பெரியார் இயக்க வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற நாள் நவ. 26, 1957. அன்றுதான் உலக வரலாற்றிலேயே ஒரு நாட்டின் அரசியல் சட்டத்தை அந்நாட்டின் ‘குடிமக்களாக’ அறிவிக்கப்பட்டவர்கள் தீ வைத்து எரித்த நாள். எரித்தவர்கள் 10,000 பேர். கைதானவர்கள் 3,000 பேர். 6 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அந்த போராளிகள், நீதிமன்றத்தில் எதிர் வழக்காடவில்லை. ஜாதியைப் பாதுகாக்கும் இந்த அரசியல் சட்டத்தைக் கொளுத்த எனக்கு முழு உரிமை உண்டு என்று நீதிமன்றங்களில் வாக்குமூலம் அளித்தனர். அந்தப் போராளிகள், “நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்” என்று நீதிபதி முன் நெஞ்சுயர்த்தி கூறினார்கள். அன்றைய சிறைச்சாலை கொடுமை யானது. சட்ட எரிப்பு வீரர்கள் கிரிமினல் கைதிகளாகக் கருதப்பட்டனர். மிக மிக மோசமான உணவு; மோசமான சுகாதாரம்.

சிறைச்சாலைக்குள்ளே உடல்நலம் பாதிக்கப் பட்டு ஜாதி ஒழிப்புக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்கள் 5 பேர். வாளாடி பெரியசாமி (22.12.58), லால்குடி நன்னிமங்கலம் கணேசன் (30.7.58), திருச்சி சின்னசாமி (7.9.58), மணல்மேடு வெள்ளைச்சாமி (9.3.58) ஓய்வு பெற்ற ஆசிரியர் பட்டுக்கோட்டை இராமசாமி (8.3.58) ஜாதி ஒழிப்பு வரலாற்றில் இவர்கள் நிலைத்து நிற்பார்கள். சிறையிலிருந்து விடுதலையான அடுத்த சில நாட்களிலேயே உயிர் ஊசலாட்டத்தோடு வெளிவந்து மரணத்தைத் தழுவியோர் 13 பேர்; ஆக, களப்பலி ஆனோர் 18.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவுகளைக் கடந்து ஜாதி எதிர்ப்பாளர் களாக களம் புகுந்தது, பெரியார் இயக்கத்தின் தனித்துவம். கைதானவர்களில் பெரும் வசதி படைத்தவர்களும், நில உடைமையாளர்களும் சுமார் 500 பேர் இருந்தார்கள். இவர்கள் சிறையில் தங்களுக்காக விசேட சலுகையோ, விசேட வகுப்புகளோ கேட்காமல் மூன்றாம் வகுப்பு கைதிகளாகவே தண்டனையை அனுபவிக்க விரும்பினர். இது இரண்டாவது சிறப்பு. உடல்நிலை பாதிப்பு, குடும்பத்தின் சாவுகள், குடும்ப நெருக்கடிகள் இருந்தும் ஒரு தோழர்கூட பிணை கேட்க முன்வரவில்லை. மன்னிப்பு கேட்டு விடுதலை கோரவும் தயாராக இல்லை. சிறைச் சாலை நிர்வாகம் அத்தகைய அழுத்தங்களை தந்த போதும் இவர்களின் கொள்கை குன்றாக நிமிர்ந்து நின்றது. இந்தப் போராட்டத்தில் 9 மாத தண்டனை பெற்ற பெரியார் இயக்கத்தின் போராளி நாகை பாட்சா, இந்தப் போராட்ட வரலாற்று ஆவணத்துக்கு எழுதிய முன்னுரையில் இவ்வாறு பதிவு செய்தார்.

“தந்தை பெரியார் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படும் நாள் வரை பெரி யாருடைய போராட்டம் அவருடைய சந்ததி யாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது நிறைவேறும்” இது அவர் வெளிப்படுத்திய நம்பிக்கை.

அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. பெரியாரையே பார்த்திடாத இளம் தலைமுறை, அந்த இலட்சியப் போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஜாதிய ஒடுக்குமுறைகளின் வெறியாட்டம் அதன் இறுதி அத்தியாயத்தை எழுதத் துடித்துக் கொண்டிருக்கிறது. சமூகநீதி தத்துவத்தால் பயன் பெற்று சமூக மரியாதையை எட்டியவர்கள் பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதிக்குள் பதுங்கிக் கொண்டு ஜாதி வெறியை தலித் மக்கள் மீது ஏவி விடுகிற அவலங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சமூகச் சூழலில் வரலாற்றின் தொடர்ச்சியாய் களத்தில் நிற்கிறது ‘திராவிடர் விடுதலைக் கழகம்’. பெரியாரின் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை முதன்மையான இலட்சியமாகக் கொண்டு களப் பணியாற்றும் கழகம், “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுதும் இடைவிடாத இயக்கங்களையும் போராட்டக் களங்களையும் முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.

இலக்கு மாறாமல் இந்த இயக்கம் தொடரும். எதிர்ப்புகளை சந்திக்கும் பார்ப்பனிய ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு கல்லறை கட்டும் வரை இது ஓயாது. இதுவே அறிவு ஆசான் பெரியாருக்கும், ஜாதி ஒழிப்பு மாவீரர்களுக்கும் நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கம்!

Pin It