயல்பாடாகும்.’ ஒடுக்கப்பட்ட மக்கள் இவ்வெதார்த்தத்தைப் புரிந்துகொள்ளச் செய்யும் கல்வியை நாம் அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். எந்தவிதமான கொடிய அவலங்களையும் எதிர்த்துக் கேள்வி எழுப்பாத ஒடுக்கப்பட்ட மககளின் மௌனக் கலாச்சாரத்தை உடைத்தெறியும் நோக்கில் அவர்களின் யதார்த்த வாழ்நிலையைப் பற்றியும், எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றியும், ஏழ்மைக்கான காரணங்களைப் பற்றியும், நாம் படைக்கவிருக்கும் புது உலகைப் பற்றியும் திறனாய்வு அடிப்படையிலான கல்வி முறையோடும், உரையாடல் கல்விப்போதனை முறையோடும் நாம் களப்பணியாற்றத் தயாராக வேண்டும். இத்தலையாய பணி ஒன்றே ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைக்காகக் கல்விச் செயல் பாட்டாளர்கள் கடைபிடிக்கப்பட வேண்டிய கற்பித்தல் செயல்பாடாகும்.

Pin It