அறிவியல் வளராத காலத்தில் உருவான தமிழ் இலக்கியங்களில் மூடநம்பிக்கைகள் இருந்தது என்பதை ஒப்புக் கொள்ளாமல் அதைப் பெருமைப்படுத்துவது என்ன நியாயம் என்ற கேள்வியை எழுப்புவதோடு உ.வே.சாமிநாதய்யரின் உரைகளில் திணிக்கப்பட்ட பார்ப்பனியத்தையும் சுட்டிக்காட்டுகிறது இந்தக் கட்டுரை.
வானில் தோன்றும் நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்றவை மனிதகுல வாழ்வில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன எனும் நம்பிக்கை தமிழரிடையே நிறையவே உண்டு. தீய நிமித்தங்களுக்கும் வானில் ஏற்படும் நிலைகள் தாம் காரணிகள் என்று தமிழர் அஞ்சினர். இதனைக் கணித்துக் கூறும் ஆண்கள் கணியன் என்றழைக்கப்பட்டனர். அக்கலை அய்ந்திரம் எனப்பட்டது. அதுவே பஞ்சாங்கம் என இன்று அழைக்கப்படுகிறது. மேலை நாடுகளில் அது ALMANAC எனப்படுகிறது.
ஆனால், மேலை நாடுகளுக்கும் இந்திய நாட்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் மேலை நாட்டுப் பஞ்சாங்கம் ஒன்றே ஒன்று. இந்திய நாட்டில் பஞ்சாங்கங்கள் மொத்தம் எட்டு. தமிழ்நாட்டில் பஞ்சாங்கம் இரண்டு. சுத்த வாக்கியப் பஞ்சாங்கம், எண் கணிதப் பஞ்சாங்கம் என இரண்டு உள்ளன. அதிலும் தனித்து விளங்குபவர் தமிழர்.
மினுக் மினுக் என மின்னுபவை விண்மீன்கள் (நட்சத்திரங்கள்). மின்னாமல் ஒன்றுபோல் ஒளிர்வன கோள்கள் (கிரகங்கள்). இந்த வேறுபாடு பற்றிய அறிவு குறைவாக இருந்ததால் சூரியன் எனும் விண்மீன் கோள் எனக் கருதப்பட்டு ஜோசியம் கூறப்படுகிறது. ஜாதகம் கணிக்கப்படுகிறது. அதுபோலவே, விண்மீனும் அல்லாதுகோளும் அல்லாது துணைக்கோளாக இருக்கும் சந்திரன் கோள் என ஜோசியத்தில் வைக்கப்பட்டு கணக்கிடப்படுகிறது. இல்லாத கோள்களான இராகு, கேது எனப் பெயரிடப்பட்டு நிழல் கிரகங்கள் என்கிறது ஜோசியம். கோள் எனப்படும் இலக்கணம் கொண்ட பூமிக்கோள் ஜோசிய கிரகங்களில் இடம் பெறவில்லை. விண்ணில் இருக்கும் கோள்கள் தமிழ் ஜோசியக் கணக்கில் இடம் பெறவில்லை. இத்தனைக் கோளாறுகளைக் கொண்ட அய்ந்திரம் மனித வாழ்வைக் கணிக்கிறது என்பதை அறிவுடையோர் ஏற்க முடியாது அல்லவா?
விடியலின்போது காணக் கிடைக்கும் விடிவெள்ளி தென்திசைப் பக்கம் தெரியு மானால், மழை பொய்க்கும், வறட்சி ஏற்படும் எனும் நம்பிக்கை தமிழரிடையே இருந்தது என்பதைப் புறநானூற்றுப் பாடல் 35 தெரிவிக்கிறது. வடக்கில் தெரிந்தால் மழை பெய்யும் எனப் பதிற்றுப்பத்து பாடுகிறது (பாடல் 13). வால் நட்சத்திரம் தோன்றினால் மன்னர் மடிவார், பஞ்சம் வரும் என்றெல்லாம் அஞ்சினர். தமிழர் என்பதைப் புறநானூறும் சிலப்பதிகாரமும் கூறுகின்றன. மாபெரும் மன்னர்கள் மடிந்தபோது அப்படி ஏதும் நிகழவில்லை என வரலாறு சுட்டும். திருச்சுழியி லிருந்து திருவண்ணாமலை வந்து மலையடியில் பண்டாரமாக வாழ்ந்த வெங்கட்ரமணன் எனும் பார்ப்பனர் ரமண மகரிஷி என்று ஆக்கப்பட்டு இறந்தபோது வால் நட்சத்திரம் தோன்றியதாகச் சிலர் கதை கட்டினர். அது புளுகு என்பது உடனே தெரிந்துவிட்டது. அந்த ஆள் மகரிஷி அல்லர் என்பதும் தெரிந்துவிட்டது - அவர் பண்டாரவேசம் போட்டுச் சேர்த்த சொத்துக்களைத் தன் தம்பி பெயருக்கு எழுதி வைத்தது பற்றி வழக்கு வந்தபோது, தாம் துறவு கொள்ளவில்லை என்றும் சன்னியாசி அல்லாத சம்சாரி என்றும் வழக்கு மன்றத்தில் வாக்குமூலம் தந்தபோது புளுகு வெளிப்பட்டது.
சூரியன் கிழக்கில்தான் தோன்றும். ஆனால், நான்கு திக்குகளிலும் தோன்றினால் எட்டுத் திக்குகளில் எரிகொள்ளி வீழ்ந்தால் இரவில் வானவில் தோன்றுதல், பகல் இருளு தலும் சூரியனை இருள் கவிதலும் தீ நிமித்தங்கள் எனப் புறநானூறும் சிலப்பதிகாரமும் கூறு கின்றன. வானில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பது பற்றிய அறிவு இல்லாததாலும் அறியாமையினாலும் அச்சத் தினாலும் தமிழர்கள் பயங்கொண்டு இப்படிப்பட்ட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டனர் என்றுதான் கருதவேண்டும்.
எரி நட்சத்திரம் பகலில் விழுவது தெரிந்தால் தீமை என்ற நம்பிக்கை. அதனை உற்கம் எனப் பெயரிட்டு அது நிகழ்ந்தால் விளை பயிர்களுக்குச் சேதம் என நம்பினர். அப்படி எரி நட்சத்திரம் விழுந்த ஏழாம் நாள் யானைச் சாவு, முரசு கிழிதல், வெண்கொற்றக் குடைக் காம்பு கழன்று விழுதல், குதிரைகள் முடங்கிக் கிடத்தல் போன்ற தீச்செயல் நிமித்தங்கள் ஏற்பட்டு இறுதியில் மன்னன் இறந்தான் என்று கூடலூர் கிழார் எனும் புலவர் எழுதிய பாடல் புற நானூற்றில் 229ஆம் பாடலாக வைக்கப்பட் டுள்ளது. என்னே மூடநம்பிக்கை!
உடல் (உருவம்) இல்லாதது எனப் பொருள் தரும் அசரீரி எனும் வடசொல் விண்ணிலிருந்து ஒலிக்கும் குரல் எனும் நம்பிக்கை உண்டு. இதனை அசரீரி என்றே மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது. (மணிமேகலை 16:43-44 வரிகள்). ‘ஒரு குரல்’ எனக் கூறுகிறது சிலப்பதிகாரம். ஆதிரையின் கணவன் சாதுவன் கப்பல் கவிழ்ந்து மாண்டதை அசரீரி கூறியது என மணிமேகலை கூறுகிறது. தன் கணவன் கோவலன் கள்வனா எனக் கண்ணகி கேட்டபோது அதற்கு மறுமொழியாக ஒரு குரல் விண்ணிலிருந்து ஒலித்தது எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இத்தகைய அசரீரி வாக்குக்குக் காரணியாக சூரியனை சிலப்பதிகாரம் குறிப்பிடு கிறது. ஆனால் மணிமேகலையோ ஆகாய வாணியைக் குறிப்பிடுகிறது. புளுகுகளில்கூட ஓர்மை இல்லையே என்பதை உணர வேண்டும்.
நாளும் கோளும்
“நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை” என்பது பழமொழி. “நாள் என்ன செய்யும்? கோள் என்ன செய்யும்?” என்று உரங்கொண்ட மனதுடன் ஒருவன் பாடியதும் உண்டு. “நாள் செய்வதை நல்லோர் செய்யார்” என்று விலா ஒடிந்த ஒருவன் கூறியதும் இங்கு உலவுகிறது. ஆனாலும் ‘தொல்காப்பியம்’ இதிலும் தன் பதிவுகளைக் காட்டியுள்ளது.
சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப்
பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்...
என்று பொருள் அதிகாரம் 88 கூறுகிறது. அந்தப் பாடலிலேயே “அச்சமும் உவகையும் எச்சம் இன்றி, நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்” என்றும் கூறப்படுகிறது. நல்விழாக்கள் போன்றவற்றை நாள் நட்சத்திரம் பார்த்து நடத்தியிருக்கிறார்கள் தமிழர்கள். நிலத்தில் வேளாண்மை செய்வதற்கும்கூட நாள் பார்த்துச் செய்தார்கள் என்பதைப் புறநானூற்றுப் பாடல் 168 கூறுகிறது. அவ்வழக்கங்கள் பல தமிழரிடையே இன்றும் நிலவி வருகின்றன.
நிலத்தில் விதைப்பதற்கே நாளும் கோளும் பார்த்தவர்கள் திருமணம் முதலியவற்றைச் செய்திட நாள் பார்க்காமல் இருப்பார்களா? நாள் பார்த்துத்தான் நிமித்தம் பார்த்துத்தான் திருமணங்கள் நடத்தப்பட்டன என்பதை அகநானூறு பாடல் 136 கூறுகிறது.
புள்ளுப்புணர்ந்து இனியவாகத் தொள்ளொலி அங்கணிருவிசம்பு விளங்கத் திங்கட் சகடமண்டிய துகள்தீர் கூட்டத்துக்
கடிநகர் புனைந்து கடவுள் பேணிப்
படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர்...
என்பது அப்பாடல். உரோகிணி நட்சத்திரமும் சந்திரனும் கூடிய நாள்தான் திருமணத்திற்கான நல்ல நாளாம். பழங்கதைப்படி 27 நட்சத்திரங் களும் சந்திரனின் மனைவியர் ஆவர். அவற்றில் ரோகிணி நட்சத்திரத்திடம் மட்டும் சந்திரனுக்குக் கூடுதல் பிரியமாம். இதனால் பொறாமைப்பட்ட மற்றைய மனைவி நட்சத்திரங்கள் தங்கள் தந்தை தட்சனிடம் புகார் கூறவே அவரும் மருமகனை (சந்திரனை)க் கண்டித்து 27 மனைவிகளிடமும் பாகுபாடு இல்லாமல் நடக்குமாறு கண்டிப்பான அறிவுரை கூறினாராம். அப்படியும் சந்திரன் திருந்தாமல் இருக்கவே, சந்திரனுக்குச் சாபம் இட்டதாம் தட்சன். அதன்படிதான், வளர்பிறை தேய்பிறை ஏற்படுகிறதாம். அறிவியலுக்குப் புறம்பான இப்புளுகுக் கதையின் அடிப்படையில் சந்திரனும் ரோகிணியும் இணையும் நாளை வாழ்க்கை இணையேற்புக்குரிய நாளாகக் கொண்டனர். தமிழர் என்பது பெருமைக் குரியதா? இப்படிப்பட்ட நாளைத் தேர்ந்தெடுத்துதான் கோவலன் கண்ணகியை மாமுது பார்ப்பான் காட்டிய வழிப்படி தீவலம் வந்து வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டான். என்ன நடந்தது? மனைவியைப் பிரிந்து மாதவியுடன் கூடிப் பின்னர் கொலையுண்டு இறந்துபோனான் என்கிறது சிலப்பதிகாரம்! நாள் பார்த்து நடந்தது என்ன ஆயிற்று என்ற சிந்தனை தமிழர்க்கு வரவில்லையே!
நல்ல நாள் எது என்பதைப் பார்ப்பனரைக் கேட்டுச் செயல்பட வேண்டுமென ஆசாரக் கோவை கூறுகிறது.
அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்
அப்பூமி காப்பார்க்குறு கண்ணுமிக்க
நிலந்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை
பார்ப்பார்
இலங்கு நூல் ஓதாதநாள்
(பாடல் 27) என்று திட்டவட்டமாகக் கூறி விட்டது. இது மாதிரியே ‘சிறுபஞ்சமூலம்’ பாடல் 42 கூறும்.
ஆண்டவனாலேயே அனைத்தும் ஆக்கப் பட்டன எனும் தத்துவமும் அனைத்தும் அதனால் ஆட்டுவிக்கப்படுகின்றன எனும் தத்துவமும் சரி என்றால், எல்லா நாள்களும் நல்ல நாளாகத்தானே இருக்க வேண்டும்? மாறானதாக இருக்கும் என்றால் ஆண்டவனின் அதிகாரம் செல்லுபடியாகாத நிலை என்றுதானே பொருள்? இந்தக் கேள்விகள் எதையும் எழுப்பாமல் மவுனமாக மவுடீகத்தில் இருந்து வருகின்றனர் இன்றளவும் தமிழர்கள்.
பல் பிறப்பும் எழு பிறப்பும்
அவரவர் வினைப்படி பிறவிகள் அமைக்கப்படுகின்றன என்பது பிறவிக் கொள்கையின் தத்துவம். பிறப்பு பல என்பதைத் தமிழர் கொண்டிருந்தாலும் ஏனைய உலகப் பெருமதங்களான யூதம், கிறித்துவம், இசுலாம் முதலியவை அதை ஏற்கவில்லை இந்தியா எனும் நிலப்பரப்புக்குரிய மதங்கள் அந்த மண்ணில் தோன்றிய மதங்கள் எனப்படும். இந்து, சமண, பவுத்த, சீக்கிய மதங்கள் போன்றவற்றில் மட்டுமே இக் கொள்கை உள்ளது.
இறந்த பிறப்பினெய்தியவெல்லாம்
பிறந்த பிறப்பிற்காளாயோ நீ...
என்று சிலப்பதிகாரம் பாடுகிறது. இதே கொள்கைதனைப் புறநானூற்றுப் பாடல் 174, அகநானூற்றுப் பாடல் 66 கூறிச் செல்கின்றன. மறுபிறவி மானுடப் பிறவியாகத்தான் இருக்க வேண்டும் என்பது கிடையாதாம். புழுவாகவோ, பூச்சியாகவோகூடப் பிறக்கலாம் என்பதைக்கூட நற்றிணை 397ஆம் பாடல்,
சாதலஞ்சேனஞ்சுவல் சாவிற்
பிறப்புப் பிறிதாகுவதாயின்
மறக்குவேன் கொல்லேன் காதலனெனவே
எனக் கூறுகிறது.
முற்பிறப்பு, மறுபிறப்பு, பல்பிறப்பு, எழு பிறப்பு என்றெல்லாம் தமிழ் இலக்கியங்களில் சொல்லாடல்கள் உள்ளன.
ஏழுபிறப்பும் தீயவைதீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
என்பது திருக்குறள் (62). எழு பிறப்புகள் இன்னின்ன என்று எந்தவொரு நூலும் பட்டியலிட வில்லை. இந்த மானுடப் பிறப்பு எத்தனையாவது பிறப்பு என்றும் ஒருவரும் கூறவில்லை. அவர்களே அறியாத ஒன்றை அவர்கள் எப்படி விளக்க முடியும் என்ற கேள்வி எழுந்தால் சரியே! எழு பிறப்பு என்று வள்ளுவர் எப்படிக் கூறியிருக்கக் கூடும் என எண்ணினால் நம் உறவுமுறைப் பெயர்கள் ஏழு என்பதாக இருப்பதால் இப்படிக் கருதலாம். நமது வழித்தோன்றல்கள் (வாரிசுகள்) ஏழு உறவுப் பெயர்களால் சுட்டப்படுகின்றனர் அல்லவா? மகன், பேரன், கொள்ளுப்பேரன் (அல்லது மகள், பெயர்த்தி, கொள்ளுப் பெயர்த்தி) என நமக்கு வழித்தோன்றல்கள். அதைப் போலவே நாம் நமது தந்தைக்கு, தாத்தாவுக்கு, கொள்ளுத் தாத்தாவுக்கு வழித்தோன்றல்களாக அமை கிறோம். எனவே, நம்மை நடுவில் இருத்தி நமக்கு முன் வாரிசுகள் மூன்று, நமக்குப் பின் வாரிசுகள் மூன்று ஆகக் கூடுதல் ஏழுபேர் - ஏழு பிறப்புகள். இதே மாதிரி உறவுப் பெயர்கள் பிறமொழி களிலும் உண்டு. எனவே, ஏழு பிறப்பும் ஏமாப் புடைத்து எனும்போது இந்தத் தலைமுறை யினரைக் குறிப்பது என்றே கொள்ளலாம்.
முக்தி என வடமொழியிலும் வீடுபேறு என்று தமிழிலும் கூறப்படுவதைப் பல தமிழ் இலக்கியங்கள் கூறினாலும் திருக்குறள் அதனைப் பாடவில்லை. அறம், பொருள், இன்பம் என முப்பாலோடு நிறுத்தி அதற்கு அப்பால் போகாதவர் திருவள்ளுவர்! வீடுபேறு என்பதையோ, துறக்கம் (சுவர்க்கம்), நிரையம் (நரகம்) என்பவற்றைக் கண்டவர் எவருமிலர். காணாததைக் கண்டவர் போலப் பலர் கதையளந்தனர். அந்தப் பட்டியலில் இடம் பெறத் திருவள்ளுவர் மனந்தரவில்லை போலும்.
இத்தனைப் பிறவிகள்தான் ஓர் உயிர் எடுக்க உச்சவரம்பு என்று எந்த மதமும் கூறவில்லை. சுவர்க்கத்தில் இடம் பெறவோ நரகத்தில் உழலவோ இத்தனைப் பிறவிகளை முடித்திருக்க வேண்டும் என்கிற விதி இல்லாத நிலையில், இனிப் பிறவாமை எனும் முக்தி எப்படிக் கிட்டும்? எப்போது கிட்டும்? இதற்கு வள்ளுவர் நீங்கிய மற்றைய இலக்கிய கர்த்தாக்கள் மறுமொழியோ, விளக்கமோ தரவில்லை. ஆனால் இனிப் பிறவாமை வேண்டும் எனும் பல்லவியைப் பலபேரும் பாடிக்கொண்டே இப்பிறவியைத் துய்த்திருந்திருக்கின்றனர். இந்நிலையில் ஒருவர் முக்தியை மிகச் சுலபமாக அடையும் வழியைப் பாடிவிட்டார்.
ஆரூரில் பிறக்க முக்தி - காசியில்
இறக்க முக்தி - தில்லையைக்
காண முக்தி - எல்லையிற் பெரிதாம்
அருணையை நினைக்கவெய்தலால் முக்தி
என்றே கூறிவிட்டார். திருவாரூரில் பிறந்தவர்கள், காசியில் இறந்தவர்கள், சிதம்பரத்தைக் கண்ட வர்கள், திருவண்ணாமலையை நினைத்தவர்கள் என யாவர்க்கும் முக்தி கிடைக்கும் என்றே சொல்லிவிட்டார். அதனால்தான் பலரும் காசிக்குப் போன இடத்தில் கங்கை ஆற்றில் மூழ்கிச் செத்துப் போனால் கவலைப்படு வதில்லை!
தாலி
அழகுக்கு அணிகளை அணிவது என்று ஒரு பழக்கம். அந்த வகையில் புலிப்பல் தாலி அல்லது அய்ம்படைத் தாலி அணிந்து சிறுவர் விளங்கினர். அழகுக்கு என்பதைவிட இயற்கைக் கூறுகளினால் ஏற்படும் ஊறுகளிலிருந்து காத்துக் கொள்ளவே அணியப்பட்டது என்பதே பொருத்தமாகும்.
புலிப்பல் தாலி என்பது புலியின் பல்லைக் கோத்துச் செய்யப்பட்ட அணி என்று உரையாசிரியர் உ.வே.சாமிநாதய்யர் கூறுகிறார். “புறநானூறு மூலமும் பழைய உரையும்” எனும் நூலில் இவ்வாறு எழுதிய இவரே “குறுந்தொகை மூலமும் உரையும்” எனும் நூலில் எழுதும்போது “புலிப்பல் தாலியைத் திருமணத்தாலி எனக் குறிப்பிடுவாரும் உளர்” என எழுதியுள்ளார். அப்படிக் குறிப்பிடப் படுவார் இவர் மட்டுமே. ஏனெனில் தமிழர் திருமணத்தில் தாலி அணிவிக்கப்படும் சடங்கு இடம் பெற்றதாக இலக்கியங்களில் தடயமே இல்லை. பழங்கதையான (புராணம்) கந்த புராணத்தில்தான் முதன்முதலில் தாலி கட்டப்பட்ட செய்தி பேசப்படுகிறது. முருகன் தெய்வானையை மணந்ததாகக் கூறப்படும் கதையில் தெய்வானை கழுத்தில் முருகன் தாலி கட்டியதாகப் புராணம் எழுதிய கச்சியப்ப சிவாச்சாரிதான் எழுதியுள்ளார். புராணம் கட்டுக்கதை என்பதும் கடவுளுக்கே கல்யாணம் என்பது பெருங் கட்டுக்கதை என்பதும் அனைவரும் அறிந்ததே. கந்தபுராணம் 11ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. “இந்தப் புளுகு கந்தபுராணத்திலும் இல்லை” எனும் வழக்குச் சொல் இதன் ‘பெருமை’யைப் பறைசாற்றும். இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் கோவலன்-கண்ணகி திருமணம் விவரிக்கப்படுகிறது. பார்ப்பனப் புரோகிதரின் மறைவழி, தீவலம் வரும் (சப்தபதி) சடங்கு முதலியவை விவரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தாலி கட்டியது பற்றி ஏதும் குறிப்பு இல்லை. மேலும், கோவலன் இறந்த செய்தி கேட்டவுடன் அமங்கலச் சடங்காகக் கண்ணகி தன் கை வளையல்களை உடைத்ததுதுதான் பாடப்பட்டதே தவிர தாலி அகற்றல் பற்றிய பேச்சே இல்லை. எனவே தாலிகட்டுப் பற்றி உ.வே.சா. எழுதியமை வலிந்து திணித்தலே! காரணமும் வெளிப்படையானதுதான்!
புலிப்பல்லைச் சிறுவர் அணிந்திருந்தனர் என்பதை குறுந்தொகை 161ஆம் பாடல் “புலிப்பற்றாலி புதல்வர் புல்லி” எனக் குறிப்பிடு கிறது. அகநானூறு பாடல் 7 சிறுமியர் புலிப்பல் தாலி அணிந்திருந்ததைப் பின்வருமாறு பாடு கிறது.
சின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு
புலிப்பற்கோத்த புலம்பு மணித்தாலி
ஒலிக் குழைச் செலவையுடை மாணல்குல்
ஆய்சனைப் பாலவின் மேய்கலை யுதிர்த்த
துய்த்தலை வெண்காழ் பெறுஉம்
கற்கெழு சிறுகுடிக்கானவன் மகளே.
காட்டில் வசித்த மக்களிடையே இப்பழக்கம் பெரிதும் விளங்கி வந்துள்ளது.
அய்ம்படைத்தாலி என்பது சிறுவர்களின் கழுத்திலணியும் ஓர் அணி எனப் “புறநானூறும் பழைய உரையும்” எனும் நூலில் உ.வே.சா. கூறுகிறார். குழந்தைகளின் காவலுக்காகக் கழுத்தில் பூட்டிய இது, திருமால் எனும் கடவுளுடைய அய்ந்து ஆயுதங்கள் போலப் பொன்னாற் செய்யப்பட்டது என்று அவரே “மணிமேகலை மூலமும் அரும்பதவுரையும்” நூலில் குறித்துள்ளார். திருமால் என்பது காத்தற் கடவுளாம்: படைத்தல், பிரம்மா எனும் கடவுளின் தொழிலாம்; அழித்தல் சிவன் எனும் கடவுளின் தொழிலாம். மூன்று முதன்மைக் கடவுள்களின் தொழில் பிரிவு இவை என்பது இந்துமதம். அதன்படி, திருமாலின் ஆயுதங்கள் சங்கு, சக்கரம், கதை, கட்கம், சார்ங்கம் எனும் அய்ந்தாம். இந்தப் பஞ்சாயுதங்களை “குழந்தை பிறந்த அய்ந்தாம் நாளில் பிள்ளைகளுக்குத் தாரணம் செய்தல் மரபாம். இதற்கான விதிகள் ‘க்ருஹியரத்னம்’ எனும் நூலில் உள்ளனவாம். இதுதான் அய்ம்படைத்தாலி என்றும் உ.வே.சா. கூறுகிறார். பஞ்சாயுதம் (அய்ந்து கருவிகள்) தாரணம் (உறுதி செய்தல்) க்ருஹிய ரத்னம் ஆகியவை தமிழ்ச் சொற்கள் அன்று; வடமொழிச் சொற்கள். எனவே இப் பழக்கமும் வடமொழியாளர்க்கே உரியவை. தமிழர் மீது திணிக்கப்பட்டுள்ளது.
பலியிடுதல்
தம்மீதோ, தம் குடும்பத்தினர் மீதோ கோபம் கொண்டிருக்கும் தெய்வத்தை அமைதிப் படுத்த அதற்குப் பலியிடும் பழக்கம் தமிழரிடையே இருக்கிறது. உயிர்ப்பலி, மலர்ப்பலி என இருவகைப் பலி உண்டு. உயிர்ப்பலியில் பொதுவாக மறி (ஆடு) இடம் பெறுகிறது. இதனை நற்றிணைப் பாடல் 47 தெரிவிக்கிறது.
அணங்கறி கழங்கிற் கோட்டங் காட்டிவெறியென உணர்ந்த வுள்ளமொடு மறியறுத்து அன்னை யயருமுருகுநின் பொன்னேர் பசலைக் குதவா மாறே
எனும் பாடல் வரிகள் இதனைப் பறைசாற்றும். குறுந்தொகைப் பாடல் 362. அகநானூறு பாடல் 242 ஆகியவையும் சான்று பகருகின்றன. ஆட்டை வெட்டிப் பலியிட்டதோடு அதன் குருதியைத் தினையரிசியொடு தடவி மடை கொடுத்ததைகூட அகநானூறுப் பாடல் 22 பின்வருமாறு கூறுகிறது.
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூறக்
களம் நன்கிழைத்துக் கண்ணி குட்டி
வளிநகர் கிலம்பப்பாடிப் பலிகொடுத்து
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
முருகாற்றுப்படுத்த உருகெழு நடுநாள்
என விவரித்துக் கூறுகிறது.
பேயோட்டும் மரபும் சடங்கும் தமிழரிடை காணப்பட்டது. இன்றளவும் காணப்படுகிறது. பேயோட்டும் சடங்கு முடிந்த நிலையில் பேயை ஓட்டிய(?) பூசாரியும் பேய் பிடித்ததாகக் கருதப்பட்ட பெண்ணும் ஆடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். இப்படி ஆடினால், அந்தப் பெண்ணைப் பீடித்த நோயும் பிடித்த பேயும் அகன்றுவிட்டதாகக் கருதுவர். இதனை மதுரைக் காஞ்சி (பாடல் 611-616) எடுத்துக் காட்டும். பேயும் நோயும் பெண்டிரை மட்டுமே பிடித்து ஆட்டியது. ஆட்டுகிறது என்பதைக் கவனிக்கவேண்டும். ஆண்களுக்குப் பேய் பிடிப்பதில்லை. ஏன்? கருப்பை இருப்பவர் களுக்கு மட்டுமே ஏற்படும் ஹிஸ்டீரியா எனும் மனநோய்த் தாக்குதல்தான் பேய்பிடித்தல் என்று கூறப்படுகிறது எனும் மருத்துவ அறிவியல் கருத்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இது மூடநம்பிக்கை என்பது தெளியப்பட வேண்டும்.
யாகங்கள்
வடமொழி யாகம், தமிழில் வேள்வி எனப்படுகிறது. தீ வளர்த்து நெய் சொரிந்து விலங்கு பலியிட்டுத் தெய்வத்தை வணங்கும் வடநூலார் முறையைத் தமிழர்கள் ஏற்றுப் பின்பற்றியுள்ளனர். இவற்றைச் செய்வதன் மூலம், தாம் விரும்பியதை அடையலாம் என்ற நம்பிக்கை குடி கொண்டுள்ளது. இந்த மூடநம்பிக்கை தமிழரிடம் இருந்தது என்பதை அகநானூறு (பாடல் 13)
வள்வாயம்பிற் கோடைப் பொருநன்
பண்ணித்தைஇய பயங்கெழு வேள்வியின்
விழுமிது நிகழ்வதாயினும்...
எனக் கூறுகிறது. பரிபாடல் (19) இதனையே “வேள்வியிழைகியல் விளம்புவோரும்” என்று சுட்டிச் செல்கிறது.
சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை தனக்குக் குழந்தைபேறு வாய்க்க வேண்டும் என்று தன் மனைவியுடன் வேள்வி செய்தான் என்பதைப் பதிற்றுப்பத்து (பாடல் 74) பாடுகிறது.
கேள்வி கேட்டுப் படிவமொடியாது
வேள்வி வேட்டனையுயர்ந்தோ ருவப்ப
.......................................................................................
ஓடுங்கீரோதி யொண்ணுதல் கருவில்
எண்ணியல் முற்றியீரறிவு புரிந்து
சால்புஞ் செம்மையுமுளப்படப் பிறவுங்
காவற்கமைந்த அரசு துறை போகிய
வீறுசால் புதல்வற் பெற்றனை
என்று பாடி வேள்வியின் விளைவாகப் புதல்வனைப் பெற்றாள் என்பதைக் கூறுகிறது. கணவனும் மனைவியும் உடல் உறவு கொண்டு பிள்ளை பெற்றனரா எனும் விளக்கம் இதில் இல்லை. வெறும் வேள்வியே கருவைத் தந்ததா? எனும் அய்யத்திற்கும் விடையில்லை.
வேள்வி செய்தால், சுவர்க்கம் போகலாம் எனும் நம்பிக்கையும் நிலவி இருந்ததை மதுரைக் காஞ்சி “ஆவுதி மண்ணிஅவிர்துகில் முடித்து, மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல” எனக் கூறுகிறது. சுவர்க்க மோசடிக்கு மற்றொரு மோசடி வழிகாட்டுகிறது.
வேள்வியைச் செய்யும் அந்தணர்க்குத் தானமும் கபிலநிறப் பசுவும் அளிக்கப்படல் வேண்டும் என்பது வழக்கமாக இருந்துள்ளது. தொல்காப்பியமும் (பொருள் 86) புறநானூறும் (பாடல் 361) இதனைத் தெரிவிக்கின்றன. எனவே ஆதாயம் கருதி மூடநம்பிக்கை திணிக்கப்பட் டுள்ளது.
நடுகல்
சிறப்பானவர்களின் மறைவுக்குப்பின் அன்னாரது நினைவாக நடப்பட்டது நடுகல் எனப்படுகிறது. “நட்டபோலும் நடாஅ நெடுங்கல்” என்று அகநானூறு (பாடல் 269) குறித்துள்ளது. இது காலப்போக்கில் வழிபடு கல்லாக மாறிப் போனதுதான் கொடுமை. இதுவே ஆவி பற்றிய எண்ணத்திற்கும் ஆவி வழிபாட்டுக்கும் வழிகோலிவிட்டது என்பதைப் புகழ்பெற்ற சமூகவியல் அறிஞர் பிரேசர் கூறுவார்.
ஆண்களுக்கு மட்டுமே நடுகல் நடப் பட்டது. அது அவர்களின் வீரத்தின் நினைவாக எனவும் கூறப்பட்டது. பெண்களுக்கும் நடுகல் என்ற வழக்கம் சிலப்பதிகாரத்தில்தான் காணப்படுகிறது. நாளடைவில் நடுகல் வழிபாட்டு முறை வந்து சேர்ந்தது. இதனை அகநானூறு பாடல் 35 குறித்துள்ளது.
நடுகற் பீலிசூட்டித் துடிப்படுத்து
என்பது இதனைக் குறிக்கும்.
பூலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
என அகநானூறு 67ஆம் பாடல் வரி வழி மொழிகிறது.
நடுங்கற் பீலிசூட்டி நாரரி, சிறுகலத்துகுப்பவுங்
கொள்வன் கொல்லோ
என்ற புறநானூற்று (பாடல் 232) வரிகள் இதை உறுதிப்படுத்தும்.
தமிழர் பழக்கத்தில் தெய்வவழிபாடு நெல்லும் மலரும் கொண்டு நிகழ்த்தப் பெற்றது. அதே முறை நடுகல் வழிபாட்டிலும் கைக் கொள்ளப்பட்டமை புறநானூறு (பாடல் 355), அகநானூறு (பாடல் 343) ஆகியவற்றால் அறியலாம். பெண் ஒருத்தி இல்லறத்தை இன்பமாக்கிட வேண்டி நடுகல்லைக் கும்பிட்ட செய்தியைப் புறநானூறு பாடல் 306 கூறுகிறது.
நடுகல்லைத் தொழுதால் மழைபெய்யும் எனும் நம்பிக்கைக்கூட இருந்துள்ளது. இதனைப் புறநானூறு பாடல் 263 குறிப்பிடுகிறது.
வீரத்தையும் நன்னெறிகளையும் போற்றுவதற்காக நடப்பட்ட கல் நாளடைவில் தெய்வமாக ஆக்கப்பட்டதை அறியலாம். தெய்வங்கள் எந்தெந்த வகைகளில் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கு சக்திகள் எப்படியெல்லாம் கற்பிக்கப்பட்டன என்பதற்கு நடுகல்லே, கல்லுப் போன்ற சான்றாகும்.
(‘விழிகள் பதிப்பகம்’ வெளியிட்ட ‘திராவிடர் கழகம் கட்சி அல்ல; ஒரு புரட்சி இயக்கமே’ என்ற நூலிலிருந்து)