கொஞ்சம் மேல் சாதி துள்ளறான்
அதுக்கும் கொஞ்சம் மேல் சாதி தள்ளறான்
அதுக்கும் கொஞ்சம் மேல் சாதி கொல்லறான்
சாதிக்கு வரையறை கேட்டா வேற என்ன சொல்ல
***
காது கடிக்கும்
கண்கள் படிக்கும்
தோள் ஏறும்
கன்னம் இணுங்கும்
முதுகு சுரண்டும்
கழுத்து கூசும்
கூப்பிய கைகளுக்குள்
எறும்பெனத்தான் பேரன்பு
***
பெருங்கருணை உன் மார்பில்
இருக்கிறது
மடி தவழும் மாற்றான் குழந்தைக்கும்
சுரக்கட்டும்
உன் பெருவெளி தாய்விழி
***
யாருமே இல்லாத இடத்தில் நிற்கிறேன்
வருவதும் போவதும் பற்றிய அக்கறை
இல்லாத எனக்கு மேல்
ஓர் ஒற்றை மரம் மட்டும் இருக்கிறது
கூடவே எறும்பூர புத்தாகி விடுதல் பற்றிய
யோசனை நன்றாக இருக்கிறது
நீங்கள் மனது வைத்தால்
ஒலி எழுப்பாமல் செல்ல முடியும்
***
ஒரு நல்ல காதலனுக்கு
தன்னைத் தானே
மறுதலிக்கத் தெரிந்திருக்க வேண்டும்...
***
மெல்ல கடித்து
பிறை நிலா துப்பும்
உன் கற்கண்டு பற்களில் உள்ளது
நகம் கடித்தலின்
தனிப்பெருங்கருணை
- கவிஜி