கீற்றில் தேட...

1957 ஆம் ஆண்டு அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் நடந்தபோது, பெரியார் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். 5.10.1957 அன்று குளித்தலையிலும், 13.10.1957 அன்று பகவதி பாளையத்திலும், 20.10.1957 அன்று திருச்சியில் நடைபெற்ற தி.க. பொதுக் கூட்டத்திலும் பேசிய பெரியார், “பார்ப்பனர்களை வெட்டவும், குத்தவும் சொன்னதாக” வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை நடக்கும்போது, திராவிடர் கழகத் தோழர்கள் 4000 பேர் சட்டத்தை எரித்து சிறையேகினர்.

தோழர்களை திருச்சி சிறையில் சந்திக்கச் சென்ற பெரியார், “கவலைப்படாதீர்கள்; நானும் விரைவில் சிறைக்கு வந்துவிடுவேன்” என்று கூறினார். அவ்வாறே 14.12.1957 அன்று மாவட்ட நீதிமன்றம், குற்றச்சாட்டுகளின் கீழ் பெரியாரை தண்டிக்க ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 6 மாத தண்டனையாக ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. இத்தண்டனையை ஒரே காலத்தில் 6 மாதம் அனுபவிக்கலாம் என திருச்சியில் எஸ். சிவசுப்ரமணிய நாடார் எனும் நீதிபதி தீர்ப்புக் கூறினார். அவர் சிறைச் சென்ற சில நாட்களுக்கெல்லாம், சிறைத் தண்டனை வழங்கக் காரணமாக இருந்து, நீதிமன்றத்தில் பெரியாரை அவமதித்த அரசு வழக்கறிஞர் ஈ.வி. சீனிவாச்சாரி முகத்தில் திராவக அமிலத்தை வீசினர்.

‘பெரியாரின் பொன்மொழிகள் நூல்’ தடைசெய்யப்பட்டு, பெரியார் அப்போது கைது செய்யப்பட்டதாக, புரட்சிப் பெரியார் முழக்கம் ஏட்டில் வெளிவந்தது தவறான தகவல் என்று புதுகை இராசேந்திரன் தெரிவித்துள்ளார். (தவறுக்கு வருந்துகிறோம்- ஆர்)

சாதி ஒழிப்புப் போராட்டம் தொடர்பாக மற்றொரு குறிப்பையும் அவர் தந்துள்ளார். சட்ட எரிப்புப் போரில் புதுக்கோட்டையில் நால்வர் கைதாயினர். இவர்களில் ஒருவர் கா.ரா.தங்கப்பன். பிறப்பால் இவர் ஒரு மலையாளி. தி.க. கொள்கைகளில் மிகவும் தீவிரமானவர். புதுக்கோட்டைப் பேருந்து நிலையத்தில் தள்ளுவண்டியில் பாயாசம் விற்பது இவரது வேலை. இப்போராட்டத்தில் இவருக்கு 4 மாதம் வெறுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கு மனைவியும், தங்க மணி என்ற மகளும் உண்டு. தங்கப்பன் சிறையில் இருந்த 4 மாத காலத்தில், அவரது துணைவியார், தன் குழந்தையுடன் மூங்கில் தட்டில் வைத்து தெருதெருவாகச் சென்று, பூ விற்பனை செய்யும் ஒரு ஏழைத் தொழிலாளியுடன் சென்றுவிட்டார். காரணம் வறுமை. விடுதலையான தோழர் நிலைமையை அறிந்தார். கவலையைத் துடைந்தெறிந்துவிட்டு, வேறொரு பெண்ணை மணந்து குடும்பம் நடத்தத் தொடங்கினார். இதில் கொடுமை என்னவென்றால், தன் மகளான தங்கமணியை, தங்கப்பன் நேரில் பார்த்துப் பேசக்கூட அப் பூ விற்பனைத் தொழிலாளி சம்மதிக்கவில்லை. இப்படியெல்லாம் நம் தோழர்கள் துயரங்களை சந்தித்திருக்கின்றனர்.

இதுபற்றியெல்லாம் அறிந்திராத கி.வீரமணியின் இளைய மகன், இன்று தி.க. தலைமை நிலையச் செயலாளர். என் செய்ய? என்று அவர் எழுதியுள்ளார்.

- புதுகை இராசேந்திரன்