கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

1957 நவம்பர் 26 அன்று ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை தீயிட்டுப் பொசுக்கும் போராட்டத்தை பெரியார் அறிவித்தார். 10,000 கருஞ்சட்டைத் தோழர்கள் எரித்தனர். 3000  பேர் கைது செய்யப்பட்டு 6 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறைபடுத்தப்பட்டனர். எவரும் எதிர் வழக்காடவில்லை.

சட்டத்தை எரித்த ஏராளமான தோழர்களை காவல்துறை கைது செய்யவில்லை. இந்த நிலையில் குடந்தை அருகே சோழபுரம் கிராமத்தில் சட்டத்தை எரித்துவிட்டு காவல்துறை தங்களைக் கைது செய்யாததைக் கண்டித்து கருஞ்சட்டைத் தோழர்கள் அன்றைய உள்துறை அமைச்சருக்கு கடிதமே எழுதியிருக்கிறார்கள். 99 தோழர்கள் இiணைந்து எழுதிய கடிதம் இது. அன்றைய ‘விடுதலை’ நாளேடு வெளியிட்ட செய்தியைக் கீழே தருகிறோம்:

சர்க்காரின் சங்கட நிலைமை !

சட்டம் எரித்த எங்களை ஏன் கைது செய்யவில்லை ?

உள்நாட்டு அமைச்சருக்கு 99 பேர் விடுத்த மனு !

சோழபுரம், நவ.30:-

சென்னை மாநிலம் கனம் உள்நாட்டமைச்சர் அவர்களுக்கு சோழபுரம் திருப்பனந்தாள் வட்ட கிராமத்தினர் எழுதிக் கொள்வது :

இதனடியில் கையொப்பமிட்டுள்ள நாங்கள் திராவிட நாட்டின் ஒப்பற்றத் தலைவர் பெரியார் அவர்களின் கட்டளைப்படி 26.11.1957 இந்திய அரசியல் சட்டத்தின் அச்சுப்பிரதிகளை ஆயிரக்கணக்கான பொதுமக்களின் முன்னிலையிலும், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையிலும் கொளுத்தி னோம். அப்படிக் கொளுத்திய 139 பேர்களை போலீஸ் ஸ்டேசனுக்கு (திருப்பனந்தாள்) அழைத்துச் சென்றனர்.

பிறகு இரவு 9.30 மணிக்கு கும்பகோணம் தாலூக்கா திருப்பனந்தாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எங்களில் 40 பேர்களை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியுள்ள 99 பேர்களையும் கைது செய்ய முடியாது ; வீட்டுக்குப் போங்கள் என்று கூறிவிட்டார். ‘ஏன்’ என்று கேட்டதற்கு ‘நீங்கள் கொளுத்தியதை நான் பார்க்கவில்லை. அதனால் உங்களைக் கைது செய்ய முடியாது' என்று பச்சையாகப் பொய் சொல்லிவிட்டார்.

உடனே நாங்கள் ‘அப்படியானால் இப்போது உங்கள் எதிரிலேயே கொளுத்துகிறோம். இப்போது கைது செய்யுங்கள் என்று கூறியதற்கும் இரவாகிவிட்டது, இனி கொளுத்தினாலும் கைது செய்ய முடியாது' என்று கூறி விட்டார்.

அதன் பேரில் எங்கள் தலைவரின் கட்டளைப்படியே இந்திய அரசியல் சட்டத்தின் அச்சுப் பிரதிகளைக் கொளுத்தி அதன் சாம்பலை தேசிய கௌரவ சட்டம் கொண்டுவந்த அமைச்சராகிய தங்களுக்கு அனுப்பியுள்ளோம்.

மேற்படி நிகழ்ச்சிகள் நடந்ததை மேற்படி தொகுதி சென்னை சட்டசபை உறுப்பினர் உயர்திரு. இராமாமிர்தத் தொண்டமான் அவர்களும் நேரிலேயே கண்டார்கள்.

என முகவரியுடன் 99 பேர் கையொப்பமிட்டு அனுப்பியுள்ளனர்.

(‘விடுதலை’ 30.11.1957)

சட்டத்தை எரித்தோம்; எங்களை ஏன் கைது செய்யவில்லை என்று கைதுக்கே போராடிய தீரர்களின் பாசறையாக பெரியாரின் கருஞ்சட்டைப் படை திகழ்ந்தது என்ற வரலாறு ஒரு பக்கம்.

பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கடிதங்களை எழுதிக் குவித்த சாவர்க்கர்களுக்கு ‘வீர’ சாவர்க்கர் பட்டம் தந்து கொண்டாடும் கூட்டம் மற்றொரு பக்கம்!

- விடுதலை இராசேந்திரன்