தலித் - பெண்கள் - குரலற்றவர்களின் ‘சரணாலயமாக’ தி.மு.க. ஆட்சி விளங்கட்டும்

காந்தி பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி, முதல்வராக பொறுப்பேற்கும் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து பகிரங்க கடிதம் ஒன்றை ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (மே 3, 2021) எழுதியுள்ளார், அக் கடிதத்தின் சுருக்கம்:

“முதலில் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். ‘திராவிடன் மாடல்’ ஆங்கில நூல் வெளியிட்டு விழாவில் பேசிய ‘இந்து’ குழும தலைவர் என். ராம், தமிழகத்தில் அமையவிருக்கும் ஆட்சி ஓர் புதிய மாதிரியான ஆட்சியாக (New Type of Government) இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டார். அது என்ன புதிய மாதிரி என்பதைக் கூறுவதற்கு முன் எனது சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன். இதை ஒரு வயது முதிர்ந்தவரின் அறிவுரையாகக் கருதி விடாமல் சகக் குடிமகனின் வேண்டுகோளாகக் கருத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் சில மாதங்களுக்கு முன் கொரானா பெருந்தொற்று காலத்தில் பதவியேற்ற நிகழ்வு  போலவே நீங்களும் பதவி ஏற்கப் போகிறீர்கள். இந்திய வரலாற்றில் இப்படி ஒரு முதல்வர் பதவி ஏற்பு இதற்கு முன் நிகழ்ந்தது இல்லை.

கொரனா இரண்டாவது அலையை மக்களாகிய நாங்களே வரவழைத்துக் கொண்டோம். தொற்றின் ஆபத்துகளை உணராமல் செயல்பட்டதற்கு கொடுத்த விலை இது. நாங்கள் உங்களுககு வெற்றியை மட்டும் பரிசாக வழங்க வில்லை. ‘வைரஸ்’யையும் சேர்த்து வழங்கியிருக்கிறோம்.

தமிழ்நாடு மிகச் சிறந்த நிர்வாகக் கட்டமைப்பு கொண்ட மாநிலம். அதற்கான தொடர்ச்சியான பெருமைகளைப் பெற்று நிற்கிறது. உங்களது அனைத்து முயற்சிகளுக்கும் இந்த சிறந்த நிர்வாகக் கட்டமைப்பு துணை நிற்கும். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பு ஊசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு ஊசி போட வேண்டும் என்று நீங்கள் கேட்டிருப்பது மக்கள் மீதான உங்கள் கவலையை வெளிப்படுத்துகிறது. தடுப்பு ஊசியை இலவசமாகவே வழங்க மத்திய அரசை வற்புறுத்துங்கள். முயற்சி வெற்றி பெறாவிடில் துணிந்து மாநில அரசே அதற்கான விலை கொடுத்து இலவசமாகப் போடுங்கள்.

மருத்துவ சேவையாளர்களின் அர்ப் பணிப்பை உங்களைப் போன்ற தலைவர்கள் தான் ஊக்கப்படுத்த வேண்டும்; தடுப்பு ஊசி முகக் கவசம் அணிவதை மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டுங்கள். ஊரடங்குகளை செயல்படுத்துவதில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கடுமையான நடவடிக்கை களை எடுத்த நல்லப் பயனை அளித்துள்ளது. அவரது ஆலோசனையைக் கேளுங்கள்.

‘புதிய மாதிரி ஆட்சி’ என்பதை நிரூபிக்க சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன். நீங்கள் திராவிடக் குடும்பத்தின் குழந்தை. அந்தக் கொள்கையோடு வளர்க்கப்பட்டுள்ளீர்கள். தமிழர்களின் உணர்வுகளுக்கான இயக்கம் திராவிட இயக்கம் என்பது உண்மை தான்.

அதேநேரத்தில் தமிழர்களுக்குள்ளேயே தரும் குரலற்றவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக, வெளிச்சத்துக்கு வர முடியாதவர்கள் ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். எண்ணிக்கையில் அவர்கள் குறைவானவர்கள். இந்த மக்களின் மேம்பாட்டுக்கு உங்கள் ஆட்சி திட்டமிட வேண்டும்.

பண்பாடு, பொருளாதாரம் மற்றும் சமூக அடிப்படையில் அன்றாடம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் விளிம்பு நிலையில் தவிக்கும் இந்த சமூகத்தினருக்கு அடைக்கலம் தரும் ‘சரணாலயமாக’ உங்கள் ஆட்சி திகழ வேண்டும்.

நல்ல எண்ணிக்கையில் எதிர்கட்சியாக வந்திருக்கும் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு உரிய மதிப்பளியுங்கள். மூன்றாவதாக கருத்துரிமைக்கும் ஜனநாயக மாண்புகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். மக்களிடம் கருத்துகளைப் பரப்பி வளர்ந்தது தானே திராவிட இயக்கம்?

மூன்றாவதாக - எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் ஊழல் செய்தாலும் துணிந்து நடவடிக்கை எடுங்கள். தயவுதாட்சண்யம் பார்க்காதீர்கள்.

நான்காவதாக - பெண்கள், தலித்துகள், அரசியலில் - ஆட்சி அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அதிகாரம் நிறைந்த இரண்டு குழுக்களை நியமித்து அதில் இடம் பெற்றுள்ள ஆலோசகர் களின் கருத்துகளைக் கேட்டு செயல்படுத்துங்கள்.

ஐந்தாவதாக - மீனவர்கள், விவசாயிகள் நலனுக்கான சாமிநாதன் குழு பரிந்துரையை அமுல்படுத்துங்கள்.

ஆறாவதாக - நீர் நிலைகள் மாசுபடாமல் சுற்றுச் சூழலைக் காப்பாற்றும் திட்டங்களில் கவனம் செலுத்துங்கள்.

ஏழாவதாக - சிறைச்சாலையின் மோசமான நிலையை திருத்தி அமையுங்கள்; விசாரணைக் கைதிகளாக பல அப்பாவிகள் சிறைகளுக்குள் பல்லாண்டு காலம் அடைப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மறுவாழ்வு தருவதற்கும் விடுதலை செய்வதற்குமான நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள்.

ஒன்பதாவதாக - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்து விடாதீர்கள்; ஆட்சியை சரியாக வழி நடத்துவதற்கு பெரும் துணை செய்யக் கூடிய சட்டம் இது.

எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் அரசியல் சட்டம் வலியுறுத்தும் முகப்புரையை உள்ளத்தில் நிறுத்துங்கள். இதுவே ‘புதிய மாதிரி ஆட்சி’க்கான அடிப்படைகளாக நான் கருதுகிறேன்”

- என்று அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார். 

- கோபாலகிருஷ்ண காந்தி

Pin It