உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இந்த நாட்டில், உண்மையில் ஜனநாயகத்தின் நிலை என்ன என்பதைப் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களின் விடுதலை குறித்த தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி, முருகன், , சாந்தன், ராபட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் இரவிச்சந்திரன் ஆகிய எழுவர் விடுதலை குறித்து தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தைக் குடியரசுத் தலைவர் எந்தக் காரணமும் சொல்லாமல் நிராகரித்து இருக்கிறார். ஏன் நிராகரித்தார் என்ற காரணம்கூட இது வரை தெரிவிக்கப்படவில்லை. சிம்லாவில் நடந்த பேரவைத் தலைவர்கள் மாநாட்டில், மாநில அரசின் பேரவைத் தீர்மானங்களைக் குடியரசுத் தலைவர் நிராகரிக்கும்போது எந்த விளக்கமும் தரப்படவில்லை என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் பேசியிருப்பது கவனிக்கத் தக்கதாகும்.

பேரறிவாளன் தனது விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பேரறிவாளனின் விடுதலை குறித்த முடிவை மாநில சட்டப்பேரவைத் தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தன் தீர்ப்பில் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். அத்துடன் ஆளுநர், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்து இதுவரை ஏன் முடிவெடுக்கவில்லை என்று கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தப் போக்கு மாநில அரசின் உரிமையை ஆளுநர் மூலம் கட்டுப்படுத்திப் பன்முகத்தன்மையைச் சிதைப்பதாக இருக்கிறது.

நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளுடனும் இணைந்து ஒன்றிய அரசு வலிமையான ஜனநாயக நாட்டைக் கட்டமைக்க வேண்டும். ஒற்றை அதிகாரக் குவியலை நோக்கிச் செல்வது என்பது பலவிதமான மக்கள் வாழும் இந்த நாட்டில், அவரவர் உரிமையைக் கோருவதில் மேலும் சிக்கலையே ஏற்படுத்தும். கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக நகர்வது என்பது நாட்டை மேலும் பலகீனப்படுத்துமே ஒழிய வலிமை சேர்க்காது.

சிறையில் இருக்கும் எழுவர் குறித்த வழக்கில், உச்சநீதிமன்றம் மாநில அரசே 161 சட்டப்பிரிவின் கீழ் முடிவு எடுக்க முடியும் எனத் தெளிவுபடுத்தி இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஒருமனதான தீர்மானத்திற்கு ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும். ஆளுநருக்கு என்று சில உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மக்களாட்சியில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசானது தான் எடுக்கும் முடிவிற்கு, ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் கட்டுப்படவேண்டும். எழுவர் விடுதலை குறித்த பேரவைத் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கத் தேவையில்லை. அவரே முடிவெடுத்திருக்க வேண்டும்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள எழுவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதில் இனியும் தாமதம் செய்யக் கூடாது. இதுபோன்ற தாமதம், மனித உரிமைக்கு எதிரானது. அகிம்சை வழியில் ஆங்கில அரசை வெளியேற்றப் போராடிய காந்தியார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற கோபால் கோட்சே (பார்ப்பனர்) 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டான். ஆனால் இங்கு 30 ஆண்டுகள் எட்டும் நிலையிலும் விடுதலை சாத்தியப்படவில்லை.

ஏன் இந்த வேறுபாடு?

எழுவரை விடுதலை செய்ய வேண்டும். அல்லது காரணத்தைச் சொல்ல வேண்டும், ஆளுநர்.

- மதிவாணன்

Pin It