அறிவுடைமை மற்றும் அறிவின்மை ஆகிய அதிகாரங்களைத் தொடர்ந்து வரும் நன்றியில் செல்வம் என்னும் அதிகாரத்திலும் நெய்தல் வணிகச் சிந்தனைகளே மிகுதியாக உள்ளன. இம் மூன்று அதிகாரங்களிலும் ஒன்று போலவே செல்வம் தொடர்பான செய்திகளே கூறப்படுவதும் கூர்ந்து நோக்க வேண்டிய ஒன்று.

நன்றியில் செல்வம் என்னும் இவ்வதிகாரத்தில் 10 பாடல்கள் உள்ளன. இந்தப் பத்திலும் 4 பாடல்கள் - மல்குதிரைய கடற்கோட்டு இருப்பினும் வல்லூற்று உவரில் கிணற்றின் கீழ்ச் சென்று உண்பர் (263), புணர்கடல் சூழ் வையத்து 264), பயின்கொல் (267), மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்றுகுக்கும் (269) என்று - நேரடியாகவே நெய்தல் நிலச் செய்திகளைக் கொண்டுள்ளன. மீதியுள்ள ஆறு பாடல்களிலும் செல்வம், செல்வர்கள், செல்வம் சேர்க்கத் தேவையான அறிவு மற்றும் இதர பண்புகளின் தேவை, பண்பற்றவரின் பயன்படாத செல்வம் கெட்டொழியும் வழி ஆகியவை தொடர்பான கருத்துக்களே முதன்மை பெறுகின்றன. இந்தத் தெளிவுடன் பத்துப் பாடல்களின் கருத்துக்களையும் நிரல்படப் பார்ப்போம்.

1. பெரிதணியர் - வேறுபொருள்

அருகல(து) ஆகிப் பலபழுத்தக் கண்ணும்

பொரிதாள் விளவினை வாவல் குறுகா

பெரிதணியர் ஆயினும் பீடிலார் செல்வம்

'கருதுங் கடப்பாட்ட(து) அன்று (261)' என்னும் பாடலுக்கு இரவலர்கள் பெருமையில்லாதாரின் பொருள் உதவுமென்று எண்ண வேண்டாம் என்பதாக உரை எழுதப்பட்டு வருகிறது. பழுத்தவை செல்வத்திற்கும் விளாமரம் செல்வருக்கும் வெளவால் இரவலருக்கும் உவமை என்று உரையாசிரியர்கள் கருதுகின்றனர். இதில் இரவலர்கள் என்பது உரையால் வருவித்துக் கொண்டதேயொழிய பாடலில் இரவலர்கள் என்று இல்லை. வெளவாலை வணிகரின் செல்வம் பெருக்கும் வேலையாட்கள் என்றும் கொள்ளலாம் அல்லவா? இன்னும் சொல்லப் போனால் பெரிதணியர் என்னும் சொல்லிலேயே நெய்தல் நிலக் குறிப்பு இருக்கிறது.

'பெரிதணியர் ஆயினும்' என்பதற்கு 'மிக அருகில் இருந்தாரானாலும்' என்று உரையாசிரியர்களால் பொருள் கூறப்படுகிறது. அணியர் என்னும் சொல்லுக்கு உரிய பொருளை ஆய்ந்து பார்க்கையில், அணியன் - அணியுடையவன் என்று பொருள் தருகிறது, கதிரைவேற்பிள்ளையின் தழிழகராதி. அணியன் (அணியுடையவன்) என்பதை அணியர் (அணியுடையவர்) என பலர்பால் அர் விகுதி தந்து கண்டோமானால், 'பெரிதணியர் ஆயினும்' என்பதற்கு 'ஆபரணங்களை அணிந்து அலங்காரம் மிகுதியாகக் கொண்டிருப்பவராக இருந்தாலும்' என்று பொருள் வருகிறது.

இது ஒருபுறம் இருக்க 'அணியம்' என்னும் சொல்லுக்கு 'கப்பலின் முன்பக்கம்' என்று கழகத் தமிழகராதியும் நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழகராதியும் பொருளுரைக்கின்றன. இதன்படி பார்த்தோமானால் 'பெரிய முன்பகுதியையுடைய கப்பலையுடையவர் ஆயினும்' என்று பொருள் கொள்ள முடிகிறது.

கப்பலையுடைய செல்வராக இருந்தாலும் பெருமைக்குரிய பண்பு இல்லாதவரின் செல்வம் வேலை பார்ப்பவருக்குப் பயன்படாது. வாழ்க்கையை ஓட்ட வேலைக்குச் சேர்ந்தவர்கள் முதலாளியின் தீக்குணத்தால் துயருறவே வேண்டும். வேலையாள் மனமொப்பி இல்லாத செல்வம் பெருகாது என்பதால் நிலைத்து இருக்கும் என்று கருதக்கூடிய தன்மை இல்லை என்றும் பொருள் காண முடிகிறது.

வெளவால் விளாமரத்தை - அதன் முள்ளில் சிக்கி தன் சிறகுகள் கிழிபட நேருமென்பதால் - அண்டாது அதுபோல துயர் கருதி வேலை செய்பவர்களும் பெருமையில்லாத செல்வரை அண்ட மாட்டார்கள். கூலியைக் குறைத்துத் தருபவர்களிடம் பெரும்பாலும் யாரும் வேலைக்குச் செல்லாமல் தவிர்ப்பது நடைமுறையில் உள்ள ஒன்றே.

262 ஆம் பாடல், 'அழகிய தோற்றமுடைய கள்ளிப் பூவை யாரும் சூட்டிக் கொள்ளப் பறிக்க மாட்டார்கள். அதுபோல கீழான குணங்கள் உடையாரை அறிவுடையார் விரும்ப மாட்டார்' என்று சொல்கிறது..

'கீழ்களை நள்ளார் அறிவுடையார்' என்னும் தொடர் கொண்டே அறிவுடையார் செல்வராக இருப்பார்கள் என்னும் முந்தைய அதிகாரங்களில் கண்டவற்றைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம். அறிவுடையோர் செல்வராக விளங்குவார்கள் ஆகையால் பழிப்புக்குள்ளாகும் நடத்தையாளர்களின் நட்பு அவர்களின் செல்வத்தை அழிக்கும் என்பதை அறிந்து - கள்ளுண்பார் சூதாடுவார் விலைமகளிர் - கீழானவர்களை விரும்ப மாட்டார்கள். ஆக இதுவும் வணிகச் சிந்தனைக்குப் பொருந்துகிறது.

2 சேட்செல்லுதல் – கடற்பயணம்

நெய்தல் நிலம் ஏற்றுமதி இறக்குமதியால் தொழில் வளர்ச்சி சிறப்புற்றிருந்த நகர வாழ்வியலைக் கொண்டிருந்த பகுதி. அங்கே முதலாளிக்கும் தொழிலாளிக்குமா பஞ்சம்?.

மல்கு திரைய கடற்கோட்டு இருப்பினும்

வல்லூற்(று) உவரில் கிணற்றின் கீழ்ச்சென்றுண்பர்

செல்வம் பெரிதுடையர் ஆயினும் சேட்சென்றும்

 நல்குவார் கட்டே நசை (263)

கடலின் மேல் மரக்கலத்தின் மீதேறி பயணிப்பவர்கள் என்றாலும் குடிநீருக்காக அடியில் கிடக்கும் உப்புத் தன்மை இல்லாத நீரையே பருகுவார்கள். அதுபோல பெருஞ்செல்வராக இருந்தாலும் தொலைதூரம் சென்றிருக்கும்போது தன்னிடம் உழைக்கும் எளிய மனிதர்களின் தேவைகளுக்கு உரியதைக் கொடுக்கத் தொடங்கினாலே பலரின் அன்பைப் பெறுவர் (சேட்சென்றும் என்பது கடல் கடந்து தொலைதூரம் செல்வதற்கான நெய்தல் வணிகக் குறிப்பு) என்றுரைக்கும் இப் பாடலின் கருத்து, சிறப்பான வணிகச் சிந்தனையல்லவா ?

3. வட்டும் வழுதுணையும்

 ‘புணர்கடல் சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே/உணர்வதுடையாரிருப்ப உணர்விலா/ வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே / பட்டுந் துகிலும் உடுத்து.’ (264)

இப்பாவிற்குப் பொருள் கொள்ளும்போது, கத்தரிக்காய் போன்ற இழிவானவர்கள் நல்லோரைக் காட்டிலும் நன்றாக வாழ்கின்றனர் என்று கூறப்படும்  உரை முந்தைய அதிகாரப் பாக்களை மறுப்பதால் பொருத்தமாகத் தோன்றவில்லை.

வழுதுணை என்பதற்கு நேரடிப்பொருளாக கத்தரி எனக் கொண்டவர்களே மிகுதி. வழுதுணை என்னும் சொல்லை வழு (குற்றம்) + துணை (சேர்க்கை அல்லது நட்பு) எனப் பிரித்துப் பொருள்கொண்டு தவறான சேர்க்கை என ஏன் பொருள் கொள்ளக்கூடாது? வட்டு என்பதற்கும் சூதாட்டம் மற்றும் சூதாடு கருவி எனும் பொருள்கள் உள்ளபோதும் ஏனோ அதை உரையாசிரியர்கள் கொள்ளாமல் விடுத்தனர்.

கடற்கரை உலகில் நற்செயல்கள் மற்றும் அதில் வேறான தீய செயல்களைக் கண்டறிந்து அடக்கத்தோடு வாழும் செல்வர்கள் போல பட்டும் உயர்ந்த துணிகளும் அணிந்தவர்கள் சூதாட்டம், தவறான சேர்க்கை முதலானவற்றைப் பெற்று வாழ்கின்றனர். செல்வர் போல் இருந்தாலும் இவர்கள் அழிகின்ற காரணத்தால் பெருமைமிகு செல்வருடன் ஒப்பிடத் தக்கவர்கள் இல்லை. நிலையான செல்வர் போல் இருந்தாலும் இவர்களின் நடத்தையால் செல்வம் வீணாகும். இப்பாடலுக்கு இப்படிப் பொருள் காண்பது நன்றியில் செல்வம் என்னும் இவ் வதிகாரத்திற்கும் பொருத்தமாக அமைகிறது.

நல்லவர்கள் நயமுடையவர்கள் செல்வராக இருப்பது போன்று கல்லாதவர்க்கும் செல்வம் இருப்பதற்குக் காரணம் அவர்தம் முன்னோர்கள் செல்வத்தைச் சேர்த்ததே ஆகும். இல்லாவிட்டால் கல்லாதவர்க்குச் செல்வம் சேர்த்தல் ஆகாது. இது 265 ஆம் பாடலைப் படிக்கும் போது எனக்குத் தோன்றும் பொருள். தொல்லை வினைப்பயன் என்பது முன்னர் தந்தை தாத்தா முதலானோரின் வணிக வினையின் பயனாகச் சேர்த்து வைக்கப்பட்ட செல்வம்.

இதை விடுத்து தொல்லை வினைப்பயன் என்பதற்கு முன்வினை காரணமாக / முன் ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் கல்லாதவரிடம் செல்வம் சேர்ந்திருக்கிறது என்பதாக இதுகாறும் எழுதப்பட்ட உரைகள் இயல்பானதாகத் தெரியவில்லை.

4. மலர்மேல் பொற்பாவாய் - திருமகளா?

'நன்மலர்மேல் பொற்பாவாய்' என்னும் தொடர் திருமகளான இலக்குமியைக் குறிப்பதாகக் கொண்டு பதுமனார் தம் உரையில், ‘என்றது நாறாத இதழேபோல் நன்மலர் மேற் பொற்பாவாய் ! பிறர்க்குப் பயன்படாது நீறாய் நிலத்தின்கண் விளிவாயாக! ; நீ பொன்போலும் நன்மக்கள் பக்கம் விட்டுவேறாய் புன்மக்கள் பக்கம் புகுவாய் ஆதலால் என்றவாறு’ என்று கருத்துமுதல்வாத நோக்கில் எழுதிச் செல்ல அதனையே வழிமொழிந்தனர் மற்றவர்களும். இதை எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, மூலப்பாடலை மட்டும் நுணுகிப் படிக்கையில் அப் பாடல் எனக்கு நவின்ற செய்தி முற்றிலும் வேறானது.

'நாறாத் தகடேபோல் நன்மலர்மேல் பொற்பாவாய்' என்பது நறுமணம் மிக்க நன்மலர் மணமில்லாததுபோல் ஆகுமளவுக்கு மலரை விடவும் மேலான நல்ல மணம் மிக்க அழகியே என்ற விளி. – { உண்மையில் அது நறுமண இதழ்களையுடைய மலர்… அவள் முன் மணமற்ற இதழ் போல் தோன்றுகிற அளவுக்கு அவள் மணமுடையவள். (அம்மலர் நெய்தலோ ?)} - இந்த விளியைத் தொடர்ந்து வரும் பொருளையும் கொண்டு பரத்தை*யிடம் செய்தியொன்றைச் சொல்வதாகக் கருத முடிகிறது.

அதாவது, சிறந்த பொன்போன்ற நல்லவர்களை நெருங்கமுடியாது என்பதால் அவர்களை நெருங்கும் வீண் முயற்சியை விட்டுவிட்டு தீயவர்கள் இருக்கும் இடத்திற்குள் புகுந்து அவர்களை இப்போது கொண்டிருக்கும் செல்வ நிலையை சாம்பல் போல் அழித்திடு அழகியே என்று (வணிகர்கள் நன்னடத்தையுடன் இருந்தால் மட்டுமே செல்வம் பெருகும். தீயகுணம் உள்ள செல்வர்கள் பரத்தையர் தொடர்பால் அழிவர் என்பது குறிப்பு.) இப்பாடல் கூறுவதாகத் தோன்றுகிறது.

'நாறாத் தகடேபோல் நன்மலர்மேல் பொற்பாவாய் பொன்போலும் நன்மக்கள் பக்கம் துறந்து. வேறாய புன்மக்கள் பக்கம் நீ புகுவாய் நீறாய் நிலத்து விளியரோ' என 266 ஆம் பாடலின் சொற்களை மாற்றிப் போட்டுப் பொருள் கொள்ளும்போதும் இப்பொருள் தெளிவாகத் தெரிவதைக் காணலாம்.

5. ஒட்டும் பசை:

267 ஆம் பாடலின் 'பரம்பப் பயின்கொல்' என்னும் வரிகளுக்கு. பிறருக்குப் பயன்படாதவரின் செல்வம் பிசின் போட்டு ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று கூறும் பொருள் நகைப்பைத் தருகிறது. பயின் என்பதற்குப் பிசின் அல்லது ஒட்டும் பசை என்பது பொருள்தான். அதற்காக இப்படியா கையில் ஒட்டி வைப்பது?

பயின் என்பது மரக்கலங்களில் பயணிப்போர் எடுத்துக் கொண்டு போகும் பொருள்களுள் ஒன்று. புயலால் கலம் பாதிக்கப்பட்டால் கப்பலின் மாலுமி அந்தப் பசையினைக் கொண்டு உடைந்த சுக்கான் பகுதிகளை இணைத்து, கலத்தைக் காக்க முனைவர் என்னும் குறிப்பு,

'இதையும் கயிறும் பிணையும் இரியச் சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும் திசை அறிநீ கானும் போன்ம் (10: 53- 55)' எனப் பரிபாடலில் வருகிறது.

மேலும் பயின் என்பதற்கு சுக்கான் என்னும் பொருளும் உள்ளதென்று கழகத் தமிழகராதி பொருள் கூறுகிறது. இவையிரண்டும் கடல் வணிக மரக்கலம் தொடர்பான சொற்கள்.

நயமாகப் பேசும் திறம் கொண்டவரிடம் வறுமை வந்தால் ஒரு நாள் அத்துயர் நின்றிருக்குமா? பிறருக்கு உதவாதவர்களிடம் இருக்கும் செல்வம் கடலில் மிதக்கும் மரக்கலம் பழுதாகிறபோது செப்பனிட உதவும் பசைபோல் உதவுமா? (உதவாது என்பது விடை) நல்லவரிடம் வந்த துயரும் தீயவரிடம் வந்த செல்வமும் விருப்பமில்லாமல் மட்டுமே இருக்கும். விருப்பமில்லாத எதுவும் விரைவில் நீங்கித்தானே செல்லும்?

வலவை என்பதற்குப் பொருள் வெட்கமில்லாதவன். பழிகளுக்கு அஞ்சும் மானமுடையவர்கள் பல இடங்களுக்கும் சென்று தேன் சேகரிக்கும் வண்டுபோல் (காலாறு என்பதற்கு வண்டு, தேனீ என்பதும் பொருள்) பலவகையான செல்வங்களைச் சேகரித்தும் முயற்சியுடையவர்களாக இருப்பார்கள்..

'உண்டு கழிப்பர்' என்பதிலிருந்து வினைமீதுள்ள கண்ணால் உணவில் நாட்டமில்லாமல் வினையின்மீது கண்ணாயிருப்பர் என்பதை அறிய முடிகிறது. வெட்கம்கெட்ட அறிவற்றவர்கள் நடந்துகூட செல்லாமல் முயற்சிகள் இல்லாமல் பொருள் பெருக்கும் நல்வழியில் பயன்படுத்தாமல் தாந்தனியனாய் வேர்க்கும் அளவிற்குப் பலவகை உணவுகளை உண்டு செல்வத்தை அழிப்பார்கள். பாடல் 268 ஐப் படிக்கையில் இப்பொருள் எனக்குப் படுகிறது.

அறிவில்லாதார் செல்வராக இருக்கும்போது வயலுக்குப் பேயாமல் கடலுக்குள் பெய்யும் பயனில்லா மழையைப் போல் தேவையற்ற வழிகளில் பொருள்களை வீணாக்குவர் என்று 269 ஆம் பாடல் பகர்கிறது.

சிலர் கற்றும் கூட நுட்பமான அறிவில்லாராக இருப்பர். சிலர் கற்காவிட்டாலும்கூட அனுபவத்தால் கற்றவராக இருப்பார். இவர்கள் வறுமையுற்ற போதும் இரந்து வாழும் நிலைக்குத் தாழ மாட்டார். செல்வராக இருப்பவர் பிறருக்குக் கொடுத்து வாழாவிட்டால் பிறரின் ஒத்துழைப்பு கிட்டாமல் வறுமைக்கு ஆளாகி விடுவார். 270 ஆம் பாடலுக்கு வணிகப் பொருள் இப்படியும் வருகிறது.

6. கடற்பயணங்களில் வேல்

ஒரு பெண்ணிடம் (மகடூஉ முன்னிலை) சொல்வதுபோல் அமைந்துள்ள பாடல்களில் வேல்நெடுங்கண் (265) வேற்கண்ணாய் (267 ) என்று பெண்களின் கண்ணுக்கு வேல் உவமையாகக் கூறப்பட்ட குறிப்புகளின் வழி இங்கு வேல் என்னும் கருவியின் பயன்பாட்டை அறியலாம். வேலும் கூட நெய்தல் நிலத்தில் பயன்பட்ட ஆயுதமே. மரக்கலங்களில் வேல் கொண்டு போரிடுவர் என்பதற்கு, 'பெளவம் கலங்க வேலிட்டு உடைதிரைப் பரப்பின் படுகடல் ஓட்டிய வெல்புகழ்க் குட்டுவன்' என்னும் பதிற்றுப்பத்து (46: 11-13) வரிகள் சான்றாக இருக்கின்றன.

இம் மூன்று (அறிவுடைமை, அறிவின்மை, நன்றியில் செல்வம்) அதிகாரங்களிலும் நெய்தல் நில வணிகம் தொடர்பான செய்திகள் முழுக்க இடம் பெற்றிருக்கின்றன. நாலடியார் நூல் முழுக்கவும் மருதமும் முல்லையும் சிறுபான்மை வந்தபோதும் மிகுதியானவை குறிஞ்சி மற்றும் நெய்தல் தொடர்பான செய்திகளே. அதனோடு மட்டுமின்றி தொழில்கள் தொடர்பான செய்திகளும் வணிகச் செய்திகளும் நிறையவே உள்ளன. ஒரு படைப்பு தான் கிளம்பும் இயற்கையோடு இயைந்த சமூகச் சூழலைப் புறந்தள்ளிவிட்டு ஒருபோதும் எழ முடியாது. அதற்குள் நாடி ஓடி தேடத் தேட அதன் மூடுதிரை கொஞ்சம் கொஞ்சமாக விலகும். 

* பிற்காலத்து நூலான விவேக சிந்தாமணியிலும் கூட 'அன்னையே அனைய தோழி அறந்தனை வளர்க்கும் மாதே / உன்னையோர் உண்மை கேட்பேன் உரைதெளிந்துரைத்தல் வேண்டும் / என்னையே புணருவோர்கள் எனக்குமோர் இன்பம் நல்கிப் / பொன்னையும் கொடுத்துப் பாதப் போதினில் வீழ்வதேனோ ?' என்று ஒரு விலைமகள் கேட்க, அதற்கு அவளுடைய மூத்த தோழி 'பொம்மெனப் பணைத்துவிம்மிப் போர்மதன் மயங்கி வீழும் / கொம்மைசேர் முலையினாலே கூறுவேன் ஒன்றுகேண்மோ / செம்மையில் அறஞ்செய்யாதார் திரவியம் சிதறவேண்டி / நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தவாறே' (பாடல் 112) என்று விடையிறுப்பதைக் கொண்டு, நல்லறம் செய்யாதார் செல்வம் கள், சூது, மாது மூலம் சிதறிக் கெடும் என்று அவள் கூறியதாக ஒரு பாடல் உள்ளது. இப் பாடல்களின் கருத்தை இவ்விடத்தில் குறிப்பதுகூட பிற்காலங்களிலும் நற்செயல் செய்யாதாரின் செல்வம் சிதறும் வழிகளாக கள், சூது, பரத்தையர்தொடர்பு ஆகியவை (விலைமகளிடம்) கூறப்பட்டு வந்ததை இணைத்து நோக்குவதற்கே.

துணைநூற்பட்டியல்

  1. முத்துரத்ன முதலியார் எஸ், வித்துவான் கந்தசாமி பிள்ளை எம்.ஆர், ப.ஆ 1990. நாலடியார் உரைவளம் இரண்டாம் பாகம். தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு
  2. இளவழகனார் உரை, திசம்பர் 2007, நாலடியார், கழகவெளியீடு.
  3. புலவர் குழு, கழகத் தமிழகராதி,, 2005, தி.தெ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
  4. நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி, கெளமாரீஸ்வரி ப.ஆ, 4 ஆம் பதிப்பு 2009, எஸ், சாரதா பதிப்பகம், சென்னை.
  5. Naaladiyar pdf Book Download, GOOGLE வேதகிரி முதலியாரின் பதவுரையும் கருத்துரையும்.
  6. சோமசுந்தரனார் பொ.வே., (உ.ஆ) 2008, பரிபாடல் கழக வெளியீடு
  7. துரைசாமி. ஒளவை. சு, (உ.ஆ) 2017 பதிற்றுப்பத்து கழக வெளியீடு
  8. இராமசாமி செ.ரெ, (உ.ஆ), 1966 விவேக சிந்தாமணி, கழக வெளியீடு

- பொ.முத்துவேல்

Pin It