மனிதன் தோன்றியிருக்காவிட்டால் சமூகம் தோன்றியிருக்காது. அதைவிட உண்மை கடவுளும் தோன்றியிருக்கமாட்டார்; மதங்களும், கோவில்களும் தோன்றியிரா; உருவச்சிலைகளும் தோன்றியிரா; சிலைகளுக்குப் பெயர்களும் தோன்றியிரா; சிலைகளுக்கு ஊர்வலமும் நடந்திருக்காது; ஊர்வலத்தில் கலவரமும், கல்வீச்சும், காவல்துறை தடியடியும், கைதும் இவற்றையெல்லாம் வைத்து மதவாத, பிழைப்புவாத அரசியலும் வளர்ந்திருக்காது; புனிதப் போர்களும் வரலாற்றில் இடம் பெற்றிருக்காது. கொடிய போரினால், நோயினால், இயற்கைச் சீற்றத்தால் இறந்த மக்களை விட உலகில் இதுவரை மதச் சண்டையில் மடிந்த மக்களின் எண்ணிக்கையே அதிகம்.

சுரண்டல், வறுமை, சாதிக் கொடுமைகள், வேலையில்லாத் திண்டாட்டம், உலகளாவிய முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி, வேலையிழப்பு, ஊதிய இழப்பு, சிக்கன் குனியா, பன்றிக் காய்ச்சல் போன்ற புதிய நோய்களின் தாக்குதல்கள், கல்வியின்மை, மருத்துவ வசதியின்மை, இருப்பிடமின்மை, புவி வெப்பமடைதல், சுற்றுச்சூழல் கேடு, அணு ஆயுதப் போட்டி, இனப்படுகொலைகள், மதத் தீவிரவாதம், பயங்கரவாதம் இப்படி எண்ணற்ற நெருக்கடிகள் இன்றைக்கு உலகில் உள்ள அனைத்து மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன. மக்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் அன்றாடம் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். தங்களின் இன்னல்களைத் தீர்த்து வைக்குமாறு நாள்தோறும் எண்ணற்ற கடவுளிடம் எண்ணற்ற வழிபாடுகளை ஏராளமான பொருட் செலவில் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் செய்து வருகின்றனர்.

ganesa_festival_500

மக்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எல்லா வகையான சிக்கல்களுக்கும், இன்னல்களுக்கும் காரணங்களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் அறிவார்ந்து சிந்தித்து விடை காண முடியாத நிலையிலேயே உள்ளனர். அவர்கள் கடவுள், மதம் அடிப்படையிலான போலி வழிமுறைகள் மீது நம்பிக்கை கொள்கின்றனர். இவ்வாறு அவர்களை மூடநம்பிக்கைகளில் ஆழ்த்தியதில் அன்றைய முடியாட்சி மன்னர்கள் முதல் இன்றைய ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தினர், ஆளும் வர்க்கத்தை ஆட்டிப் படைக்கும் மதவாதிகள் வரை பெரும் பங்குண்டு. அதில் அவர்கள் வெற்றியடைந்துள்ளனர் எனபதையே நடப்பு நிகழ்வுகள் காட்டுகின்றன.

வட இந்தியாவில் இருந்து தமிழகத்தில் புகுத்தப்பட்ட விநாயகர் வழிபாடு இன்றைக்கு விநாயகர் சதுர்த்தி விழாவாகத் தமிழ் மக்களிடம் பரப்பப்பட்டு முதன்மை பெற்று வருகிறது. தமிழ் இனக்குழு வரலாற்றுக் கால இலக்கியங்களான சங்க இலக்கியங்களில் விநாயகர் வழிபாடு இருந்ததாகவோ, விநாயகர் என்ற கடவுளைத் தமிழர்கள் வழிபட்டதாகவோ எந்தச் சான்றுகளும் இல்லை. நெருப்பு (அக்னி), காற்று(வாயு), முருகன், இந்திரன், மழை(வருணன); ஆகிய கடவுள்களையே நம் தமிழர்கள் வழிபட்டு வந்துள்ளனர். தமிழர் கடவுள் என்ற எந்தத் தொடர்பும் தமிழர்களுக்கும், விநாயகருக்கும் இருந்திருக்கவில்லை என்பது வரலாற்று உண்மை. இசுலாம், கிறித்துவம் போன்ற பிற சமயக் கடவுள்களைப் போலத்தான் விநாயகர் என்ற இந்து சமயக் கடவுளும் இடையில் தமிழ் மண்ணில் நுழைக்கப்பட்டுப் பரப்பப்பட்ட கடவுளாகும்.

ஆனால் இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள எந்தக் குலதெய்வத்திற்கும் மதக் கடவுளுக்கும் வழங்கப்படாத முக்கியத்துவம் இந்துத்துவ மதவாதிகளால் விநாயகர் வழிபாட்டுக்குக் கொடுக்கப்படுகிறது. ஒவ்வோராண்டும் விநாயகர் சதுர்த்தியை (விநாயகர் பிறந்த நாள்) முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஊர்தோறும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு அனைத்தும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. தங்களுடைய பிறந்த நாளைக் கூட நினைவில் வைக்காமல் மறந்துவிடும் நமக்கு, விநாயகர் பிறந்த நாள் கொண்டாட ஆர்வமூட்டப்படுகிறது. இன்று தொடக்கப் பள்ளியில் நமது குழந்தைகள் சேர்வதற்கே பிறந்த நாள் சான்றிதழுக்கு அலைய வேண்டியுள்ளது. ஆனால் கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு எப்படி விநாயகப் பெருமானின் பிறந்த நாள் தெரிந்தது என்பதுதான் கேட்கப்படாத கேள்வியாகவே உள்ளது.

சென்னையில் மட்டும் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்துக் கொண்டாடுகின்றனர். சென்னைக் கடற்கரைக்கு நூற்றுக்கணக்கான பெரிய அளவுச் சிலைகள் சுமை தூக்கி ஊர்திகள் மூலம் தூக்கிச் செல்லப்பட்டுக் கரைக்கப்படுகின்றன. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வைக்கப்பட்ட சிலைகளும் சென்னை வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டுக் கடலில் கரைக்கப்படுகின்றன. சுமார் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் இருக்கும் ஆறுகள் ஏரிகள் குளங்கள் கால்வாய்கள் போன்ற நீர்நிலைகளைத் தேடி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டுக் கரைக்கப்படுகின்றன. மக்கள் குடிநீருக்காகத் திண்டாடும் இன்றைய சூழலில் குடிநீர் ஆதாரங்களாக விளங்கிய நீர் நிலைகளில் விநாயகர் சிலை கரைக்கப்படுகிறதா? அதற்கு அரசு அனுமதி அளிக்கிறதா? இல்லை, குடிநீராகப் பயன்படுத்தத் தகுதியற்ற நீர்நிலைகளில் (கழிவு நீரில்) இந்தச் சிலைகள் அனைத்தும் கரைக்கப்படுகின்றனவா? தெரியவில்லை.

மேலும் விநாயகர் சிலை ஊர்வலங்கள் பெரும்பாலும் நடத்தப்படுவது தமிழகத்தில் சிறுபான்மை சமூகத்தினர் கணிசமாக வாழும் பகுதிகளிலேயே ஆகும். பல இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துபவர்கள் காவல்துறை அனுமதித்த வழித்தடத்தில் செல்லாமல் முசுலீம், கிறித்துவர் வழிபாட்டுத்தளம் சார்ந்த பகுதிகளில்தான் செல்வோம் என்று வேண்டுமென்றே பிடிவாதமாக நடத்துகின்றனர். கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற ஊர்வலத்திலும் இத்தகைய சிக்கல்களை இந்து முன்னணியினர் திட்டமிட்டே உருவாக்கினர். இதனால் இந்து முன்னணித் தலைவர் இராமகோபாலனைக் காவல்துறையினர் கைது செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

அமைதியாகவும், சகிப்புத்தன்மையோடும் பிறருடைய மத உணர்வுகள் புண்படாமலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும் என்ற நோக்கம் இதை நடத்துபவர்களிடம் கிஞ்சிற்றும் இருப்பதில்லை. மாறாகத் தங்களுடைய மதக் காழ்ப்புணர்ச்சிகளையும், மதவெறி உணர்வுகளையும் வெளிக்காட்டுவது மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தத் திட்டமிடுபவர்களின் நோக்கமாக உள்ளது. மதம் மற்றும் கடவுள் நம்பிக்கைகளை உடைய அப்பாவி இளைஞர்களையும், பெண்களையும் இந்து மதவெறி ஆதிக்க வாதிகள் பக்தி என்ற பெயரில் தவறான நோக்கங்களுக்கு இவ்வாறு பயன்படுத்தி வருகின்றனர்.

பக்தியினாலும் கடவுள் நம்பிக்கையினாலும் நன்மைகள் விளையும், துன்பங்கள் நீங்கும் என்பது பொய் என்பதைத் தற்போதைய விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடந்த நிகழ்வுகள் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஜேடர்பாளையம், பள்ளிபாளையம் ஆகிய இரு இடங்களில் காவிரி ஆற்றில் விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்ற சுரேஷ்குமார், சிவசங்கர், சீனிவாசன், பிரகாஷ் ஆகிய நான்கு இளைஞர்கள் ஆற்று நீரில் மூழ்கி இறந்துள்ளனர். திருப்பூரில் நடைபெற்ற ஊர்வலத்தில் விநாயகர் சிலையை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து இந்து முன்னணியைச் சேர்ந்த 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

“இளைஞர்களே! பகவத் கீதை படிப்பதைவிடக் கால்பந்து விளையாடுங்கள்; உருவச் சிலைகளை வணங்குவதைவிட உணவுக்கு வழியில்லாத மனிதர்களின் துன்பத்தைப் போக்குங்கள்” என்று கூறிச் சென்றார் விவேகானந்தர். அவர் வழிமுறைகளை இளைஞர்கள் பின்பற்றச் செய்வதற்கு உரிய பக்திச் செயல்பாடுகளை உண்மையான மதப்பற்றாளர்கள் இனிமேலாவது மேற்கொள்ள வேண்டும். அதுவே சமூக நலனை ஊறுவிளையாமல் காப்பதாக அமையும்.

இம்முறை நடந்த விநாயகர் சிலை ஊர்வல நிகழ்வில் இன்னுமொரு அவலமும் அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்திலுள்ள தாந்தாணி என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் தாழ்த்தப்பட்ட மக்கள் விநாயகர்சிலை ஊர்வலம் நடத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பொதுப்பாதையில் தாழ்த்தப்பட்டவர்கள் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தக் கூடாது என்று அவ்வூரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் அறங்தாங்கி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்; காவல்துறையின் பாதுகாப்போடு கடந்த செப்டம்பர் 21ஆம் நாள் பொதுப்பாதையில் ஊர்வலம் நடத்தியுள்ளனர். அடுத்த நாளே அவ்வூர் ஆதிக்கச் சாதியினர் ஒலிபெருக்கியில் அறிவித்துக் கூட்டம் கூட்டியுள்ளனர். இக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அடுத்த நாளில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவ்வூர் தேநீர்க் கடைகளில் தேநீர் குடிக்கவும், மளிகைக் கடைகளில் மளிகைப் பொருள் வாங்கவும் தடை விதித்துள்ளனர். “எம்பெருமான் விநாயகப் பெருமான், எல்லா வளமும் தருவான்” என்ற நம்பிக்கையோடு தமிழகம் முழுவதும் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தி நிறைந்த தலித் இளைஞர்களும், சாதி மற்றும் மதவெறியை ஒழிக்க வேண்டும் என்ற சமூக உணர்வுள்ள இளைஞர்களும் இனிமேலாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பம்பாய் மாகாணத்தில் எலிகள் மூலமாகப் பிளேக் நோய் பரவி நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தபோது பம்பாய் மாகாண அரசு பிளேக் நோய்த் தடுப்பு ஆணையம் அமைத்தது. பிளேக் நோய் பரவ எலிகளே காரணம் என்பதால் எலிகளைக் கொல்வதற்கு அவ்வாணையம் நடவடிக்கை எடுத்தது. விநாயகப் பெருமானின் ஊர்தியான எலிகளைக் கொல்வது இந்துக்களின் உணர்வைக் கொல்லும் செயல் என்று திலகர் நடத்திய ‘கேசரி” இதழ் மதவெறியை விதைத்தது. பிளேக் நோய் ஆணையத் தலைவரும், துணை அலுவலரும் மதவெறியர்களால் கொல்லப்பட்டனர். இதன் விளைவாக 1897ஆம் ஆண்டில் திலகர் கைதும் செய்யப்பட்டு 18 மாதம் சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.

வீடுகளில் மட்டும் சாணிப் பிள்ளையாராக இருந்த விநாயகரை 1898ஆம் ஆண்டு முதல் அரசியல் பிள்ளையாராக மாற்றி விநாயகர் சதுர்த்தி விழாவும் ஊர்வலமும் நடத்தத் தொடங்கியவர் பாலகங்காதரத் திலகர் என்பதே உண்மை வரலாறு. தமிழ்நாட்டில் திலகரின் தீவிர அரசியல் வாரிசுகளாக உள்ள இந்து மதவெறியாளர்கள் இன்று விநாயகர் சிலை வழிபாடு என்ற பெயரில் ஊர்வலம் நடத்தி பாமரர்களுக்கும் இந்து மதவெறி ஊட்டத் துடியாய்த் துடிக்கிறார்கள். அறிவுள்ள தமிழர்கள் எவரும் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகி விடக்கூடாது.

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற வருணாசிரமக் கோட்பாட்டின் படி தமிழர் சமூக அமைப்பை ஏற்றத்தாழ்வுடன் உருவாக்கியவர்கள் இந்த இந்து மதப் புனிதர்கள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. உழவர்கள், உழவிற்கான உழவுக் கருவிகள் செய்தவர்கள், மண்பாண்டம் செய்தவர்கள், சலவைத் தொழில் செய்தவர்கள், முடிதிருத்தும் தொழில் செய்தவர்கள், நெசவுத் தொழில் செய்தவர்கள், உழவுக் கூலிகளாகப் பணி செய்தவர்கள், தெருக்கூட்டும் தொழில் செய்தவர்கள் போன்ற அனைத்து உழைக்கும் மக்களையும் சூத்திரச் சாதியினர் என்று கூறி இழிவுபடுத்திய இந்தப் புனிதர்கள் “இந்துக்களே ஒன்று சேருங்கள்” என்று இன்றைக்கு இந்துத்துவக் கூத்தாடுவதன் நோக்கம் என்ன என்பதைச் “சூத்திரத் தமிழ்ச் சாதியினராகிய” உழைக்கும் தமிழ் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

 உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க நடத்தப்பட்டதுதான் “ஊர்வலம்” போன்ற போராட்ட வடிவங்கள். ஆதிக்கவாதிகளின் அடக்குமுறைகளை எதிர்த்து அடக்கப்பட்டவர்கள் திரண்டு எழுந்து நடத்திய இத்தகைய உன்னதமான போராட்ட வடிவங்களைப் “பொம்மை உருவங்களைத்” தூக்கிச் செல்வதற்கு மதவாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள். சூத்திரச் சாதியினர் என்று இழிவுபடுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களே இன்று “இந்துக்கள்” என்று வெறியூட்டப்பட்டு விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு இழுத்து வரப்படுகின்றனர். அவர்களும் உண்மையை அறியாமல் தங்களை இழிவுபடுத்தியவர்களுக்குப் பின்னால் வலம் வருகின்றனர். சூத்திரச் சாதியினர் கோவில் கருவறைக்குள் நுழைந்தால் தீட்டுப் பட்டுவிடும் , சூத்திரர் மொழியான தமிழில் பாடல்களைப் பாடி வழிபாடு நடத்தினால் கடவுள் அருள் கிட்டாது, தங்கள் தாய்மொழியான சமற்கிருத மொழியில் மட்டுமே மந்திரங்களைக் கூற வேண்டும், சமஸ்கிருத மொழி மட்டுமே “தேவ பாஷை”, தமிழ் போன்ற பிற மொழிகள் எல்லாம் “நீசபாஷை” என்று இவ்வாறெல்லாம் இந்துத்துவ ஆச்சாரங்களைப் பரப்பி வரும் இந்துப் புனிதர்கள் நடத்தும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மட்டும் இந்தச் “சூத்திரர்கள்” கலந்து கொள்ள வேண்டும்; இவர்களின் கட்சிகள் ஆட்சி அமைக்க மட்டும் இந்தச் “சூத்திரர்கள்” வாக்களிக்க வேண்டும். இந்த மதவாத அரசியல் சூழ்ச்சிக்காக மட்டும் இந்தச் “சூத்திரத் தமிழர்கள்”, “இந்துக்களாக” ஒன்றுபட வேண்டும்.

சூத்திரச் சாதியைச் சார்ந்த ஒருவர் எவ்வளவு வசதி படைத்தவராக இருந்தாலும், எவ்வளவு இந்து ஆச்சாரங்களைக் கடைபிடிக்கும் புனிதராக இருந்தாலும், சமற்கிருதப் புலவராக இருந்தாலும் இந்து ஆச்சாரப்படி பூசை செய்யப்படும் எந்தக் கோவிலிலும் அர்ச்சகராக ஆகிவிட முடியாது. கருவறைக்குள் கூட நுழைய முடியாது. இதுதான் இந்துத்துவத்தின் உண்மை முகம்; இந்துத்துவத்தின் புனிதம்.

எனவே சூத்திரச் சாதியை சேர்ந்த எந்தச் சாதித் தமிழனும் தன்னை இந்து என்று அழைத்துக் கொள்வதும், கருதுவதும் கூட இழிவானதே! ஒவ்வொருவரும் இதை உணர வேண்டும். இரத்த உறவு சார்ந்த குல வழியில் தொடர்ச்சியாக வழிபட்டு வரும் குலதெய்வங்கள் மட்டுமே தமிழர் மூதாதையர்களின் பழமையான கடவுள்களாகும். முருகன், வருணன், இந்திரன், அய்யனார், காத்தவராயன், மதுரைவீரன், கருப்பராயன், முனியப்பன், மாரியம்மன், மாகாளியம்மன், போன்ற அசைவச் சூத்திரத் தமிழர் குலதெய்வக் கடவுள்களும் இந்து மதக் கடவுள்களான விநாயகர், விஷ்ணு, ஈஸ்வரன், இராமன், ஆஞ்சநேயர் போன்ற சைவப் பார்ப்பனக் கடவுள்களும், வேறுவேறான ஆச்சாரங்களையும், வழிபாட்டு முறைகளையும், சடங்குகளையும் கொண்டவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழர்கள் தொன்மைக் காலத்தில் இருந்து வழிபட்டு வந்த இனக்குழு மற்றும் இரத்த உறவுக் குலதெய்வங்கள் அனைத்தும் இந்து மதக் கடவுள்களின் அவதாரங்கள் என்ற பொய்க் கருத்துகளை மக்களிடம் பரப்பி அதன் மூலம் குலதெய்வ வழிபாட்டு முறைகளையும் இந்து மதத்தின் ஒரு பிரிவாகத் தமிழ் மக்கள் கருதும் வகையில் இந்துத்துவ வாதிகள் நம்பிக்கைகளை வளர்த்துள்ளனர். மக்கள் தங்கள் இரத்த உறவு சார்ந்த மூதாதையர்களின் மீதான நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கிப் பின்பற்றி வந்த குலதெய்வ வழிபாட்டு முறைக்குள் இந்து மதச் சார்பான வழிபாட்டு முறைகளையும், சடங்குகளையும், சமற்கிருத மந்திரங்களையும், ஆச்சாரங்களையும் ஒன்று கலக்கச் செய்தனர். இதன் மூலம், மதச் சார்பற்ற தமிழ்ச் சூத்திர சாதியினருக்கும் இந்துக்கள் என்ற மத அடையாளத்தையும், உணர்வையும் திணித்துள்ளனர்.

உண்மையில் தமிழ் மக்களின் கடவுளான முருகன் இந்து மதக் கடவுளான ஈஸ்வரனின் மகனோ அல்லது விநாயகாரின் தம்பியோ அல்ல. புராணப் புரட்டுகள் மூலமும், இந்து மதப் பக்தி இலக்கியங்கள் மூலமும், திருவிளையாடல் போன்ற திரைப்பட ஊடகங்கள் மூலமும் சில கட்டுக் கதைகளை உருவாக்கி மக்களை நம்பவைத்ததனர். இதன் மூலம் இந்துக்கள் அல்லாத தமிழ் மக்களையும் இந்து மத உணர்வுக்குள் உட்படுத்தி, தமிழர் கடவுள்களை இந்து மதக் கடவுள்கள் என்றும், தமிழர்கள் அனைவருமே இந்துக்கள் என்றும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளனர்.

இந்துத்துவ வர்ணாசிரமக் கோட்பாட்டின்படி, சூத்திரச் சாதியினர் என்று கீழ்நிலைப் படுத்தப்பட்ட அனைத்து உழைக்கும் தமிழ் மக்களும் தங்களை இந்து என்று கருதிக் கொள்வது, நமது தொன்மையான வரலாற்று வகையான வழிபாட்டு முறைகளைப் பற்றிய அறியாமையின் வெளிப்பாடேயாகும். எனவே சூத்திரச் சாதியினர் என்று இழிவு படுத்தப்பட்டுள்ள அனைத்துத் தமிழர்களும் தங்களை இந்து என்று ஏற்றுக் கொள்வது, நம்மை நாமே சூத்திரன் என்று கீழ்மைப்படுத்திக் கொள்வதாகும்; நம் மரபுவழிப்பட்ட, இரத்த உறவு சார்ந்த, மதச் சார்பற்ற முன்னோர் வழிபாட்டு முறைகளையும் நமது தொன்மையான அடையாளங்களையும் நாமே அழித்துக் கொள்வதாகும்.

இத்தகைய இந்துத்துவ முயற்சியின் விளைவாகவே தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் சூத்திரத் தமிழ்ச் சாதியினாரின் குலதெய்வக் (அசைவக் கடவுள்களின்) கோயில்களில் கோழிகள், ஆடுகள் பலியிடுவதைத் தடை செய்து சட்டம் இயற்றப்பட்டது என்பதைத் தமிழர்கள் உணர வேண்டும்.

இந்து மத, சமற்கிருத வழிபாட்டு முறைகளும், சடங்குகளும், ஆச்சாரங்களும் பின்பற்றப்படும் இந்து மதக் கடவுள்களின் (சைவக் கடவுள்கள்) கோவில்களில் சூத்திரச் சாதியினர் பூசை செய்வதும், கருவறைக்குள் நுழைவதும், தமிழில் மந்திரங்கள் ஓதுவதும் இந்து மத ஆச்சாரங்களின் (நம்பிக்கைகள்) படி தீட்டாகக் கருதப்படுகிறது.

ஆனால் மதவாத, பிழைப்புவாத அரசியல்வாதிகள் இன்றைக்குப் பல்வேறு பெயர்களில் தாங்கள் வைத்துள்ள இந்துத்துவ அமைப்புகள் மூலம் தமிழர்களையும் “இந்து” என்ற உணர்வூட்டி, அணிதிரட்டி வருகின்றனர். கடந்த கால வழிபாட்டு முறை பற்றிய வரலாற்று அறியாமையினால் தமிழ் மக்கள் இந்து மதவாதச் சக்திகளின் பரப்புரைக்கு ஆட்பட்டு இந்த மதவாதிகளின் எடுபிடிகளாக மாறிவிடுகின்றனர். தமிழ்க் கடவுள் என்ற தகுதியற்ற விநாயகர் (சிலை) ஊர்வலத்தில் மதவெறி முழக்கங்களோடு வலம் வருகின்றனர். பிற மதங்களைப் பின்பற்றி வருகின்ற தம் சகோதரத் தமிழர்கள் மதப் பகைமைகளை உருவாக்கும் வகையில் செயல்பட்டுவரும் இந்து மதவெறிக் கும்பலின் சூழ்ச்சிக்குப் பலியாகி வருகின்றனர். இதன் மூலம் உழைக்கும் தமிழ் மக்கள் அனைவரும் தமிழர்களாக ஒன்றிணைந்து விடாமல் தடுக்கும் முயற்சியில் இந்து மதவெறிக் கும்பல் வெற்றியடைந்து வருகிறது; உழைக்கும் தமிழ்ச் சாதியினர் தங்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும், மதசார்பற்ற உணர்வுடன் போராட முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே உழைக்கும் மக்களாக உள்ள தமிழர்கள் அனைவரும் மத உணர்வில் இருந்து விடுபட்டு, மதச்சார்பற்ற தமிழர்களாகத் தங்களை மாற்றிக் கொள்வதன் மூலமே மதவெறிச் சண்டைகளற்ற, அமைதியான, பன்முகத் தன்மையுள்ள பண்பாடுடைய தமிழ்ச் சமுதாயத்தைப் படைக்க முடியும். சிறுபான்மை மதங்களை ஏற்றுக் கொண்டுள்ள தமிழர்களுக்கும் இது பொருந்தும்.

அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் (1948) பிரிவு 18, உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் மதம் மற்றும் கடவுளைப் பின்பற்ற உரிமை உள்ளதை வலியுறுத்துகிறது. “ஒவ்வொருவருக்கும் சிந்திக்க, மனச்சான்றுப்படி நடக்க, ஒரு மதத்தைத் தெரிவு செய்ய அல்லது தேர்ந்து கொண்ட மதத்தை மாற்றிக் கொள்ள உரிமையுண்டு; மத நம்பிக்கைகளைத் தனியாக அல்லது குழுவாக, அந்தரங்கமாக அல்லது வெளிப்படையாகப் போதிக்கவும், கடைபிடிக்கவும் உரிமையுண்டு” என்பதை இப்பிரகடனம் தெரிவிக்கிறது.

1950ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த நமது அரசியல் அமைப்புச் சட்டம் அடிப்படை உரிமைகள் (பிரிவுகள் 25,28), இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் அவரவர் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும் கடவுளை வழிபடவும் உரிமை வழங்கியுள்ளது. எனவே மதங்களைப் பின்பற்றுவதும், கடவுளை வழிபடுவதும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மதம் என்ற பெயரிலும் கடவுள் என்ற பெயரிலும், நம்மீது திணிக்கப்பட்டிருக்கின்ற மூடக்கருத்துகளை, நமது மூளையில் பதியவைக்கப்பட்டிருக்கின்ற போலிக் கருத்துகளை நாம் ஒவ்வொருவரும் திறனாய்வுப் பார்வையோடு ஆய்வு செய்து தெளிவு பெற வேண்டும்; இதைப் பகுத்தறிவுடைய ஒவ்வொரு தனிமனிதனின் அறிவார்ந்த கடமையாகவும் செயல்பாடாகவும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

“சர்வ வல்லமையுள்ள கடவுள்தான் இந்த உலகைப் படைத்தார் என்றால், அவர் ஏன் அதைப் படைத்தார்? இந்த உலகைத் துன்பங்கள் வாட்டுகின்றன. எங்கும் துயரத்துடன் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஓர் ஆன்மா கூட மனநிறைவோடு இல்லை. இதுதான் கடவுளின் சட்டமென்று சொல்லவேண்டாம். அப்படியென்றால் இந்தக் கடவுள் எப்படி சர்வ வல்லமையுள்ளவராக இருக்க முடியும்? துயரங்களைக் கடவுள் படைத்திருப்பதும் அவரது விளையாட்டு, பொழுது போக்கு என்று கூறிவிட வேண்டாம். அப்பாவிகளைக் காப்பாற்றித் தவறு செய்கிறவர்களைக் கடவுள் தண்டிக்கிறார் என்று கூறமுடியுமா?”

இந்த அறிவார்ந்த கேள்விகள், 1930ஆம் ஆண்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு ஆங்கில ஆட்சியாளர்களின் கொடுஞ்சிறையில் இருந்த 23 அகவையே அடைந்திருந்த இந்திய நாட்டின் மாபெரும் புரட்சிவீரன் பகத்சிங்கின் உள்ளத்தில் எழுந்த கேள்விகள்.

இந்தக் கேள்விகள் தமிழர்கள் அனைவரின் உள்ளத்திலும் எழவேண்டும்.

Pin It