எதிர்பார்த்த நேரத்திலெல்லாம் மௌனம் சாதித்த தே.மு.தி.க. கட்சித் தலைவர் விஜயகாந்த், எதிர்பாராத நேரத்தில் தன் முடிவை இப்போது தெரிவித்துள்ளார். தனித்துப் போட்டி அல்லது தன் தலைமையை ஏற்றுக் கொள்பவர்களுடன் இணைந்து போட்டி என்பது அவர் முடிவு. அவருக்கு நம் வாழ்த்துகள்!

karunanidhi stalinஇதனால் தி.மு.க. தொண்டர்களுக்குச் சோர்வு வரும் என்று சிலர் நினைக்கின்றனர். நெருக்கடிகள் வரும் போதெல்லாம் நிமிர்ந்து நிற்கும் தலை தி.மு.க. தொண்டனுடையது. இன்றைய அ.தி.மு.க.வின் அராஜக ஆட்சியை அகற்றுவதற்கு, அதே எண்ணமுள்ள தே.மு.தி.க. இணைந்து நின்றால் நல்லது என்று கருதினோமே அல்லாமல், அவர்களை நம்பி நாம் இல்லை. அவர்கள் நம்முடன் வராததால் நமக்கு எந்த நட்டமும் இல்லை.

கூடுதல் இடங்களில் தி.மு.கழகம் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இப்போது வந்துள்ளது. புதிய ஊக்கம், புதிய எழுச்சி இதனால் தொண்டர்களிடம் ஏற்படும். இந்தக் குதிரை இனிமேல்தான் இன்னும் விரைந்து ஓடும்.

ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறுவதால், மீண்டும் ஆளும் கட்சி வெற்றி பெறும் என்று ஒரு கருத்து இனிமேல் திட்டமிட்டுப் பரப்பப்படும். பழைய தேர்தல் முடிவுகள் அது உண்மையில்லை என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. குறிப்பாக, 1989, 1996 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் பல முனைப் போட்டி ஏற்பட்டது. அவ்விரு தேர்தல்களிலும் தி.மு.க.தான் வெற்றி பெற்றது.

1989 தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்த இடங்கள் தவிர்த்து, தி.மு.க. 197 இடங்களிலும், அ.தி.மு.க. (ஜெ) 196 இடங்களிலும். அ.தி.மு.க.(ஜா) 175 இடங்களிலும், காங்கிரஸ் 208 இடங்களிலும் போட்டியிட்டன. சிவாஜி கணேசனின் கட்சி ஜானகி அம்மையாரோடு கூட்டணி வைத்திருந்தது. இவை தவிர பா.ஜ.க. 35 இடங்களிலும், பழ.நெடுமாறனின் கட்சி 8 இடங்களிலும் போட்டியிட்டன. மூப்பனார், ஜெயலலிதா, ஜானகி எல்லோரும் அன்று முதலமைச்சர் கனவில் இருந்தனர். ஆனால் அந்தப் பன்முனைப் போட்டியில் ஆளும் கட்சி வெற்றி பெறவில்லை. எதிர்க்கட்சியான தி.மு.க. தனியாக 146 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தி.மு.க. அணி, அ.தி.மு.க. அணி, ம.தி.மு.க அணி, பா.ம.க.,&வாழப்பாடி காங்கிரஸ் அணி என்று நான்கு அணிகள் போட்டியிட்டன. தி.மு.க. வாக்குகளை வைகோ பிரித்து விடுவார் என்று கணக்குப் போடப்பட்டது. ஆனால் அந்தக் கனவு மெய்ப்படவில்லை. தி.மு.க. & த.மா.க. அணியே வெற்றி வாகை சூடியது.

இன்று தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்த ஒரு கூட்டணி அமைந்துள்ளது. வேறு சில கட்சிகளும் வரலாம். விஜயகாந்த் வராமல் போனதில் அவருக்குத்தான் நட்டம் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டும். தேவையில்லாமல் ஒரு கட்சியை வளர்த்துவிட்ட பழியும் நம்மை வந்தடையாமல் இருக்கும்.

நல்லதே நடந்துள்ளது. தலைவரின் வழிகாட்டல், தளபதியின் உழைப்பு, தொண்டர்களின் வியர்வை நாளைய வெற்றியை நம் மடியில் கொண்டு வந்து சேர்க்கும்.

உடன்பிறப்புகளின் உழைப்பில் வார உறுதிகள் உளவோ! வாருங்கள் தோழர்களே, இருக்கும் துணைகளை இணைத்துக் கொண்டு, தனியாய் நின்றே தலை நிமிர்வோம்!!

Pin It