சுரண்டலுக்குள்ளாகும் வர்க்கங்கள் எப்போதெல்லாம் போராடுகிறார்களோ அப்போதெல்லாம் ஆளும்வர்க்கம் தேசியவாதம் பற்றிக் கூக்குரலிடுகிறதென்று பி.ஆர்.அம்பேத்கர் தீர்க்க தரிசனமாக எழுதினார்.

அவரைப் பொறுத்தளவில் உண்மையான தேசியவாதம் என்பது இரக்க குணமுடையது விடுதலைப்பூர்வமானது.

- டி.ராஜா

அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125ஆம் பிறந்தநாள் நிறைவு என்பது அவரது சிந்தனைகளையும் கருத்து நிலையையும் மதிப்பீடு செய்வதற்கும் மறு மதிப்பீடு செய்வதற்கும், இன்றைக்கு இந்தியாவிலும் உலகளாவிய நிலையிலும் அவற்றுள் பொருத்தப் பாட்டினைக் கண்டறிவதற்கும் சரியான தருணமாகும். அம்பேத்கர் ஒரு மாபெரும் தத்துவவாதியாக விளங்கினார்.

அவர் அவரது காலச் சமூகத்தையும் உலகத்தையும் வியாக்யானம் மட்டும் செய்யவில்லை; அவற்றை மாற்றுவதற்கும் ஒரு முன்னணி படை வீரனைப்போல போராடவும் செய்தார். அம்பேத்கர் உலகளாவிய பார்வையைக் கொண்டிருந்தமையால், அவர் போராட்டங்களை வடிவமைத்தார்; தப்பிக்கும் வழிமுறைகளையும் உருவாக்கினார். இப்போராட்ட உலைக்களங்களில்தான் அவரது மதச்சார்பின்மை

மீதான நம்பிக்கை, சமூகநீதி சோஷலிஸம் ஆகிய கருத்தாக்கங்கள் வார்த்தெடுக்கப்பட்டன. சாதியை ஒழித்துக்காட்டுதலும் முதலாளித்துவத்தை மறு தலித்தலும் இந்தியாவையும் உலகையும் மாற்றுவதற்கும் முன்னோக்கிச் செலுத்துவதற்கும் தவிர்க்க முடியாத அம்சங்களாகுமென அவர் நம்பினார். பூர்ஷ்வா முதலாளித்துவமும் பிராமணியமும் மக்களின் இரட்டைப் பகைவர்களாக அம்பேத்கர் அறிவித்தார் பிரகடனப்படுத்தினார்.

வியாபாரம், வணிகத் தொடர்பு ஆகிய களங்களில் ஐரோப்பியர்களை அப்புறப்படுவதற்கு இந்திய வணிகவகுப்பு / வர்க்கம் விரும்பிய கட்டாயச் சூழலில் வைத்து ‘தேசியவாதம்’ என்பதை அம்பேத்கர் பகுப்பாய்வுக்குட்படுத்தினார். இந்திய வணிக வர்க்கத்தினர் தேசியவாதம் என்பதை ஓர் அலங்கார வழக்காகப் பயன்படுத்த விரும்பினார். அத்துடன் அவர்கள் தேசியவாதத்தை துணையாதாரமாகக் கொள்வதன் வாயிலாக அயல்நாட்டு வணிகத்தில் குறைந்த பரிமாற்ற விலையையும் பெரும் இலாபத்தையும் ஈட்ட விரும்பினர். அம்பேத்கர் இந்திய வணிகவர்க்கத்தின் இந்த வகையான இலாப நோக்கிலான ஆற்றுப் படுத்தலை விமர்சனப்பூர்வமாக உற்று நோக்கினார். 

தேசியவாத வேடத்தின் கீழ் கொள்ளையடிக்கிற இந்திய வணிகவர்க்கத்தின் பொருளாதார நலன்களை அம்பேத்கர் கண்டனம் செய்தார். இதே வணிகவர்க்கம் பிரிட்டிஷ் காலனிய அரசுடன் சமரசம் செய்துகொண்டு அவர்கள் நலன்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. வலது சாரி சக்திகளான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) போன்றவை இந்த சேவையைத்தான் செய்தன.

21ஆம் நூற்றாண்டு இந்தியாவில், பொருளாதாரத்தின் கட்டுக் கோப்பு குழும முதலாளித்துவத்தாலும் நிதி மூலதனத் தாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டுள்ளது. பெயரள விலான தேசியவாதத்தின் ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்ளும் அரசியல் சக்திகளுடன் இந்தப் பொருளாதார ஆதிக்கவாதிகள் கூட்டு வைத்துள்ளனர். இது மிக மோசமானநிலை. மக்களின் நலன்களை விலையாகக் கொடுத்து ஒட்டுமொத்த இலாபம் ஈட்டும் வேட்டையைப் பற்றி அம்பேத்கர் பகுப்பாய்வு செய்து சுட்டிக்காட்டி யதை நாம் திரும்ப நினைத்துப் பார்க்க வேண்டும்.

தேசியவாதம் என்றொரு மூடுபடாம்

இந்த நிகழ்காலச் சூழலில், தேசியவாதம் என்பது இறுக்கமான முறையில் செயல்படுத்தப்படுகின்றது. அது மக்கள் மத்தியில் அச்சமும் பயங்கரமும் கொண்டதாகப் பரப்பப்படுகின்றது. நமது இந்திய அரசியல் சாசனத்தின் முதன்மைச் சிற்பியான அம்பேத்கரின் எண்ணற்ற எழுத்துக்களில் தேசியவாதம் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை நமக்கு விலைமதிப்பற்ற உள்ளார்ந்த பார்வைகளை வழங்குகின்றன. அம்பேத்கர் தீண்டத் தகாதோருக்கு போதுமான பிரதிநிதித்துவம் சட்ட மன்றத்திலும் செயலாட்சித்துறையிலும் பொதுப்பணித் துறையிலும் வழங்கப்பட வேண்டுமென உணர்ச்சிப் பூர்வமாக வாதிட்டுள்ளார். இவ்வகையான கோரிக்கை களை மறுதலிக்கும் மறைப்புத்துணியாக தேசியவாதம் பயன்படுத்தப்படுகின்றது.

மெய்யாகவே, நமது நாட்டிற்குள் போராடும் மனிதர்களுக்கு எதிராக எதிர்நிலை எடுப்பதற்காகவே தேசியவாதம் ஒரு மைய கொள்கைத் திட்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக வகுப்புவாத அணி எழுச்சியுடன் உருவாவதற்கான வளமான சூழல் இங்கு உருவாக்கப் பட்டிருக்கின்றதென அம்பேத்கர் உறுதிபட எழுதி யுள்ளார். உண்மையிலேயே, இந்திய விடுதலைக்கு முன்னர் அம்பேத்கர் எழுதியது இப்போது கொடிய யதார்த்தமாக உருப்பெற்று நம் கண்முன்னே நிற்கிறது.

வகுப்புவாத பாசிஸ சக்திகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை மட்டும் கைப்பற்றவில்லை. அவை ஆட்சிக் கருவியைக் கட்டுப்படுத்துகின்றன. கட்டளை யிடுகின்றன; தேசிய அளவில் அவற்றின் கெடுநோக்கு செயல்திட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்பட - சேவை செய்ய வைக்கின்றன.

இது ஒரு அறிவூட்டக்கூடிய குறிப்பு, அம்பேத்கர் மிக மெய்ப்பிக்க வல்லதாக தீர்க்கதரிசனமாக எழுதினார். எப்போதெல்லாம் சுரண்டலுக்குள்ளாகும் வர்க்கங்கள் நீதி, நியாயம், சமமான நடத்துமுறை - சட்டமன்றம், செயலாட்சிப் பணி மற்றும் பொதுப்பணிகளில் பிரதி நிதித்துவத்திற்கான உடன்பாடான செயல்பாடு - ஆகிய வற்றைக் கோருகின்றனவோ, அப்பொதெல்லாம் இந்தி யாவின் ஆதிக்க வர்க்கம் ‘தேசிய வாதம்/பாரதமாதா ஆபத்திலிருக்கிறாள்’ எனக் கூப்பாடு போடுகிறது. அம்பேத்கர் மற்றொன்றையும் நுட்பமாகச் சுட்டியுள்ளார்.

வர்க்க கருத்துநிலை, வர்க்க நலன்கள், வர்க்கப் பிரச்சனைகள், வர்க்க முரண்கள் என்பன உச்சரிக்கப் பட்டால் அது தனது ஆட்சிக்குப் பேரழிவை ஏற்படுத்தும் என்பதை ஆளும் வர்க்கம் மிக நன்றாகவே உணர்ந் திருக்கிறது. ஆகவே எப்போதும் தேசியவாதம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு பற்றி மிகு உணர்ச்சியைத் தூண்டி விட்டு சுரண்டப்பட்ட மக்கள் திரளின் நலன்களை, பிரச்சினைகளை ஓரங்கட்டிவிடுகிறது. அவர் இதனை தேசியவாதத்தின் தவறான பயன்பாடு என வருணிக்கிறார்.

இது மிக அவலமானது. அம்பேத்கர் இந்திய விடுதலைக்கு மிக முன்னதாக எழுதியுள்ளது, சமகால இந்தியாவின் கொடிய யதார்த்தமாக இப்போது உருப்பெற்றிருக்கின்றது. மத்திய, மாநில அரசுகளின் இன்றைய பங்கீட்டு வழங்கல் முறையில் கீழ், செல்வம் சிலர் கைகளில் குவிந்திருப்பதற்கான ‘இந்தியாவில் உருவாக்குவோம்’ திட்டம் சிறந்த சாட்சியாகும்.

இதன் விளைவாக சமத்துவமின்மை பெருகுகிறது; வேலையில்லாத் திண்டாட்டம் பாய்ச்சலிடுகிறது. விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கிறது. அனைத்துப்பிரிவு உழைக்கும் மக்களின் இளைஞர்களின் கனவு கானல் நீராகிவிட்டது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது தீண்டத்தகாதோர் தனித்தேர்தல் தொகுதிகளைக் கோரினரென்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்தக் கோரிக்கை தேசியவுணர்வுக்கு எதிரானதாகச் சித்திரிக்கப்பட்டது. அம்பேத்கர் இந்தச் சித்திரிப்பை நிராகரித்தார்.

தலித்துகள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கென தனித்தொகுதிகள் ஒதுக்குவது அவர்களை தேசியத்திற்கு எதிரானவர்களாக மாற்றிவிடாது என்றார். அத்துடன் “வெளிப்படையாகவே, தேசியவாதம் தேசியவாதத்திற்கு எதிரான தன்மை என்பனவற்றால் தேர்தல் தொகுதி அமைப்பு முறையே ஒன்றும் செய்யவியலாது.

அவை தேர்தலுக்கு அப்பாற்பட்ட சக்திகளின் விளைவுகளே” 21ஆம் நூற்றாண்டு இந்தியாவில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிற தீவிரவாத அமைப்புகள் தேர்தலுக்கு அப்பாற்பட்ட  அணிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அவை வரலாறு, பண்பாடு, சமூகவியல் துறைசார்ந்த அர்ப் பணிப்புமிக்க புலமையாளர்களைக் கொண்டிருக் கின்றன. அவர்கள் தேசம் மற்றும் தேசியம் குறித்து வரையறுக்க முயற்சிக்கின்றனர்.

சமூகநீதியின் முக்கியத்துவம்

அம்பேத்கர் தனது ‘சாதியை ஒழித்துக்கட்டுதலி லிருந்து’ பற்றிய சொற்பொழிவில் சாதியைத் தேசத்திற்கு எதிரானதாகச் சித்திரித்தார். மேலும் சாதிவேற்றுமை மற்றும் விலக்கத்தை காரணமாகச் சட்டத்தின் துணை யோடு தண்டிக்க வேண்டுமெனக் கூறி இதனை “சமத்துவ மின்மைக்கு எதிரான மாபெரும் நச்சுத்தடைகாப்பு” என கவித்துவமாக வருணித்தார்.

அம்பேத்கர் தனது சட்டப் பேரவை உரையில், இந்தியதேசம் ஓர் ஒருங்கிணைக்கப் பட்ட முழுமை என்று தெரிவித்த போது இவ்வாறு எச்சரித்தார்; “தேசம் என்பதை நமக்கு நலம் பயத்தக்க வகையில் அந்தச் சொல்லின் சமூகவியல் மற்றும் உளவியல் பூர்வமான பொருளில் நாம் இன்னும் அடைய வில்லை என்பதை வெகுவிரைவில் உணர்வோம்.

அதற்குப் பின்னர்தான் தேசமாக உருவாதலின் தேவை குறித்தும், இலக்கை அடைவதற்கான வழிமுறைகள், நோக்கங்கள் குறித்தும் உணரத் தலைப்படுவோம்.” ஆகவேதான், அவர் அரசியல் மற்றும் பொருளாதார நீதியை மட்டும் வலியுறுத்தாமல் சமூகநீதி குறித்தும் வலியுறுத்தினார். அவரது கருத்தின்படி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பன சமூகநீதியின் உயிர்நாடியான உள்ளடக்கக் கூறுகளாகும்.

அம்பேத்கர் சொன்னார். “படிநிலைத் தரவரிசை அமைப்பு என்பதே சமத்துவமின்மையைக் கோட்பாட்டை அறிவிக்கும் மற்றொரு எளிதான வழிமுறைதான். ஆகவே உண்மையாகச் சொல்கிறேன். இந்துத்துவம் சமத்துவத்தை ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை.” அம்பேத்கர் இரக்க முள்ள கலகக்காரராக இருந்தமையால், சமூகநீதி பற்றிய புரிதலில் புத்தம் மிக நெருக்கமாக இருப்பதைக் கண்டறிந்தார்.

அவர் ஒரு பொருளாதார நிபுணராகவும் இருந்தமையால், சமூகநீதி பற்றிய அவரது தேடல் அவரை ஒரு சமூக ஜனநாயகவாதியாகவும் கார்ல் மார்க்ஸின் கருத்துநிலையைப் பயில்பவராகவும் இழுத்துச் சென்றது. அவர் புத்தரையும் மார்க்ஸையும் ஒப்பிட்டு இப்படிச் சொன்னார்: “புத்தர் மற்றும் கார்ல் மார்க்சின் கருத்து நிலைகள், அவர்களுக்கிடையிலான ஒப்பீடு என்பன என்மீது துளிகூட பிசகாமல் அப்படியே தாக்கம் செலுத்திய சக்திகள் ஆகும்.

எல்லோரையும் தழுவக்கூடிய எண்ணப்போக்கு களையுடைய தேசிவாதம் பாலின சமத்துவமும் பெண் அதிகாரமேற்பும் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களைக் கொண்டது. அம்பேத்கர் இதனை அவரது புதுயுகத்தை உருவாக்கும் இந்து சட்டமசோதாவின் வாயிலாக முழு அளவில் அடைவதற்கு விரும்பினார். அம்பேத்கரைப் பொறுத்த அளவில் ஜனநாயகம் என்பது ஒரு வாழ்வியல் முறை.

அவர் எழுதினார்: “ஜனநாயகம் என்பது வெறுமனே ஒரு அரசை அமைப்பதல்ல. அது முதன்மையாக ஒன்றிணைக்கப்பட்ட பகிர்ந்தளிக்கும் அனுபவத்தில் கூட்டமாக வாழ்வதற்கான ஒரு வழிமுறை. அது அடிப்படையில் சகமனிதனை மதிப் பதற்கும் போற்றுவதற்குமான மனப்பான்மை.” சாதிய சமுதாயத்திற்கான ஒரே மாற்றாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயம் இருக்குமென அம்பேத்கர் மிக உறுதியாக நம்பினார். இதன் காரணமாகத்தான் “ஒரு மனிதன்,

ஒரு வாக்கு; ஒரு மனிதன் ஓர் விலை” என்ற கோட் பாட்டிற்கு மிக முக்கியத்துவம் அளித்தார். ஜனநாயகம் அதன் சம்பிரதாயமான வெளிப்பாடுகளைத் தாண்டி மிக உயரத்திற்குச் செல்லவேண்டும் என்பதிலும் உண்மையான உறுதிப்படுத்தப்பட்ட ஜனநாயகம் நிலவுகிற சமூகப் பொருளாதார மண்டலத்தை நோக்கி நகரவேண்டுமென்பதிலும் அம்பேத்கர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டார். இந்த வடிவிலான ஜனநாயகத்தையே அவர் கற்பனை செய்தார். இதில் எல்லோருடைய உண்மையான மதிப்பும் உறுதிப் படுத்தப்படும்.

தேசியவாதம் என்பது

எல்லோரையும் உள்ளடக்குதல்

அண்மையில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்த சில தலைவர்கள், திரும்பத் திரும்ப மிக இறுக்கமாக தேசியவாதம் பற்றிப் புகழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தேசியவாதம் என்பது மிக ஆபத்தான நிலையிருக்கிறதென அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள். இந்தியக் குடிமக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம், தேசியவாத உணர்ச்சியின் முக்கியத் துவத்தை ஆழப்பதிய வைக்கவேண்டுமென்கின்றனர். மேலும் நமது தேசத்தின் ஒருமையையும் முழுமையையும் பாதுகாக்க வேண்டுமெனக் கூறிவருகின்றனர்.

‘பாரத் மாதா கீ ஜெய்’ என்கிற முழக்கம் தேசியவாதத்தின் ஒரே குறியீடாக அவர்களால் பயன்படுத்தப்படுகின்றது. இந்த முழக்கத்தை இசைப்பதன் வாயிலாகத்தான் இந்தியர்கள் தாங்கள் தேசியவாதிகள் என்ற நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியுமென பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். இது அல்லாத வேறெதனையும் அவர்கள் தேசியத்திற்கு எதிரானதாக விளக்குகின்றனர்.

அம்பேதர்கள் மிகச் சரியாக அவதானித்திருந்தார்: “தேசியத் தன்மை என்பது சமுதாய உணர்ச்சி. இது ஒருமைத்தன்மை கொண்ட கட்டியணைக்கப்பட்ட உணர்ச்சிவடிவம். இந்த ஒருமைத் தன்மை எல்லோரும் உற்றார், உறவினரென்ற உணர்வுநிலையை மக்களிடத்து நிரப்புகிறது. தேசிய உணர்ச்சி என்பது ஓர் இருமுனை கொண்ட உணர்ச்சி. இது ஒரேநேரத்தில் ஒருவர் தன் சொந்த உற்றார் உறவினரிடத்துக் கொள்ளும் தோழமை யுணர்ச்சியாக இருக்கிறது.

அத்துடன் தனது சொந்த மில்லாத உற்றார் உறவினரிடத்து பகையுணர்ச்சி கொள்கிறது. இது ஒரு ‘தன்னுணர்வு சார்ந்த நிலையாக  தன்னுணர்வு சார்ந்த நிலைப்பாடு.’ அது ஒரு பக்கம் எல்லோரையும் சமுதாயப் படிநிலை வரிசைகள், பொருளாதார முரண்பாடுகள் சார்ந்த அனைத்து வேற்றுமைகளையும் கடந்து ஒன்றாக்கி இணைக்கிறது.

மறுபக்கத்தில் அவர்கள் இனத்தார் அல்லாதாரை ஒட்டறுத்து வேறுபடுத்துகிறது. இது வேறு எந்தக் குழுவிலும் சேரவிரும்பாத விருப்ப ஆசை. இவைதாம் தேசியத்தன்மை மற்றும் தேசிய உணர்ச்சி என்றழைக்கப் படுவனவற்றின் சாராம்சம்.

இந்த மேலுயர்த்தப்பட்ட எண்ணப்பாங்குடைய தேசியத்தன்மையை வெறும் முழக்கங்களாலோ வன்முறை சார்ந்த ஆண்மையணுகுமுறைகளினாலோ உருவாக்கவும் முடியாது; அடையவும் முடியாது. ஒன்றுசேர்ந்து திட்டமிடுகிற ஜனநாயக முயற்சியும், உயர்நிலையிலான அரசியல் மேதைமைப் பண்பும், மக்களை அதிகாரப்படுத்துவதற்கும் பரவலாக்கப்பட்ட கல்வி மற்றும் வாழ்க்கைத்தர வளங்களின் மூலம் தங்கள் உண்மை மதிப்பை மறுகோரல் செய்வதற்குமான பார்வை, உள்ளடக்கும் தன்மை மற்றும் அந்நியப்படுத்தா பொருளாதாரம் ஆகியவற்றை உரிமையாகப் பெற்று எழுச்சிபெறல் என்பனவெல்லாம் இதற்குத்தேவைப்படுகின்றன.

இதுதான் அம்பேத்கர் தேசியவாதத்திற்குக் கொடுத்த உண்மையான அர்த்தம். இது படைப்புத் தன்மை மிக்கது, இரக்கவுணர்வு கொண்டது, உலகளாவிய விடுதலையுணர்வுமிக்கது.

Pin It