மரத்தடி மாநாடு

Evening-Tamil-News-Paper_380(கல்லூரி; உணவு இடைவேளை; உணவை முடித்துக் கொண்ட அல்லியும் அமுதனும் மரத்தடி நிழலில் உரையாடிக் கொண்டிருந்தனர். அன்றைய நாளிதழ்கள் அவர்கள் கையிலே இருந்தன.)

அமுதன் : சாதி, தமிழ்நாட்டை ஆளப்பாக்குதோ அல்லி! எங்கு பாத்தாலும் ஒடுக்கப்பட்ட சாதியை ஆதிக்க சாதி கொன்னுக்கிட்டு இருக்கே! உயிரையும்  உடைமையையும் கொளுத்தித் தன் சாதி வெறியத் தீர்த்துக்கப் பாக்குதே! மனித நேயம்,சமூக நீதி,உயிர்களக் கொல்லாமை மனித உரிமை இவையெல்லா வெறும் பேச்சுக்குத்தானோ ?

அல்லி :சாதியெல்லாம் தமிழ்நாட்டை ஆளமுடியாது அமுதா! ஆனா, தன் சாதிக்குக் கட்டுப் பாடு விதிக்கவும் தன் சாதியைத் தான் ஆளவும் வேணும்னா,இப்படி சாதி வெறியத் தூண்டிவிடலாம் அமுதா.

அமுதன்:இனப்படுகொலையை எதிர்த்தவர்கள் சாதிப்பேரால் பேரழிவுகளைச் செய்யுறாங்களே, இது சரியா அல்லி?

அல்லி : இதுதான் பார்ப்பனியத்தின் வளர்ச்சி அல்லி. இதுக்குப் பேர்தான் சாதி ஆதிக்கம்,சாதி வெறி. மனிதன் தனக்குத்தானே தீங்கிட்டுக் கொள்ளும் நிறவெறி, இனவெறி எல்லாம் வேண்டான்னு சொல்லுற தமிழன்தான் சாதிவெறியால் பேரழிவைத் தேடுறான். மனிதக் கறியை மனிதன் திங்குற காலத்தை நோக்கிப் போகிறான்.

அமுதன் : சாதி மறுப்புத் திருமணம் இவ்வளவு பேரழிவைக் கொடுத்திடுமா அல்லி ?

அல்லி : கொடுக்கத்தானே காடுவெட்டிக் குரு பேசி இருக்காரு. அதுதான் சாதிவெறியோட வெற்றி!

அமுதன் : அப்படி என்னதான் காடுவெட்டிக் குரு பேசினாரு,? எங்கே பேசினாரு?

அல்லி :நம்ம சாதிப் பெண்ணை வேற சாதிக்காரன் காதலிச்சிக் கல்யாணம் பண்ணினா அவனை வெட்டுங்கடான்னு சொன்னாரு அமுதா! சென்ற மே மாதம் 5ந் தேதி  மாமல்லபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா நடந்திச்சு; அந்தச் சித்திர முழு நிலவு நாளில்தான் அவ்வாறு கொழுப்பெடுத்துப் பேசினாரு.

அமுதன் :பாரதியார் “குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”னு சொன்னாரே, அந்தப் பொருளில மாற்றம் வந்திருக்கா அல்லி?

அல்லி :   ஒரு சாதி உயர்வு, ஒரு சாதி தாழ்வுன்னு சொல்றதைப் பாரதியார் “பாவம்”னு சொன்னாரு. அந்தப் பாவம் வேற அமுதா! இன்னைக்குப்  பாவம்னா என்னான்னு தெரியுமா? தாழ்த்தப்பட்டவன் தன் உழைப்பால் தன்னை உயர்த்திக் கொண்டான்னா, ஆண்டைகள் தன் சாதிக்காரனெல்லாம் பாவம்னு நெனைக்கிறான். அதாவது தாழ்த்தப்பட்டவன் மேல வந்தால் தன் சாதிக்காரன் கீழே போய்டுவான்னு அச்சப் படறான், ஆதிக்கம் செய்ய வழி இல்லாமப் போய் விடுமே!ஆதிக்கம் செய்யாம அவன் எப்படி வாழ்வான்?பாப்பானுக்கும் இந்தியாவுக்கும் வேணும்னா  வாய் மூடி அடிமையா வாழ்வான்! ஆனா அவனுக்கு அதிகாரம் பன்ன  அவனுக்குக் கீழே ஓரடிமை வேணும். அதனால தான் பொறாமை, வயிற்று எருச்சல் எல்லாம் ஒண்ணா சேர்ந்து அடிடா, வெட்டுடா, குத்துடா கொளுத்துடான்னு கெளும்புறாங்க. பார்ப்பனியத்தின் வெற்றி இரகசியம் இங்கதா அடங்கிக் கிடக்குது,அமுதா !

Tamil-Daily-News-Paper_380அமுதன் :நத்தம் காலனி,காதல் திருமணத்தால் எரிந்ததா? அல்லது அதற்கு வேறு காரணம் ஏதாவது உண்டா, அல்லி?

அல்லி :  காதல் சாதி பார்த்தா வருது?அது அன்பின் வெளிப்பாடு அமுதா!நத்தம் காலனியில உள்ள இளவரசன்,செல்லம் கொட்டாய்ப் பெண் திவ்யா இருவருக்கும்தான் காதல் திருமணம்.அப்படீன்னா,அந்த இரு வீடுகளுக்கும் இடையேதானே அந்தப்பகை இருந்திருக்கனும்?ஆனா ஊரே திரண்டு வெட்டறுவாள்,பெட்ரோல் குண்டுகளோடு வருதுன்னா,அதுக்குக் காதல் ஒரு கணக்கே தவிர முழுக்கணக்கும் தலித்துகளின் பொருளாதாரத்தைத் தாக்கி அழிப்பதுதான்.

 அமுதன் : அப்படீன்னா, தலித் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை அழிப்பது மட்டும் தான் நோக்கமா?

அல்லி : இல்ல அமுதா, அதுல வேற பல நோக்கங்களும் இருக்கு. மேல் சாதிக்காரன் கணக்குப்படி தன் சாதிப் பெண்ணைத் தாழ்த்தப்பட்டவன் காதல் திருமணம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் அவன் சாதியும் இவன் சாதியும் ஒன்னாயிரும். அப்புறமா அவன் யாரை அதட்டறது, மிரட்டறது? அப்படி ஏதும் நடந்திரக் கூடாதுன்னு தான் இந்தப் பேயாட்டம். காதலைத் தடுப்பதும் பொருளாதாரத்தைப் பறித்து ஆண்டியாக்குவதும்தான் இவங்க நோக்கம்!

அமுதன் : தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்துனாங்களே, தாழ்த்தப்பட்ட தமிழ்ச்சாதி மக்கள விரட்டி விரட்டி அடிப்பதுதான்,கொல்றதுதான் இவங்களோட வாழ்வுரிமைக் கொள்கையா?

அல்லி :தலித் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்த பிறகு எங்கே இருக்கிறது தமிழர் வாழ்வுரிமை? அது தன்சாதி வாழ்வுரிமைதா.அதுதான் அவங்க கொள்கை, அமுதா?

அமுதன் : அது சரி,அரசாங்கம் இந்தப் பேச்சை எல்லாம் கண்டுக்காம இருக்கே! இது என்ன அரசாங்கம்? சாதி மறுப்புத் திருமணம் செய்தா பாராட்டிப் பரிசு வழங்கும் இந்த அரசு சாதி மறுப்பத் திருமணத்திற்கு எதிராப் பேசுறவங்கள தட்டிக் கேட்க வேண்டாமா? சாதிய உணர்வைத் தூண்டுறவங்கள அடக்கி வைக்க வேண்டாமா அரசு?

அல்லி :நாளைக்கு மறுபடியும் ஆட்சியைப் பிடிக்க ஓட்டு வேண்டுமே, அதனாலாதான் எந்தக் கட்சி அரசானாலும், ஓட்டுக்காக அடங்கிப் போகுது அமுதா! ஆதிக்கச் சாதி வெறியர்களை எல்லாம் வன்கொடுமைச் சட்டத்தின் கீழே சிறையில் அடைக்கணும் அமுதா.  

அமுதன் : இரண்டு சாதி மக்கள ஒன்றுபடுத்த அரசு என்னதான் முடிவு எடுத்திருக்கு?

அல்லி : முடிவா? அது நிவாரணம்தான் வேறென்ன? சொந்த மண்ணுல அகதியா நிக்குற மக்களுக்கு அம்பதாயிரம் முதலமைச்சர் நிவாரண நிதி, அகதியா ஆக்கினவங்களுக்கு நூறு பேர்மேல வழக்கு, அரசோட வேல முடிஞ்சி போச்சு.

அமுதன் : என்ன அல்லி? நீ சொல்றதப் பாத்தா ஏதோ வெள்ள நிவாரணம் கொடுத்தது போல இருக்கே. இது ஒரே இனத்துக்குள்ள நடந்த சாதிப்போர் அச்சுறுத்தல் இல்லையா? இத லேசுல விட்டுட்டா சாதி வன்கொடுமையைத் தடுக்க முடியாதே அல்லி?

அல்லி : உண்மைதான்! ஆனா அரசோட கணக்கு வேற அமுதா, ரெண்டு சாதி மக்கள் வாக்கும் தனக்கு வேணுமே? அரசுக்கு அடிபட்டவனும் அடிச்சவனும் ஒண்ணுதான்! ரெண்டுபேரும் வாக்காளன்தானே!

அமுதன் : அடிச்சவனையும்,அடிபட்டவனையும் இறுக அணைச்சி உச்சி மோவதுதான் அரசோட வேலையா அல்லி? அப்படின்னா, தவறுக்குத் தண்டனை? இது அரசோட கள்ளத்தனமா தெரியுதே? இந்த அதர்ம ஆட்டத்துக்கு அரசாங்க நிர்வாகத்தோட ஆதரவும் இருந்ததா சொல்றாங்களே அல்லி!

அல்லி : இருக்காதா பின்னே! அய்யப்பாடு இருக்கத்தான் செய்யுது அமுதா! சாதி வெறிக்கும்பல் திட்டம் தீட்டியது, உளவுப்பிரிவுக்கு தெரியாமல் போனதா? 42 மரங்கள வெட்டிச் சாலை எங்கும் தடுத்து நத்தம் காலனி, அண்ணாநகர்,புதுக்காலனி, கொண்டப்பட்டி ஊர்களுக்கு வெளியிலிருந்து யாரும் உள்ளே வராமல் இருக்க சாலை அடைக்கப்பட்டதே, அதுவும் தெரியாதா? நாகராஜ் உடலை வைத்துச் சாலை மறியல் செய்ததும் அரசு நிர்வாகம் அறியவில்லையா? எல்லாம் முடிந்த பிறகுதானே காவல்துறையே அந்த இடத்துக்குப் போயிருக்கு. இது அரசின் மெத்தனமா? அல்லது இந்த வன்முறைச் சாதி வெறி ஆட்களுக்கு நிர்வாகம் துணை போனதா? இதுதான் அமுதா சாதி உணர்வு. குருதி உணர்வு ! அதுக்குத் தண்ணீரை விட அடர்த்தி அதிகம்.

அமுதன் : தன்சாதி தன்சாதின்னு அலைகிற சாதிவெறியனுக்கு மனிதன் ஒரே சாதின்னு தெரியுற காலம் எப்ப வருமோ அல்லி?

அல்லி : நாமதான் அதை உருவாக்கணும் அமுதா! சமூக நீதியின் அடிப்படையில் எல்லோருக்கும் சமமான கல்வி, வேலைவாய்ப்பு, அடிப் படை வசதிகள்; அனைத்தையும் உழைப்பால் பெற வாய்ப்பு வசதிகள். இத்தகைய ஓர் அறிவியல் அமைப்பால் மட்டும்தான் இந்தச் சாதி வெறியைக் குறைக்க முடியும் அமுதா. அதுக்கு முன்னால இந்தத் தீண்டாமையை ஒழிக்கணும். இந்தத் தீண்டாமை மனிதர்களைச் சேர்ந்துண்ணாமல் செய்வதும், சேர்ந்து வழிபடாமல் செய்வதும், உறவுமுறையில் மனிதர்களைக் கலக்கச் செய்யாமல் சாதிமுறையில் பிரிப்பதுமா இருக்குது. தீண்டாமை எனும் கொடிய நோயைத் தமிழர் மனதை விட்டே ஒழிப்பதுதான் சாதிச் சிக்கலுக்கு தீர்வாகும் அமுதா!

அமுதன் : அதுதான் மக்களத் தீண்டுவதற்கான தீவிர சிகிச்சையா அல்லி!

அல்லி : ஆம் அமுதா. சாதி பெயரளவில நீடிக்கத்தான் செய்யும். காலப்போக்கில அதோட உக்கிரம் கொறையும். ஆனா, அதுவரையில் தீண்டாமை நீடிக்கணும்னு அவசியமில்லை. தீண்டாமை கடைசியா வந்து சேர்ந்தது. அது முதல்ல போவட்டும.; கோயில், குளம், கல்வி, மருத்துவம், உணவகம், இவையெல்லாம் எல்லா மக்களுக்குமான பொதுப்பயன்பாட்டு இடங்களாக மாற்றப்படணும். சாதிக்கொரு படிநிலை இங்கெல்லாம் அறவே கூடாது. தாழ்த்தப்பட்டவங்களும், பிற்படுத்தப்பட்டவங்களும் சமூகநீதிக்கான இடங்களைப் பெற்றுக் கொண்டே தன் சாதி இருப்பை கழித்துக் கொள்ள வேண்டும். மனத்தை விட்டே எரித்துக் கொள்ள வேண்டும். ஆதிக்க சாதி மனோநிலையும், அடிமைபடுத்தும் மனோநிலையும்தான் தீண்டாமைக்குக் காரணம்.இது இன்று வீடுகளையும் பொருளையும் எரிச்சிருக்கு.வெண்மணியில மனிதர்களையும் எரிச்சிருக்கு.இதையெல்லா தடுத்து நிறுத்த போர்க் குணம் வேண்டும். தீண்டாமை வேர்களைப் பிடிங்கி எடுக்க வேண்டும். ஆணி வேர் முதல் சல்லி வேர் வரை இந்த மண்ணிலிருந்து அகற்றப்படவேண்டும். சாதிக்கு எதிராகப் போராடும் குணத்தை வளர்ப்போம்; சாதித் தீயை அணைப்போம்.

அமுதன் :சரிதா அல்லி! சாதிக்கு எதிரான மக்கள் இயக்கத்தை கட்டுவோம்! 

அல்லி: ஆனா இறுதியா சாதி மறையனும்னா அகமண முறை முடிவுக்கு வரனும். சாதி இருப்பே அகமண முறையிலதா தங்கியிருக்குதினு அம்பேத்கர் தெளிவுபடுத்தியிருக்காரு.

அமுதன்: சரியாச் சொன்னே! அதனாலேதா ஆதிக்கச் சாதிக காதல் மணத்தையும் சாதி மறுப்பு மணத்தையும் இவ்வளவு வெறியோட எதுக்கிறாங்க.

அல்லி: காதலையும் சாதி மறுப்புத் திருமணத்தையும் ஊக்குவிப்போம்; வாழ்த்துவோம்!

 

 

(கல்லூரி மணி ஒலிக்க இருவரும் அவரவர் வகுப்பை நோக்கி நடக்கத் தொடங்கினர்)

 

Pin It