(1957 நவம்பர் 26 - இயக்க வரலாற்றுக்கு தனிச்சிறப்பு உண்டு. 20 நாட்கள் இடைவெளியில் பெரியார் ஒரு போராட்டத்தை அறிவித்தார். அது சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டம். 10,000 தோழர்கள் எரித்தனர். எதிர் வழக்கு நடத்தாமல் 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறை ஏகினர். அந்த தியாக வரலாற்றை விவரிக்கிறார் பேராசிரியர் இராசேந்திரன்.)

சாதியற்ற, மதமற்ற, ஏற்றத்தாழ்வுகளற்ற, ஆண்டான் அடிமையில்லாத சமத்துவ,சமதர்ம, சுயமரியாதைச் சமுதாயத்தினை உருவாக்க வேண்டும் என்பதே தந்தை பெரியார் கண்ட இயக்கத்தின் அடிப்படை நோக்கம். சாதிக்குப் பாதுகாப்பாக இருக்கும் இந்திய அரசியல் சட்டப்பிரிவை 1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் திராவிடர் கழகத்தினர் தீயிட்டுக் கொளுத்த்தித் தங்கள் எதிர்ப்பைக் காட்டிச் சிறையேகினர்.

அவ் அரசியல் சட்டப் பிரிவை தீயிட்டுக் கொளுத்த நாள் குறிக்கும் வகையில் தஞ்சையில் நவம்பர் 3 ஆம் நாள் 1957 ஆம் ஆண்டு ஒரு மாபெரும் மாநாட்டைக் கூட்டினர். மாநாட்டுத் தொடக்கத்தில் தஞ்சைப் புகைவண்டி நிலையம் அருகிலிருந்த கிறித்தவர் ஆலயத்திலிருந்து, தந்தை பெரியார் அவர்களைச் சாரட்டு வண்டியில் அமர வைத்து பல்லாயிரவர் புடை சூழ மாபெரும் ஊர்வலம் புறப்பட்டது. இவ்வூர்வலத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் வெண்புரவி மீதமர்ந்து ஊர்வலத்தினரை வழிநடத்திச் சென்றார்.

ஆங்காங்கு ஏராளமான வரவேற்புப் பதாகைகள் தந்தை பெரியார் அவர்களையும், கழகக் கறுப்பு மெழுகுவர்த்திகளையும் வரவேற்றன. வாணவேடிக்கைகளும், வெடிச்சத்தத்துடன் விண்ணிலிருந்து பாரசூட்டில் இறங்கிய கழகக் கருங்கொடிகளும் பார்ப்போரைப் பரவசப்படுத்தின. இவ்வூர்வலத்தையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயம் வழங்கிய நிகழ்ச்சியையும், அரசியல் சட்ட எரிப்புக்கு நாள் குறித்த நிகழ்ச்சியையும் நடிகவேள் அவர்கள் தன் சொந்த செலவில் திரைப்படமாக எடுத்தார்.

மாநாடு நடைபெற்ற தஞ்சை அரண்மனை மைதானத்தை ஊர்வலத்தினர் நெருங்குமுன்னர், மழை பொழியத் தொடங்கியது. மாலை நடைபெறவிருந்த அய்யா அவர்களுக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயங்கள் வழங்கும் விழா எவ்வாறு நடைபெறப் போகிறதோ என்று கழகத் தோழர்கள் கலங்கினர். அன்று நடைபெற்ற ஊர்வலத்தில் மகளிரணியின் கழகப் பேச்சாளர் பெங்களூர் திருமதி விசாலக்குமதி சிவலிங்கம் அம்மையார் அவர்கள் வழிநடத்தி ஒலிமுழக்கம் செய்துவந்த காட்சி காண்போரை உணர்ச்சி வெள்ளத்தில் தள்ளியது. அன்று மதியம் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சியில் இவ்வம்மையாரின் உரை கேட்டோர் உள்ளத்தில் பசுமரத்து ஆணிபோல பதிந்தது.

மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலரின் உரைவீச்சுக்குப் பின் தந்தை பெரியார் அவர்களுக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயங்கள் அளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது கழகப் பொதுச்செயலாளரும், ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியருமான ‘குத்தூசி’ குருசாமி அவர்கள் இவ்விழாவிற்கு நிதி திரட்டியோர் மற்றும் விழா வெற்றிபெறப் பாடுபட்டோர் ஆகியோரின் பெயர்ப் பட்டியலை ஒவ்வொன்றாகப் படிக்க, அவரவர் மேடைக்கு வந்து, தட்டில் ஒரு ரூபாய் வெள்ளி நாணயங்களை எடுத்து தந்தை பெரியார் அமர்ந்திருந்த தராசின் மறுதட்டில் கொட்டினர். தராசின் முள் நடுநிலையை அடைந்ததும் கழகத் தோழர்களின் கைதட்டல் விண்ணைப் பிளந்தது. இவ்விழாவில், அந்நாளைய திராவிட மாணவபர் கழகத் தலைவரும், ‘தோழன்’ இதழ் ஆசிரியருமான ஏ.பி.ஜனார்த்தனம், எம்.ஏ. அவர்கள் எழுதிய ‘தென்னாட்டுச் சாக்கரட்டீஸ் பெரியார்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது.

பொன்னாடை போர்த்தி, எடைக்கு எடை வெண் பொற்காசு பெற்ற தந்தை பெரியார் நன்றி தெரிவித்துப் பேசுகையில், சாதிக்குப் பாதுகாப்பாக இந்திய அரசியல் சட்டம் இருப்பதையும், அதற்குத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்; கொளுத்துவதற்குத் தயாரா? என்றும் வினவினார். “கொளுத்துவோம்” எனக் குரல் கொடுத்தனர், கழகத்தவர். “கொளுத்துவதற்குத் தயாராகவுள்ளோர் கை உயர்த்துங்கள்” என்று கூற, பல்லாயிரக்கணக்கானோரின் கரங்கள் ஈட்டிபோல் உயர்ந்தன. தொடர்ந்து அய்யா அவர்கள், “அரசியல் சட்டத்தை எரித்தால், என்ன தண்டனை?” என்று அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் குறிப்பிடவில்லை; எனவே தண்டனையை நிர்ணயிக்க அரசுக்குப் 15 நாள் தவணை கொடுப்போம்; அதற்குள் அவர்கள் தண்டனையை நிர்ணயித்துக் கொள்ளட்டும். சட்டத்தாளை எரிப்போரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம். அல்லது 3 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படலாம். அத்தகைய கடுந்தண்டனை கொடுத்தாலும், எரிப்பீர்களா?” என்று வினவினார். “எரிப்போம்; எரிப்போம்” என்று பதில் குரல் கொடுத்தனர் கழகத்தவர்.

சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்திய அரசியல் சட்டப்பிரிவை எரிக்க 1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் தேதி குறிக்கப்பட்டது. இதற்குள் அரசும் தன் பங்குக்கு அரசியல் சட்டத்தைக் கொளுத்தினால், 3 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை எனச் சட்டம் செய்தது. அப்பொழுது தந்தை பெரியாரால் “கடைசி இரட்சகர்” என்றும் “பச்சைத் தமிழர்” என்றும் இனங்காட்டப்பட்ட பெருந்தலைவர்.

காமராசர் தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்தார். சட்ட எரிப்புக்கு குறிப்பிடப்பட்ட நாளான 1957 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள், திராவிடர் கழகத் தொண்டர்கள் ஆண்களும், பெண்களுமாக 10,000 பேர் சாதிக்குப் பாதுகாப்பளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு அடங்கிய கையளவுத் தாளை எரித்தனர். இவர்களில் 4000 பேர் கைது செய்யப்பட்டனர்.

இப்போராட்டத்தில தந்தை பெரியார் அவர்கள் ஈடுபடவில்லை. அதற்குக் காரணம், அவர் கரூர் பசுபதிபாளையம், குளித்தலை முதலிய ஊர்களில் கலந்து கொண்ட பொதுக் கூட்டங்களில் பார்ப்பனர்களை வெட்டச் சொன்னதாகவும், குத்தச் சொன்னதாகவும் அவர் மீது வழக்கு நிலுவையில் இருந்தது. இதில் தமக்கு தண்டனை அளிக்கப்படும் என்று நம்பிய தந்தை பெரியார் இப் போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்தார். இப்போராட்டத்தில் கலந்து கொண்டு, திருச்சி, மத்திய சிறைச்சாலைகளிலிருந்த கழகத் தோழர்களைத் தந்தை பெரியார் சந்தித்து தைரியம் கூறினார். மேலும் அவர், தன் மேலுள்ள வழக்கின் காரணமாக தானும் தண்டிக்கப்பட்டு, விரைவில் அவர்களோடு இருப்பேன் என்றும் கூறினார்.

சென்னையில் தி.க.பொதுச்செயலாளர் குத்தூசி குருசாமி, “டார்ப்பிடோ” ஏ.பி.ஜனார்த்தனம், அவரது துணைவியார் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், மயிலை த.லோகநாதன், டி.எம். சண்முகம் முதலானோர் கைதாகிச் சிறைச் சென்றனர். திருவாளர்கள் திருச்சி வே.ஆனைமுத்து, திருச்சி வீ.அ.பழனி, தஞ்சை இரா. இராசகோபால், குடந்தை என்.ஜி. இராஜன், திருச்சி டி.டி. வீரப்பா, நாகை எஸ்.எஸ். பாட்சா, வேலூர் இ.திருநாவுக் கரசுமுதலியோர் சிறையேகியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

கழகத் தோழர்கள் சிறையிலிருந்த போது, வெளியில் இருந்த கழகப் பேச்சாளர்களைக் கொண்டு, பலப்பல ஊர்களில் ஏராள கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. கழகப் பேச்சாளர்களான திருவாரூர் கே.தங்கராசு, கி.வீரமணி, எஸ்.டி. விவேகி, எம்.கே.குப்தா முதலியோரின் மாதாந்திர சுற்றுப்பயண விவரங்கள் தினந்தோறும் ‘விடுதலை’யில் வெளிவந்த வண்ணமிருந்தன.

தந்தை பெரியார் அவர்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு விசாரிக்கப்பட்டு, விசாரணை முடிவில் தந்தை பெரியார் அவர்களுக்கு மூன்று செக்ஷன்களில் ஆறுமாதம் வீதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இதனை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் 1958 இல் தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கில், அய்யா அவர்கள் திருச்சி நீதிமன்றத்தில் அளித்த தனது ஸ்டேட்மெண்டில், “வாயில், நாக்கில் குற்றம் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைக் கடிக்காது; வேம்பு இனிக்காது; கரும்பு கசக்காது; அதுபோல் தான் பார்ப்பனர்களின் தன்மையும்” என்று குறிப்பிட்டார்கள். தந்தை பெரியார் உடன் கைது செய்யப்பட்டு இரவோடு இரவாக திருச்சியிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள்.

(தொடரும்)

Pin It