சிதைந்தகாலச்சக்கரத்தின்முன்

கனவுகள் முளைத்திருக்கின்றன

விரல்களுக்குள் கிடைத்திருக்கும்

புத்தக றெக்கைகளைப்பூட்டிக் கொள்ள

வாழ்வினைப் போலகலைந்திருக்கும்

மேகக்கூட்டங்களை மழையாக்கிவிடலாம்

 

வனாந்திரத்தின் மேடாகத்துயரங்கள்

கவிந்த போதும்

இமைப்பீலியின் ஈட்டிகளைக் கொண்டு

பாதத்தில் தைத்த முள்ளை

நிமிண்டுவதைப் போல்அப்புறப்படுத்திவிடலாம்

 

அடர்ந்த கிச்சிலி மர இலைகளென

நிழல் உதிர்க்க வாய்க்காத பாலையில்

நம் வெறுங்கால் சுவடுகள்

சருகுகளாய் திரிந்தலைந்த பொழுதுகளை

குப்பையாய் கூட்டிவைக்கலாம்

 

பசுமலைக்காற்றில் ஆறாத

வியர்வைக் காயங்களை சுமந்த முன்னோர்களின்

பாழடைந்த புராதனக் கனவுகளை

இறகினைப் போலலகுவான

எழுத்து கைகளால் புனரமைக்கலாம்

 

பழைமைப் பாறைகள் மிகைந்த

தரையின்தாக்குதல்களால் நசுங்கிய

நம் காலச்சக்கரத்தின் ஆரங்களை

உயர்த்திவுயர்த்தி காற்றாடியின்

றெக்கைகளாக்கலாம்

 

கழற்றிய செருப்புகளைப் போடு

குத்தவரும் முட்களை நசுக்கலாம்

 

- யாழன் ஆதி

Pin It