அரசியல் தலைவர்களைக் குறித்தோ, அரசியல் நிகழ்வுகளைப் பற்றியோ வெறும் நகைச்சுவை உணர்வுடன் வரையப்படும் படங்கள் மட்டும் அல்ல. ‘கார்ட்டூன்கள்’ அவை சிந்தனையைக் கிளறி விடுபவையும்கூட, தமிழில் ‘கார்ட்டூனை’க் கருத்துப் படம் என அழைப்பதும் உண்டு. இது மிகவும் பொருத்தமான பெயரே. பல்பொருள் தரும் கருத்துப்படம் சிறந்த கலைப்படைப்பே.

 1843இல் தொடங்கப்பட்ட ‘பஞ்ச்’ (Punch) இதழ்தான் முதன் முதலாகக் கருத்துப் படத்தை வெளியிட்டதாகத் தெரிகிறது. நியூயார்க்கர் (New Yarker) இதழில் கருத்துப்படம் வரைந்த பீட்டர் அமோவை (Peter Amo) கருத்துப்படத் தந்தை எனக் குறிப்பிடுகிறது. விக்கி பீடியா சங்கரும், ஆர்.கே.இலட்சுமணனும் உலகறிந்த இந்தியக் கருத்துப்படக்காரர்கள். கருத்துப் படத்திற்கெனவே முன்னவர் தம் பெயரால் நடத்திய ‘சங்கர்ஸ் வீக்லி’ (Sankar’s Weekly) பெரும்புகழ் கொண்டது.

தமிழில் முதன்முதலில் கருத்துப் படத்தை வெளிக்கொணர்ந்த பெருமை பாரதியாரையே சேரும். ஆங்கிலேயரைப் பகடி செய்து ‘இந்தியா’ இதழில் அவர் வரைந்த படங்கள் வரலாற்றுச் சிறப்புக்குரியவை. ‘தினமணி’ உதயன் படங்கள் மறக்க முடியாதவை. இப்பொழுது தினமணியில் வரைந்து வரும் மதியும் எல்லோரையும் கவர்ந்து வருகிறார். ‘ஆனந்த விகடன்’ மதனைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. வளர்ந்து வரும் பாலா தமிழ்த் தேசிய உணர்வுள்ள சிறந்த கருத்துப்பட படைப்பாளி. ஈழத்தில் சித்திரன் சிறந்த படைப்பாளியாக அறியப்படுகிறார்.

இன்று இரு கருத்துப் படங்கள் விவாதத்துக்குரிய படங்களாக மாறியுள்ளன. ஒன்று சங்கர் வரைந்தது. 1949இல் வெளிவந்தது. மற்றொன்று ஆர்.கே.இலட்சுமணன் வரைந்தது; 1965இல் ‘டைம்ஸ் ஆப் இண்டியா’ நாளிதழில் வெளிவந்தது. இநத இரண்டு படங்களுமே தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்(NCERT) அரசியல் அறிவியல் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.

முதலாவது படம் 11ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் உளளது. ‘அரசமைப்புச் சட்டம் ஏன்? எப்படி? (constitution-why? How? ) (இயல் 1) என்ற பாடத்தில் பக்கம் 18இல் அமைந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை நத்தையாக உருவகித்துள்ள சங்கர், அம்பேத்கரை அதன் மீது சாட்டையுடன் அமர வைத்து, அவர் கையில் நத்தையின் கடிவாளத்தையும் கொடுத்துள்ளார். நேரு ஓங்கிய சாட்டையுடன் பின்னால் நிற்கிறார். நாட்டு மக்கள் இதை வேடிக்கை பார்க்கிறார்கள்.

 இரண்டாவது படம் 12ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. விடுதலைக்குப் பிறகு ‘இந்தியாவின் அரசியல்’ (Politics in India Since Independence) என்ற பகுதியில் (பக் 153) அமைந்துள்ளது. இரண்டு கைகளிலும் கற்களை ஏந்தியபடி ஒருவன் தன் முன்னால் உள்ள அறிவிப்புப் பலகையைத் திகைப்போடு உற்றுப்பார்த்தபடி நிற்கிறான். அவன் முதுகில் மாணவர், போராட்டம் (Student, Agitation) என்று எழுதப்பட்டுள்ளது. அறிவிப்புப் பலகையில், உறுதிமொழிகள் & இந்தி இல்லை ஆங்கிலம் தொடரும்! இந்தி மொழியைக் கற்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்தி இல்லை ஆங்கிலம் எப்பொழுதும்! இன்ன பிற! இன்ன பிற! (Assurances - No Hindi - English to continue - No Compulsion to Learn Hindi, English For Ever! Etc etc) என எழுதப்பட்டுள்ளது. அறிவிப்புப் பலகையின் ஒருபுறம் இராஜாஜி தலையில் கை வைத்தபடி மாணவனை வியப்புடன் பார்க்கிறார். இன்னொரு பக்கம் பக்தவச்சலம் நின்று கொண்டுள்ளார். அவர் மாணவனை. ‘பையனால் ஆங்கிலத்தையும் படிக்க முடியாது’ எனப் பகடி செய்வதாக ஆர்.கே.இலட்சுமணன் வரைந்துள்ளார்.

முதல் படம் பெரும்புயலையே கிளப்பி உள்ளது. இந்தியா நாடாளுமன்றத்தில் தொடங்கிய விவாதம், கல்வியாளர்கள், சமூக விடுதலைப் போராளிகள் ஆகியோரிடையே கடுமையான, அதேசமயம் ஆழமான உரையாடல்களுக்கு வழி வகுத்துள்ளது. இரண்டாவது படம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் எதிர்ப்பு, அறிக்கைகளோடு நின்று போனது. முதலாவது படம் குறித்துக்கூட தமிழில் பெரிதாக விவாதம் நடந்ததாகத் தெரியவில்லை. ஆங்காங்கு நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தோடு எல்லாமே அடங்கிப் போயிற்று.

கருத்துப் படங்கள் பற்றிக் கருத்தறிவிக்கும் முன்னர் இப்பாடப் புத்தகங்களைப் பற்றியும் அவற்றை வெளியிட்ட தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. 1961இல் மைய அரசால் அமைக்கப்பட்ட தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமாகும் இது. பள்ளிக் கல்வியின் உயர்வுக்குப் பாடுபடுவதே இதன் நோக்கமாகும். மைய இடைநிலை நிலைக் கல்விக் கழகத்தின் (CBSE) பாடத் திட்டத்தைப் பின்பற்றும் அரசு, தனியார் பள்ளிகளுக்கான புத்தகங்களை இந்நிறுவனமே வெளியிடுகிறது.

இந்நிறுவனத்தின் பாடப் புத்தகங்கள் சர்ச்சைக்கு உள்ளாவது இது புதிதல்ல. 1977&80 சனதாக் கட்சி ஆட்சிக் காலத்திலும், பின்னர் 1988&2004 பாரதீய சனதாக் கட்சி ஆட்சிக் காலத்திலும் இதன் மீது கடுமையான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. மொரார்ஜி தேசாய் கல்வி நிறுவனங்களுக்குப் பொதுவுடைமையர்கள் ஊடுருவி விட்டதாகக் குற்றம்சாட்டினார். ஆர்.எஸ்.சர்மாவுடைய ‘பழங்கால இந்தியா’ (Ancient India) பாடத்திட்டத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. ரோமிலா தாபாருடைய ‘இடைக்கால இந்தியா’ (Medival India) முஸ்லீம்கள் சார்பானது என்று பழி தூற்றப்பட்டது. முரளி மனோகர் ஜோஷி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபொழுது கல்வியைக் காவிமயமாக்க மேற்கொண்ட முயற்சிகள் ஊரறிந்தவை.

கல்வித் துறையில் நடந்த குளறுபடிகளைக் களைய 2005ஆம் ஆண்டில் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஏறத்தாழ முன்னூறுக்கும் மேற்பட்ட அறிஞர்கள் ஏழு மாத கால அளவில் ஆழமான விவாதங்களை மேற்கொண்டு கடுமையாக உழைத்து உருவாக்கியதே தேசியக் கலைத் திட்டச் சட்டகப்பணி 2005 (National Curricula Framework 2005)  என்பதாகும். ஒவ்வொரு பாடமும் ஒவ்வொரு குழுவால் எழுதப்பட்டு, கலந்துரையாடப்பட்டு, மீண்டும் திருத்தியமைக்கப்பட்டு, கண்காணிப்புக் குழுவில் மறு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, இறுதியில் புத்தக வடிவம் பெற்றது. இன்று நடைமுறையில் உள்ள தேகஆபநி (என்.சி.ஈ.ஆர்.டி) புத்தகங்கள் அனைத்தும் ஒரு கூட்டு ஜனநாயக முயற்சியின் விளைவு ஆகும். கண்காணிப்புக் குழுவில் தலித் அறிஞர் கோபால் குருவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய பாடப் புத்தகங்களுக்கும் 2005ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள புதிய பாடப் புத்தகங்களுக்கும் இடையே பாரிய வேறுபாடு உள்ளது. பழைய பாடப் புத்தகங்கள் மாணவர்களின் மூளைக்குள் விவரங்களைத் ‘திணிப்பவை’, அவற்றை மனனம் செய்து தேர்வில் வாந்தியெடுக்கக் கட்டாயப்படுத்துபவை. புதிய பாடப் புத்தகங்களோ அழகிய வடிவமைப்புடன், மாணவர்களின் உள்ளங்கவர் முறையில் பாடப்பொருளை வழங்குபவை. மாணவர்களின் சிந்தனையையும் படைப்பாற்றலையும் தூண்டும் வண்ணம் வினாக் களும் பயிற்சிகளும் அமைந்துள்ளன. குருட்டு மனனத்திற்கு இங்கு வழி கிடையாது. சமச்சீர்க் கல்விப் பாடப் புத்தகங்கள் ஏறத்தாழ தேகஆபநி பாடப் புத்தகங்களை ஒட்டியே எழுதப்பட்டுள்ளன. முன்னது பின்னதின் தரத்திற்கு உள்ளனவா என்பதைத் தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள்தாம் சொல்ல வேண்டும்.

அரசியல் அறிவியல் பாடப் புத்தங்களில் குறிப்பாக 11, 12ஆம் பாடப் புத்தகங்களில் விடுதலைப் போராட்டக்கால அரசியல் விடுதலைக்குப் பிந்திய கால அரசியல், அண்மைக்கால அரசியல் ஆகியன இடம்பெற்றுள்ளன. அவற்றில் நிறையக் கருத்துப் படங்களும் இடம்பிடித்துள்ளன. அவை அனைத்துமே அந்தந்தப் படங்களோடு தொடர்புடையவனாகவும், சிந்தனையைக் கிளறுகின்ற கேள்விகளோடும் உள்ளன. அரசமைப்புச் சட்டம் பற்றிய பாடத்தில் ஈராக்கிய அரசமைப்புச் சட்டம் குறித்த இரு படங்கள், அய்ரோப்பிய அரசமைப்புச் சட்டம் எழுத மேற்கொண்ட முயற்சி குறித்த படம் ஒன்று, இந்திய அரசமைப்புச் சட்டம் தொடர்பாக இரண்டு படங்கள் என மொத்தம் ஐந்து படங்கள் உள்ளன. இந்தியா தொடர்பான படங்களில் ஒன்று சர்ச்சைக்குரிய அம்பேத்கர் படம்; மற்றொன்று நேரு பற்றியது.

அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்ட அக்காலச் சூழலை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. நேரு கருத்துப் படம். ஒருபுறம் நேரு ‘இந்தியத் தேசிய வாதி’களாலும், மறுபுறம் ‘இந்துத்துவா’திகளாலும் இழுபடுகிறார். கீழே மாணவர்களைத் தூண்டும் கேள்விகளும் அமைந்துள்ளன. “இவ்வேறு வேறு குழுக்கள் எதை குறிக்கின்றன என்பதை உன்னால் அடையாளப்படுத்த முடியுமா? இறுதியில் யார் வென்றார்கள் என நீ நினைக்கிறாய்?” நேரு இந்துத்துவா பக்கம் சாய்ந்ததும், அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகியதும் வரலாறு.

அம்பேத்கர் கருத்துப் படம் பாடத்தில் கடைசியில் உள்ளது. இதன் கீழும் மாணவர்களுக்கான குறிப்பு உள்ளது: ‘அரசமைப்புச் சட்டம் நத்தை வேகத்தில் எழுதப்பட்டது என்பதை இக்கருத்துப்படம் பதிவு செய்கிறது. “அரசமைப்புச் சட்டம் வரைய ஏறத்தாழ மூன்றாண்டுகள் பிடித்தன. கருத்துப்பட ஓவியர் இச்செய்தியைப் பற்றித்தான் கருத்தறிவிக்கிறாரா? அரசமைப்புச் சட்ட அவை அரசமைப்புச் சட்டத்தை வரைய ஏன் நீண்டகாலம் எடுத்துக்கொண்டதென நீ நினைக்கிறாய்?”

இப்புத்தகங்கள் மைய இடைநிலைக் கல்வி வாரியப் (CBSE)) பள்ளிகளில்தான் பயன்படுத்தப்படுகின்றன. மைய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்காக மாநிலங்களின் தலைநகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் இப்பள்ளிகள் மய்ய அரசால் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று கணக்கற்ற ‘சிபிஎஸ்ஈ’ தனியார் பள்ளிகளும் தோன்றிவிட்டன. இப்பள்ளிகள் பெரும்பாலும் நகரஞ்சார்ந்தே இயங்குகின்றன. இங்குப் படிக்கும் குழந்தைகள் பெரும்பான்மையோர் உயர் / பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் (மத்திய / உயர் மத்திய வர்க்கம்) சார்ந்தவர்களாகவே இருப்பர். ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் குழந்தைகள் இங்குப் படிப்பது அரிதினும் அரிது. அரசுப் பணிகளில் உள்ள தலித் பெற்றோர்களின் குழந்தைகள் ஒரு சிலர் இங்குப் படிக்கலாம்.

அதேபோல கற்றுத் தரும் ஆசிரியர்களும் மேலே குறிப்பிட்ட வண்ணமே இருப்பர். தலித் / பழங்குடி இன ஆசிரியர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கும். அதாவது 60 ஆண்டுக்கான இட ஒதுக்கீட்டிற்குப் பின்னரும் கல்வித் துறையில் ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதித்துவம் என்பது சொற்பத்திலும் சொற்பமே. அதிலும் குறிப்பாக உயர் கல்வியிலும், கலைத்திட்டம் / பாடத் திட்டங்களைத் தீர்மானிக்கும் உயர் இடங்களிலும் உயர் சாதியினரின் ஆதிக்கமே இன்னும் கேள்விக்கிடமின்றி கோலோச்சுகிறது.

ஆக, இந்தப் பின்புலத்தில்தான் தேகஆபநி (என்.சி.ஈ.ஆர்.டி) பாடப் புத்தகங்களையும், அதில் இடம்பெற்றுள்ள கருத்துப் படங்களையும் குறிப்பாக அம்பேத்கர் படத்தையும் நோக்க வேண்டும். இதுவரை காந்தி, நேரு, வல்லபாய பட்டேல் போன்றோரே இடம்பெற்றிருந்த பாடப் புத்தகங்களில் பூலே, அம்பேத்கர், பெரியார் போன்றோர் இடம் பெற்றுள்ளனர் என்பது உண்மைதான்; ஆறாம் வகுப்பு முதல் உள்ள அரசியல் அறிவியல் பாடப் புத்தகங்களில் அம்பேத்கரின் பங்களிப்புச் சிறப்பாக விளக்கப்பட்டிருப்பதும் உண்மைதான். அரசமைப்புச் சட்ட வரைவில் அம்பேத்கர் வகித்த முதன்மை இடமும், சட்ட வரைவுக்கு நேர்ந்த காலத் தாழ்வுக்கான காரணங்களும் உரிய முறையில் பதியப்பட்டுள்ளன என்பதும் உண்மைதான். ஆனால் கற்பிக்கும் ஆசிரியர்களும் கற்றுக்கொள்ளும் மாணவர்களும் இதை எப்படி உள்வாங்குவர் என்பதுதான் நம்முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி.

உயர்சாதிப் பின்புலமும், உயர்சாதி மனநிலையும் கொண்ட ஆசிரியர்களும்மாணவர்களும் அம்பேத்கர் கருத்துப் படத்தைப் பார்த்த உடனே எள்ளி நகையாடவே செய்வர். அப்படம் பன்முகத்தன்மை கொண்டது என்ற விளக்கமோ, பாடத்தில் அரசமைப்புச் சட்ட அவைச் செயல்பாடுகள் விரிவாக விளக்கப்பட்டிருப்பதோ எடுத்துரைக்கப்படுவதும் நிகழாது; உள்வாங்கப்படுவதும் நிகழாது. நேரு அம்பேத்கரைச் சாட்டையால் விரட்டுகிறார் என்பது மட்டுமே உறுதிப்படுத்தப்படும். இந்நிலையில் வகுப் பிலிருக்கும் ஓரிரு ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை ஊகிக்க வேண்டியதே இல்லை. ஏற்கனவே கல்விக்கூடங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மீதான வன்முறைகள் தொடர்கதையாய்த் தொடர்கின்றன. மண்டல் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்களின் போது வடக்கே உயர்சாதி மாணவர்கள் நடத்திய வன்முறைகளை மறக்க முடியாது. தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். இச்சூழலில் இத்தகைய கருத்துப் படங்கள் உயர்சாதி மாணவர்களின் உயர்சாதித் திமிரை ஊட்டி வளர்க்கவே செய்யும்.

 ஆனால் அதே நேரத்தில் அம்பேத்கர் கருத்துப் படத்தைப் பகடைக்காயாக வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்தில் உள்ளேயும் வெளியேயும் தலித் கட்சியினர் உட்பட அனைத்துக் கட்சியினரும் ஆடிய ஆட்டத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அதன் பின்னே உள்ள சதித்திட்டத்தை முறியடித்தே ஆக வேண்டும். இதுவரையில் மக்களவையிலும், மேலவையிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலும் சரி, சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டிலும் சரி, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டிலும் சரி எதிலும் ஒன்றுபடாத இவர்கள் இதில் மட்டும் எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுத்துள்ளனர். கபில்சிபில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு மட்டும் நில்லாமல், அக்கருத்துப்படம் உடனே விலக்கிக் கொள்ளப்படும் எனவும் அறிவித்தார். அதோடு நில்லாமல் அனைத்துப் பாடப் புத்தகங்களிலும் உள்ள கருத்துப் படங்களைப் பற்றி ஆராயப் பேராசிரியர் எஸ்.கே. தோரட் (Prof. S.K. Thorat) தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார். பேராசிரியர் யோகேந்திரா யாதவும் பல்சிகாரும் பாடக்குழுவிலிருந்து விலகினர். இதன் உச்சமாக பேரா.பல்சிகாரின் அலுவலகம் தாக்கப்பட்டது.

இவ்விடத்தில தலித் அறிஞரும் போராளியுமான ஆனந்த் டெல்டுமப் டே எழுப்புகின்ற கேள்விகளை நாமும் கேட்டாக வேண்டும். பீகார், போஜ்பூர் மாவட்டம், சகார் வட்டத்திலுள்ள சிறிய ஊர் பதானி டோலா. 1996, ஏப்ரல் 11இல் 21 ஒடுக்கப்பட்ட மக்கள் பதறப் பதற கொலைச் செய்யப்பட்டனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேர்களில், மூன்று பேருக்குக் கீழ் நீதிமன்றம் தூக்குத் தண்டனையும், மற்றவர்களுக்கு வாழ்நாள் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தது. ஆனால் பாட்னா உயர்நீதி மன்றம் 2012 ஏப்ரல் 16இல் அனைவரையும் விடுதலை செய்தது. கீழ்வெண்மணியைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் தீர்ப்பு இது. இரக்க நெஞ்சம் கொண்ட அனைவரையும் கலங்க வைக்கும் தீர்ப்பு. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் இந்த தீர்ப்பைப் பற்றி, கருத்துப் படம் குறித்து அனல் கக்கும் அரசியல் கட்சிகள் எதுவும் கண்டுகொள்ளவில்லையே ஏன்? தலித் கட்சிகளும் ‘மவுனம் சாதித்தனவே, அதன் கமுக்கம் என்ன?

இதேபோன்று கீழ் நீதிமன்றங்கள் தண்டனை வழங்கி மேல் நீதிமன்றங்கள் விடுதலை செய்த கரம்சேடு வழக்கு(ஆந்திரப்பிரதேசம்) கயர்லாஞ்சி வழக்கு (மகாராஷ்டிரம்) லக்மண்பூர் பாதே வழக்கு (பீகார்) முதலானவற்றை ஆனந்த டெல்டும்ப்டே பட்டியிலிடுகிறார். இவை போன்ற வழக்குகளை உச்சநீதிமன்றம் வரை கொண்டு செல்ல முடியும் பொழுது அங்கேயும் அரைகுறைத் தீர்ப்புகளே கிடைக்கின்றன என்கிறார் அவர். அம்பேத்கரை இழிவுபடத்திவிட்டதாகக் கூச்சலிடும் இக்கட்சிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கொலை வெறியர்கள், வன்முறையாளர்கள் நீதிமன்றங்களில் நுழைந்து தப்பி விடுகின்றனரே, அதைப் பற்றி சிறிதும் அக்கறையற்றிருப்பது ஏன்? உணர்வுகளை உடனடியாகத் தூண்டி விடும் செய்திகளில் கவனம் செலுத்தும் இவர்கள், மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் நடப்புகளைக் கண்டுகொள்ளாதது ஏன்? தேர்தல் கட்சிகளான இவர்களுக்கு வாக்குக் கவலையைத் தவிர வேறு எந்தக் கவலையும் இல்லை என்பதைத் தவிர, வேறென்ன? இவர்களுக்கு ஒடுக்கப்பட்ட மக்களை உணர்ச்சிப் பிண்டங்களாக வைத்திருப்பதே நோக்கமாக இருக்கிறதே ஒழிய, அவர்களுக்கு அறிவூட்டி, விடுதலையை வென்றெடுப்பது அல்ல.

தேர்தல் கட்சிகளுக்கு, குறிப்பாக இன்று ஆளும் கட்சியாக உள்ள காங்கிரசுக்கும், ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் பாஜகவுக்கும் மாற்றுச் சிந்தனைகள், சிந்தனையைத் தூண்டக்கூடிய விவரங்கள் எதுவும் இளைஞர்களை, மாணவர்களை, அவர்கள் எந்தச் சாதி வர்க்கப் பிரிவினர்களாக இருந்தாலும் சென்று சேர்ந்துவிடக்கூடாது. இவர்களின் ஆட்சி அதிகாரத்தை, அதைத் தாங்கி நிற்கின்ற கொள்கை கோட்பாடுகளைக் கேள்வி கேட்கும் தூண்டும் எதுவும் எஙகும் இடம்பெற்றுவிடக்கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பது நிலவுகின்ற அமைப்பைத் தகர்க்கின்ற எல்லைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதில் இவர்கள் அனைவரும் கவனமாக இருப்பர்.

தலித் விடுதலையை வென்றெடுக்கப் புறப்பட்ட தலித் கட்சிகள் திசைமாறிச் சிதைந்துவிட்டன. இல்லத்தைப் புதுப்பிக்க 86 கோடி செலவு செய்யும் மாயாவதி, இவர் பார்ப்பனர்களைக் கட்சியில் இணைத்துக் கொண்டு, முதலமைச்சர் நாற்காலியைக் கைப்பற்ற எந்த வெட்கமும் படவில்லை. இராமதாஸ் அத்வாலே மும்பையின் முதன்மைப் பகுதியில் மாளிகை கட்டிக்கொள்ளத் தயங்கவில்லை. அம்பேத்கரை அடியோடு வெறுக்கும் சிவசேனா&பாஜகவுடன் கூட்டுச் சேரவும் கூச்சப்படவில்லை. ஒரு காலத்தில் நம் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மதிப்புக்குரிய திருமாவளவனின் இன்றைய நிலைமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவர்தாம் கருத்துப்படச் சிக்கலை மக்களவையில் கிளப்பியவர்; மாயாவதி மாநிலங்களவையில் எதிரொலித்தவர். இவர்களுக்கெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு குளிர்காய்வதைத் தவிர வேறு நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனாலும் இவர்கள் குரல் எழுப்பினார்கள் என்பதற்காக அம்பேத்கர் கருத்துப் படத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அது அப்பாடத்திற்குப் பொருத்தமானது என்றும், பன்முகத் தன்மை கொண்ட படைப்பு என்றும், அம்பேத்கர் இழிவுபடுத்தப்படவில்லை, அப்பாடத்தில் அவர் சிறப்பிக்கப்பட்டுள்ளார் என்றும் சில விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும, அது உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதே சமயத்தில் பாடத்திட்டக் குழுவினர் மீது குற்ற வழக்குப் பதியப்பட வேண்டும். (மாயாவதி) என்ற கூச்சலும், தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைக் கூண்டோடு கலைத்து விட வேண்டும் என்ற முட்டாள்தனமான உளறலும் (பஸ்வான்) நிறுத்தப்பட வேண்டும். பாடப் புத்தகங்களை அடியோடு மாற்றியமைக்க கபில் சிபலும் காங்கிரசும் மேற்கொள்ளும் மறைமுகத் திட்டங்கள் தகர்க்கப்பட வேண்டும். ஏற்கனவே கல்வியைக் காவிமயமாக்க முயற்சி மேற்கொண்ட பாஜகவினருக்கு எதிர்காலத்தில் அப்படியரு வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய கருத்துப்படம் அடாவடித்தனமானது மட்டுமன்று, வரலாற்றைத் திரித்துக் கூறுவது. இப்படம் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இதை எதிர்த்து அறிக்கை விடும் தமிழ்நாட்டுக் கட்சிகள், இங்கு வரலாற்றுப் புத்தகங்கள் எப்படி உள்ளன என்று எப்பொழுதாவது கவலைப் பட்டுள்ளனவா? இருபதாம் நூற்றாண்டு அரசியல் நிகழ்வுகள் இப்பாடப் புத்தகங்களில் எந்த அளவு இடம்பிடித்துள்ளன? ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டு நிகழ்வுகள் முழுமையாக இடம் பெற்றுள்ளனவா? விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பு நிறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, தலித் இயக்கங்களின் தோற்றம், வளர்ச்சி பெயரளவுக்காவது இடம்பெற்றுளளனவா? அண்மைக்காலத் தமிழக வரலாற்றில் வீரார்ந்த போராட்டங்களான மாணவர் இந்தி எதிர்ப்புப் போராட்டம், உழவர் போராட்டம், எல்லை மீட்புப் போராட்டம் ஆகியன பற்றி ஏதேனும் செய்திகள் இடம்பெற்றுள்ளனவா? தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இவை பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இருக்கப்போவதில்லை. எதிர்காலத் தலைமுறையின் மீது அக்கறையுடைய சிந்தனையாளர்கள், போராளிகள் இனியும் காலந்தாழ்த்தாமல் குரல் எழுப்ப வேண்டும்.

2005க்கு முந்தி இருந்த பாடப் புத்தகங்களை விட இப்பொழுதுள்ள தேகஆபநித்தின் பாடப் புத்தகங்கள் பன்மடங்கு சிறந்தவை. அவற்றில் குறைகள் இருக்கக்கூடும்; தவறுகள் இருக்கக்கூடும். போதாமைகள் இருக்கக்கூடும். அவற்றைக் களைய உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காலத்திற்குக் காலம், அக்காலச் சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் முன்னோக்கி நகர்வதே இளைய தலைமுறையினரைச் செழுமையாக்கும். அவற்றைப் பின்னோக்கி இழுத்துவிடக்கூடாது.

தமிழ்நாட்டுச் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களிலும் முற்போக்கான மாணவர் நலம் நோக்கிய மாற்றங்கள் வரட்டும். வரலாற்றுப் புத்தகங்களில் அம்பேத்கருக்கு, பெரியாருக்கு, அயோத்தி தாசருக்கு, ஆபிரகாம் பண்டிதருக்கு உரிய இடம் வழங்கப்படட்டும். ஓங்கிக் குரல் கொப்போம்! போராடுவோம்! 

காங்கிரசு சூழ்ச்சி வெற்றி

நாம் அச்சப்பட்டது நடந்து விட்டது. கபில்சிபல் அமைத்த தோரட் குழு பாடப் புத்தகங்களில் உள்ள அரசியல் கருத்துப் படங்கள் அனைத்தையும் நீக்கப் பரிந்துரை செய்துள்ளது. குழுவில் எம். எஸ். எஸ் பாண்டியன் மட்டும் கருத்துப்படங்கள் நீக்கத்திற்கு தம் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

Pin It