நிலத்தில் விழும் நீர், உடனடியாக நிறம், சுவை ஆகியனவற்றால் அந்நிலத்துக்குரிய இயல்பினில் மாறிவிடும். பின்னர் சுவையில் மாற்றம் பெறாமல், மெல்லத் தெளிந்து நிறம் மட்டும் அதன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இது எல்லா நிலத்திலும் நிகழக்கூடிய இயற்கை நிகழ்வாகும். ஆனால், செம்மண் நிலத்தில் விழும் நீர் மட்டும் எவ்வளவு காலமானாலும் நிறமும், சுவையும் மாறாது இருக்கும். இயற்கையின் இந்தச் சிறப்பைப் பண்டைய தமிழர்கள் நன்றாக உணர்ந்தறிந்திருந்தனர்.

சங்கப் புலவரொருவர் காதலர்களின் இருமனங்கள் இணைந்து ஒன்றுபட்ட நிலையைச் ‘செம்மண் நிலத்தில் விழுந்த நீர் போன்றது’ என உவமித்துப் பாடியிருக்கிறார். நீண்ட காலம் பிரியாதிருத்தலே காதலின் சிறப்பு. அதை அழுத்தமாக உணர்த்த நினைத்த புலவர்க்குக் கிடைத்த சான்று ‘செம்மண் நிலத்து நீர்’ ஆகும். அப்பாட்டு நாம் நன்கு அறிந்த

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே (குறுந்தொகை, 40)

என்ற பாடலாகும்.

‘என் தாயும் உன் தாயும் எப்படி உறவுடைய வராவர்? என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினவராவர்? நானும் நீயும் இதற்குமுன் எவ்விதம் அறிமுகமாகினோம்? இவை எதுவும் இல்லாத நிலையில், எதிர்பாராது சந்தித்தபோது நம் இருவரது அன்பு நெஞ்சங்கள் செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் எக்காலத்தும் மாறாத வகையில் நிறமும் சுவையும் ஒன்றாகக் கலந்துவிடுவதுபோலத் தாம் ஒன்றுபட்டுக் கலந்தன, அதனால் நான் இனிப் பிரிந்து சென்று விடுவேன் என அஞ்சாதே’ என்று காதலியைப் பார்த்துக் காதலன் சொல்லுவதாகப் புலவர் பாடியிருக்கிறார்.

பண்டைய காலச்சூழல் நல்ல இயற்கையுடன் இயைந்திருந்தமையால் நிலவியல், நீரியல் பற்றிய புலமைத்திறம் அக்காலப் புலவர்களுக்கு இயல்பாக அமையப்பெற்றிருக்கிறது. அதனால்தான் புலவரொரு வரால் இரு காதல் மனங்கள் கலந்த ஒன்றுபட்ட நிலையைக் கலங்கல் நீருடன் உவமித்துக் காட்ட முடிந்திருக்கிறது.

செம்மண் நிலத்தில் விழுந்த நீர் எவ்வளவு காலமானாலும் சுவையிலும் நிறத்திலும் மாற்றம்பெறாது இருக்கும் என்பது இயற்கையின் இயல்பு. அந் நீரையும் குடிக்கும் வகையில் தெளியச் செய்யும் முறையைப் பண்டைத் தமிழர்கள் அறிந்து வைத்திருந்துள்ளனர். ஆலங்குடி வங்கனார் எனும் புலவர் பாடிய புறநானூற்றுப் பாடலொன்று (319) கலங்கல் நீரைத் தெளியவைக்கும் முறையைக் குறிப்பாக வெளிப்படுத்துகின்றது.

சீறூர் மன்னன், பெருவேந்தன் ஏவலின் பொருட்டுப் போர்மேல் சென்றிருந்த காலத்தில், பாணன் ஒருவன் அம்மன்னனைக் கண்டு பொருள் பெற்றுச் செல்லலாம் என்று வருகிறான். அப்பொழுது அங்கிருந்த வீரன் ஒருவன், சீறூர் மன்னன் போர்மேல் சென்றிருக்கும் செய்தியைச் சொல்லி, மன்னன் சிறப்புகளையும் பாணனுக்குச் சொல்கிறான். வீரன் சொல்லும் அந்தப் பாட்டில்,

பூவற் படுவில் கூவல் தோண்டிய

செங்கண் சில்நீர் பெய்த சீறில்

முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி

யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று (புறம். 319: 1 - 4)

என்றொரு குறிப்பு வருகின்றது. ‘சிறிய இல்லத்தின் முற்றத்தில், செம்மண் நிலத்தில் தோண்டிய கிணற்றி லிருந்து எடுக்கப்பட்ட சிவந்த நீரை, அகன்ற வாயினை யுடைய சாடியில் இட்டு வைத்திருப்பர். அதில் கடுக்காயை இட்டு வைத்தமையால் நீர் சிறிது தெளிந்து மாசில்லாததாய் இருந்தது’ என்கிறது இந்தப் பாடலடிகள். செம்மண் நிலத்தில் கிணறு தோண்டி எடுக்கப்பட்ட கலங்கல் நீர், சாடிகளில் வைக்கப்பெற்று, கடுக்காய் இட்டுத் தெளிய வைக்கப்பெறும் என்ற குறிப்பை இப்பாடலடிகள் வெளிப்படுத்துகின்றன. சங்கப் புலவர் இயற்கைவளம் மிகுந்திருந்த சூழலில் வாழ்ந்தவர் என்பதால், கடுக்காய்க்குக் கலங்கல் நீரைத் தெளிய வைக்கும் குணம் இருப்பது தெரிந்திருக்கிறது.

பண்டைய புலவர்களுக்கு நிலவியல், நீரியல் பற்றிய புலமைத் திறன் மிகுந்திருந்த குறிப்புகளை இவ்விரு பாடல்களும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. இன்றைய நவீன அறிவியல் முறைகளுக்குப் பண்டைய சிந்தனைகள் முன்வடிவங்களாகக் கருதத் தக்கன என்பதற்கு ஏராளமான சான்றுகள் நமது பழந்தமிழ் நூல்களில் உள்ளன. அவைகளுள் ஒன்று மட்டுமே இங்குச் சுட்டிக்காட்டப்பட்டது.