Mylapore_Ponnuswamy_Sivaganam_380துரையைச் சேர்ந்த திரு. மு.சந்திரபாபு அவர்கள் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் சிறு அகவையிலேயே தம்மை இணைத்துக் கொண்டவர் ஆவார். 72 அகவையைக் கடந்து விட்ட நிலையிலும் துடிப்போடு இளைஞரைப் போல் பேசுகிறார்.  பழைய வரலாற்று நிகழ்வுகள் எதைக் கேட்டாலும் நாள், மாதம், ஆண்டு உள்பட அனைத்தையும் ஞாபகத்தோடு சட்டென்று சொல்கிறார்.  ம.பொ.சி. நடத்திய தெற்கெல்லை, வடக்கெல்லைப் போராட்டம், தமிழ்நாடு பெயர்  மாற்றப் போராட்டம், தமிழ் ஆட்சி மொழிப் போராட்டம் என அனைத்திலும் பங்கேற்றுச் சிறை சென்றுள்ளார்.  எத்தனையோ எல்லைப்போர்  ஈகியர்கள் ஓய்வூதியம் பெற்று வாழ்ந்து வரும் நிலையில் அதனை வாங்க மறுத்துத் தன்மானத்தோடு வாழ்ந்து வருகிறார்.  அவர் தமது பழைய வரலாற்று நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அவரோடு உரையாடியதிலிருந்து.........

நேர்காணல்: கதிர்நிலவன், நா.கதிர்வேல்

அய்யா உங்களுடைய குடும்ப வாழ்க்கை குறித்துக் கூறுங்கள்.

நான் 1940ஆம் வருடம் சூன் மாதம் 9ஆம் தேதி பிறந்தேன். முத்துச்சாமிப் பிள்ளை, தெய்வம்மாள் ஆகியோரே என் பெற்றோர்கள். எனக்கு அவர்கள் வைத்த பெயர் சந்திரன். நான் சிறுவனாக இருந்தபோது என்னுடைய அப்பா நாட்டுப் புறப்பாடல் ஆசிரியரான பெருமாள் கோனார்  பாடல்களைப் பாடி மகிழ்விப்பார்.  நான் படித்தது 8ஆம் வகுப்புத்தான். எனக்கு உற்ற நண்பனாக இருந்த மனைவி சரசுவதி காலமாகி விட்டார். எனக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

தமிழரசுக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டது எப்போது ?

எனக்கு 13 வயது இருக்கும் போதே ம.பொ.சி. பற்றி ஓரளவு அறிந்து இருந்தேன். அப்போது தமிழரசுக் கழகத்தில் டாக்டர்  லயன் என்.துரை,  ஏ.கே.முருகையா, பவுன்ராஜ், ஆகியோர்  மதுரையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களோடு சேர்ந்து கூட்டங்களுக்குச் செல்வேன். சிம்மக்கல் பிள்ளையார் கோயில் அருகிலுள்ள அரசமரத்தில் தமிழரசுக் கொடியும் காங்கிரசுக் கட்சிக் கொடியும் கட்டச் சொன்னார்கள், கட்டினேன். அப்போது தமிழரசுக் கழக மேடைகளில் “விசாலா ஆந்திரா  கேட்டுத் தெலுங்கர்கள் போராடி வருவதைப்போல, ம.பொ.சி. அவர்கள்  தமிழ்நாடு மாநிலம் அமைக்கப் போராடி வருகிறார்.  தமிழர்களே! அவருக்கு துணை நில்லுங்கள்” என்று வேண்டுகோள் விடுப்பார்கள்.  எந்தக் கூட்டம் நடந்தாலும் என்னைத்தான் கொடி கட்ட அழைத்துப் போவார்கள்.  அப்போது தலைவர்களின் பேச்சுகள் என்னைக் கவர்ந்திழுத்தன.  அது முதலே தமிழரசுக் கழகத்தில் என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன்.

திருவிதாங்கூர்கொச்சி முதல்வர் பட்டம் தாணுப் பிள்ளைக்குக் கறுப்புக் கொடி காட்டிக் கைதானது எதற்கு என்று கூற முடியுமா ?

1953ஆம்வருடம் சூலை மாதம் மூன்றாம் நாள் வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தைத் தலைவர் ம.பொ.சி.அவர்கள் திருத்தணியில் நடத்தியபோது கைதானார். அதைக் கண்டித்து மதுரையில் ரயில் மறியல் நடத்தினார்கள். தொண்டர்களுக்குக் கொடியும், கம்பும் கொடுக்கும் பணியை எனக்கு அளித்தார்கள். அதற்கு அடுத்த மாதம் தெற்கெல்லையில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி பரவியது. சுட்டுக் கொலை செய்ய உத்தரவிட்டவர்தான் இந்த பட்டம் தாணுப்பிள்ளை, இவர் எந்தக் குற்ற உணர்வுமின்றி திண்டுக்கல் பிரஜா சோசலிஸ்ட் கட்சி மாநாட்டிற்கு

16&08&1954 அன்று வரப்போவதாக அறிவித்தார். அதைக் கேள்விப்பட்டுக் கொதித்தெழுந்த ம.பொ.சி. தொண்டர்கள் பட்டம் தாணுப்பிள்ளைக்குக் கறுப்புக் கொடி காட்ட அழைப்பு விடுத்தனர்.  கவிஞர் கா.மு.செரிப், மதுரைப் போரட்டத் தளபதி கலைஞர் கவி.மா.காளிதாஸ் ஆகியோர் தலைமையில் 150 பேர் புறப்பட்டோம். அவர் வரும் பாதையில் எதிர்ப்பைக் காட்டுவதற்காக நான்தான் மின்சாரக் கம்பத்தில் ஏறிக் கறுப்புக் கொடியைக் கட்டினேன். அதைப்  பார்த்துக் கொண்டிருந்த பிரஜா சோசலிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கம்புகளோடு வந்து எம்மைத் தாக்கினார்கள். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட லயன்துரை, திண்டுக்கல் கிருஷ்ணன் ஆகியோரின் மண்டைகள் உடைந்தன. போராட்டத்தின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் பட்டம் தாணுப் பிள்ளை மாநாட்டிற்கு வராமலே ஓடிவிட்டார்.  இது எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

ம.பொ.சி. வடக்கெல்லைப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்.  ஆனால் தெற்கெல்லைப் போராட்டத்தில் அவரின் பங்களிப்புக் குறைவாக உள்ளதே ?

அது தவறு. இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தமிழர்கள் படுகின்ற துன்பங்களை எழுதியும், பேசியும் வந்துள்ளார்.   ம.பொ.சி.முதலில் ஈடுபட்டதே தெற்கெல்லைக் கிளர்ச்சியில்தான். 25&10&1946இல் நாகர்கோயில் வடிவீசுவரம், குளச்சல், இரணியல், மயிலாடி ஆகிய ஊர்களுக்குச் சென்று பேசியுள்ளார்.  தெற்கெல்லைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய பி.எஸ். மணி, மார்சல் நேசமணிக்கு உற்ற துணையாக இருந்தவர். ம.பொ.சி. அவர்கள் மார்சல் நேசமணி தலைமையில் தெற்கெல்லைப் போராட்டம் வெற்றி பெற விரும்பிய காரணத்தால் அவருக்குப் பின்னால் நின்று குரல் கொடுக்கவே  விரும்பினார்.  பட்டம் தாணுப்பிள்ளைக்குக் கறுப்புக்கொடி காட்டிய போராட்டமாகட்டும், 1956ஆம் ஆண்டு சனவரி  இறுதியில் ஒரு வாரம் கன்னியாகுமாரியில் நடத்திய போராட்டமாகட்டும் எல்லாமே தெற்கெல்லை மக்களுக்காகவே நடத்தப்பட்டன.  அதற்கு நானே ஒரு சாட்சி.  கடைசி நாள் போராட்டம் என் தலைமையில்தான் நடைபெற்றது. எனக்கு 35 நாள் சிறைவாசம் கிடைத்தது.

தமிழரசுக் கழகம் இராசாசியின் தூண்டுதலால்தான் உருவாக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டுக் கூறப்படுகிதே ?

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றிய இராசாசியைத் தம் வழி காட்டியாக ம.பொ.சி. ஏற்றுக் கொண்ட கருத்தில் எனக்கு மாறுபாடில்லை.  அவருக்கு 1936ஆம் ஆண்டிலிருந்தே இராசாசியைத் தெரியும். காந்தியடிகளுக்கு அடுத்தபடியாக இராசாசியை மதித்து நடந்தவர் என்பதெல்லாம் உண்மைதான். அதே சமயத்தில் பாகிஸ்தான் பிரிவினையை இராசாசி ஆதரித்த போது எதிர்த்து நின்றவர் ம.பொ.சி.யே! தமிழ் மொழிப் பற்றும், தமிழன் இனப் பற்றும் ம.பொ.சி.யாருக்கு இயல்பாய் வளர்ந்து வந்த காலகட்டத்தில் இராசாசியின் தமிழ்ப் பற்று இவரை ஈர்த்தது.  இராசாசி தன் பெயரை “இராஜகோபாலச்சாரி” என்று எழுதாமல் “இராசகோபாலச்சாரி” என்றுதான் எழுதுவார்.  “ஜெய்ஹிந்த்” என்று வடமொழியில் சொல்லாமல் “வெல்க இந்தியா” என்று முழங்கும்படி கூறுவார்.  இது பல பேருக்குத் தெரியாது. 

காங்கிரஸ் பேரியக்கத்தில் பணியாற்றிய பொழுதும் அதன் பின்னர் இந்தியா விடுதலை பெற்ற பிறகும் ம.பொ.சி. புதிய தமிழகம் காணவே ஆசைப்பட்டார்.  அவருக்கு ஆதரவு தர காங்கிரசார்  மறுத்த நிலையில்தான் 21&11&1946இல் தமிழரசுக் கழகத்தைத் தோற்றுவித்தார்.  அந்த நிகழ்வில் திரு.வி.க., தெ.பொ..மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதில் இராசாசிக்கு ஒரு பங்குமில்லை.  இன்னும் சொல்லப் போனால் இராசாசி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, திருத்தணியில் நடந்த வடக்கெல்லைப் போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை. திருப்பதியை ஆந்திராவிற்குத் தரவேண்டும் என்று இராசாசி கூறிய நேரத்தில் “மாலவன் குன்றம்  தமிழருக்கு வேண்டும்”என்று வரலாற்று ஆதராங்களைக் சுட்டிக் காட்டி வாதாடியவர். 1954இல் தட்சணப்பிரதேசத் திட்டம், 1965இல் ஆங்கில மொழிக்கு ஆதரவு ஆகிய அவருடைய நிலைப்பாடுகளை ம.பொ.சி. கடுமையாக எதிர்த்தார்.

தமிழரசுக் கழகத்தில் நீங்கள் என்ன பொறுப்பு வகித்தீர்கள்?

1960இல் சென்னையில் தமிழரசுக் கழகச் செயற் குழுவில் இருந்து பொதுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்ந்தெடுத்தார்கள்.  என் பெயரை ஏ.பி.நாகராஜன் முன்மொழிய கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழி மொழிந்தனர். 30&01&1961ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பெயர் மாற்றப்போராட்டத்திற்கு நான் மதுரை நகருக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டேன். என்னுடைய தலைமையில் 70 தொண்டர்கள், 13 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். 1960 முதல் 1965 வரை மதுரை நகரத் துணைச் செயலாளராகவும், 1965 முதல் 1975 வரை 10 ஆண்டுகள் மதுரை நகரச் செயலாளராகவும் இருந்து வந்துள்ளேன்.

ம.பொ.சி.யின் 56ஆவது பிறந்த தின விழாவிற்கு மதுரையில் ரூ.1,158/ மற்றும் 58பவுன் நகையும், வசூலித்து கவி.கா.மு.செரிப்பிடம் கொடுத்தோம். 1973ஆம் ஆண்டு தமிழரசுக் கழக 6ஆவது மாநில மாநாடு மதுரையில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டை நானும், மதுரை வழக்கறிஞர் மு.மாரியப்பனும் நடத்தினோம். அதில் தமிழக முதல்வர் கலைஞர், எஸ்.எம்.செரிப், பி.கே.மூக்கையாத் தேவர், குன்றக்குடி அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.  இது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. இப்போதும் ஒவ்வோர் ஆண்டும், ம.பொ.சி.யாரின் பிறந்த நாள் விழாவினைத் தமிழக எல்லைப் போராட்டத்தில் கலந்துகொண்ட தியாகிகளை அழைத்து நடத்தி வருகிறேன்.  எல்லைப் போராட்ட வரலாற்றை ஒவ்வொரு தமிழரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

Pin It