ஒளவை என்ற பெயர் சொன்னால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது என்ன? நரைத்த தலையோடு தண்டு ஊன்றி நடந்து வரும் மூதாட்டி. அதனால்தான் ஒளவையை ஒளவைப் பாட்டி என்றழைக்கும் வழக்கம் உருவாகியிருக்கிறது.
முருகனோடு தொடர்புபடுத்தி பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட வெகுமக்களிடையே பரவி விட்டிருக்கிறது. எஸ்.எஸ். வாசன் 1953ஆம் ஆண்டு ஒளவையார் என்ற பெயரில் உருவாக்கிய திரைப்படமும் அவளின் முதிய வயது தோற்றத்தையே ஒளவை என்று சித்தரித்தது.
திருவிளையாடல் படத்தில் கோபித்துக் கொண்டு மலைக்குச் சென்ற முருகனைத் திரும்ப அழைக்கச் செல்கிறாள் ஒளவைப் பாட்டி. "பழம் நீயப்பா' என்று அவள் பாடிய பாடல் பிரசித்தம். அதுமட்டுமல்லாமல் முருகனின் புத்திக் கூர்மையைக் காட்ட ஒளவையிடம் சுட்டபழம் வேண்டுமா என்று கேட்கும் பகுதி பாட நூல்களில் இருந்தன.
இவ்வாறு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டதால் ஒளவையை மூதாட்டியாகப் பார்க்கும் வெகுமக்கள் நினைவே இங்கிருக்கிறது. சென்னையில் 1968ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின் போது ஒளவைக்குச் சிலை நிறுவும் போது மூதாட்டி தோற்றத்தில் அமைக்கின்ற அளவுக்கு இப்பிம்பத்தின் செல்வாக்கு இருந்திருக்கிறது.
வெகுமக்கள் நினைவைத் தாண்டி புலமைக்குழாம் பக்கம் சென்றால் பெரிய ஆராய்ச்சிக்கு இடமளிக்கத்தக்க வகையில் ஒளவை பற்றிய தகவல்களைத் தருகின்றனர். சங்க இலக்கியப் புலவர்களில் ஒருவராக ஒளவையார், சங்கப் பாடல்களோடு எந்தத் தொடர்பையும் பெறாத அறநூல்களைப் பாடியிருக்கும் ஒளவையார், ஒளவையார் பெயரில் கதைகள் மற்றும் கோயில்கள் 18, 19ஆம் நூற்றாண்டு அச்சு வரலாற்றில் மாரியம்மனோடும் வள்ளுவரோடும் தொடர்பு பெறும் ஒளவையார் என்று கால அளவில் பாடல் வடிவ அளவிலும் பாடல்களின் உள்ளடக்க அளவிலும் பெரிதும் முரண்படும் ஒளவையாரைக் காண்கிறோம்.
புலமை உலகத்திற்கு அது பெரிய சிக்கல். ஆனாலும் இதற்கொரு காரணத்தையோ, தீர்வையோ சொல்ல வேண்டும். இவற்றைச் சிக்கலாக்காமல் காலந்தோறும் பல ஒளவை இருந்தனர் என்ற முடிவை அறிவித்திருக்கிறது. அதில் சங்க ஒளவையின் பாடல்கள் புலமை நிலையிருப்போரின் அறிதலாக இருக்க, பாடல் நூல்கள் வாயிலாக ஒளவையின் ஆத்திச்சூடி உள்ளிட்ட நீதிநூல்களே குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
இலக்கிய வரலாற்றின் பார்வையின்படி ஆத்திச்சூடி ஒளவை, பிற்கால ஒளவை. அதாவது மூதாட்டி. இதன்படி ஒளவை மூதாட்டி என்ற பிம்பத்தைப் புலமை உலகத்தினராலேயே தாண்ட முடியவில்லை.
ஆனால் இந்நிலை அப்படியே நீடிக்கவில்லை. இலக்கியங்கள் மீதான அரசியல் வாசிப்பில் செல்வாக்குக் காரணமாக இந்த பல ஒளவைகளைப் பிரித்துப்பார்க்கும் போக்கு அழுத்தம் பெற்றது. அதன்படி சங்கப்பாடல்களைப் பாடிய புலவரான ஒளவை இள வயதுடையவள் என்ற வகை பிரித்தல் உருவானது. பிற்கால ஒளவையார் மீதான சமய அடையாளம் காரணமாக அவளை விலக்கி சமய சார்பற்ற தமிழ்ச் சமூகத்தின் காலத்தவளாக அவளை விளக்கினர்.
அக்கருத்தின் நீட்சியாக ஒளவையை இளம்பெண்ணாகச் சித்தரித்து கவிஞர் இன்குலாப் எழுதிய ஒளவை நாடகம் முக்கியமானது. அதன்படி இளம்பெண், மூதாட்டி என்ற எதிர்மறை உருவானது. அதாவது ஒளவையில் மூதாட்டி இருப்பதில் பிரச்சனையில்லை. இளம்பெண்ணும் இருந்தாள் என்ற கருத்து உருவாக்கிக் கொள்ளப்பட்டது.
இதன்படி பிற்கால மூதாட்டி ஒளவையிலிருந்து தொன்மை ஒளவையை மீட்டெடுத்ததற்கான திருப்தி உண்டானது. இளம்பெண்ணைப் பிரித்துக் கொண்டதால் பிற்கால ஒளவை பற்றி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போனது. அவளின் நீதிப் பாடல்களும் கதைகளும் பிற்காலத்தவை என்ற முறையில் அங்கீகரிக்கப்பட்டன. ஆனால் மூதாட்டியாக ஒத்துக்கொள்வதிலேயே பிரச்சினை இருக்கிறது.
ஒளவையார் பெயரிலுள்ள நீதிப்பாடல்களை ஒளவையார் கதைகளை நம்பி அவரின் பிற்கால அடையாளத்திற்கு ஒப்புக் கொடுக்கும் நிலையே உருவாகியிருக்கிறது.
உண்மையில் ஒளவை என்ற மூதாட்டி இருந்தாளா என்பதே நாம் எழுப்பிப் பார்க்க வேண்டிய கேள்வி. மூதாட்டி என்ற பாத்திரம் ஒத்துக் கொள்ளப்படுவதாலேயே இளம் ஒளவை என்பதற்கான அர்த்தமே கிடைக்கிறது. ஆனால் இவ்வாறு பிரிப்பதில் ஏதும் பொருளிருக்கிறதா என்ற கேள்வியையே இக்கட்டுரை எழுப்ப விரும்புகிறது.
ஒளவை என்று பெயர் சூட்டும் மரபு எங்கிருந்து தொடங்கியது? எல்லா காலத்திலும் ஏன் இப்பெயர் சுழன்று வந்திருக்கிறது? இதற்கு முதலில் அப்பெயரின் பொருள் என்ன? அதன் அடிச்சொல் என்ன என்பவற்றைப் பேசிப் பார்க்க வேண்டும் "ஐ' என்பதே ஒளவையின் அடிச்சொல்லாக இருக்க வேண்டும். "ஐ' என்பது தலைமையைக் குறிக்கும். ஆனால் இதனைத் தலைவன் என்ற பொருளில் ஆணைக் குறிப்பதாகவே கொள்வர்.
"ஐ' யிலிருந்தே புனித அதிகாரம் கொண்ட பூசாரியை ஐயர் என்றும் தெய்வத்தை ஐயனார் என்றும் அழைக்கும் வழக்கம் உண்டானது. மக்கள் வழக்கத்தில் தந்தை என்ற தலைமை மிக்க ஆணை ஐயா என்று அழைக்கிறோம். இவ்வாறு ஆணை மட்டுமே குறிப்பது தந்தைவழி ஆணாதிக்கச் சமூகம் ஏற்றம் பெற்ற பிற்காலத்திலேயே மாறியிருக்கிறது. மற்றபடி ஆரம்பத்தில் தலைமைப் பண்புடைய யாரையும் குறிக்கும் சொல்லாகவே "ஐ' இருந்துள்ளது. சங்கப் பாக்களில் தந்தையைக் குறிக்க எந்தை என்ற சொல்லும் தாயைக் குறிக்க அன்னை என்ற சொல்லும் கையாளப்பட்டுள்ளது. இரண்டு சொற்களின் இறுதியிலும் தை - த்+ஐ, னை – ன் + ஐ என்று முடிவதைப் பார்க்கலாம்.
யாய், எந்தை என்ற இரண்டு சொற்களுமே ஆண், பெண் தலைமையை உணர்த்தக் கூடியனவாக இருந்துள்ளது. அன்னாய், எந்தாய் என்ற இரண்டு சொற்களிலும் "ஆய்' என்ற சொல் பொதுவாக வருகிறது. அன்னை, எந்தை என்று "ஐ'யைக் கொண்டு முடிகிற சொற்கள் விளியேற்கிறபோது அன்னாய், எந்தாய் என்று மாறுகின்றன. ஆய் என்பது விளி வடிவம். ஆய் என்கிற இந்த விளி வடிவம் கூட தமிழ்வழி திராவிட மொழிகளில் பெண் தெய்வங்களைக் குறிக்கக்கூடிய சுட்டுப் பெயராகவே உள்ளது.
எனவே "ஐ' ஆண்பால், பெண்பால் என்ற இரண்டுக்கும் பொதுவாக இருந்திருக்கிறது. இப்போதுகூட பெண்பால் பெயர் கொண்டு முடிவதைத் தமிழ் வடிவமாக மாற்றும் போது "இ', "ஐ' ஆகிய விகுதிகளையே சேர்ப்பர். உதாரணமாக உமா (ம் + ஆ) என்ற பெயரை அம்மா (ம் + ஆ) என்பதை அம்மை (ம் + ஐ) என்றும், கலா (ல் + ஆ) என்பதை கலை (ல் + ஐ) என்றும் மாற்றி வழங்குவதைப் பார்க்கிறோம்.
சங்கப்பாக்களில் யாய், ஞாய், தாய், அன்னை, ஈன்றோள், பயந்தோள், ஒளவை ஆகிய எட்டுச் சொற்களில் தாயைச் சுட்டியிருக்கின்றனர். இவற்றில் ஒளவை என்ற சொல்லும் இருக்கின்றது. எனவே ஒளவை என்ற சொல், பெண்பால் சொல் என்பது மட்டுமல்ல பெண்பாலில் தாயைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது. இதனை மூதாட்டி என்ற பொருளில் புரிந்துக் கொள்வதைக் காட்டிலும் தாய், வழிகாட்டி, மூத்தோள் என்று புரிந்து கொள்ளலாம்.
அன்னை என்பவள் மூதாட்டியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இளவயதினள்கூட பிள்ளை பெற்று விட்டால் அன்னை ஆகியிருக்கிறாள். குழந்தை வளர்க்கும் பக்குவம் பெற்றவள் ஆகியிருக்கிறாள். சங்கப் பாடல்களில் பாடினியாக வரும் ஒளவை மூதாட்டியாக இருந்தமைக்கான சான்றும் இல்லை. எனவே ஒளவை என்ற பெயர் முதிர்ச்சியை, தலைமையை, வழிகாட்டியைக் குறிப்பதாக இருந்தமையை அறியலாம்.
இது தவிர சங்கப் பாடல்களில் கொற்றவை என்ற பெண் தெய்வம் இருக்கிறது. ஐந்திணைக்குரிய ஐந்து தெய்வங்களைச் சுட்டும் போது மற்றவை ஆண் தெய்வங்களாய் இருக்க பெண் தெய்வமாகக் கொற்றவை மட்டுமே இருந்தது. எனவே தமிழ்ச் சமூகத்தின் தொன்மை பெண் தெய்வமாகக் கொற்றவையைக் கூறலாம். அச்சொல்லை கொற்ற ஒளவை என்று பிரிக்கலாம். ஒள + ஐ என்பதே ஒளவை. எனவே ‘ஐ' என்ற தலைமையைக் குறிக்கும் அச்சொல் அதன் விகுதியில் இருக்கிறது.
வெற்றியைத் தருகின்ற அன்னையைக் கொற்ற ஒளவை என்று குறிப்பர். அதுவே கொற்றவையாயிற்று என்பர். எனவே ஒளவையை மூத்தவள் என்று கூறுவது வயதைக் குறிக்காமல் தலைமையை, தகுதியைக் குறிப்பதாக இருக்கிறது. மூத்தவள் என்பது மூத்தோள் என்றும் பொருளாகிறது. மூத்தோள் என்பது பழமையானவள் ஆகிறது.
சமூகத்தின் பழங்காலத்தில் இருந்தவள் என்று கொள்ளலாம். ஆதி வழிகாட்டியாக, தலைமையாகப் பெண்ணே இருந்தாள் என்பதைக் குறிக்கிறது. ஆண் செல்வாக்குப் பெற்ற சமூக அமைப்புக்கு முன்பு பெண் செல்வாக்கு இருந்தது என்பதைக் காட்டுகிறது.
ஒளவை என்ற சொல் அவ்வா, எவ்வா, ஏவா என்ற தொடர்புகளைக் கொண்டிருக்கிறது. மூத்தோள் என்ற பொருளைக் குறிக்கின்றன. இச்சொற்கள் விவிலியத்தின் முதல் மனிதர்களாக ஆதாம், ஏவாள் சொல்லப்படுகின்றன. இதில் ஏவா(ள்) என்ற தொடர்பைக் கவனிக்கலாம். குரானும் முதல் மனிதனாக ஆதம் என்ற பெயரைக் குறிக்கிறது. தமிழ் மரபில் ஆதன் என்ற பெயருண்டு.
விவிலியமும் குரானும் குறிப்பிடும் பெயர் வரிசையில் உள்ள ஒற்றுமையைப் பார்க்கலாம். (ஆதாம், ஆதம், ஆதன்) இவ்வாறு தான் அவா, ஏவா, ஏவாள் என்ற தொடர்பு இருக்கிறது. தெலுங்கில் பாட்டியைக் குறிக்கும் அவ்வை என்ற சொல் அவ்வா என்றும், துருவில் அவ்வா(ள்) என்றும் அழைப்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழ் மரபில் மூத்தோர் என்று சொல்லத்தக்கவர்களாக ஆதன், ஒளவை என்ற பெயர்களாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
ஆதன் என்ற சொல் கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் மீனாட்சிபுரம் தமிழ் பிராமிக் கல்வெட்டிலும் கீழடி ஓடுகளிலும் இடம்பெற்று அதன் பழமையை நிறுவியிருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆதன் என்பதற்கு தலைவன், ஆசிரியன், தந்தை என்ற அர்த்தங்கள் உள்ளன. இந்த அர்த்தங்கள் எல்லாம் மூத்த அல்லது மதிக்கத்தக்க பொருளை உணர்த்துகின்றன. ஆதன், ஆத்தன், அத்தன் என்றாகிறது.
அத்தன் என்றால் தந்தை என்று பொருள். இவ்வாறு தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் ஒளவை என்ற தாய் மூத்தவளாகவும் ஆதன் என்ற தந்தை மூத்தோனாகவும் கருதப்பட்டிருக்கிறான். ஆதன் என்ற ஆண்பால் சொல்லின் பெண்பால் சொல் என்றால் அது ஆதி என்பதுதான். இங்கு ஆதி என்பவள் ஒளவையாக இருந்திருக்க முடியும்.
இத்தகைய அர்த்தங்களைக் கொண்டு ஒளவை என்ற பெயரைக் கொண்ட பெண் எப்பொழுதேனும் இருந்தாளா அல்லது கற்பனையாக உருவகித்துக் கொண்டோமா என்ற அடுத்த கேள்விகளை எழுப்பிக் கொண்டு விடலாம். ஒளவை என்று சொன்னாலே நெற்றியில் திருநீறு இட்டு முருகனோடு பேசியவளையே பார்க்கிறோம். இதன்படி பார்த்தால் அவள் சைவத்துறவி. இவற்றில் உண்மை இருக்கின்றதா?
ஒளவை சைவத்தோடு தொடர்புபடுத்தும் கதைகள் எதுவும் சங்கப்பாடல்களிலோ அவளின் பெயர் தொடர்புகளிலோ கிடைக்கவில்லை. எனவே அவளைப் பாட்டியாக்கிப் பாடவைத்த சைவக்கதைகள் பிற்காலத்திலேயே பிறந்திருக்கின்றன என்பதை எளிதாய் சொல்லிவிடலாம். சங்கப் பாடல்களுக்கு அடுத்து அப்பெயரின் தொடர்புடைய தவ்வை என்ற சொல் குறளில் இடம்பெறுகிறது. அதேபோல ஒளவை என்ற சொல் சிலப்பதிகாரத்தில் இரண்டு இடங்களில் வருகிறது. ஐயை என்ற பெயரில் பாத்திரமொன்று இடம்பெறுகிறது.
மற்றோரிடத்தில் ""ஒளவையுயிர் வீவுங் கேட்டாயோ தோழி'' என்ற வரியில் பெயராகவும் பார்க்கிறோம். மொத்தத்தில் சங்கப் பாடல்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஒளவை என்ற சொல் குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி ஆகிய பிரதிகளிலேயே பார்க்கிறோம். இவை அவைதீக சமயங்களான சமணபௌத்த நூல்கள் என்பதில் ஐயமில்லை.
எனவே சைவம் உள்ளிட்ட சமயத்தோடு ஆரம்பத்தில் எந்த தொடர்பையும் ஒளவையோ ஒளவை என்ற பெயரோ கொண்டிருக்கவில்லை. அந்தக் கதைகள் கொண்ட பிரதிகள் இந்த அவைதீக நூல்களுக்குப் பல நூற்றாண்டுகள் பிந்தியவை. இதன்படி ஒளவையை இந்த நூல்கள் வயதில் மூத்தவளாகவும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஒளவை என்ற பெயரால் அழைக்கப்படுவது ஒரு புறமிருக்க "ஐ' என்ற விகுதியை உள்ளடக்கிய அப்பெயரின் பொருள்தான் என்ன? ஒளவை என்றால் துறவி, அதிலும் பெண்பால் துறவி என்பதே பொருளாகும். அதைப்பற்றி முதல் குறிப்பு தருபவர் மு. அருணாச்சலம். மணம் செய்து கொள்ளாதிருந்து பருவத்தால் முதிர்ச்சி பெற்றுத் தவக்கோலம் தாங்கி கல்வி கேள்விகளில் மேம்பட்டு விளங்கிய பெண்டிரை இயற்பெயர் சுட்டாது ஒளவை என்று வழங்கினர் போலும் என்று கணித்தார்.
இதன்படி ஒளவை என்றால் துறவி என்பதும் ஒளவை என்பது இயற்பெயர் அல்ல என்பதையும் தெரிந்து கொள்கிறோம். இதன்படி ஒளவை என்பது ஒரு தகுதி அல்லது மதிப்பு. அதை ஏதோவொரு செயலை ஒட்டி அடையமுடியும் என்பது புலப்படுகிறது. எனவே துறவுச் செயலை மேற்கொண்டதால் ஒளவை என்ற சிறப்புப்பெயராகப் பெற்றாள் எனலாம். எனவே இப்பெயரை ஒரு பெண் மட்டும் பெற முடியாது.
துறவில் ஈடுபடும் யாரும் அடைந்திருக்க முடியும். ஆனால் முதன்முதலாகத் துறவில் ஈடுபட்டு வழிகாட்டிய யாரோ ஒரு பெண்ணை இப்பெயரால் அழைத்திருக்க வேண்டும். பிறகு அந்நிலையை அடையும் எந்தப் பெண் துறவியையும் குறிப்பிடும் பொதுப்பெயராக மாறியிருக்கக் கூடும்.
இவ்வாறுதான் காலந்தோறும் ஒளவை என்ற பெயரை நாம் சந்திக்க நேர்கிறது. ஆனால் மு. அருணாச்சலத்தின் ஒரு கூற்றிற்கு தொடக்கநிலை எந்தச் சான்றுக்கும் கிடையாது. அவர் மணம் செய்து கொள்ளாதிருந்து பருவத்தால் முதிர்ச்சிபெற்றவள் என்று குறிப்பிடுகிறார். மணம் செய்து கொள்ளாதிருப்பதற்குச் சான்றுகள் உதவி செய்கின்றன. ஆனால் அச்சான்றுகள் எவையும் அவளை வயதில் முதிர்ந்தவளாகக் காட்டவில்லை.
பிற்கால ஒளவைக் கதைகளைப் பார்த்து விட்டு அவராக உருவாக்கிக் கொண்ட கருத்தாகவே "பருவம் முதிர்ந்தவள்' என்ற சித்திரம் இருக்கிறது. மேலும் மு. அருணாச்சலம் மற்றுமொரு விடுபடலையும் செய்திருக்கிறார்.
தவக்கோலம் வாங்கிய துறவி என்று மட்டுமே குறிக்கிறார். இந்த அடையாளங்கள் சமய மரபோடு தொடர்பானவை என்பது தெரிந்தும் அவற்றைத் தெளிவுபடுத்தாமல் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்டுச் சொல்லுகிறார். இந்த விடுபடல் எந்த சமயத்தைச் சார்ந்த பெண் துறவிக்கும் பொருந்தும் என்ற பொருளாகி விடுகிறது. அது பிற்காலத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம்.
ஆரம்பகாலத்தில் எந்தச் சமயத்தையும் சார்ந்ததையும் குறிப்பிடும் பொதுப்பெயர் எனல் பொருந்தாது. அது சமணபௌத்த மரபிலான பெண் துறவியின் பெயர் என்பதே சரியானதாகும். குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி போன்ற அவைதீக நூல்களிலே அவள் பெயர் இடம்பெற்று வந்ததை வைத்தும் இதை உறுதிப்படுத்தலாம். மு. அருணாசலத்தின் கருத்தை அடியொற்றியே தாயம்மாள் அறவாணனும் ஒளவை எனும் சொல் தாயைக் குறிக்கும் பொதுநிலையிலிருந்து மாறிச் சிறப்புச் சொல் நிலையை எய்தியிருத்தல் கூடும் என்கிறார்.
அதேவேளையில் மு. அருணாச்சலத்தின் பருவத்தால் முதிர்ந்தவள் என்பதற்கு மாறாகத் ""துறவி ஆகிவிட்ட பெண்ணை அவள் இளையவளாயினும் தாய்க்கு நிகராகக் கருதத்தக்கவள் எனும் கருத்தில் "ஒளவை' என்று வழங்குதல் வந்திருத்தல் வேண்டும்'' என்று அறுதியிட்டு இருக்கிறார். தாயம்மாள் அறவாணன் கூற்றே சரி. ஏனெனில் மேற்காட்டிய நூல்கள் எதிலும் அவளை வயதில் முதிர்ந்தவளாகக் காட்டவில்லை. மாறாக அவற்றில் இளவயதினள் என்பதற்கும் மதிப்பு மிக்கவள் என்பதற்கும் மட்டுமே குறிப்புகள் கிடைக்கின்றன.
ஒளவை என்னும் சொல் பெண்துறவியைப் பிற்காலத்தில் குறித்தது என்பதைச் சூடாமணி நிகண்டு, சிந்தாமணி வழக்காற்றால் அறிகிறோம் என்கிறார் தாயம்மாள் அறவாணன். இதன்மூலம் சமணத்தில் துறவு பூண்டு அறப்பணியாற்றிய பெண் துறவியை மூத்தவளாகவும், அம்மையாகவும் வழிகாட்டியாகவும் கருதி ஒளவை என்றழைத்திருக்கின்றனர் என்பதை அறியமுடிகிறது.
நிகண்டுகள் பெரும்பாலானவை சமணர்களின் பங்களிப்புகள் என்பதையும் கவனத்தில் கொண்டால் ஒளவை பற்றிய தீர்க்கமான குறிப்புகள் சமணப் பிரதிகளிலே இருப்பதைப் பார்க்கலாம். ஆதி நிகண்டு என்று சொல்லப்படக்கூடிய திவாகர நிகண்டில் மூன்றாம் விலங்கின் பெயர்த்தொகுதி இறுதியில் "ஒளவை பாடிய அம்பர் கிழவன், தேன்தார்ச் சேந்தன் தெரிசொல் திவாகரத்துள்...'' என்கிற பாடலடியில் வருகின்றன. இந்த நிகண்டின் காலத்தை எட்டாம் நூற்றாண்டு என்கின்றனர்.
ஒளவை என்ற தலைப்பில் நூலெழுதிய சைவத்தமிழ் ஆர்வலரான தமிழண்ணல் ஒளவையைப் பற்றி வேறு குறிப்புகள் கிடைக்கவில்லை என்றும், சேந்தனைப் பாடியதாக திவாகர முனிவர் பாடியிருப்பதால் ஒளவை சமணராய் இருக்க வாய்ப்புண்டு என்று கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மேலே கூறப்பட்ட சிந்தாமணி உள்ளிட்ட சமணக் காப்பியத்தின் காலமும் தமிழண்ணல் வரையறுக்கும் காலமும் ஏறக்குறைய ஒன்றே அல்லது நெருக்கமானவையே.
ஒளவை என்ற பெயரைச் சமண மரபோடு தொடர்புபடுத்தும் அச்சான்றுகளோடு ஒப்பிட ஒளவையாரைச் சைவ மரபோடு தொடர்புபடுத்தும் சான்றுகள் இல்லை என்பது கவனிக்கத் தக்கதாகும். சமண மரபோடு மட்டுமல்ல, இதே சான்றுகளைப் பௌத்த மரபோடு தொடர்புபடுத்தும் பார்வையும் உண்டு.
பொதுவாக சைவத்தில் பெண் சன்னியாசினி முறை இல்லை. பௌத்தத்திலும் தொடக்கத்தில் பெண் துறவிகள் இல்லை. ஆனால் நாளடைவில் அது உருவானது. புத்தரின் வளர்ப்புத்தாய் பிரஜாபதி கௌதமியே முதல் பெண் பிக்குணி. பிறகு அம்மரபு செழித்தது. சமணத்தில் இளம்பெண் ஒளவை திருமணத்தை வெறுத்து துறவு பூண்டமை இருப்பதாகத் தாயம்மாள் அறவாணன் கூறுகிறார்.
பௌத்த மரபில் மக்களின் நோய் தீர்த்தும் அறநெறிக் கருத்துக்களைக் கொண்ட பாடல்களைத் தந்து சென்ற பிக்குணியாக வணங்கப்பட்டாள் என்று அயோத்திதாசர் கூறுகிறார். மேலும் அவர் ஒளவை வழிபாடே மாரியம்மன் வழிபாடுமாகும் என்கிறார். சமண மரபிற்கு சிலப்பதிகாரக் கவுந்தியடிகளையும், பௌத்த மரபுக்குப் பசிப்பிணி தீர்க்கும் மணிமேகலையையும் சான்றாகக் கொள்ளலாம்.
இரண்டிலும் இருவரும் திருமணமாகாதவர்கள், துறவிகள். இருவரும் வயது முதிர்ந்தவர்களாகச் சொல்லப்படவில்லை. இவ்வாறு சமணபௌத்த சமயத்தில் ஒளவையின் அடையாளம் தங்கியிருக்க அதற்கும் முன்பே சங்கப் பாடல்களில் ஒளவையின் பெயரும் பாடல்களும் இருப்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? அதில் இரண்டு வாய்ப்புகளே இருக்கின்றன. முன்பிருந்தே இருந்துவந்த மரபு பின்னால் (சிந்தாமணி காலத்தில்) குறிப்பிடப்பட்டிருக்கலாம். குறிப்பிடப்படுவதாலேயே அதே காலத்தில்தான் இருந்தது என்று கொள்ள வேண்டிய அவசியமில்லை.
முன்பே இருந்துவந்து பின்னாலும் குறிப்பிடலாம். அது ஒன்று. மற்றொன்று முன்பே உருவாகியிருந்த ஒளவை மரபில் யாரேனும் பாடியிருக்கலாம் அல்லது பின்னால் பிறந்த பெயரின் சிறப்புக்கருதி முன்னால் பாடப்பட்ட பாடாண் ஆசிரியராக ஆகியிருக்கலாம். எதுவும் நடந்திருக்கலாம். எதுவும் அறுதியிட்டதில்லை.
மேலும் ஆய்வுக்குரியதே. அதே வேளையில் சங்கப்பாடல்கள் பாடப்பட்ட காலங்கள் எவையாக இருப்பினும் அவை தொகுக்கப்பட்ட காலம் 6,7 ஆம் நூற்றாண்டாகவே இருக்க வேண்டும். சமண சமய தமிழ்ச்சங்க முயற்சியால் சங்கத் தொகுப்புகள் உருவாயின. எனவே ஒளவை பற்றிய குறிப்பு கிடைக்கக்கூடிய 6, 7 ஆம் நூற்றாண்டில் சமணர்கள் பாடல்களைத் தொகுத்தபோது ஏற்கெனவே சிற ப்புப் பொருந்தியவளாக அறியப்பட்டு வந்த ஒளவை பெயரைச் சேர்த்திருக்கலாம். இதனை வேறு ஒரு வழியில் புரிந்து கொள்ளலாம்.
சங்கப் பாடல்களைச் சமய சார்பற்ற காலத்தினதாகக் காட்டும் யற்சிகளே இங்கு அதிகம். குறிப்பாக சமணபௌத்த செல்வாக்குக்கு முந்திய ஆதித்தமிழ் வடிவத்தைச் சங்கத்தில் காண விரும்பியுள்ளனர். அதன்படி "சங்ககாலத்தை'ச் சேர்ந்த ஒளவை சமய சார்புக்கு முந்தைய தொல் தமிழ்க் காலத்த வையாகவே கருதிவிடுவோம். எனவே அவளை சமண மரபோடு தொடர்புபடுத்தும் முயற்சியைச் சங்ககால ஒளவையைக் காட்டுவதன் மூலமாகவாவது கடந்துவிட முயற்சிக்கின்றனர்.
அதனால்தான் செவ்வியல் ஆய்வாளர்கள் சங்ககால ஒளவைக்கே முக்கியத்துவம் தந்துவருகின்றனர். ஆனால் அவர்களால் சங்க ஒளவைப்பாடல்களில் பௌத்தத் தொடர்பு இருப்பதை மறைக்க முடியவில்லை. அவர்களால் செய்யமுடிவது ஒன்றுதான். அதைப்பற்றி மௌனம் காப்பதுதான். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
சங்க நூற்தொகுதிகளை ஐயமின்றி ஏற்கவேண்டிய அவசியமில்லை. பல்வேறு இடங்களில், பல்வேறு காலங்களில், பல்வேறு நபர்களால் பாடப்பட்டு ஒருங்கே தொகுக்கப்பட்டவை. எனவே திரட்டியவை எல்லாம் தேர்வுக்குட்பட்டே தொகுக்கப்பட்டன. பாடல்களில் சில முந்தையவை. சில பிந்தியவை. சில திரட்டும்போது கிடைத்தவை. சில தொகுக்கும்போது புதிதாகச் சேர்க்கப்பட்டவை.
பிற்காலத்தில் பாடப்பட்ட திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களைச் சங்ககாலம் என்று அறுதியிடப்பட்ட கால நூல் வரிசையில் சேர்ந்து விட்டதாலேயே சங்க காலத்தவையாகக் கருதி ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு எட்டும் பத்துமாக அமைந்த 18 சங்க நூல்களில் காலத்தால் பிந்திய பரிபாடலோ, கலித்தொகையிலோ ஒளவையின் பாடல்கள் இல்லை. அதே போல 10 நெடும் பாட்டுகளில் ஒன்றையுமே ஒளவை பாடியிருக்கவில்லை.
நெடும்பாட்டுக்களம் காலத்தால் பிந்தியவையே. அவருடையவை தனிப்பாடல்கள் மட்டுமே. காலத்தால் முந்தியதாகவும் பிற சங்க நூல்கள் அளவுக்கு வைதீகப் பண்பு கொண்டிராததுமான குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு ஆகிய தொகுப்பு நூல்களில் 54 பாடல்கள் அவர் பெயரிலான பாடல்கள் அமைந்துள்ளன. அகப்பாடல்களைவிட (26) புறப்பாடல்களே அதிகம் (33). எட்டு அகப்பாடல்களில் புறச்செய்திகள் இருக்கின்றன. எனவே, ஒளவையைப் புற (சமூக) நடவடிக்கைகளோடு தொடர்புபடுத்தும் பாடல்களே அதிகம்.
சங்கப்பாடல்களில் வரும் ஒளவை திருமணம் புரியாதவள். எல்லா இடத்திலும் திருமணம் நீங்கியவளாக ஒத்துப்போகிறது. பிறகு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லுபவளாகவும் அறிவுரை சொல்லக் கூடியவளாகவும் இருக்கிறாள். இது துறவிகளுக்கும் உரிய பண்பு. கணித்துச் சொல்லக்கூடிய, அகவன் மகள் பாடலைப் பாடக் கூடியவளாக, மருத்துவச்சியாக எல்லாம் தொழிற்படுகிறார்.
சமணபௌத்தத் துறவிகள் வைத்திய மரபோடு தொடர்பு பெற்றிருப்பதைப் பார்க்கலாம். எல்லாவற்றையும்விட ஒளவை போர் மறுப்புச் செய்தியொடு பெறும் தொடர்பு குறிப்பிடத்தக்கது. அதியமான் பொருட்டு தூது சென்று போரைத் தவிர்க்கக் காரணமாகிறாள்.
புறநானூற்றில் "நாடா கொன்றோ'' என்று தொடங்கும் (187) ஒளவையின் புகழ்பெற்ற பாடல் இருக்கிறது. பௌத்தத்தைச் சுத்த பீடகத்திலிருந்து உருவான தம்மபத 187 ஆம் பாடலை அப்படியே மொழிபெயர்த்தாற் போல் இப்பாடல் அமைந்திருப்பதை தெ.பொ. மீனாட்சிசுந்தரம், மு.கு.ஜகந்நாதராஜா, தனிநாயக அடிகள் எழுதியுள்ளனர். மேற்கண்ட கருத்துக்களிலிருந்து ஒளவை சமணபௌத்த மரபோடு கொண்டவள் என்பதையும் அம்மரபிலிருந்த பெண்துறவி என்பதையும் அறிகிறோம்.
இவ்வாறு ஒளவை மரபு தமிழ்ச் சமூகத்தில் செல்வாக்கு பெற்றதாக மாறியிருக்கிறது. இதன்படி ஒளவை என்பது ஒரு தனிநபரல்ல. அது ஒரு நிலை அல்லது தகுதி. ஒளவை என்னும் நிலையைத் தவக்கோலம் எய்தி அறம் காக்கும் மனிதர்கள் யாரும் அடையலாம். அவளை வழிகாட்டியாக, தலைமையானவளாக மக்கள் ஏற்று ஒளவையாகக் கருதுவர். மேலும் இது மேலோர் சமயத்தோடு அல்லாமல் துறவி என்ற விதத்தில் வெகு மக்களிடையே தொடர்பைக் கொண்டு இருந்திருக்கிறது.
முருகனோடு தொடர்புபடுத்தப்படும் அவளைப் பற்றிப் பிற்காலக் கதைகள்கூட புராணங்களில் இல்லாமல் சுட்டபழம் வேண்டுமா என்று கேட்பதனை நாட்டுப்புறக் கதைகளாய் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய வெட்டவெளி, நாடோடி நிலை. அதேபோல ஒளவையைக் குறிப்பிட்ட மொழியோடு மட்டும் தொடர்புபடுத்த முடியாது. சமய மரபு மொழி எல்லைக்குட்பட்டது கிடையாது. அவை நம்பிக்கை சார்ந்தது என்ற முறையில் மொழி எல்லையையும் தாண்டியது.
தமிழ், கன்னடம், துளு போன்ற மொழிகளில் இச்சொல் ஒரே பொருளில் கையாளப்படுகிறது. இதன்படி ஒளவை என்பது பரந்த அடையாளம். இதனையே ஒளவை என்னும் பெயர் பொது செந்நெறி நாட்டார் நிலை மரபுகளில் வேறுபாடின்றிக் குறிப்பிடப்படுகிறது என்று குறிப்பிடுகிறார் செந்தீ நடராசன்.
இவ்வாறு துறவியாக அமைந்த ஒளவை இரண்டு பேராக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஒன்று சமணத்துறவி. ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் (வெற்றி வேட்கையையும் குறிப்பிடுவார் அயோத்திதாசர்) போன்ற நீதி நூல்களை படைத்திருக்க வாய்ப்பிருகின்றது. மற்றொருவர் சங்ககால ஒளவை.
அவர் புலவராக இருந்திருக்கலாம் அல்லது தொகுக்கப்பட்ட காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த பாடினி என்ற முறையில் சேர்க்கப்பட்டிருக்கலாம். எனினும் அது ஆய்வுக்குரியது. மொத்தத்தில் ஒளவை இருவராக இருந்திருக்கவே வாய்ப்பு அதிகம். ஒளவை பெயரிலான மற்ற பாடல்களும் கதைகளும் பிற்காலத்தவை. அதன் ஒளவை பெயரில் கதைகளும் பாடல்களும் திரிபுகளும் இடைச்செருகல்களும் ஏன் உருவாகவேண்டும்?
முன்பே சொன்னதுபோல தமிழ்ச்சமூகத்தில் ஒளவை என்பது செல்வாக்குப் பெற்ற நிலையாக மாறிவிட்டிருந்தது. பின்னாள் வரும் யாரும் அதைத் தாண்டிச்செல்ல முடியாதநிலை உருவாகி இருந்தது. அதாவது சமண பௌத்த போலச்செய்து உருவான சைவசமயம் அச்சமயங்களின் அடையாளங்களைத் தனதாக்கியது.
ஒளவை என்னும் பெயர் நமது பண்பாடு முழுவதையும் உள்வாங்கி ஊடறுத்து, அதன் சின்னமாக ஒரு குறியீடாக பயன்படுத்துகிறது என்று செந்தீ நடராசனால் குறிப்பிடப்பட்ட ஒளவையைப் போன்ற ஒருவரை உருவாக்கியது.
அதன் மூலம் சமண சமயச் செல்வாக்கு பெற்ற ஒளவை போல எங்களிடமும் இருக்கிறாள் என்று சொல்ல முற்பட்டது. அதன்படி கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே அது நடந்தது. பின்பு 1819 ஆம் நூற்றாண்டுகளின் அச்சுப்பண்பாடு காலத்தில் பிற்கால ஒளவைக் கதை நிலைப்படுத்தப்பட்டது.
இவ்வாறு நிலைப்படுத்தப்பட்ட ஒளவையையே இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதை ஒளவையையே எல்லாக்காலத்திலும் இருந்த ஒளவைக்கான ஒற்றை பிம்பமாக ஆக்கிவிட்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல என்பதையே மேற்கண்ட தகவல்கள் காட்டியுள்ளன.
ஒளவையைப் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ள தாயம்மாள் அவரை சைவத்துறவியாகக் கருதவில்லை. மாறாக அவர் எவ்வாறு சைவத்துறவியாக ஆக்கப்பட்டாள் என்பதைக் கூறியுள்ளார். அதாவது "சமண சமயத்தில் பெண்டிர் திருமணத்தை நாடாமலேயே துறவியாகி, "குரத்தி' என்னும் இளம்கன்னியாக வாழ்வது அறமாகப் போற்றப்பட்டு வந்தது. சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தியடிகள் ஒரு குறத்தியே ஆவார்.
கி.பி. 5ஆம் நூற்றாண்டில் பாண்டியன் கடுங்கோன் வருகைக்குப்பின் சமண சமயம் வீழ்ச்சி எய்தியது. எனினும் சமண சமயத்திலுள்ள சடங்கு சம்பிரதாயங்களைச் சைவசமயம் ஈர்த்துக்கொண்டது. சான்று கொல்லாமை, புலால் உண்ணாமை, கள் உண்ணாமை முதலாயின. பண்டைய சைவ அமைப்பில் திருமணமே செய்து கொள்ளாமல் முழுமையான சமயத் தொண்டை ஏற்கும் பெண் சன்னியாசினி முறை இல்லை. சைவ சமயத்தார், சமண பௌத்தத்திலிருந்து எடுத்துக்கொண்ட ஒரு முறையே பெண் சன்னியாசினி முறை ஆகும்.
அதன் எதிரொலியே ஒளவை என்னும் இளம் பெண் திருமணத்தை வெறுத்து இறைவனின் அருளால் துறவு பூண்ட கதை ஆகும்'' என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். சமணத்தின் வீழ்ச்சியையும் மற்றும் ஒளவையின் உள்வாங்கல் ஆகியவற்றின் காலத்தை முன்னகர்த்திச் சொல்கிறது என்பதை தாண்டிவிட்டுப் பார்த்தால் ஒளவையின் அடையாளம் மாறி வந்தமை பற்றிய முழு சித்திரமாக இக்கூற்று அமைந்துள்ளது எனலாம். இந்த குரத்தி வழிபாடே சமண சமய இயக்கி வழிபாடாக மாறியது. இப்பின்னணி யில் தொ.பரமசிவன் கூறியுள்ள கருத்து குறிப்பிடத்தக்கது.
அதாவது ""நெல்லை, குமரி மாவட்டங்களில் பரவலாக வணங்கப் பெறும் இசக்கியம்மன் ஒரு சமண சமயத் தெய்வமாகும். சமணமதம் தென்தமிழ்நாட்டில் கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் பூண்டற்றுப் போயிற்று. ஆனால் "அம்பிகா யக்ஷி' சமணப் புராணங்களில் கூறப்பெறும் இசக்கியம்மன் மட்டும் அதே பெயரிலும் பகவதியம்மன் என்ற பெயரிலும் பல சிற்றூர்களிலும் இன்றளவும் வழிபடப்படுகிறது. இதனைப் போலவே தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வழிபடப்பெறும் பொன்னியம்மனும் "ஜ்வாலாமாலினி' என்ற சமண சமயப் பெண் தெய்வமே ஆகும்'' என்கிறார்.
அதன்படி சமண சமயம் நலிவுற்ற பின்னரும் நீடித்த பெண் தெய்வமாக அச்சமய பெண் தெய்வம் நீடித்ததை அறிகிறோம். அந்த பெண் தெய்வம் வேறு யாருமல்ல ஒளவைதான். தொ.ப. குறிப்பிடும் அம்பிகா என்ற பெயரையே ஒளவையின் பெயராகக் கருதி அயோத்திதாசரும் அம்பிகையம்மன் சரித்திரம் எழுதியுள்ளதையும் குமரி மாவட்டத்திலுள்ள மூன்று ஒளவை கோயில்களில் ஒரு கோயிலின் பெயர் குரத்தியறை என்று இருப்பதையும் இணைத்துப் பார்த்துக் கொண்டால் இச்சித்திரம் முழுமை பெறும்.
ஒளவை வணங்கப்படும் இயக்கியாக மாறிய பின்னால் ஏற்கெனவே இருந்த இருந்துவரும் தாய்த் தெய்வங்களோடு இணைந்து வெவ்வேறு பெயர்களில் அம்மன்களாக வழிபடப்படுகிறாள். இவ்வாறு மேற்கண்ட எந்த இடங்களிலும் அவள் மூதாட்டி இல்லை. பின்னரே மூதாட்டி ஆக்கும் வேலை நடக்கிறது.
கி.பி. 13ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஒளவை தொடர்பாக இரண்டு செயற்பாடுகள் அரங்கேறியுள்ளன. ஒன்று அவள் பாடிய அறநூல்களை வரிசைப்படுத்துவது மற்றும் அவள் பெயரில் வேறு நூல்களைப் பாடிச் சேர்ப்பது. இரண்டாவது நூல்களோடு சேர்த்தும் தனித்தும் அவளைப் பற்றிய கதைகளை உருவாக்குவது.
சங்கப்பாடல்களில் சில குறிப்புகளை எடுத்துக் கதையாக விஸ்தரிப்பதும், சில புதிய கதைகளை உருவாக்குவதும் இந்த இரண்டாம் போக்கின் செயற்பாடுகள். எனினும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே. இந்த இரண்டு போக்குகளின் இணை வினையாகவே ஒளவையை மூதாட்டியாக்கும் வேலை நடந்தது.
ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் நூல்கள் நீதி நூல்கள், நீதிக் கருத்துக்களைக் கொண்ட நூல்கள் இயற்றுவது சமணபௌத்த மரபு. குறள் உள்ளிட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் யாவும் நீதி நூல்களே. அவை யாவும் சமணபௌத்த மரபு சார்ந்தவை. ஒளவையின் இந்நூல்கள் குறளைப் போன்று நீதிக் கருத்துக்களைத் தொகுத்துச் சொல்கின்றன.
மற்றபடி அவற்றில் பிற குறிப்புகள் இருப்பதில்லை. ஆனால் இப்போது கிடைக்கும் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் நூல்களைப் பார்த்தால் சமண மரபு நூல்கள் என்று கூற மாட்டோம். ஏனெனில் அவற்றில் உள்ள கடவுள் வாழ்த்து அவ்வாறு கருத அனுமதிக்காது. அதாவது கடவுள் வாழ்த்திலும் நூலினுள்ளும் இடம்பெறும் குறிப்பால் சைவத் தொடர்பு உடையவை.
ஆனால் இப்பகுதிகள் இந்நூல்கள் எழுத ப்பட்ட வெகுகாலத்திற்குப் பின்னால் ஒளவையைச் சைவசமயப்படுத்திய காலத்தில் சேர்க்கப்பட்டதாகும். அவ்வாறு சேர்த்ததன் மூலம் சமணப் பிரதியை சைவப் பிரதியாக்கினர். இப்போது கூட கவனமாகப் பார்த்தால் சில விசயங்களைப் புரிந்து கொண்டுவிட முடியும். ஒளவையின் இந்நூல்களில் விநாயகர் துதி இருக்கிறது.
அவற்றை அவரே பாடியிருக்க வேண்டிய அவசியமில்லை. அவற்றை பதிப்பித்தவர் கூட பின்னாளில் சேர்த்திருக்க முடியும். இவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தால் அந்நூல்களிலுள்ளே கடவுள் கருத்துகள் செல்வாக்குச் செலுத்துவதில்லை.
கடவுள் வாழ்த்தையும், நூலினுள் உள்ள ஓரிரு கடவுள் குறிப்புகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அப்பாடல்களுள் சமயப் பொதுமை நீதிக் கருத்துகளே இருக்கின்றன. பாடலினுள் இடம்பெற்றுள்ள கடவுள் பெயர்களை நாம் சைவமரபு சார்ந்தது மட்டுமே புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இன்றைக்கு ஒரு கடவுளை அழைக்க ஒரே பெயரைப் பயன்படுத்தினாலும் வரலாறு முழுக்க அவ்வாறே இருந்திருக்கவில்லை.
இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட கடவுளைக் குறிப்பிடும் பெயர் முன்பு வேறு கடவுளுக்கும் பொருந்தியிருக்கிறது. ஆத்திச்சூடியில் ‘திருமாலுக்கு அடிமை செய்’ என்ற வாக்கியம் வருகிறது. உடனே நாம் ஒளவை வைணவர் என்று முடிவுக்கு வருவோம். ஒளவை பாடிய காலத்தில் அப்பெயருக்கு என்னென்ன பொருள் இருந்திருக்க முடியும் என்று பார்ப்பதே நாம் முடிவுக்கு
வரவேண்டும். ஆனால் நாம் இன்றைய பொருளை அன்னையின் மீது ஏற்றி பொருள் கொண்டு விடுகிறோம். மால் என்பது புத்தரையும் குறிக்கும். சிவன் என்பதற்கான பொருளாக புத்தர் பெயரையும் கொடுக்கிறது நிகண்டு. எனவே இவற்றை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் ஒளவையின் நீதிப்பாடல்கள் சைவமரபு சாராதவை என்பதை அறியலாம். மாறாக அவற்றில் சைவமாக்குவதற்கான கூறுகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை அறிகிறோம்.
இந்த நீதி நூல்களின் செல்வாக்கு காரணமாக ஒளவை பெயரால் பிற நூல்கள் பாடப்பட்டது அடுத்தக் கட்டமாகும். இந்த நூல்கள் நீதி நூல்களைப் போலில்லாமல் பிற கதைகள் சமயக் கருத்துகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்தன. வாக்குண்டாம், உலகநீதி, நல்வழி போன்றவை இத்தகைய நூல்களாகும். நல்வழி நூலின் 15 ஆம் பாடலில் சிவாயநம என்று வருகிறது. நல்வழியை ஆத்திச்சூடி பாடிய ஒளவையார் பாடியிருக்க வாய்ப்பில்லை என்று கூறும் தாயம்மாள் அறவாணன் ‘வாக்குண்டாம்’ பாடிய ஒளவையை 16ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வாய்ப்பில்லை என்கிறார்.
இரண்டாம் போக்கில் ஒளவையோடு தொடர்புடைய கதைகள் பெருகின. குறிப்பாக தனிப்பாடல் திரட்டில் இவை அமைந்தன. இவை யாவும் 17ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தையவை. ஆத்திச்சூடி உள்ளிட்ட நூல்களின் கடவுள் வாழ்த்தில் பிள்ளையார் இடம்பெற்றாரே ஒழிய முருகன் இடம்பெறவில்லை.
முருகன் தொடர்பு தனிப்பாடல் திரட்டலேதான் வருகிறது. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் பா வடிவத்திற்கும் தனிப்பாடல் வடிவத்திற்கும் வேற்றுமை உண்டு. அதுவரை இல்லாத ஒளவையாரின் வரலாறு தனிப்பாடல் திரட்டிலும் அதற்குப் பிந்தைய நூல்களிலும் மெல்ல மெல்ல வருகிறது. இவற்றின் காலம் 17, 18, 19 ஆம் நூற்றாண்டு எனலாம். முதல் போக்கின் போது மெல்ல உருவாகி இரண்டாம் போக்கில் வளர்ந்து நின்றது ஒளவை வரலாறு. இந்த வரலாறுதான் அவளை மூதாட்டி ஆக்கியது.
பாரி மகளிருக்கு துணை நின்றாரெனக் கபிலரைக் கூறுகிறது சங்கச் செய்யுட்கள். ஆனால் அக்கால தனிப்பாடல் திரட்டு கபிலரை நீக்கிவிட்டு அவ்விடத்தில் ஒளவையை வைக்கிறது. மேலும் அவள் பாரி மகளிருக்குத் திருமண ஏற்பாடு செய்து மூன்று வேந்தர்களையும் அழைத்ததாக வருகிறது.
அது அவருக்கு இருந்த தலைமையான இடத்தை உறுதி செய்ததற்கான கதை. எனவே அவளின் தலைமையான இடம் மாறவில்லை. ஆனால் பாரி மகளிரில் ஒளவை இணைப்பு ஐயப்பாடானது என்று கூறும் தாயம்மாள் அறவாணன் விநாயகர் வணக்கம் வந்தது முதல் ஒளவையை பாட்டியாகவும், நரைமுடியும், வெள்ளாடையும் அணிந்த பாட்டியாக உருவகிக்கும் வரலாறு தோன்றியிருக்க வேண்டும் என்கிறார்.
அவர் கூறுவது சரியே. ஒளவையாரே விநாயகர் துதிப்பாடல் தூக்கி கைலாயம் சேர்த்தார் என்ற கதை தனிப்பாடல் திரட்டில்தான் உள்ளது. முருகன் கதையும் வந்து சேர்ந்தது. இவையே அச்சுப் பண்பாட்டின் காலத்திலும் வளர்க்கப்பட்டது. ஒளவை என்னும் இளம்பெண் திருமணத்தை வெறுத்து சிவனை, விநாயகனை அணுகி வணங்கி கிழப்பருவம் எய்தினார் என்கிறது புலவர் புராணம் என்ற நூல். அது 19ஆம் நூற்றாண்டில் தமிழ்ப் புலவர்களின் காதலைச் சேகரித்தும் புனைந்தும் எழுதி வெளியான அச்சொல். இப்போது ஒளவை மூதாட்டியாக ஆக்கப்பட்டதைப் பார்த்தோம். இனி அவள் மூதாட்டியாக ஆக்கப்பட்ட காரணத்தைப் பார்க்கலாம்.
பண்டைக்காலத்தில் ஒளவை வயது முதிர்ந்தவளாக இல்லை. பிற்காலத்தில் அவள் மூத்தவளாகப் பார்க்கப்பட்டாள் என்று இதனைக் கூறலாமா? அவ்வாறு கூறுவது எளிமை. இரண்டு காலக்கட்டம் சார்ந்து நடந்த நூற்றாண்டு என்பதோடு இது நின்று விடுகிறது. உண்மையில் இது அதையும் தாண்டியது. இது வளர்ச்சிப் போக்கில் நடந்த இயல்பான மாற்றம். இந்த மாற்றத்திற்கு பின்னால் மகத்தான அரசியல் இருக்கிறது. அது தமிழ்ச் சமூக பண்பாட்டு வரலாற்றில் மாற்றம் தொடர்புடையது. அதனாலேயே இதை இந்த அளவிற்கு ஆராய வேண்டியுள்ளது.
இருவேறு காலக்கட்டங்கள் என்பதைக் காட்டிலும் இருவேறு தத்துவங்களுக்கான அந்தத் தத்துவங்கள் பிரதிபலித்த நலன்களுக்கிடையேயான போராட்டமே இம்மாற்றத்தின் பின்னால் உள்ளது. சமணபௌத்த மரபோடு தொடர்புடைய அடையாளம் ஒன்று சைவ மரபுக்குள் கொணர ப்படும்போது நடந்த மாற்றங்களுக்கான குறியீடே ஒளவையின் தோற்ற மாற்றம். எனவே அது வயது மாற்றம் மட்டுமல்ல. வயது என்பதைக் குறியீடாகக் கொண்டு நடந்த பண்பாட்டு மாற்றம் ஆகிறது. சமண ஒளவை, சைவ ஒளவையாராகப் போலச் செய்யப்படுகிறாள்.
ஆர் என்பது சிறப்பு விகுதி. ஒன்றைத் தனதாக்க முயலும் போது சிறப்பு என்னும் பெயரில் ஆர் விகுதியைச் சேர்த்து சிறு மாற்றத்தோடு எடுத்துக் கொள்வதை சைவம் மரபாக வைத்துள்ளது. நந்தன் என்னும் குறியீடு சைவத்தால் எடுக்கப்பட்ட போது ஆர் சேர்க்கப்பட்டு நந்தனார் ஆக்கப்பட்டமை இதற்கான மற்றொரு உதாரணமாகும். எனவே ஒளவை என்னும் பெயரை சமண மரபுக்குரியதாகக் கொள்வீர்களானால் ஒளவையார் என்ற பெயரை சைவ மரபுக்குரியதாகக் கருதலாம். ஒளவையை ஒளவையார் உள்வாங்கச் செய்த முயற்சியே இந்த மொத்தக் கதையாடல்.
ஏற்கெனவே மக்களிடையே செல்வாக்கோடு இருந்த ஒன்றைத் தனதாக்கும் போது அவற்றை முற்றிலும் அழிக்கமுடியாது. ஏனெனில் பண்பாட்டு வடிவம் என்ற முறையில் அது மக்கள் நினைவில் இருக்கும். உடனடியாக அழிக்க முடியாது. எனவே அதை முற்றிலும் அழிக்கவும் முடியாமல் முற்றிலும் புதியதைத் திணித்து ஏற்கச் செய்யவும் முடியாமல் ஒருநிலை தோன்றுகிறது.
அவ்விடத்தில் ஏற்கெனவே இருந்த வடிவத்தை அழிக்காமல் அப்படியே எடுத்துக்கொண்டு அதன் அர்த்தத்தில் மட்டும் சிறுசிறு மாற்றங்களைப் புகுத்தி மெல்ல மெல்லத் தனதாக்குவது ஒரு யுக்தி. அவைதீக வெகுமக்களை தம்பக்கம் திருப்பியுள்ளார்.
இது பண்பாட்டுக் காலத்தில் நடக்கும் கண்ணுக்குப் புலப்படாத மாற்றம். ஒளவை என்ற குரத்தியின் செல்வாக்கைக் கண்டு அவள் பெயரையும், நூல்களையும் தனதாக்கியுள்ளது சைவம். ஒளவை என்ற பெயரை ஒளவையாராக்கியது. நூல்களிடையே இடைச்செருகல்கள் நடத்தியும் அதற்கேற்ற பண்டையக் கதைகளைப் புதிதாக மாற்றியும் வைத்துக் கொண்டிருக்கிறது. இங்கு மூன்று செயல்பாடுகள் நடந்துள்ளன. போலச்செய்தல், திரித்தல், பரப்பல் என்பவையே அவை. இங்கு ஒளவையின் பெயரோடு தோற்றமும் திரிக்கப்பட்டிருக்கிறது.
அவளின் தொன்மை தோற்றத்தோடு கையாண்டால் போலச் செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்பதால் தோற்றத்தில் திரிபு செய்து தக்க வைத்துக் கொண்டார்கள். அந்த அவசரத்தில் சமண, பௌத்தமும் ஒளவை மீது கொண்டிருந்த ஆழ்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் அதனை மேலோட்டமாக போலச் செய்து விட்டது. சமண பௌத்தத்திடம் "உண்மெய்' நோக்கில் செயல்பட்ட அர்த்தத்தைப் "புறமெய்' யான ஆக்கிவிட்ட கோலம் நேர்ந்து விட்டது. அதாவது தலைமை, மதிப்பு, வழிகாட்டல் என்ற பொருளில் கையாண்ட மூத்தோள் என்ற சொல்லை வெறும் வயது என்பதாகப் புரிந்துகொண்டு போலச் செய்து விட்ட நிலை ஏற்பட்டுவிட்டது.
இது சமணபௌத்த அர்த்தங்களை அதன் அளவில் புரிந்து கொள்ளாமல் தன் தேவைக்கு ஏற்ப எளிமைப்படுத்திவிட்ட வைதீக சமயங்களின் செயற்பாட்டிற்கான ஓர் உதாரணம் எனலாம். ஒளவையின் பாடல்களிலிருந்த ஆழ்ந்த அர்த்தங்களை வெறும் குழந்தைப் பாடல்களாக அர்த்தம் இழக்க வைத்திருப்பதும் இவ்வாறுதான்.
முன்பு அவளிடமிருந்த கருத்துக்களை பின்னாளில் வலுவிழக்கச் செய்தது போல அவளின் தோற்றத்தை முதியவளாக்கி வலுவிழக்கச் செய்து விட்டனர் எனலாம். சமணபௌத்த பண்பாடு அர்த்தம் கொண்டது. சைவம் வைணவம் அரசியல் அர்த்தத்தில் இயங்கியது. பண்பாட்டுக் கூறுகளைப் புரிந்து கொள்ளாமல் தங்களை நிறுவுதல் என்ற அரசியல் அர்த்தத்தில் இச்சமயங்கள் செயல்பட்டுள்ளன.
தாய்த் தெய்வத்தைப் பழையோள் என்கிறது சங்கச் செய்யுள் (அகநானூறு201) கொற்ற ஒளவையை முதியோள் முதுகோதை என்கிறது மணிமேகலை. பாணர் குழுக்களில் நடமாடும் பெண் வி றலி எனப்படுகிறாள். விறலியர் தனித்தன்மை மிக்கவர்கள். பிற கலைஞர்கள் மத்தியில் அவர்களுக்கு தனி மதிப்பு இருந்ததையும் சங்க இலக்கியம் கூறுகிறது. ஒளவை, பாணர் அதில் அவள் விறலியாகவும் இருந்திருக்கலாம். இதன் தொடர்ச்சியில் வெறியாட்டும் கட்டுவிச்சி செயலும் அமைகின்றன. இந்த எல்லா பெண்களும் மணம் புரியாதவர்கள்.
ஆனால் வழிகாட்டுபவர்கள், தலைமையானவர்கள். அணங்கு என்கிற பெண்ணும் குறிக்கப்படுகிறாள். வலிமை, விசாலம், அறம் போன்ற அர்த்தங்கள் அணங்கிற்கு உண்டு. இந்த மொத்தத்தையும் தொகுத்துப் பார்க்கிறபோது ஜார்ஜ் எல். ஹாட் குறிப்பிடுகிற புனித ஆற்றல் இவர்களிடம் இருக்கிறது. எனவேதான் தலைமைக்குரியோர்.
இவை தாய்த்தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சி எனலாம். அந்தத் தொன்மைநிலை குறிப்பிடவே பழையோள் எனப்படுகிறாள். தாய்மை என்பதுகூட நேரடித் தாய் இல்லை. வழிகாட்டல், தலைமை என்ற பொருளிலான தாய்மை என்றாகிறது.
பால்மை நீங்கிய தாய்மையே இங்கிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பேறு அற்றவர்களாக உள்ளனர். கன்னி, கானமர் செல்வி என்ற சொற்கள் சங்கச் செய்யுட்களில் புனித ஆற்றல் பெற்ற பெண்களைக் குறிக்கிறது. செல்வி என்ற சொல் ஒரு பெண் திருமணம் ஆகாமல் இருக்கும் வரையிலான நிலையைக் குறிக்கவே இன்றைக்குப் பயன்படுத்தப்படுகிறது. அன்றைக்குத் திருமணம் ஆகாதவளாகக் குறி ப்பதைவிட தனியாக இருப்பவளைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
எனினும் வணங்கத்தக்க பெண்தெய்வம் முதியவளாக இல்லாமல் இளமையாக (செல்வி) இருந்ததைப் பார்க்கிறோம். இதுவே அறம் கூறுவதாலும் வணங்கப்படுவதாக நீழுகிறது. அவளே ஒளவை அறம் கூறுவது சமணபௌத்த மரபு. ஒளவையின் மூப்பு என்பது வயதால் அல்ல. மாறாக அறிவால், அறிவில் முதிர்ந்தவள். வயதால் முதிர்ந்தவளாக பிற்கால சைவமரபு திரிபாக மாற்றிக் கொண்டது.
வழிகாட்டலை, அறம் போதிப்பதை யாரும் செய்யலாம். அது ஒரு ஞானம், தவம், மனப்பயிற்சி. எந்த வயதினரும் அடையமுடியும் என்கிறது சமணம். இப்போக்கு சனநாயத் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆனால் அறம் போதிப்பதையும் அறிவுரை கூறுவதையும் ஒரு குறிப்பிட்ட வயதுடன் மட்டும் சைவம், முன்பிருந்த பரந்த நிலையே கட்டுப்படுத்துகிறது. அதாவது முதிய பெண்ணுடன் சேர்க்கிறது. இதற்கான உளவியல் என்ன? பாட்டியாக்கும்போது ஒரு பெண் பால்நிலைக்கு அப்பாற்பட்டவள் ஆகிறாள்.
எனவே அறம் போதிப்பதை இளவயதுடைய பெண் உள்ளிட்ட எல்லோருக்குமானதாகச் சொல்லாமல் பால்நிலை அகற்றப்பட்ட அதனாலேயே இயல்புக்கு மேம்பட்ட ஒரு பெண்ணோடு இணைக்கிறது. இது மானுட நிலையிலிருந்து அமானுட நிலைக்கு இந்த விசயத்தை உயர்த்துகிறது. ஒருவர் லௌகீக நிலையிலிருந்தவாறே தலைமையும் மதிப்பும் கொண்டவராக மாறமுடியும். அதாவது மனிதர் அதே நிலையில் தெய்வமாகலாம். ஆனால் ஒருவர் லௌகீக உணர்ச்சிகளிலிருந்து தூண்டும்போதே தலைமையை அடைவாள் என்கிறது பிற்காலப் பிரதிகள்.
சங்கச் செய்யுட்களில் ஒளவை பாணர்களில் ஒருத்தியாக இருக்கிறாள். அதியமான் உள்ளிட்ட குறுநில மன்னர்களோடு உரையாடுகிறாள். அயோத்திதாசரிடம் எளிய மக்களின் நோய் தீர்க்க மருந்தளிக்கிறாள். ஆனால் பிற்கால ஒளவை கீழ்நிலையில் இருந்த மரம், முருகன், விநாயகன், சிவன் ஆகிய கடவுளர்களோடு உரையாடுகிறாள்.
இறுதியாக ஒன்று, இன்றைக்கு ஒளவையை பாட்டி என்கிறோம். பாட்டி என்ற சொல்லின் பொருள் என்ன? இச்சொல் எங்கிருந்து வந்தது. ஆய், ஆயா, ஆய்ச்சி (ஆச்சி), ஆத்தா (அதா), அவ்வா, எவ்வா, அம்மா, அம்மை போன்ற சொற்களுக்கிடையே தொடர்பு இருக்கிறது. ஆய், ஐ போன்ற வேர்ச்சொல் இவற்றில் இருக்கின்றன.
அதேபோல இந்த எல்லா தொடர்புச் சொற்களும் "அ'வில் ஆரம்பிக்கின்றன. பெற்ற தாயை மட்டுமல்லாமல் தாயைப் பெற்ற தாயின் பெயரும் "அ' அல்லது "ஆ'வில் ஆரம்பிக்கின்றன. (ஆயா, ஆய்ச்சி, ஆத்தா). இந்நிலையில் பாட்டி என்ற சொல் இவற்றிலிருந்து வேறுபட்டிருக்கிறது. ஆய், ஐ போன்ற வேர்ச்சொற்களும் இல்லை. "அ'விலோ, "ஆ'விலோ தொடங்கவும் இல்லை. அதேபோல பாட்டி என்ற சொல் வழங்கும் சொல்லாகவும் இல்லை. மாறாக இது செவ்வியல் சொல்.
ஆனால் பாட்டி என்ற சொல் அவ்வைத் தொடர்பில் வந்ததாகவே தெரிகிறது. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் (கற்பியல் 52) வாயில்கள் பற்றிக் கூறும்போது,
பாணன் பாட்டி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப
என்று நூற்பா கூறுகிறது. இந்நூற்பாலில் கூறப்பட்டோரில் பெரும்பாலானோர் இசைக்குடிகளான பாணர் மரபோடு தொடர்பு கொண்டோர். எனவே பாட்டி என்ற சொல்லும் அத்தொடர்பையே பெறுகிறார். மற்றபடி பாட்டி என்பதை முதியவள் என்று கூறவில்லை. பாட்டி என்பது பாடினியே என்கிறது உரை. பாடுபவளை பாணன் என்கிறோம். பாணனுக்கான பெண்பால் சொல் பாணினி என்றே வரவேண்டும். ஆனால் அப்படியொரு சொல்லே தமிழில் இல்லை. மாறாக பாடினி என்ற சொல்லே உண்டு.
சங்கப்பாடல்களில் பாட்டி (அகநானூறு 196) பாட்டியர் (மதுரைக்காஞ்சி 749) என்று ஓரிடத்தில் ஒருமையிலும் மற்றோரிடத்தில் பன்மையிலும் இச்சொல் வருகிறது. இரண்டு இடத்திலும் இப்பெயர் விளங்குகிறது. திவாகர நிகண்டு பாணர்களில் பெண்டிரைக் குறிக்கும்போது பாட்டி என்பதையும் கூறுகிறது. இந்த சொல்லே பிற்காலத்தில் வயதில் முதிர்ந்த பெண்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
தொடக்கக் காலத்தில் இப்பொ ருள் பிற்காலத்திலேயே இணைக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வாறு நடந்தது என்று ஆராய வேண்டும். ஆனால் இதில் ஒரு ஒளவைத் தொடர்பு இருக்குமா என்பதையும் ஆராய வேண்டும். ஏனெனில் ஒளவையும் பிற்காலத்தில் ஒளவைப் பாட்டி என்ற நிலையை எய்தினாள். அவ்வை முற்காலத்தில் பாடினியாக இருந்தாள். ஒரு வகைளில் அதனைப் பாட்டி ஒளவை என்றும் கூறலாம்.
ஒளவையை வயது முதிர்ந்தவளாகப் பிற்காலத்தில் ஆக்கியபோது அச்சொல்லையும் மூப்பினைக் குறிப்பதற்காக மாற்றியிருக்கலாம். நாளடைவில் ஒளவையைக் குறிப்பதோடு சேர்ந்து அந்தச்சொல்லும் வழக்கிற்கு வந்து விட்டிருக்க வேண்டும். அதனால்தான் உறவுக்கார முதிய பெண்ணைப் பாட்டி என்றழைக்காமல் ஆயா, ஆய்ச்சி, அப்பத்தா, ஆத்தா என்றழைத்து விட்டு உறவில் வராத பொதுவான முதிய பெண்களை மட்டும் பாட்டி என்றழைக்கிறோம். இங்கு பாட்டி பொதுச்சொல். எனவே இச்சொல் முதியவளைக் குறிப்பதாக உருவானதையும் ஒளவை முதியவளாக ஆனதையும் கூட இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியமிருக்கிறது.
- ஸ்டாலின் ராஜாங்கம்