எனக்கு வயது 43
கறுத்த நிறம்
பருமனான உடல்
குள்ளமான உருவம்
இருந்தாலென்ன
நான் உள்ளே இருக்க மாட்டேன்
ஏனெனில்
வெளியே மழை
மழையில் கரைகிறது என் வயது
எதைக் காண்பித்தும் திரும்பப் பெற முடியாத
எனது பால்யத்தின் கதவுகள்
மழைத் துளியின் சிறு குமிழை
விரல்நுனி தொட்டதும்
மாய உலகென
திறந்து விரிந்து நீள்கிறது
இங்கும் மழை
மேலும் கீழும் ஆட்டி
மழையோடு விளையாடும் என் கைகளுக்கு
இப்போது வயது பத்து விரல்களுக்குள்
பூச்செண்டு குரலால்
அதட்டி உள்ளே அழைக்கும் அம்மா
கைநிறைய வறுத்த புழுங்கல் அரிசி தருகிறாள்
அப்பா தாழம்பூ வாங்கி வர
சவுரி முடி வைத்து
நுனியில் குஞ்சம் தொங்க
பூச்சடை பின்னிவிடுகிறாள்
பட்டுப் பாவாடை சட்டை
தோடு ஜிமிக்கி வளையல்கள் அணிந்து
தோழிகளோடு தட்டாமலை சுற்றுகிறேன்
வீடுகளும் தெருவும் மலையும்
வானமும் தரையும்
ஒன்றையன்று பற்றியபடி
எங்களோடு சுழல்கின்றன
இன்னும் மழை
முத்துக்களைப் பறித்து
மழைக் கம்பிகளால் கோர்த்து
கால்களில் அணிந்து
குதித்துப் பார்க்கிறேன்
கலீர் என்ற ஒலிக்கு
திடுக்கிட்டு நிற்கிறது மழை
என்னை அடையாளம் கண்டு
மீண்டும் குதூகலிக்கிறது
பால்யத்திடமிருந்து
என்னை விடுவிக்கும்
மந்திரம் அறிவீரோ?
--
ஓடுகளம்
கொஞ்ச நேரம் கழித்து
தானே அழைப்பதாகச் சொல்லி
அலைபேசியைத் துண்டித்தவனின்
தூண்டில் சொற்களில் சிக்கிக் கொண்டு
நீண்ட நேரமாக துடித்தபடி என் மீன்கள்
கொஞ்ச நேரம் கழிந்து
வெகுநேரம் ஆகிவிட்டதை
அவன் உணர்ந்திருப்பானா?
எதிலேனும் சிக்கிக்கொண்டிருந்தாலும்
சோதனை அழைப்புகள்
நிமிடத்திற்கொன்றாய் ஒலிக்க
எனக்கும் அலைபேசிக்கும்
ஓடுகளமாகிறது வீடு
(அலைபேசியை சட்டைப் பையில்
வைத்திருக்கும் பாலினமல்ல என்னுடையது)
மனித முகங்கள் தென்பட நேர்கையில்
விருது பெறத் தகுதிவாய்ந்த நடிப்புகளை
உடலுக்கு அணிவித்து கௌரவிக்கிறது
களவு மனம்
இயக்கு
இயங்கு தசைகளால்
முடையப்பட்ட உடல்
கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விடுங்கள்
ஏற்கனவே
இதில் நிறைய விருதுகள் பெற்றவராகிய நீங்கள்.
--
மயிலிறகு பக்கங்கள்
என் புத்தகத்தில்
ரகசிய பக்கங்கள் என்று எதுவுமில்லை
பால்யத்தில்
ஒளித்து வைத்திருந்த ஒரே ஒரு மயிலிறகு
இப்போது குட்டிபோடத் தொடங்கிவிட்டது
மளமளவென்று
வாங்கி வாங்கி அடுக்க வேண்டும்
நிறைய நிறைய புத்தகங்கள்
பின்னொரு நாள்
நீங்கள் கேள்விப்படக் கூடும்
மயிலிறகுகள் புத்தகங்களான கதைகளையும்
புத்தகங்கள் ஆண்மயிலான கதைகளையும்
ஆண்மயிலுடன் அடர் வனத்திற்குள்
நான் காணாமல் போன கதைகளையும்.