தலைவன் தன் மனைவியைப் பிரிந்து பரத்தையர் வீட்டிற்குச் சென்றுவிடுகிறான். இதனை அறிந்த தோழி, தலைவனை ஆற்றுப்படுத்த நினைக்கிறாள். அவள், தலைவன் தன் மனைவியோடு இல்லறம் நடத்த வேண்டும்; அவளோடு சேர்ந்து வாழ வேண்டும் என நினைக்கிறாள், ðபரத்தை வீடு போய் வந்த தலைவன், தலைவியைச் சமாதானப்படுத்த தோழியை அணுகும்போது அவள் அதனை மறுத்து விடுகிறாள். இதன் மூலமாகத் தோழி, தலைவியின் அருமையைத் தலைவனுக்கு உணர்த்துகிறாள்; அவனைக் கடிந்து பேசுகிறாள்; அவனைத் திருத்த நினைக்கிறாள்; அவனுக்கு இல்லறத்தின் மேன்மை களை உணர்த்துகிறாள். அவனுடைய குழந்தைகள், மனைவி, சுற்றத்தார், குடும்பச் சூழ்நிலைகள் ஆகிய வற்றைத் தோழி தலைவனுக்கு வெளிப்படுத்திக் காட்டுகிறாள். தோழி, தலைவன் தன் மனைவியையும் குழந்தைகளையும் நினைத்தாவது, அவன் பரத் தையர் வாழ்வை விலக்கிவிட வேண்டும் என எண்ணுகிறாள். தோழி மனிதநேய மாண்போடு நினைக்கின்ற காரணத்தினால்தான், தலைமக்களின் இல்லற வாழ்க்கையைப் பற்றி எண்ணுகிறாள். தோழி பரத்தமை வாழ்க்கையை ஒழிக்கப் பெரிதும் முயன்றிருக்கிறாள். அவள் அதற்கான செயல் களைச் செய்திருக்கிறாள்; அதற்காகத் திட்டத்தை வகுத்திருக்கிறாள். எனவேதான், தலைவன் பரத் தையர் வீட்டிற்குச் சென்றுவந்தாலும் தோழி அவனுடைய கருத்திற்கு உடன்படாமல் மறுத்து விடுகிறாள். தலைவன் தோழியிடத்தில் பலமுறை தன் தலைவியோடு சேர்த்து வைக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பின்னர்தான் தோழி அதற்கு உடன்படுகிறாள் என்பதை இதில் உணர முடிகிறது.

ancient lovers 360வாயில் வேண்டிப் புக்க கிழவற்குத் தோழி கூறியது; வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது; வாயில் நேர்ந்தது முதலான துறைப்பாடல்களில் தோழியின் மனித நேய மாண்புகள் மிகுந்து காணப்படுகின்றன. தலைவன் மேற்கொண்ட பரத்தமை வாழ்க்கையை ஒழிப் பதற்காகத்தான் தோழி, அவனுடைய சமாதான கருத்திற்கு உடன்படாமல் பலமுறை மறுத்து விடுவதாகவும் பலமுறை வேண்ட விடுவ தாகவும் செய்கிறாள். ஒருபுறம் தோழியின் மனித நேய மாண்புகள், தலைமக்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக மேற்கொள்வதற்கு வழி செய்கின்றது; மற்றொருபுறம் பரத்தையர் வாழ்க்கையை ஒழிப் பதற்குப் பெரிதும் துணைபுரிந்திருக்கிறது என் பதைக் கருத்தில் கொண்டு இத்தலைப்பை அணுகலாம்.

பரத்தை வீடு போய் வந்த தலைவன், தலைவியைச் சமாதானப்படுத்த, தோழியிடத்தில் வேண்டிக் கொண்டிருக்கிறான். தோழி தலை வனின் வேண்டுகோளுக்கு உடன்படவில்லை. அவள், அவன் தன் மனைவிக்குச் செய்த கொடுமை களைச் சுட்டிக்காட்டுகிறாள். தோழி, தலை வனுக்குக் களவுக்காலத்தில் நிகழ்ந்த இனிமையான நிகழ்வுகளை எடுத்துக் கூறினாள். அவள், தலை வனுக்கு நீ இளமைக் காலத்தில் தலைவியின் மீது பற்றோடு இருந்தாய்; அவள் மீது நீ முழுமையான அன்பைச் செலுத்தினாய்; இப்பொழுது நீ அவள் மீது முழுமையான அன்பைச் செலுத்தவில்லை என்று கூறுகிறாள். முன்பு, என் தோழி வேம் பினது பச்சைக் காயைத் தரினும், இனிய மண முள்ள வெல்லக்கட்டி என்று சுவைத்து உண்டீர்; இப்பொழுது பாரியின் பறம்புமலையில் குளிர்ந்த சுனையில் கிடைக்கும் தெளிந்த நீரை, அதுவும் தை மாதத்தில் மிகக் குளிர்ச்சியுடையதாய் தந்தாலும் வெப்பமாய் இருக்கிறது; உவர்ப்பாய் இருக்கிறது என்று வெறுத்துக் கூறுகின்றீர். உலகில் அன்பின் தன்மை அத்தகையதாய் இருக்கிறது என்று தோழி தலைவனின் வேண்டுகோளைப் புறக்கணித்து விடுகிறாள். தோழி, தலைவனின் சமாதான சொற் களை ஏற்றுக்கொள்ளாமல், அவன் தன் மனைவிக்குச் செய்த கொடுமைகளைப் புலப்படுத்திக் காட்டு கிறாள். இப்பாடலில், புலவர் எந்தக் கருத்தை வலியுறுத்த வேண்டுமோ, அக்கருத்தை மிக அழகாக வலியுறுத்தி இருக்கிறார். ஓர் இலக் கியத்தில்தான், சமூகத்திற்கு நன்மை தரக்கூடிய எந்தவகையான கருத்துக்களையும் வலியுறுத்த முடியும்; எடுத்துக் கூறமுடியும். சமூகத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை,

வேம்பின் பைங்காய்என் தோழி தரினே

தேம்பூங் கட்டி என்றனிர் இனியே

பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்

தைஇத் திங்கள் தண்ணிய தரினும்

‘வெய்ய உவர்க்கும்’ என்றனீர்

ஐய அற்றால் அன்பின் பாலே            (குறு. 196)

என்ற பாடல் உணர்த்துகிறது. இப்பாடல், தலைவன் மனிதநேயமில்லாமல் தன் மனைவியைப் பிரிந்து, பரத்தையர் வீட்டிற்குச் சென்று விட்டான் என்று உணர்த்துகிறது. தோழி, தலைவனை மனிதநேய மில்லாதவன் என்று சுட்டிக்காட்டுகிறாள். தோழி, தலைவனுக்கு மனிதநேயம் இருந்திருந்தால், அவன் பரத்தையர் இல்லத்திற்குச் சென்றிருப்பானா? என்று வன்மையாகக் கண்டிக்கிறாள். இதனைத் தொல்காப்பியம், ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது... வானோர் அமுதம் புரையுமால் எமக்குனன... அடிசிலும் பூவும் தொடுத்தற் கண்ணும் (தொல். கற்பு. 5) என்றும், அருமைக் காலத்துப் பெரும காட்டிய... எளிமைக் காலத்து இரக்கத்தானும் (தொல். கற்பு. 9) என்றும் குறிப் பிடுகிறது. சங்க இலக்கியம், தீம் நீரப்பெருங் குண்டு சுனை (புறம். 166), அறனில் வேந்தன் ஆளும் வறன் உறு குன்றம் (அகம். 109), கடும்பரிப் புரவிக் கைவண் பாரி... தீம் பெரும் பைஞ்சுனை (அகம். 78) என்று குறிப்பிடுகிறது.

இவர் கவிதைகள் ஏதோ ஒரு குறிப்பிட்ட காரியங்களைப் பற்றிக் கூறுவதில்லை. மனித சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பொதுமைப்படுத்தி உலகப் பொதுமையாக்கிக் கூறுகின்றன என்பார். இதுதான் இவர் பிளேட் டோவின் போலவாக்கம் (imitation) என்பதற்குக் கொடுத்த புது விளக்கம் (PEPP, P. 130) என்பர்.

இதில்தான் இவருடைய பொதுமையாக்கக் கொள்கையும் (Universal) மலர்ந் துள்ளது. நல்ல கவிதைகள் மனிதநேயத்தை, அவனுடைய செய்கை களை, எண்ணங்களை எல்லாம் பொதுமையாக்கி நிற்கும் என எண்ணலாம். இதனால் இது தத்து வத்தை விடவும் வரலாற்றை விடவும் சிறந்தது; மேம்பட்டு நிற்கிறது என்பது அரிஸ்டாட்டிலின் கொள்கை.

“Poetry is more philosophical than history, for poetry deals with universal, history with particulars” என்பார் அரிஸ்டாட்டில் (PEPP P. 615).

வரலாறு என்ன நடந்தது என்பதை மட்டுமே கூறும். ஆனால் கவிதையோ என்ன நடக்கலாம் நடக்கவேண்டும் என்பதையும் கூறுவது எனவும் விளக்கிச் சொல்லுவார்.

“History deals with particular and poetry cares not for what has happened but for what may happen (ch.I.X) and that it prefers impossible probabilities (adunata eikota) to improbable possibilities (dunata apithuna)” எனக் கூறுவார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய ஆசிரியர் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த சில எண்ணங் களை மறுத்து விளக்கமும் கொடுத்ததாகக் கருதலாம் (ச.அகத்தியலிங்கம், 2000: 54-55).

தோழி, தலைவனிடத்தில் இவ் ஊர் மக்கள் முன்பு ஒரே ஒரு பசுவை வைத்துக்கொண்டு, அப் பசுவினால் வரும் செல்வத்தை வைத்துக்கொண்டு உணவை உண்டு வாழ்ந்து வந்தனர். உன் வாழ்வும் இவ்வாறுதான் இருந்தது. மிகுந்த நன்மையை யுடைய இளம் தலைமகள் நின் இல்லம் புகுந்த காலந்தொட்டே, நின் வாழ்வு விழாவால் மேம் பட்ட சிறப்பினை உடையதாயிற்று என்று கூறு கின்றனர். இதை அறிவாயாக? அத்தகைய செல்வத் திருமகளாகிய தலைவியை விடுத்து, பரத்தை யருடன் நீர் விளையாட்டு விழா ஆடுவதைக் கண்டு ஊரார் பழிக்கின்றனர்; ஊர்முழுக்க உன்னுடைய பரத்தமை வாழ்வைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தலைவியின் வாழ்க்கையை நினைத்து மனவேதனை கொண் டிருக்கின்றனர். இப்பாடல், ஒரு சிறந்த கருவை உள்ளடக்கி இயற்றப்பட்டுள்ளது. இதில், சமூகத்தின் உட்கூறுகளை உள்ளடக்கிப் பாடப்பட்டுள்ளது. இப்பாடல் தலைவனுக்கும், அவன் போன்ற பிறருக்கும், நல்ல எண்ணம் வளர வேண்டும் என்பதை,

உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்

தழைஅணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி

விழவொடு வருதி நீயே; இஃதோ

ஓர்ஆன், வல்சிச் சீர்இல் வாழ்க்கை

பெருநலக் குறுமகள் வந்தென,

இனிவிழவு ஆயிற்று என்னும் இவ்ஊரே       (குறு. 295)

என்ற பாடல் உணர்த்துகிறது. தோழி தலைவனை நோக்கி, நீ முன்பு செல்வம் இல்லாமல் இருந்தாய். நீ வறுமையில் வாழ்ந்தாய். நீ தலைவியைத் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான்

செல்வ வளத்தோடு திகழ்ந்தாய். நீ தலைவியைத் திருமணம் செய்த பின்னர் எல்லா வகையான செல்வங்களும் உன்னிடம் வந்தன. நீ அவ்வூரில் செல்வந்தனாய் திகழ்ந்தாய். அதனை நீ மறந்து விட்டுத் தலைவியைப் பிரிந்து பரத்தையரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாய். அது உன் வாழ்வுக்குத் தகுதியா? நியாயமா? என்று இடித்துரைக்கிறாள். தோழி, அவன் செய்த குற்றத்தை அவனுக்கே வெளிப்படுத்திக் காட்டுகிறாள்; அவனைச் சிந்திக்க வைக்கிறாள்; அவன் செய்த குற்றத்தை உணர வைக்கிறாள். தலைவன் தோழியிடத்தில் பலமுறை சமாதானப்படுத்துமாறு வேண்டியும், அவள் அதற்கு மறுத்து விடுகிறாள். அவள், அவன் செய்த குற்றத்தையே மீண்டும் மீண்டும் உணர்த்திக் காட்டு கிறாள் என்பது இங்கு உணர்த்தப்பட்டுள்ளது.

இதனைத் தொல்காப்பியம், இடித்து வரை நிறுத்தலும் அவரது ஆகும்... கிழவனும் கிழத்தியும் அவர்வரை நிற்றலின் இடித்து வரை நிறுத்தலும் அவரது ஆகும்... கிழவனும் கிழத்தியும் அவர் வரை நிற்றலின் (தொல். கற்பு. 14) என்று உரைக்கிறது. இளம்பூரணர், கழறித் தலைவனை எல்லையின் கண்ணே நிறுத்தல் அறிவர்க் குரியது. அங்ஙனம் கழறியது இது (தொல். கற்பு.14), நல்குரவு சிறப்பித்தல், காரணமாக வந்தது; இதனுள் ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை யெனத் தலை மகன் செல்வக்குறைபாடு கூறி, பெருநலக் குறு மகள் வந்தென விழவாயிற்று என்னும் இவ்வூரென்ற மையான் நல்குரவு பற்றித் தலைமகளைச் சிறப்பிக்க வந்தது (தொல். பொருள். 49) என உரைக்கிறார்.

நச்சினார்கினியர், உணர்ப்புவயின் வாராது ஊடிய தலைவி மாட்டு ஊடின தலைவனை அறிவர் கழறியது (தொல். கற்பு. 14), தோழியும் அறிவரும் பரத்தையிற் பிரிவால் தலைவர்க்கும் தலைவியர்க்கும் தோன்றிய வருத்தமிகுதியைத் தீர்க்கக் கருதி, அவரது இல் வாழ்க்கை நிகழ்ச்சிக் கண்ணே தமக்கு வருத்தந் தோன்றிற்றாகக் கூறியது. இதனுள் முன்னர் நிகழ்த்திய வாழ்க்கை இவள் வந்தாளாகப் புறத்து விளையாடும் விழவுளதாயிற்றென்று இவ்வூர் கூறா நிற்கும் செல்வம், இவளை நெகிழ்ந்தாற் பழைய தன்மையாமென்று அறிவர் இறங்கிக் கூறிய வாறு காண்க (தொல். பொருள். 32) என்று உரைக் கிறார்.

தொல்காப்பியம், சினனே பேதைமை நிம்பிரி, நல்குரவு... அனைநால் வகையும் சிறப்பொடு வருமே (தொல். பொருள். 49) என்று குறிப்பிடுகிறது.

அகநானூறு, சீரும் சிறப்பும் இல்லாத சிற்றூரில் வறுமையால் வாழும் பெண்களின் ஒற்றைப் பசு கட்டப்பட்ட தூண் கொண்ட முகப்பினையுடைய புல்வேய்ந்த குடிசையான வறிய இல்லத்தில் சிலம்பினைக் கழித்து அவனை மணஞ்செய்து கொண்டாளோ? அதனை எண்ணித்தான் யான் பெரிதும் வருந்துகின்றேன் (அகம். 369), செவிலித் தாயின் கையகத்திருந்த மெல்லிய நடையினை யுடைய என் புதல்வனை நோக்கி நீவிர் நம் அழகியரான பரத்தையர்க்குப் பொருந்தியவர் ஆவீர்; இதோ இந்தச் செல்வனாகிய பிள்ளைக்குத் தாயாவதற்கே நாங்கள் பொருந்தியவர்கள் ஆவோம் என்று கூறி என் மகனிடத்து மெதுவாகச் சென்றேன் (அகம். 26) என்று கூறுகின்றது.

சிறந்த இலக்கியப் படைப்பில் கரு, கதை மாந்தர்கள் உரு, அழகு அமைதி, அளவு போன்றவை காணக் கிடக்கின்றன. இவற்றுள் கரு மிக முக்கியமானது என்றும் அதுவே உயிர்போன்றது என்றும் கூறுவார் அவர். அவருடைய ஆய்வும் எண்ணங்களும் கிரேக்க யாப்பிலக்கண, அலங்காரத்துறைக்கு அழகும் மெருகும் ஊட்டின எனக் கருதலாம். அவருடைய எண்ணத்தின் அடிப் படையில்தான் ஹொராஸ் தன்னுடைய கொள்கை களை வகுத்தார் (ச. அகத்தியலிங்கம், 2000 : 56).

தோழி, தலைவனை நோக்கி, நீ உன் மனைவி மக்களைப் பிரிந்து பரத்தையர் வீட்டிலேயே வாழ்ந்து கொண்டிருந்தாய். நீ உன் மனைவி மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தாய். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஊரார் உன் பரத்தமை வாழ்க்கையைப் பற்றி ஊர் முழுவதும் அலர் மொழிகளைப் பேசுகின்றனர். உன் பண்பு நலன்களைப் பற்றி இழிவாகப் பேசு கின்றனர். அத்துன்பத்தை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே, எமக்குத் துன்பம் தருமாறு ஊரார் பேசும் பழிமொழி களோடு, எமது தெருவிற்கு இனி வராதீர். நீ பரத்தையர் வீட்டிலேயே இன்பமாக வாழ்வீராக எனக் கூறுகிறாள். ஒரு செவ்வியல் தன்மை கொண்ட இலக்கியத்தில் தான், செவ்வியல் பண்புகள் கொண்ட பாடல்களைப் படைக்க முடியும். அதில்தான் எல்லாக் கருத்துக்களையும் நேரடி யாகவும் மறைமுகமாகவும் கூறமுடியும். அக் கருத்துக்கள் யாவும், எத்தலைமுறைக்கும் நிலை பேறு கொண்ட கருத்துக்களாகவும் நிலைபேறு கொண்ட இலக்கியங்களாகவும் திகழும் என்பதை,

மனைஉறை கோழிக் குறுங்காற் பேடை

வேலி வெருகினம் மாலை உற்றெனப்

புகும்இடன் அறியாது தொகுபுஉடன் குழீஇய

பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்கு

இன்னாது இசைக்கும் அம்பலொடு

வாரல், வாழியர்! ஐயஎம் தெருவே (குறு. 139)

என்ற பாடல் உணர்த்துகிறது. காட்டுப் பூனைக் கூட்டத்திற்கு அஞ்சிய தன் குஞ்சுகளைக் காப்பாற்ற, கோழி கத்துகிறது. பரத்தையரால் கைக்கொள்ளப் பட்ட தலைவனைத் தங்கள் தெருவில் பார்த்ததும், ஊரார் பழிமொழிகளைப் பேசுகின்றனர். எனவே, எம் தெருவுக்கு முற்றிலும் வாராது பரத்தையர் வீட்டிலேயே இரும் எனத் தோழி தலைவனை நோக்கிக் கூறுகிறாள். தோழி, தலைவி படும் துன்பத்தைத் தான் படும் துன்பமாகக் கருது

கிறாள். தலைவி தன் தலைவனிடம் பேசவேண்டிய அனைத்துப் பேச்சுக்களையும், தோழியே தலைவியின் பொருட்டுத் தலைவனிடம் பேசிவிடுகிறாள். தோழி, தலைவியின் கணவனை உரிமையோடு கண்டிக்கிறாள். தோழி, தலைவனுக்கு அவன் மனைவியின் துன்பத்தையும், குழந்தைகளின் வேதனைகளையும் சுட்டிக்காட்டுகிறாள். இதில், தோழி தலைவியின் குடும்பத்தை ஒன்று சேர்க்க நினைக்கிறாள் என்பதை உணரமுடிகிறது. அவள், தலைவனுக்குத் தன் மனைவி குழந்தைகள் மீது பற்றுவரத் திட்டம் தீட்டுகிறாள் என்பதை இதில் அறியமுடிகிறது.

இதனைத் தொல்காப்பியம், நீத்த கிழவனை நிகழுமாறு படீஇக்... காத்த தன்மையின் கண்ணின்று பெயர்த்தல் (தொல். கற்பு. 9) என்று உணர்த்துகிறது. சங்க இலக்கியம், மனைஉறை தோழியொடு (பெரும்பாண். 299), குவியடி வெருகின் பைங்கண் ஏற்றை... நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்... புல்லென் மாலையும் (அகம். 367), ஊர் முதுவேலிப் பார்நடை வெருகின்... இருட்பகை வெரீஇய நாகிளம் பேடை... உயிர் நடுக்குற்றுப் புலாவிட்டு அரற்ற ஊர் முது வேலிப் பார்நடை வெருகின்... இருட்பகை வெரீஇய நாகிளம் பேடை... உயிர் நடுக்குற்றுப் புலாவிட்டு அரற்ற (புறம். 326), நின்வெங் காதலி தழீஇ நெருநை... ஆடினை என்ப புனலே அலரே... மறைத்தல். ஒல்லுமோ மகிழ்ந... புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே (ஐங். 71) என்று உரைக்கிறது.

குறுந்தொகையில், ஒளி மிக்க வளையணிந்த மகளிர் ‘வண்டல்’ என்னும் விளையாட்டைக் கொண்டாடும் நொண்டி போன்ற என் பெண்மை நலத்தைத் தந்துவிட்டு, நின் சத்தியம் செய்த சூளைத் திரும்பக் கொண்டு செல்வாயாக. உன் சூளுரைகளுக்கு நாங்கள் மயங்கோம் (குறு. 238), பகைவருக்கு நரகம் போன்ற வாளை பெற்றுள்ள வனும் இளம் மறவர்களுக்குத் தலைவனுமாகிய அழிசி என்பானது ஆர்க்காடு எனும் நகரைப் போன்ற இவளது குற்றமற்ற மாட்சிமிக்க பேரழகு அழிதலைக் கண்டு எம் ஊரில் அலர் மிகுகின்றது. அதனால் இனி என் சேரிப் பக்கம் வராதீர். உம் மாலையை எமக்குத் தராதீர் (குறு. 258), பரத்தை யரின் நலனை உண்டு, அவர்களைத் துறந்து வரும் நீ அவர்களிடம் கூறிய நின் சூளுறவைப் போல எம்மிடம் கூறுகிற உனது சூளுறவு மிக நன்றாக இருந்தது. ஆனால் நம்பத் தான் முடியவில்லை (குறு. 384) எனக் கூறுவதை இங்கு உணர முடி கின்றது. செவ்வியன்மை (Classism) என்ற சொல் பழமையைக் குறிக்கும் எனின் தமிழ் மொழியும் கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம், ஹீப்ரு ஆகிய மொழிகளைப் போலவே மிகப் பழைமை வாய்ந்தது; செவ்வியன்மை கொண்டது. கி.மு. மூன்றாவது நூற்றாண்டு முதலே சிறந்த இலக்கிய இலக்கணப் பெரும் பாரம்பரியத்தைப் பெற்றுப் பெருமை கொண்ட மொழி. கிரேக்க மொழிச் செவ்வியல் இலக்கியங்கள் கி.மு. ஐந்தாவது நூற்றாண்டுக்கும் கி.மு. நான்காவது நூற்றாண்டுக்கும் இடைப் பட்டவை. ரோமச் செவ்வியல் இலக்கியங்கள் கி.மு. 70க்கும் கி.பி. 18க்கும் இடைப்பட்டவை. சமஸ்கிருதச் செவ்வியல் இலக்கியங்கள் கி.மு. 500க்கும் கி.பி. 1000க்கும் இடைப்பட்டவை. சங்க இலக்கியங்கள் கி.மு. 2, கி.பி. 1ஆம் நூற்றாண்டு களுக்கும் இடைப்பட்டவை எனக் கருதலாம் (ச. அகத்தியலிங்கம், 2000: 80-81).

சங்க இலக்கியங்கள் ஒரு பரந்துபட்ட இலக்கியப் பரப்பாகும். முதிர்ந்த ஒரு மொழியின், கனிந்த ஒரு மக்கள் வாழ்க்கையின் பிரதிபலிப் பாகும். இலத்தீன் இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழில் இலக்கியங்கள் (தொல்காப்பியம்) தோன்றிவிட்டன. கி.மு. மூன்றாவது நூற்றாண்டில் ரோம் ஒரு பேரரசாக விரிந்த நிலையில் கிளை மொழிகள் பல இருந்தன. (அகத்தியலிங்கம். 1968. 55).

ஆனால் தமிழ் மொழியோ கி.மு. மூன்றாவது நூற்றாண்டிற்கு முன்பே நிலை மொழியொன்றை (Standard Language) தோற்றுவித்துவிட்டது. பல கிளை மொழிகள் இருந்திருப்பினும் (சண்முகம், 1989: 99; சீனிவாச வர்மா, 1986. ப. 121) செந்

தமிழ் என்றழைக்கப்பட்ட நிலைமொழியை அது முன்னரே பெற்றுவிட்டது. இதனைத் தொல் காப்பியம் நன்குக் காட்டும். “செந்தமிழ் நிலத்து வழக்கு” (சொல். 392), “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்” (சொல். 394) போன்ற இடங்களில் செந் தமிழ் என்ற சொல் நிலைமொழியையே குறிக்கும். இது போன்றே தொல்காப்பியப் பாயிரத்திலும் “செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்” எனக் குறிப் பிடப்படுவதும் உணரத்தக்கது.

எனவே பழை மையைப் பொறுத்தமட்டில் தமிழ் மொழியும் தமிழ் இலக்கியங்களும் செவ் வியல் மொழிகள் எனக் கருதப்படும் மொழி களுக்கு எந்த விதத்திலும் குறைபாடு உடையன அல்ல. இந்நிலையில் இதன் அடிப்படையில் சங்க இலக்கியங்களைக் கொண்டும் தொல்காப்பியத்தைக் கொண்டும் தமிழ் மொழியை ஒரு செவ்வியல் மொழியாகக் கருதுவதில் தவறு எதுவும் இல்லை. பழைமையான மொழி; பழைமையான, தரமான இலக்கியம் என இரண்டு நிலை யிலும் இத் தகுதியைத் தமிழ் மொழி பெற்று விடுகின்றது. மேலும் இது இன்னும் மக்களிடையே வாழும் மொழியாகவும் உள்ளது (ச. அகத்தியலிங்கம், 2000: 81-82). செவ்யில் இலக்கியங்கள் எந்த மொழி யிலும் அல்லது எந்த நாட்டிலும் திடீர் எனத் தோன்றுவதில்லை என்பதைப் பலரும் பலவாறு கூறியுள்ளனர்.

இதுபற்றிக் கூறும் (எலியட் (1979: 54-58)) பண்பட்ட மொழிகளின் பண்பட்ட காலத்தில் பண்பட்ட ஆசிரியர்களின் வாயிலாகத்தான் செவ் வியல் இலக்கியங்கள் தோன்றுகின்றன என்பார். எனவே செவ்வியல் இலக்கியங்களின் தோற்றத் திற்கு இந்தப் பண்பட்ட பக்குவம் (maturity) மிக மிக முக்கியமாகும். உலக இலக்கிய வரலாறுகள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தால் இந்த உண்மை நன்கு விளங்கும். எந்த மொழிச் செவ்வியல் இலக் கியங்களையும் அவை தோன்றிய காலத்தையும் எடுத்து நோக்கின் இவ்வுண்மை நன்குத் தெரிய வரும். கிரேக்க இலக்கியங்களாயினும் அல்லது இலத்தீன் இலக்கியங்களாயினும் அல்லது பிற இலக்கியங்களாயினும் இத்தன்மையனவே. மொழி நிலை, மக்களின் பண்பு, அவர்களின் மனப்பக்குவம், செம்மாந்த எண்ணங்கள், சிறந்த கொள்கைகள், கோட்பாடுகள் பக்குவம் அடைந்த பரந்த உள்ளம், அகன்ற பார்வை, ஆழமான நோக்கு, உலகம் தழுவிய உயர்ந்த பொதுமை, கண்ணியம், கட்டுப் பாடு, இனம் காணும் இதயம், இணைத்து நிற்கும் பண்பு, தெளிவு, தேற்றம் போன்ற இன்னோரன்ன வற்றில் எல்லாம் ஒரு பக்குவநிலை இருத்தல் வேண்டும். மொழி வளர்ச்சியில் ஒரு பக்குவ நிலையும் எதையும் எடுத்துக் கூறுவதற்குரிய வளமும் வன்மையும், நெளிவு சுழிவுகளும், லாவகமும் ஒரு மொழிக்கு இல்லையாயின் அதில் தோன்றும் எந்த இலக்கியமும் செவ்வியல் இலக்கிய மாக இருக்க முடியாது. இது போன்றே மொழியில் பக்குவம் இருந்து ஆசிரியனிடம் பக்குவமும், கனிவும், பரந்த நோக்கமும், சிறந்த எண்ணமும் ‘செம்மாந்த நோக்கும்’ சீரிய உள்ளமும் இல்லை யேல் அவனால் ஆக்கப்படும் இலக்கியமும் செவ் வியல் இலக்கியமாக இருக்கமுடியாது.

இந் நிலையில் தமிழ் மொழி சங்க காலத்தில் பக்குவம் பெற்ற மொழியாக இருந்ததை நாம் அறிவோம். இதனைத் தொல்காப்பியர் செந்தமிழ் என்றார். நாட்டைச் செந்தமிழ் நிலம் என்றார். இது பற்றிக் கூறும் வின்ஸ்லோ மிகத் தெளிவாகக் கவிதை மொழி (“in its Poetic form”) எனக் கூறுவதும் அதைத் தொடர்ந்து பண்பட்டது; ஒளிபொருந்தியது (“Polished”) எனக் கூறுவதும் கவனிக்கத்தக்கவை. இது போன்றே சங்க காலமும் ஒரு பண்பட்ட காலம் என்பதையும் நாம் உணர்தல் வேண்டும். ஆன்றோர்களும் சான்றோர்களும் வாழ்ந்த

காலம் அது. ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்கள்; ‘ஆன்றோள் கணவ’ போன்ற பல இடங்களிலும் வரும் ஆன்றவிந்து வாழும் பெண்கள், ‘குடிபழிதூற்றும் கோலேனாகுக’ என்று வஞ்சினம் கூறும் வளமார் மன்னர்கள் இனோரன்ன மக்கள் வாழ்ந்த காலம் அது. இந்நிலையில் செவ்வியல் இலக்கியங்கள் தோன்றுவதற்கும் வாழ்வதற்கும் உரிய வளமான காலம் அது என்று சொன்னால் மிகையாகாது. காலம் கலைஞர்களை உருவாக்கு கிறது; கவிஞர்களை உருவாக்குகிறது; பாலை வனத்தில் சோலைவனத்தைக் காண முடியாது; பாழுங் கிணற்றில் கொப்புளிக்கும் பளிங்கு போன்ற தண்ணீரைப் பார்க்க முடியாது. இந்நிலையில் சங்க காலம் செவ்வியல் இலக்கியங்கள் தோன்று வதற்கு எல்லா நிலையிலும் பண்பட்ட, பக்குவ மான காலம் (ச. அகத்தியலிங்கம், 2000: 82-84).

தோழி, தலைவனிடத்தில் தலைவியால் இனி உன் பரத்தமை பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாது. அவள் மிகுந்த வேதனையோடு இருக் கிறாள். நீரில் நீண்ட நேரம் ஆடினால் கண் சிவந்து போகும். திரும்பத் திரும்பத் தேனை உண்டால், அங்ஙனம் உண்டவர் தம் வாயில் அத்தேனும் புளிக்கும். நீ எம்மை முற்றும் பிரிந்தாயாயின், அழகிய தண்ணிய பொய்கையையுடைய என் தந்தையினதாகிய எமது ஊரில், கடிய பாம்புகள் திரியும் தெருவில் முன்பு களவில் வந்து எமது நடுங்கும்படியான கடும் துன்பத்தைக் களைந்த நீ, இப்போது அதே தெருவில் எமது வீட்டில் கொண்டு போய் எம்மை விட்டு விடுவாயாக. நீ செய்கின்ற கொடுமையைத் தலைவியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று தோழி தலைவனுக்குக் கூறுகிறாள் என்பதை,

நீர்நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்

ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்

தணந்தனை யாயின்எம் இல்உய்த்துக் கொடுமோ

அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க்

கடும்பாம்பு வழங்கும் தெருவில்

நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே          (குறு. 354)

என்ற பாடல் வழி அறியமுடிகிறது.

தோழி, தலை வனுக்கு எம் தலைவியை அவள் வீட்டிற்குக் கொண்டுபோய் விட்டு விடு என்று இடித்துரைக்கிறாள். நீ பரத்தையர் வீட்டில் சென்று வாழ்வதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. எங்களுடைய சுற்றத்தாரும் மனவேதனையில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் அமைதியின்றி வாழ் கின்றனர். நீ பரத்தையர் வீட்டை உன்னுடைய வீடாகக் கருதி அங்கேயே இருந்து விடு. தலைவியை அவள் தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடு என்று தோழி தலைவனை நோக்கிக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இதனை இளம் பூரணர், கிழவனை மகடூஉப் புலம்பு பெரி தாகலின்... அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் (தொல். கற்பு. 6) என்று சுட்டிக் காட்டுகிறார்.

நச்சினார்க்கினியர், தேன் உண்டு இன்சுவை நிகழ்ந்த காலத்தே... புளிச்சுவை நிகழுமாறு போல் (சீவகசிந்தா. 2382) என்று சான்று காட்டு கிறார். சங்க இலக்கியம், நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்... தை இத் தண்கயம் போலப்... பலர் படிந்துண்ணும் நின்பரத்தை மார்பே (ஐங். 84), நள்ளென் கங்குல் நடுங்கும் துணையாயவர் நின்மறந்து உறைதல்யாவது (அகம். 129), ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ (குறு. 176), நீத்தம் அரிமதர் மழைக்கண் சிவப்ப ஆடுகம் வம்மோ (அகம். 312) என்று குறிப்பிடுகின்றது.

தலைவன், தோழியைப் பல நாட்களாக வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பொருட்டு,

உன் வேண்டுகோளுக்குத் தலைவி உடன்பட்டு விட்டாள். இனியும் நீ பரத்தையர் வீட்டிற்குச் செல்லக் கூடாது. நீ பரத்தையரை மறந்து விட வேண்டும். நீ பரத்தையரோடு தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது எனத் தோழி தலைவனைக் கேட்டுக் கொள்கிறாள். மகரந்தத் தூள்கள், தங்கள் உடம்பெல்லாம் படும்படி, உழவர்கள் வளைத்த கமழும் பூக்கள் நிறைந்த மெல்லிய கிளைகளைக் கொண்ட காஞ்சி மரங்கள் நிற்கும் மருத நிலத் தலைவன் பரத்தையொழுக்கமுடையவன். அங்ஙன மாகவும் நம் தலைவி அவனது கொடிய அவ் ஒழுக்கத்தை மறைத்து வாழ்ந்து வருபளாதலின், இப்போது அப்பரத்தை வீட்டிலிருந்து வரும் அவன் வெட்கப்படும்படி அவனை ஏற்றுக் கொள்ள முன் வருகின்றாள். உண்மையில் இவள் தாய் போலும் பெருமையுடையவளே என்று தோழி தலைவனுக்குக் கூறுகிறாள் என்பதை,

யாய்ஆ கியளே விழவுமுத லாட்டி

பயறுபோல் இணர பைந்தாது படீஇயர்

உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்

காஞ்சி ஊரன் கொடுமை

கரந்தன ளாகலின் நாணிய வருமே.    (குறு. 10)

என்ற பாடல் உணர்த்துகிறது.

இப்பாடல், பரத்தை வீடு போய் வந்த தலை வனைத் தலைவி ஏற்றுக்கொள்கிறாள் என்று உணர்த்துகிறது. தலைவன், தோழியிடத்தில் தனக்கும் தலைவிக்கும் உள்ள ஊடலைத் தீர்த்து வைக்குமாறு பலமுறை வேண்டிக் கொண்டாலும், அவள் அதனை அப்பொழுதே தீர்த்து வைக்க வில்லை. தோழி, தலைவனைப் பலவாறு சிந்திக்க வைக்கிறாள். அவனைப் பலமுறை அலையவிடு கிறாள். அவனைப் பலமுறை வேண்ட வைக்கிறாள். அவன் செய்த குற்றத்தை உணரவைக்கிறாள். அவன் மீண்டும் பரத்தையர் வீட்டிற்குச் செல்லாத வாறு வாக்குறுதியை வாங்கிக் கொள்கிறாள் என் பதை இங்கு உணரமுடிகிறது. தோழி மனிதநேயச் சிந்தனையோடு இருக்கின்ற காரணத்தினால், மனிதநேயமில்லாத தலைவனைத் திருத்துகிறாள்; அவனை நல்வழிப்பாதைக்கு அழைத்து வருகிறாள்; தலைவனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள ஊடலைத் தீர்த்து வைக்கிறாள்; அவர்களுக்குச் சமாதானத்தை ஏற்படுத்துகிறாள். தோழி, தலைவன் மீண்டும் பரத்தையர் ஒழுக்கத்தை மேற்கொள்ளாமல், அவன்தன் மனைவி மக்களோடு சேர்ந்து வாழ வழி வகுத்துள்ளான் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

இதனை, யாயாகியளே மாஅ, யோளே... கயம்மூழ்கு மகளிர் கண்ணின் மாறும்... தண்ணம் துறைவன் கொடுமை... நம்முன் நாணிக் கரப்பா டும்மே (குறு. 9), நீ எமக்கு இன்னாதன பல செய்யினும் நின் இன்று அமைதல் வல்லா மாறே (குறு. 309), குறுங்கால் காஞ்சிக் கோதை மெல் இணர்ப்... பொன் தகை நுண்தாது உறைப்ப (அகம். 341), காஞ்சித் தாது உக்கன்ன தாது எரு மன்றத்து (கலி. 8), பெய்யாது வைகிய கோதை போலப் பெய்சாயினள் (நற். 11), ஒண் நுதல் மகளிர் ஓங்கு கழிக்குற்ற கண்நேர் ஒப்பின் கமழ் நறு செய்தல் (நற். 283), வகைவரிச் செப்பினுள் வைகிய கோதையேம் (கலி. 68) என்று குறிப் பிடுகின்றது. தொல்காப்பியம், தலைமகளைப் பேணாத ஒழுக்கத்தினால்... நாணிய பொருண் மைக்கண் தோழி கூற்று (தொல். கற்பு. 7), அகம் புகல் மரபில் வாயில்கள் உரைத்தல் (தொல். கற்பு. 11) என்று சுட்டிக்காட்டுகின்றது.

செவ்வியல் இலக்கியம் பற்றிக் கூறுகையில் அதன் பல்வேறு பண்புகள் பற்றி குறித்து நிற்பர் அறிஞர் பெருமக்கள். அவற்றை அடிப்படையாக வைத்துச் சங்க இலக்கியங்கள் எவ்வாறு உள்ளன என எண்ணிப் பார்ப்பது நலம் மிகப் பயக்கும்.

இது பற்றிக் கூறும் அமெரிக்கானா களஞ்சியம் முதலில், “Classism is adherence to the qualities customarily associated with literature, art, architecture and thought of ancient Greece and Rome. It involves excellence, permanence and values based on Greek concept of life (Vol. 7. P. 23)”” எனக் கூறிச் செல்லும்.

பழங்காலக் கிரேக்க, ரோம இலக் கியங்கள், கலை கலாச்சாரம் போன்றவற்றை உள்ளத்தில் வைத்துக் கூறப்பட்டதே இவ்விளக்கம். பல்வேறு பண்புகளில் இங்கே கூறப்படும். 1. மகோன்னதமான ஒரு மேம்பாடு. (Excellence) 2. செம்மாந்த குறிக் கோள் (Value) 3. சிறந்த ஒரு நிலைபேறு (Permanence) என்ற மூன்றின் அடிப்படையிலும் சிறந்து விளங்கும் இலக்கியங்கள் செவ்விலக்கியங்களாகும். கிரேக்க சமுதாயத்தை வைத்து ஆக்கப்பட்ட நிலையில் அவர்களது வாழ்க்கைத் தத்துவத்தை அடிப்படை யாகக் கொண்டு அதனை உண்மையாகப் பிரதி பலிக்கும் இலக்கியங்கள் செவ்வியல் இலக்கி யங்கள் என்று கூறினர். இங்கே பழைமை, மேம் பாடு, நிலைபேறு, குறிக்கோள், நல்ல வாழ்க்கையின் பிரதிபலிப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. செவ் வியல் இலக்கியங்கள் மிகப் பழைமை பெற்றதாக இருத்தல் வேண்டும். பழைமையான மக்களின் வாழ்க்கையை, வாழ்க்கைக் கொள்கைகளை அடிப் படையாகக் கொண்டு அவற்றைப் பிரதிபலித்து நிற்றல் வேண்டும். மேலும் இவை செம்மையும் சிறப்பும் பெற்றுத் தலைசிறந்த கொள்கைகளைச் சுட்டிக் காட்டும் பண்புடைத்தாய் வாழையடி வாழையாக வாழும் பேறு பெற்று விளங்க வேண்டும் எனக் கருதலாம் (ச.அகத்தியலிங்கம், 2000: 85-86).

அவன், அது தவறு என்று மனம் தெளிந்தான். அவன் பரத்தையை விட்டு மீண்டு வந்து தலைவி யோடு கூடி வாழ்ந்தான். அப்போது, அவன் தோழியோடு உரையாடி, தான் பரத்தையோடு வாழ்ந்தபோது நீங்கள் என்ன நினைத்தீர்கள்? என்று வினாவினான். அதற்குத் தோழி தாய்மைத் தன்மை பொருந்திய தலைவி, ஆதன்வாழ்க அவினி வாழ்க என்று மன்னனை வாழ்த்தினாள். நெல் மிகுதியாக விளைக. பொன் மிகவும் உண்டாகுக என்று இல்லற நினைப்பையே வெளிப்படுத்தி வாழ்த்தினாள். தோழியாகிய நான், அரும்புகள் நிறைய உடைய காஞ்சியும் சினையை உடைய சிறுமீன்களும் நிறைந்த ஊரன் வாழ்க. அவனுக்குத் துணையாக விளங்கும் பாணனும் வாழ்க என விரும்பினேன் (ஐங். 1) என்று கூறுகிறாள்.

தலைவன் உயர்ந்த தலைவியையும், தாழ்ந்த பொதுமகளையும், ஒன்றாகக் கருதினான் என்று தோழி, அவனுக்கு தான் செய்த தவறைச் சுட்டிக் காட்டுகிறாள். இதன் மூலம் தோழி சமூகத்திற்கு மனிதநேயச் சிந்தனையைப் புலப்படுத்துகிறாள். அவள் சமூக மக்கள் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என விளக்கிக் காட்டுகிறாள். இதனை ஐங்குறுநூறு, விதைப்பதற்குச் சென்ற உழவர் முன்பே விளைந்த நெல்லோடு திரும்பும் பூக்கள் நிறைந்த ஊரான் தலைவன். அவன் பரத்தை ஒழுக்கம் நீங்கித் தலைவியின் மனையிலேயே வாழ்வானாக என நான் விரும்பினேன் (ஐங். 3).

நான், பூத்தும் பயன்படாக் கரும்பும், காய்த்துப் பயன்படும் நெல்லும் ஒருசேர விளையும் வயல் களை உடைய ஊரனுடைய மார்பு பொதுநிலம் ஆகாது ஒழியு மாக என விரும்பினேன் (ஐங். 4).

நான் தன்னுடன் வாழும் பெரிய மீனை முதலைப் போத்து தின்கின்ற நீர்த்துறை உடைய தலைவனது தேர் எங்கள் வீட்டில் வாயில் முன் நிற்க என்று விரும்பினேன் (ஐங். 5) என்று குறிப் பிடுகின்றது.

தோழி அறநெறிச் சிந்தனையோடு சிந்திக் கின்ற காரணத்தினால்தான், தலைவியின் வாழ்வு சிறந்து விளங்க வேண்டும்; அவளுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்கள் நீங்க வேண்டும்; அவளுக்கு நிகழ்ந் துள்ள இடர்பாடுகள் விலக வேண்டும்; அவள்தன் கணவனோடு இணைந்து வாழ வேண்டும் என்று எண்ணுகிறாள். தோழி தன் வாழ்வைப் பற்றி நினைக்காமல், தன் தலைவியின் வாழ்வைப் பற்றி நினைத்திருக்கிறாள். அவள், தன் தலைவியின் வாழ்வு சிறந்து விளங்க வேண்டும் என்று பெரிதும் பாடுபட்டிருக்கிறாள் என்பது குறிப்பிடப்படுகிறது. சங்க இலக்கியப் பரத்தையர் பிரிவுப் பாடல்களில் மானுடவியல் சிந்தனைகள் மிகுந்து காணப்பட்டு உள்ளன. தோழி, தலைமக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும்; தலைவன் தன் மனைவியோடு சேர்ந்து வாழவேண்டும்; அவன் பரத்தமை ஒழுக்கத்தில் ஈடுபடக்கூடாது; அவன் தன் மனைவியோடு இல்லற வாழ்க்கையில் ஈடுபட வேண்டும்; அவன் தன் மனைவி மக்களைப் பேணிக் காக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறாள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைவன் தன் மனைவி மக்களைப் பிரிந்து, பரத்தையர் இடத்தில் செல்கின்ற போதுகூட, தோழி அவனைக் கண்டித்திருக்கிறாள். தலைவன், பரத்தையர் வாழ்க்கை விலக்கி வந்த பின்னர் கூட, தோழி அவனுக்கு அறிவுரை கூறியிருக்கிறாள். அவன், அவனுக்கு அது தகாத வாழ்க்கை எனச் சுட்டிக்காட்டியிருக்கிறாள். தலைவன் மனம் திருந்தி வந்தவுடன் தோழி, அவனுக்குத் தன் குடும்பச் சூழல்களையும், தன் மனைவி மக்களின் சூழ்நிலைகளையும் விளக்கியிருக்கிறாள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. தோழி, தலைவனுக்குப் பரத்தையர் வாழ்க்கையே வாழ்க்கை அல்ல; இல்லற வாழ்க்கையே வாழ்க்கை; அதுவே சமூகம் போற்றுகின்ற வாழ்க்கை என உணர்த்தியிருக் கிறாள். இப்பாடல்கள், மேலை நாட்டுப் பாடல் களைக் காட்டிலும், கருத்துருவாக்கத்திலும், பொதுமைப் பண்புகளிலும் சிறந்து விளங்கி இருக்கின்றன.

Pin It