தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாளுக்கு நாள் தரம்தாழ்ந்து பேசி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை ‘நீ, வா, போ’ என்று ஒருமையில் பேசத் தொடங்கி விட்டார். ‘தமிழ் இந்து’ நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றும் இதை சுட்டிக்காட்டியுள்ளது. முதலமைச்சரை மட்டும் குறை சொல்லிவிட்டதாக எவரும் கருதி விடக் கூடாது என்பதற்காக மு.க. ஸ்டாலினும் தரக்குறைவாகப் பேசுவதாக அந்த ஏடு எழுதியுள்ளது. எங்கே, எந்தக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் அப்படித் தரம் தாழந்து ஒருமையில் பேசினார் என்பதை நேர்மையோடு எடுத்துக்காட்ட அந்த ஏடு தயாராக இல்லை.

தி.மு.க. ஆட்சி - ஊழல் ஆட்சியை நடத்தியதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். காக்னிசன்ட் என்ற அமெரிக்க நிறுவனம், தமிழ்நாட்டில் அதன் கிளையைத் தொடங்க தமிழக ஆட்சியாளர் களுக்கு 20 இலட்சம் டாலர் இலஞ்சம் கொடுத்த செய்தி அமெரிக்க நீதிமன்றத்தில் அம்பலமாகி அதற்காக அந்நாட்டு நீதிமன்றம் அந்த நிறுவனத்துக்கு 2.5 கோடி டாலர் தொகையைவிட அதாவது 10 மடங்குக்கும் கூடுதலாக அபராதம் விதித்திருக்கிறது.

தமிழக அரசின் ஊழல் நாற்றம் அமெரிக்காவில் நாறிக் கொண்டிருக்கிறது. மற்றொரு செய்தியையும் சுட்டிக் காட்ட வேண்டும்.

பிரதமர், முதல்வர், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் ‘லோக் ஆயுக்தா’ என்ற அமைப்பை உச்சநீதிமன்றம் கெடு விதித்த காரணத்தால் வேறு வழியின்றி கடந்த ஜூலை மாதம் தமிழக சட்டப் பேரவையில் இதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த அமைப்பில் கட்சிக்காரர்களை நியமிக்கக் கூடாது என்பது சட்டம். ஆனால் எடப்பாடி உருவாக்கிய ஊழல் ஒழிப்பு விசாரணைக் குழுவில் கோவை மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி செயலாளரான ஆறுமுகம் என்பவர் நியமிக்கப்பட்டார். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்றவர்கள் அதற்குப் பிறகு வேறு எந்தப் பணியிலும் இருக்கக் கூடாது என்ற விதிகளுக்கு மாறாக ஆணையத்தில் உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்ற இராஜாராம் என்ற அய்.ஏ.எஸ். அதிகாரி, இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டார். இந்த இரண்டு நியமனங்களும் செல்லாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.  இவர்கள் ஊழலைப் பற்றி பேசலாமா?

Pin It