இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள உழைக்கும் கீழ்ச்சாதி மக்கள் அனைவரின் அனைத்துத் துறை அடிமைத் தளங்களில் இருந்து விடுதலை பெற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்டதாகப் பெரியார் முன்னெடுத்தக் கிளர்ச்சிகள் அமைந்தன. பெரியாரின் 145ஆம் பிறந்த நாளில் அவரின் கிளர்ச்சிகள் பற்றி அறிவது இன்றைய மானுட உரிமைப் போராட்டங்களுக்கு வழிகாட்டியாகத் திகழும்.

பெரியார் 1879ஆம் செப்டம்பர் 17-இல் பிறந்து 1973 திசம்பர் 24 வரை நீண்டகாலம் வாழ்ந்தவர் மட்டுமா? அவர் சிறுவனாக இருந்த போதே மனிதர்கள் சமமாக நடத்தப்படா தவர்களாகவும் மனிதர்களுக்குள் சமஉரிமை இன்மைப் பற்றிய உணர்வு ஓங்கி இருந்தது. மனிதர்கள், சக மனிதர் களை இழிவாக நடத்தப்படுவதையும் அந்த இழிதகை மைக்கு உள்ளாவோர் ‘தாம் இழிவாக நடத்தப்படுகிறோமே’ என்ற உணர்வு சிறிதுமின்றி உள்ள சமூகத்தின் போக்கைக் கூர்ந்துநோக்கும் சிந்தனையும் அத்தகு உரிமை மறுப்பு, சமத்துவமின்மை களையப்பட வேண்டும் என்பதைப் பற்றி கவலையோடு சிந்திக்கின்ற இயல்புமிக்கவராகவும் விளங்கினார் என்பதை அவரது வாழ்க்கை நிகழ்வுகளைக் கொண்டு அறிகிறோம்.

1912, தம் அகவை 33இல் ஈரோடு வட்ட நாட்டாண்மைக் கழக (Taluk Board) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1914இல் கோயமுத்தூர் காங்கிரசு மாநாட்டுக்கு ஒரு செயலாளராகப் பணியாற்றினார். 1914 திசம்பர் 28, 29, 30 மூன்று நாள்கள் சென்னையில் நடந்த காங்கிரசு அனைத்திந்திய மாநாட்டில் ஒரு பிரதிநிதியாகப் (delegate) பங்கேற்றார். 03.04.1917இல் ஈரோடு நகர்மன்றத் தலைவராகவும் 03.05.1917இல் கோயமுத்தூர் மாவட்ட நாட்டாண்மைக் குழு (District Board) உறுப்பினராகவும் ஆனார்.

1919இல் திருச்சியில் நடந்த காங்கிரசு 25ஆம் மாகாண அரசியல் மாநாட்டில் பங்கேற்றார். மாநாடு நடந்த அதே கொட்டகையில் நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் தலை மையில் தனிக்கூட்டம் நடத்தி வகுப்புரிமையை வலியுறுத்திட வேண்டித் தீர்மானமெடுக்கப்பட்டது. 1919இல் அமிர்தசரசிலும், 1920இல் கல்கத்தாவிலும், 1922இல் கயாவிலும், 1923இல் காக்கிநாடாவிலும் 1924இல் பெல்காமிலும் நடந்த அனைத் திந்திய காங்கிரசு மாநாடுகளில் பங்கேற்றார். 25.12.1924 பெல்காமில் மாலை 4 மணிக்கு ‘அகில இந்திய பிராமணர் அல்லாதார்’ தனி மாநாடு பெரியார் தலைமையில் நடந்தது. 02.12.1923 இல் திருச்சியில் நடந்த தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டியின் ஆண்டுக் கூட்டத்தில் ஈ.வெ.இரா. த.நா. கங்கிரசுக் கமிட்டித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெரியாரின் முதல் கிளர்ச்சி - முதல் சிறைத் தண்டனை

காங்கிரசில் இருந்த போது கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதற்காக பெரியார் ஈ.வெ.இரா. உள்ளிட்ட நூறு பேர் 15.11.1921 அன்று ஒரு மாதம் வெறுங்காவல் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டனர். இதுவே பெரியார் சிறைக்குச் சென்ற முதல் நிகழ்வு ஆகும். இதனைப் பாராட்டி காந்தியார் ‘யங் இந்தியா’ 22.12.1921 இதழில் எழுதினார்.

வைக்கம் கிளர்ச்சியில் பெரியார் ஏற்றிருந்த பங்கு

கேரளத்தில் கோட்டயம் மாவட்டம், வைக்கத்தில் அமைந்துள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றி நாற்புறத்திலும் உள்ள சாலைகளில் ஈழவர், பறையர், புலையர், தீயர், மலை அரிறயர், மலை பண்டாரம், அயித்தகாரர், ஆசாரி, வாணியர், நெசவாளர் என 18 சாதிகளைச் சார்ந்த மக்கள் தீண்டத் தகாதவர் என நடக்கவும் புழங்கவும் தடைசெய்யப் பட்டிருந்தது. இந்தத் தீண்டாமை -உரிமை மறுப்பை எதிர்த்து காங்கிரசுக் கட்சியின் கேரளத் தலைவர்கள் 30.03.1924இல் சத்தியாக்கிரகக் கிளர்ச்சியைத் தொடங்கினர். கிளர்ச்சித் தொடங்கிய 3-4 நாள்களில் முக்கியத் தலைவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் கிளர்ச்சித் தோல்வியுறும் நிலை ஏற்பட்டது. தீண்டாமை போன்ற அநீதிக்கு எதிராகப் போராடும் உறுதிமிக்கவர் ஈ.வெ.இரா. என்பதால் கேரளத் தலைவரான குரூர் கே. நீலகண்ட நம்பூதிரி ஈ.வெ.இரா.வுக்கு 04.04.1924 அன்று தந்தி வழியாக கிளர்ச்சியை மேற்கொண்டு நடத்திட வருமாறு வேண்டினார்; ஜார்ஜ் ஜோசப் அவர்களிடமிருந்து 06.04.1924 அன்று மடல் வந்தது. வைக்கத்திலும் சுற்றுவட்டாரங்களிலும் கூட்டங்களில் பெரியார், மக்களை சத்தியாக்கிரகத்தில் ஈடுபடு மாறும் ஆதரவு அளிக்குமாறும் உணர்ச்சியைத் தூண்டும் உரைகள் நிகழ்த்தினார். 19.4.1924 அன்று ஆலப்புழைச் சிறையில் இருந்த சத்தியாக்கிரகிகளைப் பார்க்கச் சென்றார். அப்போது சிறைவாயிலில் திரண்ட 3000 மக்களிடையே ஈ.வெ.இரா. 3 மணிநேரம் உரை நிகழ்த்தினார்.

28.04.1924 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் ஈ.வெ.இரா. ஆற்றிய உரை, திருவாங்கூர் குற்றவியல் சட்டம் 181ஆம் பிரிவின்படி குற்றம் என்று கூறப்பட்டு, 21.05.1924 அன்று வைக்கம் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பெரியாருக்கு 1 மாதம் வெறுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 22.05.1924 முதல் 28.05.1924 வரை திருவனந்தபுரம் சிறையிலும் 29.05.1924 முதல் 21.06.1924 வரை அருவிகுத்தி சிறையிலும் வைக்கப்பட்டு 21.06.1924 அன்று விடுதலைச் செய்யப்பட்டார்.

அடுத்த நாளான 22.06.1924 முதல் கூட்டங்களில் சத்தியாகிரகப் போராட்டம் தொடர்ந்து நடைபெற ஆதரவு திரட்டுவதற்காக ஈ.வெ.இரா. உரைகள் ஆற்றினார். ஈ.வெ.இரா. கோட்டயம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் 2 மாதங்களுக்கு பேசக்கூடாது என 23.06.1924 அன்று அரசு தடை ஆணை பிறப்பித்தது. 25.06.1924 அன்று பெரியார் அவ்வாணைக்குப் பணிய முடியாது என்று அறிவித்தார்.

இதனால் ஈ.வெ.இரா. மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கில் 17.07.1924 அன்று 4 மாதங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஈ.வெ.இரா. சிறையில் கால்களில் விலங்குப் பூட்டப்பட்டு, தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார் என்று சி. இராச கோபாலாச்சாரியார் அறிக்கை 28.8.1924 நாளிட்ட சுதேச மித்திரன் ஏட்டில் வெளியானது. பெரியாருடைய மனைவி நாகம்மையும் தங்கை கண்ணம்மாவும் வைக்கத்தில்

சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகம்மை 8 நாள்கள் (ரிமாண்டு) சிறை வைக்கப்பட்டார். சத்தியாகிரகப் போராட்டம் தொடர் மழையிலும் கழுத்தளவு நீர்த் தேங்கி யிருந்த போதும் கூட தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.

திருவாங்கூர் மன்னர் அரண்மனையில் ‘சத்ரு சம்மார யாகம்’ நடத்தப்பட்டிருந்த நிலையில் 07.08.1924 அன்று மன்னர் இறந்துவிட்டார். அதை அடுத்து மகாராணி சேது லட்சுமிபாய் பட்டத்திற்கு வந்தார். இதனால் சிறையில் இருந்த ஈ.வெ.இரா. உள்ளிட்ட கிளர்ச்சியில் ஈடுபட்டத் தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

பின்னர் காந்தியார் வைக்கம் வரவழைக்கப்பட்டு 12.03.1925 அன்று இராணியைச் சந்தித்துப் பேசியதில் சாலைகளில் அனைத்து சாதி மக்களும் நடக்கலாம் என்பதை இராணியின் அரசு ஆணை எண்.5/06.08.1925-இன்படி அதுவரை இருந்தத் தடை நீக்கப்பட்டது. இந்தக் கிளர்ச்சித் தொடங்கியது முதல் இறுதியாக தடை அகற்ற ஆணை வரை 16 மாதங்கள் ஆயின. இந்தக் கிளர்ச்சியில் பெரியார் ஈ.வெ.இரா. முதல் முறை 31 நாட்களும் இரண்டாம் முறை 37 நாட்களுமாக 68 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். அப்போது வைக்கம் கிளர்ச்சியைப் பற்றி எழுதிய திரு.வி.க. பெரியாரரை ‘வைக்கம் வீரர்’ என்று பாராட்டினார்.

1938 இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி

மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்ட 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்படி சென்னை மாகாணத்தில் நடத்தப்பட்டத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி அதிக இடங்களைப் பெற்று சி.இராசகோபாலாச்சாரி தலை மையில் 14.03.1937 இல் ஆட்சியில் அமர்ந்தது. பாகிஸ்தானை உள்ளடக்கிய அப்போதைய இந்தியாவில் 11 மாகாணங்கள் இருந்தன. அவற்றுள் 9 மாகாணங்களில் காங்கிரசு ஆட்சி அமைந்தன. பிரதமரான (Premier) இராசகோபாலாச்சாரி சென்னை மாகாணத்தில் மட்டும் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 125 பள்ளிகளில் இந்தி மொழிப் பாடம் தேர்ச்சிக்குரிய கட்டாயப் பாடமாக 21.04.1938 இல் ஆணை பிறப்பித்தார். 2200 தொடக்கப் பள்ளிகளை மூடிவிடவும் ஆணை பிறப்பித்தார்.

இந்தி மொழி தமிழர்கள் மீது புகுத்தப்பட உள்ளக் கேட்டினை அறிந்து 1929 முதலே பெரியார் எதிர்த்து வந்தார் (குடிஅரசு, 20.01.1929). மறைமலை அடிகள், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் உள்ளிட்டத் தமிழ் அறிஞர்களும் பெரியாரும் இராசகோபாலாச்சாரியின் இந்தி கட்டாயப் பாடம் என்பதைக் கடுமையாக எதிர்த்தனர்.

12.11.1938இல் சென்னையில் நீலாம்பிகைத் தலைமை யில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில், பெரியார் ‘இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டு சிறைபுகுமாறு பெண்களைத் தூண்டி னார்’ என்று பெரியார் மீது குற்றம் சாற்றப்பட்டது. 05, 06.12.1938 நாள்களில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து, பெரியாருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை யும் உரு.2,000/- தண்டமும் விதிக்கப்பட்டது.

பெரியார் 06.12.1938 முதல் 22.05.1939 வரை சென்னை, பெல்லாரி, கோவை சிறைகளில் சிறை வைக்கப் பட்டார். 168 நாள்கள் சிறைவாசத்திற்குப்பின் 22.05.1939

அன்று இரவு 12 மணிக்கு கோவை சிறையிலிருந்து நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டார். சிறை புகும் போது 190 பவுண்டு (86 கிலோ) எடை இருந்த பெரியார் விடுதலையான போது 166 பவுண்டு (75 கிலோ) அதாவது 11 கிலோ எடை குறைந்து இருந்தார். இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்ட 32 குழந்தைகள், 73 மகளிர் உள்ளிட்ட 1271 பேர் சிறைத் தண்டனை அனுபவித்தனர். சிறையில் உடலநலம் குன்றி சென்னை தோழர் நடராசன் 15.01.1939 அன்று ஈகியானார். கும்பகோணத்தைச் சேர்ந்த தோழர் தாலமுத்து 13.03.1939 அன்று ஈகியானார். இவர் இறக்கும் போது அகவை 24.

இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சித் தொடங்குவதற்கு முன் இந்தி மொழித் திணிப்பால் விளையக் கூடிய தீங்குகள் பற்றி மக்களிடையே பரப்புரை செய்வதற்காக அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் 01.08.1938 அன்று திருச்சியில் இருந்து நடைபயணமாகப் புறப்பட்ட படை 42 நாள்கள் பரப்புரைக்குப்பின் 11.09.1938 அன்று சென்னை வந்தடைந்தது. அந்தப் படையினருக்கு வரவேற்பு அளிக்கும் முகத்தான் அன்றிரவு சென்னை, திருவல்லிக்கேணி கடற்கரையில் மறைமலையடிகள் தலைமையில் நடந்த மிகப்பெரிய மக்கள்திரள் கூட்டத்தில் உரையாற்றிய பெரியார் “தமிழ்நாடு தமிழருக்கே” என முழங்கினார் என்பது வரலாறு.

03.09.1939-இல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. காங்கிரசுக் கட்சியைக் கலந்தாலோசிக்காமல் பிரித்தானிய அரசு இந்தியாவைப் போரில் ஈடுபடுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரசு மாகாண அரசுகள் பதவி விலகின. இதனால் இராசகோபாலாச்சாரி தலைமையிலான சென்னை மாகாண அரசு 09.10.1939இல் பதவி விலகியது. 31.10.1939 முதல் 29.03.1946 முடிய சென்னை மாகாணத்தில் ஆளுநர் ஆட்சி நடந்தது. ஆளுநராக இருந்த ஜான் எர்ஸ்கின் 21.02.1940இல் இந்தி கட்டாயப் பாடம் என்ற உத்தரவை விலக்கினார். இந்தி அப்போது ஒழிந்தது. தமிழ்ப் புலவர் சாமி சிதம்பரனார் பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுதி, “தமிழர் தலைவர்” என்ற பெயரில் நூலாக குத்தூசி குருசாமி 1939 செப்டம் பரில் வெளியிட்டார். அப்போது முதல் பெரியாரை ‘தமிழர் தலைவர்’ என்று மக்கள் அழைக்கலாயினர்.

கணபதி உருவ பொம்மை உடைப்பு

பெரியார் பிள்ளையார் பொம்மை உடைப்பது பற்றி பின்வருமாறு கூறியுள்ளார். பிரித்தானியர் ஆட்சி ஒழிந்து ‘ஜனநாயக ஆட்சி’ -பார்ப்பன ஆதிக்கம் ஏற்பட்டதிலிருந்து ஒவ்வொரு மாத்திரை (நொடி) நேரமும் வருணாசிரம தர்ம ஆட்சி வளர்ந்து வளம் பெற்றுவருகிறது. இந்த ஏகபோக ‘ஜனநாயக’ ஆட்சி மூலம் பல துறைகளில், பல கொடுமையான முறைகளைக் கையாண்டு மனு காலச் சூத்திராக்கத் திட்டம் கொண்டு உத்தியோகத் துறையிலும் கல்வித் துறையிலும் திட்டம் வகுத்துச் செயலில் இறங்கிவிட்டது.

பார்ப்பன நலனுக்கும் சர்வ ஆதிக்க நலனுக்கும் வருண தர்ம புதுப்பிப்புக்காகவே (Reviving-க்காகவே) இந்த ‘ஜனநாயக ஆட்சி’. சவுண்டிப் பார்ப்பனர் முதல் சங்கராச்சாரியார் பார்ப்பனர் வரை சர்வ பார்ப்பனர்களும் வருணாசிரம, வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களைப் பிரச்சாரம் செய்து வருவதென்றால்... வருணாசிரம வியாதியை ஒழிக்க 27.05.1953 அன்று நாடெங்கும் புத்தர் விழா கொண்டாடி, மாலை 6 மணிக்குப் பொதுக் கூட்டத்தில் வருணாசிரம வாதிகள் மூலதேவன் - தெய்வம் என்று கருதப்படும் செயற்கை உருவ அறிகுறியை உள்ளத்தில் அழித்துவிட வேண்டும். ‘பிள்ளையார் அல்லது கணபதி’ என்பதை - மண்ணால் செய்த பொம்மை உருவத்தை கழகக் காரியாலயத்தில் அல்லது அவரவர்கள் வீட்டில் உடைத்து மகிழ்ச்சி கொண்டாடுங்கள். நரகாசூரனைக் கொன்றதாகப் பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் எப்படிக் கொண்டாடுகிறார்களோ அதேபோல், உருவத்தை உடைத்துக் கொண்டாடுங்கள்.

“ஏன் உடைக்கச் சொன்னேன்; பிள்ளையார் கடவுள் அல்ல; அதன் பிறவிக் கதைகள் காட்டுமிராண்டிக் கற்பனை என்பது விளக்கப்படவே ஆகும். நமக்குக் கடவுள் என்பதெல்லாம், நம் நடத்தையில் - சத்தியம், நாணயம், தயவு, உபகாரஞ் செய்தல், துரோகம் செய்யாதிருத்தல் ஆகியவை யாகும்” என்று பெரியார் 7.5.1963 ‘விடுதலை’ தலையங் கத்தில் விளக்கப்படுத்தினார்.

பெரியாரும் மற்ற தோழர்கள் சிலரும் சில முக்கிய நகரங்களில் மேற்கொண்ட பிள்ளையார் பொம்மை உடைப்புக் கிளர்ச்சிக்கு ஆச்சாரியார் ஆட்சி எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு

1947இல் இந்திய விடுதலைக்குப்பின், 1950 சனவரி 26இல் புதிய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து, அதன்படி 1952இல் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு முதலாவதுத் தேர்தல் நடந்தது. அதில் அதிக இடங்களைப் பெற்ற காங்கிரசுக் கட்சி ச.இராசகோபாலாச்சாரியார் தலை மையில் 10.4.1952இல் ஆட்சியமைத்தது. இராசகோபாலாச் சாரியார் 15.08.1947 முதல் 21.06.1948 வரை மேற்கு வங்க ஆளுநராகவும், 21.06.1948 முதல் 26.01.1950 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும், 17.12.1950 முதல் 05.11.1951 வரை நேரு தலைமையிலான இடைக்கால அரசில் உள்துறை அமைச்சராகவும் பதவிகளில் இருந்தவர் ஆவார்.

முதலமைச்சரான இராசகோபாலாச்சாரியார் மாகாண அரசின் கல்விச் செலவைக் குறைப்பதற்காக 6000 கிராமப்புறப் பள்ளிகளை மூடினார். மேலும் முதல் கட்டமாக 1953-54 கல்வியாண்டு முதல் 155 பள்ளிகளில் 3 மணிநேரம் பள்ளியில் கற்றபின் மீதி நேரம் அவரவர் குடும்பத்தில் தந்தை செய்யும் தொழிலில் பயிற்சி பெற வேண்டும் என ஆணை பிறப்பித்தார். இதனைக் ‘குலக் கல்வி’ என எதிர்க்கட்சியினரும் பெரியாரும் கடுமையாக எதிர்த்தனர்.

பெரியார் 24.01.1954 அன்று ஈரோட்டில் ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாடு நடத்தினார். “உழைக்கிற நமது மக்கள் படிக்கக் கூடாது; பாடுபடாத சோம்பேறிக் கூட்டம் தான் படிக்க வேண்டும்; உத்தியோகம் பார்க்க வேண்டும் என்றால் என்ன நியாயம்? இதை எப்படிச் சகித்துக் கொண்டி ருப்பது? சாஸ்திரத்திலே, புராணத்திலே, இன்னும் மதம், கடவுள் ஆதாரங்கள் எல்லாவற்றிலும் அக்கிரமமான முறையில் எங்களை அடக்கி ஒழிப்பதையே இலட்சியமாக வைத்திருப்பது போதாமல்...” கல்வி கற்பதற்கும் முட்டுக் கட்டையா?

“எங்கள் நாட்டில் பார்ப்பானுக்குச் சமமாக வாழ எங்களுக்குத் தகுதி இல்லை, திறமை இல்லை என்கிறார்கள். இந்த எதிர்ப்புப் போராட்டத்தை எங்கள் ஜீவாதாரமான, உயிர்நிலைப் போராட்டமாகக் கருதுகிறோம். இந்தக் கல்வித் திட்டம் எடுபட்டால் மட்டுமே போதாது; நம்முடைய மக்களுக்கு உத்தியோகம், கல்வி எல்லாவற்றிலும் சரியானபடியான விகிதாசாரம் பார்ப்பானுக்கு 100க்கு 3, நம்மவர்களுக்கு 97 என்கிற மாதிரி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டாக வேண்டும், இந்த இரண்டும் திராவிட மக்களின் ஜீவாதாரமான -உரிமையானப் பிரச்சினைகள்” எனப் பலவாறாகப் பெரியார் அரசுக்குக் கோரிக்கையும் மக்களுக்கு விழிப்பும் ஊட்டினார். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் (1974) பக்.1828-32).

பெரியாரின் கடுமையான எதிர்ப்புடன் தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சியினர், பொது மக்கள் குலக்கல்வியை எதிர்த்தனர். ஆயினும் இராசகோபாலாச்சாரியார் தமது முடிவில் பின் வாங்கப் போவதில்லை என்று உறுதியாக இருந்தார். சட்ட மன்றத்தில் இக்கல்வித் திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்ததில் மிகச்சிலர் எதிர்த்தும் மிகப்பெரும்பான்மை ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் இராசகோபாலாச் சாரியார் 13.04.1954 அன்று பதவியில் இருந்து விலகினார். பெரியாருடைய ஆதரவுடன் கு. காமராசர் முதலமைச்சர் ஆனார். ஆச்சாரியாரின் கல்வித் திட்டம் கைவிடப்பட்டது. இது பெரியார் இயக்கத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

தேசியக் கொடி கொளுத்தும் கிளர்ச்சி

17.7.1955-இல் திருச்சியில் இந்தியை எதிர்ப்பதற்காக தேசியக் கொடியை 01.08.1955 அன்று எரிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் கு.காமராசர் இந்தி கட்டாயமாகக் கற்பிக்கப்படாது என அரசு சார்பில் வாக்குறுதி அளித்ததால் அப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகப் பெரியார் அறிவித்தார்.

இராமன் பட எரிப்புக் கிளர்ச்சி

பெரியார், 21.12.1922-இல் திருப்பூரில் நடந்த காங்கிரசு மாநாட்டில் தீண்டாமை, கோயில் நுழைவு பற்றிக் கொண்டு வந்த தீர்மானம் அனுமதிக்கப்படவில்லை. அன்று மாலை திருப்பூரில் நடந்தப் பொதுக் கூட்டத்தில் “வருணத்தையும் தீண்டாமையையும் காப்பாற்றும் இராமாயணத்தையும் மனுநீதியையும் எரிக்க வேண்டும்” என்று பெரியார் கடுஞ்சினத்துடன் உரையாற்றினார்.

“இராமன் கடவுள் அல்லன்; அவன் ஒரு வீரன்” என்று இராசகோபாலாச்சாரியார் கட்டுரையில் எழுதியிருக்கிறார். சங்கராச்சாரியும் ‘இராமன் கடவுள் அல்லன்; ஓர் ஆதர்ஷ புருஷன்’ என்று கூறி இருக்கிறார். மறைமலை அடிகள், டி,கே,சி., திரு.வி.க., வி.பி. சுப்பிரமணியப் பிள்ளை, பி. சிதம்பரம் பிள்ளை முதலிய புலவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ‘இராமன் கடவுள் அல்லன்; இராமாயணம் கடவுள் கதை அல்ல’ என்று கூறி இருக்கிறார்கள். வால்மீகி தனது இராமாயண இலக்கியத்தில் ‘இராமன் பெண்ணைக் கொன்றவன்; பெண்ணை மானபங்கப்படுத்தியவன்; துரோகக் காரியங்களுக்கு உடந்தையாக இருந்தவன்’ என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஆகவே அப்படிப்பட்ட ஒருவனை மக்கள் கடவுளாக, பிரார்த்தனை, பக்தி செலுத்தத் தக்கவனாகக் கருதக்கூடாது; இராமனைக் கொளுத்துங்கள்” என்றேன்.

“இன்றும் மதுரை முதலிய இடங்களில் சமணர்கள் கழுவேற்றப்பட்ட உற்சவம் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கின்றது; சூரசம்மாரம் நடைபெறுகின்றன. இராமன் படம் அச்சிட்ட காகிதத்தை, பொம்மையைக் கொளுத்தினால் யாரோ சிலர் மனம் புண்படும் என்று எரிப்பதைத் தடைசெய்வது கூடாது. எனவேதான் சர்க்கார் தடை உத்தரவை மீற நேரிட்டது” எனப் பெரியார் விளக்கியுள்ளார். பெரியார் 01.08.1956 அன்று கைது செய்து அன்று மாலையே விடுவித்து விட்டார்கள்.

நால்வருணத்தைக் காக்கும் அரசமைப்புச் சட்ட விதிகள் எரிப்பு கிளர்ச்சி

03.11.1957 அன்று தஞ்சையில் கூடிய திராவிடர் கழகச் சிறப்பு மாநாட்டில் நால்வருணத்தைக் காக்கும் அரசமைப்புச் சட்ட விதிகளை நீக்கக்கோரி, அப்பிரிவுகளை அச்சிட்டு 26.11.1957 அன்று எரித்திடும் கிளர்ச்சி நடத்திடத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“சாதி காப்பாற்றப்படும் சட்டம் எங்களுக்கு வேண்டாம்; சாதியை ஒழிக்க இயலாத சட்டம் எங்களுக்கு வேண்டாம்; அதைத் திருத்து; சாதி ஒழிக்கப்பட வசதி செய்து கொடு என்பதற்கு அறிகுறியாக, சாதியைப் பாதுகாக்க வசதியுள்ள பாகத்தை (பிரிவுகளை) குறித்த ஒரு துண்டு காகிதத்தை, அறிக்கைக் கொடுத்துக் கொளுத்துவதன் மூலம் வலியுறுத்து கிறோம்” என்று பெரியார் இந்தக் கிளர்ச்சியின் நோக்கத்தை அறிவித்தார்.periyar burns constitutionதேசியக் கொடி எரிப்புப் போன்ற கிளர்ச்சிகளில் ஈடுபடு வோரைத் தண்டிக்க அப்போது வரை சட்டத்தில் இடமில்லாத தால் 11.11.1957 அன்று சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் தேசிய அவமதிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டப்படி கிளர்ச்சியில் ஈடுபடுவோருக்கு 6 மாதங்கள் முதல் 3 அண்டு கள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டது.

இப்படி ஒரு சட்டம் கொண்டுவந்த பின்னரும் தமிழ் நாட்டில் சுமார் 10,000 திராவிடர் கழகத் தொண்டர்கள் 26.11.1957 அன்று சாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 13, 25, 372 ஆகிய பிரிவுகள் அச்சிட்டத் தாளை எரித்தனர். எரித்தவர்களுள் 2997 பேர் 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர். திருச்சி நடுவண் சிறையில் சிறைக் கொடுமையால் நோயுற்று பட்டுக்கோட்டை இராமசாமி 09.03.1958 அன்றும் மணல் மேடு வெள்ளைச்சாமி 10.03.1958 அன்றும் மறைந்தனர்.

பெரியார் சட்ட எரிப்புக் கிளர்ச்சியை முன்னிட்டு வேறு ஒரு வழக்கில் 25.11.1957 அன்று முன்கூட்டியே கைது செய்யப் பட்டார். இதனால் 26.11.1957 சட்ட எரிப்பில் பங்கேற்க இயல வில்லை. பெரியார் 05.10.1957 அன்று குளித்தலைக் கூட்டத்திலும் 13.10.1957 அன்று பசுபதிபாளையம் கூட்டத்திலும் 28.11.1957 அன்று திருச்சி கூட்டத்திலும் பார்ப்பனரைக் கண்டித்துப் பேசியதற்காகவும் சட்ட எரிப்புக் கிளர்ச்சியைத் தூண்டியதற் காகவும் பெரியாருக்கு 14.12.1957 அன்று திருச்சி மாவட்ட நீதிமன்றம் 3 குற்றங்களுக்கு 3 ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையை ஒரே நேரத்தில் அதாவது 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதனால் பெரியார் 14.12.1957 முதல் சிறைவாசி ஆனார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றிட பின்பற்றப்பட்ட நடைமுறைகள் ஏற்கத்தக்கவையா என்பது பற்றி பெரியார் கூறியுள்ள மிகவும் முக்கியமான கருத்துகளைக் காண்போம்.

1. 1946இல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் தேர்ந் தெடுக்கப்பட்ட மாகாண சட்டசபை அங்கத்தினர்களால் ஓட்டு செய்து அரசியல் நிர்ணய சபையைத் தேர்ந்தெடுத்தார்கள். (இந்தியா -பாகிஸ்தான் என) நாடு இரண்டாகப் பிரிந்த பிற்பாடு எஞ்சியிருந்த 235 மெம்பர்களும் சமஸ்தானங்களில் (மன்னர்கள் ஆட்சிப் பகுதிகளில்) இருந்து 72 பேர்களுமாக மொத்தம் 307 பேர் அப்போது இருந்தார்கள். அப்போது ஓட்டுப் பெற்றிருந்தவர்கள் இன்றைய (1957) வாக்காளர்களில் 12% பேர். இது எப்படி மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப் பட்டதாகும்?

நாடு சுதந்திரம் அடையாத காலத்தில் நடந்த எலக்ஷன் பிரதிநிதிகளால் -காங்கிரசுப் பார்ப்பனப் பிரதிநிதிகளால் ஏற்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் நம்மை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?

அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 09.12.1946 இல் நடந்தது.

2. அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவில் இடம் பெற்றி ருந்த 6 பேர்களில் 4 பேர் பார்ப்பனர்கள்.

1. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், 2. டி.டி. கிருஷ்ண மாச்சாரி, 3. கோபால்சாமி அய்யங்கார், 4. கே.எம். முன்ஷி. மற்ற இருவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், முகமது சாதுல்லா.

மற்ற கிளர்ச்சிகள்

1924 வைக்கம் கிளர்ச்சி, 1938 இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, 1953 கணபதி பொம்மை உடைப்பு, 1953-54 குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு, 1955 தேசியக் கொடி எரிப்பு, இராமன் பட எரிப்பு, நால்வருணம் காக்கும் அரசமைப்புச் சட்ட விதிகள் எரிப்புக் கிளர்ச்சி ஆகிய 7 கிளர்ச்சிகள் பற்றி மிகச் சுருக்கமாக மேலே கூறப்பட்டுள்ளன.

பிராமணாள் பெயர் நீக்கம் (1957, 58), காந்திப் பட எரிப்பு (13.8.1957), இராமாயண எரிப்பு (10.04.1965), தமிழ்நாடு நீங்கலாக இந்தியப் பட எரிப்பு (5.6.1960), இழிவு நீக்கக் கிளர்ச்சி ஆகியவையும் பெரியாரால் நடத்தப் பட்டன.

1948-இல் நடத்தப்பட்ட இந்தி எதிர்ப்பு, 2ஆம் இந்தி எதிர்ப்புப் போர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மிகப் பெரிய அளவில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு 1952 முதல் தொடர் வண்டி நிலையப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை நடத்தினார். ஏனெனில் அதுவரை தொடர்வண்டி நிலையப் பலகைகளில் இந்தி இடம்பெற்றிருக்கவில்லை. இந்தி அகற்றப்படும் வரை ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்டு முதல் நாள் இந்தக் கிளர்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டது. 1954இல் தள்ளி வைக்கப்பட்டு 8.8.1954 அன்று இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டன.

உணவு விடுதிப் பெயர்ப் பலகைகளில் ‘பிராமணாள்’ என எழுதப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்டிருப்பது மற்ற வர்கள் ‘சூத்திரர்கள்’ என்று கூறுவதாகும் என்று ‘பிராமணாள்’ என்பதை நீக்கக் கோரி 27.04.1957 முதல் 30.08.1958 வரைத் தொடர் கிளர்ச்சி நடத்தப்பட்டது. அக்கிளர்ச்சி வெற்றி ஈட்டியது.

- சா.குப்பன்

Pin It